news-details
சிறப்புக்கட்டுரை
கிறிஸ்துமஸ் மென்மைப் புரட்சி!

கிறிஸ்து பிறப்பு விழா என்பது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக வரலாற்றில் நடந்தேறிய ஓர் அழகான நிகழ்வினை நினைவுகூரும் கொண்டாட்டமாக மாறிவிடக்கூடாது. அது இறைமகன் இயேசு விருப்பத்துடனும் அன்புடனும் மகிழ்ச்சியுடனும் அக்கறையுடனும் இவ்வுலகில் ஏழ்மையில் வாழ்வோரின், நொறுக்கப்படுவோரின், வெறுக்கப்படுவோரின், ஒடுக்கப்படுவோரின், மென்மையானவர்களின், பலம் இழந்தவர்களின் வாழ்வில் பங்கெடுக்க எடுத்த நிலைப்பாட்டின் கொண்டாட்டம்! உடனிருப்பின் கொண்டாட்டம்! இயேசு மனுவுடல் ஏற்ற மறைபொருளை, தூரத்தில் நின்றுகொண்டு அதனை வியந்து பார்க்கவேண்டிய இறைவனின் செயலாக நாம் கடந்து செல்லக்கூடாது. மாறாக, அவரது மனுவுடல் ஏற்பினை நாமே நமது அன்றாட வாழ்வில் வாழ்ந்திட, நமக்கு வழங்கப்பட்டுள்ள சவால் மிகுந்த அழைப்பாக ஏற்கவேண்டும், அதனை வாழ்ந்திடவேண்டும்.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் இறைவன் பிறந்த மாட்டுத்தொழுவத்தை நாம் அழகுபடுத்தி, ஒளிமயமாக்கி, மிகுந்த வண்ணங்கள் நிறைந்த இடமாக மாற்றி, அதன்மீது வழக்கமாக நமது கண்களைப் பதியவைப்போம். அவற்றைக் கடந்து மாட்டுத்தொழுவம் போன்று ஏழ்மையை, துன்பத்தை, புறக்கணிப்பை அன்றாட கசப்பான நிகழ்வாக-நிதர்சனமாகச் சந்திக்கும் மனிதர்கள்மீது நமது கண்கள் பதியட்டும்.

மனுவுடல் ஏற்பில்-ஏழ்மையே இறைவெளிப்பாடு

பெத்லகேமில் பிறந்த பாலன் இயேசுவிற்கு வசதியும், கவர்ச்சியான கண்கவர் பொருள்களும், சிறந்த மெத்தையும், சிறப்பு அரியணையும், சிவப்புக் கம்பள வரவேற்பும் வழங்கப்படவில்லை. சமுதாயம் புறக்கணித்த இயேசுவின் மனுவுடல் ஏற்பில் அவர்  தேர்ந்துகொண்ட இடமும், அப்பிறப்பினைச் சுற்றி நிகழ்ந்த நிகழ்வுகளும் அவரது தாழ்ச்சியின் வெளிப்பாடுகள். மனுவுடல் ஏற்பின் தாழ்ச்சி என்பது அன்று நடந்திட ஒரு சாதாரண சம்பவம் அல்ல; மாறாக, அதுவே இயேசுவின் நிலைப்பாடு. மனுவுடல் ஏற்பில் அவரின் ஏழ்மையும் தாழ்ச்சியும் இறைமையின் வெளிப்பாடுகள். அங்குதான், அம்மனநிலையில்தான் இறைவன் தம்மை வெளிப்படுத்துகின்றார்.

மனிதகுலத்தின் துன்பத்தை - தமது ஏழ்மையில் பகிர்ந்த இயேசு

அகிலத்தையும், அதில் உள்ள அனைத்தையும் படைத்த இறைவன் ஒரு சிறிய, பலவீனமான, ஏழ்மையான குழந்தையாக இக்கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் நம்மிடம் வருகின்றார். திருத்தந்தை 14-ஆம் லியோ தனது முதல் திருத்தூது ஊக்கவுரையானநான் உன்னை அன்பு செய்தேன்என்னும் ஆவணத்தில்நமது மனித இயல்பின் வரம்புகளையும் பலவீனங்களையும் பகிர்ந்துகொள்ளவே இயேசுவைச் சிறிய குழந்தையாகக் காண்போம். அவரே சிலுவையில் நமது வறுமையையும் இறப்பையும் பகிர்ந்துகொண்டார்எனக் குறிப்பிடுகிறார்.

இயேசுவின் மனுவுடல் ஏற்றல் என்பது சமூகத்தில் பலம் இழந்து நிற்பவர்கள், உரிமையும் மாண்பும் மறுக்கப்பட்டவர்கள், புறக்கணிக்கப்பட்டவர்கள் சார்பாக அவர் இருக்கின்றார். அவர்களுக்காகவே மாபெரும் நற்செய்தியாகப் பிறந்திருக்கின்றார். அவர்களின் இருளைப் போக்கும் பேரொளியாக உதிக்கின்றார் (பிலி 2:6-9) என்பதை உணர்த்துகின்றது. உடனிருக்கும் இயேசுவின் இத்தகைய நிலைப்பாட்டினைத் தியானிக்காமல் நம்மால் அர்த்தமுள்ள கிறிஸ்து பிறப்பைக் கொண்டாட இயலாது.

கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியைநான், ‘எனதுஎன்னும் சிறிய வட்டத்தில் குறுக்கிவிட முடியாது. இயேசுவின் பிறப்பினைக் கண்டு நான் மட்டும் மகிழ்வது அல்ல; அவர் நேசித்து, உடனிருக்க விரும்பும் மக்களுடன் நாமும் உடன் பயணிக்க வேண்டும்.

ஆண்டில் சில திருவிழா நாள்களில், யூபிலிக் கொண்டாட்டங்களில் மட்டும் இத்தகைய மனிதர்களுக்கு உதவிட திரு அவை நம்மை அழைக்கவில்லை; மாறாக, ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு முடிவுகளிலும் இத்தகையோருடன் உடனிருக்க நாம் அழைக்கப்பட்டிருக்கின்றோம்.

உடனிருப்பது - உணர்வுநிலை அல்ல; வாழ்வு முறை

இயேசு மனிதராகப் பிறந்து, நம்மிடத்தில் வாழ்ந்தார். இயேசுவின் உடனிருப்பு என்பது உணர்வுநிலை அல்ல; அது வாழ்வுமுறை. உணர்வு நிலையாக இருந்தால் காலச்சூழலுக்கு ஏற்ப மங்கிவிடும், மறைந்துவிடும்.

உடனிருத்தல் என்பது கடைநிலை மனிதருக்கு ஒருசில நேரங்களில் உதவுவது மட்டுமல்ல; மாறாக, சமூகமாகச் சிந்தித்து, சமூகமாக இத்தகையோருக்காகச் செயல்படுவது (திருத்தந்தை பிரான்சிஸ், ‘அனைவரும் உடன்பிறந்தோர், 116). “நமது அன்றாடச் செயல்பாடுகளில், அலுவல்களில் அதிக முனைப்போடு ஈடுபடுத்திக்கொண்டு, எனது இத்தகைய பொறுப்புகளால், பணிகளால், வாழ்வு முறையால் ஏழைகள்மீது கவனம் செலுத்தவும், அவர்கள் அருகில் இருக்கவும் என்னால் இயலவில்லை என ஒருபொழுதும் நாம் கூறக்கூடாது (திருத்தந்தை பிரான்சிஸ், ‘மகிழ்ச்சியின் நற்செய்தி 201). இதுவே கிறிஸ்து பிறப்பின் அழைப்பு!

ஏழைகளே இயேசுவைத் தாங்கி நிற்கிறார்கள்

ஏழைகளே கிறிஸ்துவைத் தாங்கி நிற்பவர்கள். அவர்களே நமக்குக் கிறிஸ்துவை வெளிப்படுத்துபவர்கள். அவர்களின் துன்பமான வாழ்வின் சூழலிலும் வெளிப்படும் இறைநம்பிக்கை, எதிர்நோக்கு, மனவுறுதி, விடாமுயற்சி... இவைகளெல்லாம் நமக்கு அவர்கள் கற்பிக்கும் பாடங்கள். எனவே, ஏழைகளே நமது கிறிஸ்துமஸ் ஆசான்கள்.

ஏழைகளில் நாம் கிறிஸ்துவைக் காண, கண்டுபிடித்து, அவர் கரம்பற்ற அழைக்கப்பட்டுள்ளோம். நம் இறைவன் அவர்கள் வழியாக வெளிப்படுத்தும் மறைபொருளை, ஞானத்தை நாம் அறிந்துகொள்ள வேண்டும். நமது குரல்கள் அவர்களுக்காக ஒலிக்க வேண்டும். அவர்களை நண்பனாக்கி, அவர்களின் குரலுக்குச் செவிமடுத்து, இறைவன் அவர்கள் வழியாக உரையாடுவதை உணரவேண்டும். அது ஒருவரின் தனிவிருப்பச் செயல்பாடு அல்ல; மாறாக, இதுவே நற்செய்தியின் மையம் (திருத்தந்தை பிரான்சிஸ், மகிழ்ச்சியின் நற்செய்தி).

இயேசுவின் மனுவுடல் ஏற்பு - ஒரு மென்மைப் புரட்சிக்கு, ஒரு மௌனப் புரட்சிக்கு வித்திட்டது (திருத்தந்தை பிரான்சிஸ், ‘மகிழ்ச்சியின் நற்செய்தி 88). அவரது மனுவுடல் ஏற்புஅவரது மென்மையின் வெளிப்பாடு. ஆனால், அது பலவீனம் அல்ல; அது துணிவின் வெளிப்பாடு. இயேசுவின் மனுவுடல் ஏற்பு ஒரு துணிவான முடிவு. அவரே இன்னும் பலமிழந்த எளியவர்கள், புறம்பே தள்ளப்படுபவர்கள் மத்தியில் அவர்களின் வாழ்வினை மாற்றிட மென்மையான குழந்தையாகப் பிறக்கின்றார். அவர்கள் மத்தியில் பிறக்கும் இயேசுவைக் காண்பதுதான் உண்மையான கிறிஸ்துமஸ்.

கிறிஸ்துமஸ் காலத்தின் சில கேள்விகள்

கிறிஸ்துமஸ் காலத்தில் இயேசுவின் முன்பாக நாம் குனிந்து முழந்தாளிட்டு பின்வரும் கேள்விகளுக்கான பதில்களைத் தேடுவோம்.

நான் பாலன் இயேசுவை அழகான, ஆடம்பரமான, வசதியான இடங்களில் மட்டும் தேடுகின்றேனா? அல்லது துன்பப்படுவோரின் முகங்களில், இருப்பிடங்களில் தேடுகின்றேனா?

என் பங்கில், நகரில், கிராமத்தில், அருகாமையில், வாழ்விடங்களில் மறக்கப்பட்டவர்கள் யார், யார்? நான் அவர்களிடம் சென்று உரையாடி, மனுவுடல் நிலைப்பாட்டினை வெளிப்படுத்த என்ன செய்ய வேண்டும்?

என் கிறிஸ்துமஸ் பகிர்வும், வெளிப்படுத்தும் அக்கறையும் கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக மட்டும் உள்ளனவா? அல்லது அவர்கள் மீதான ஆழமான அன்பாக, நிலைப்பாடாக மாறுகின்றதா?

இறுதியாக...

கிறிஸ்துமஸ் விழாவின் ஆன்மாவிற்குள் சென்று அதனைக் கொண்டாடிட அன்னை மரியாவுடனும் யோசேப்புடனும் உடன் நடந்து, மேய்ப்பர்களின் அருகில் நாமும் முழந்தாளிட்டு, கைவிடப்பட்டோரின், புறக்கணிக்கப்பட்டோரின் நம்பிக்கையாக, எதிர்நோக்காக, விடிவெள்ளியாக மனுவுடல் ஏற்கும் இயேசுவைக் கண்டு, அவரைத் தாங்கிக்கொள்வோம். இயேசு தம்மை வெளிப்படுத்த விரும்பும் இடத்தில் அவரைத் தேடுவோம்! கண்டு கொள்வோம்!

அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்!