வாராந்திர பொதுப்பார்வையாளர் சந்திப்பின் போது, தேவைப்படுபவர்களுக்கு உதவவும், சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும் நாம் குரல் கொடுக்க வேண்டும் எனத் திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார்.
“பாதையை மாற்றவும், புதிய
வரலாறு படைக்கவும்
நாம் அழைக்கப்படுகிறோம். நாம் கிறித்தவ நம்பிக்கையின் விதையாகப் பலனளிக்கவும்,
நம் இதயங்களைப் பயன்படுத்தவும், நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் முயலவேண்டும்” என்ற
திருத்தந்தை, மேலும், ‘தோட்டத்தின் பாதுகாவலராக இல்லாவிட்டால், மனிதன் அதை அழிப்பவனாக மாறுகிறான்’ என்ற
மேனாள் திருத்தந்தை பிரான்சிஸின் கூற்றை மேற்கோள்காட்டி, “கிறித்தவ நம்பிக்கை இன்று மனிதகுலம் முழுவதும் எதிர்கொள்ளும் சவால்களுக்குப் பதிலளிக்கிறது. சிலுவையில் அறையப்பட்டவர் விதையாக வைக்கப்பட்ட தோட்டத்தில் நாம் வாழ்வதன் மூலம், மீண்டும் உயிர்த்தெழுந்து அதிகப் பலன்களைத் தருகிறோம்”
என்று தெரிவித்துள்ளார்.
“இதயத்தில் தொடங்கி ஆன்மிக ரீதியான இத்தகைய சிந்தனை, வரலாற்றை மாற்ற நம்மைப் பொதுவாழ்வில் ஈடுபடுத்துகிறது. மேய்ப்பனின் பெயரிலும் ஆற்றலிலும் திரு அவையின் குழந்தைகள் ஒவ்வொருவரும் குறிப்பாக, பல இலட்சக்கணக்கான இளைஞர்களும்,
ஏழைகளின் அழுகையையும், பூமியின் கதறலையும் கேட்ட
நல்லெண்ணம் கொண்ட பிற ஆண்களையும் பெண்களையும் சந்திக்க வேண்டும்; அதுவே
அவர்களின் இதயங்களைத் தொடும்” எனவும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.