திருவருகைக் காலம் என்பது நம் உள்ளங்களில் பிறக்கவிருக்கும் பாலன் இயேசுவுக்காக நம்மையே தயார் செய்யும் காலம். இது கிறிஸ்து பிறப்பின் உண்மைப்பொருளை உணர்வதற்கு நமக்குத் தரப்பட்டுள்ள ஒரு நல்ல காலம். “பாவங்களை அறிக்கையிட்டு, கடவுளின் மன்னிப்பை வரவேற்று, மனம் புண்படச் செய்தவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அக விடுதலையை அனுபவிக்க அருள்தரும் காலமே திருவருகைக் காலம்” என்று கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ் (டிச. 4, 2022). திருவருகைக் காலத்தின் இரண்டாவது ஞாயிறான இன்று நமக்கு வழங்கப்பட்டுள்ள வாசகங்கள், இறை-மனித உறவில் உள்ள பிணக்குகளை மனமாற்றத்தின் வழியாகச் சரிசெய்து சமத்துவத்தைப் பேணவேண்டும் என்று அழைப்புவிடுக்கின்றன.
இன்றைய
வாசகங்களில் இறைவாக்கினர் எசாயாவும் திருமுழுக்கு யோவானும் மனமாற்றத்தின் வழியாகப் பெறப்போகின்ற புதிய வாழ்வைக் குறித்து உரையாடுகின்றனர். தம்மை மீட்க வரவிருக்கும் மெசியாவின் வருகைக்குக் கரடுமுரடுமானதும் கோணலுமாணலுமான, குண்டும்குழியுமான பாதையைச் செம்மைப்படுத்த மனம்வருந்தி மனமாற்றம் பெற இறைவாக்கினர் எசாயா அழைப்புவிடுக்கிறார். இயேசுவின் பணிவாழ்வுக்கு முன் மக்களைத் தயாரித்த திருமுழுக்கு யோவான் இயேசுவின் பிறப்பிற்கு நம்மையும் தயாரிக்கிறார்.
முதல்
வாசகம் இரண்டு பகுதிகளை உள்ளடக்கியுள்ளது. முதல் பகுதி, ஒரு நீதியுள்ள அரசரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதையும், இரண்டாவது பகுதி, மெசியாவின் வருகையில் வெளிப்படும் உண்மையான சமத்துவம் எது என்பதையும் நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.
ஒரு
நீதியுள்ள அரசரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பது பற்றி எசாயாவின் முதல் பகுதி (11:1-5) நமக்கு விவரிக்கின்றது. ஈசாய் என்பவர் தாவீதின் தந்தை. எசாயாவின் வார்த்தைகள் (11:1) ஈசாயின் மகன் தாவீதையும், அவரது வழிமரபில் தோன்றிய இயேசு கிறிஸ்துவையும் குறிப்பதாக உள்ளன. இவர் உண்மையில் கடவுளின் மனிதரே. அடிமரத்திலிருந்து தளிர் வருதல் மற்றும் வேரிலிருந்து கிளை வருதல் என்பது அழிவிலிருந்தும் வாழ்வைத் தரக்கூடியவர் கடவுள் என்னும் பொருளைக் காட்டுகிறது. தாவீதின் வழி மரபில் வந்தவர்கள் எல்லாரும், தாவீதுக்குக் கடவுள் கொடுத்த வாக்குறுதிகளைப் பெறாமலே போயினர். ஆனால், இனி வருபவர் புதிய தாவீதாக அவர் தந்தையிலிருந்து வருவார். வெட்டி வீழ்த்தப்பட்ட யூதாவிலிருந்து நீதியுள்ள அரசர் வருவார். ஆண்டவர் தாவீதுக்குக் கொடுத்த வாக்குறுதி நிலைநிறுத்தப்படும் என எசாயா முன்னறிவிக்கிறார்.
அரசர்
தாவீதின் காலத்திற்குப் பிறகு தாவீதைப்போல ஓர் அரசரை மக்கள் எதிர்பார்த்தார்கள். இந்த எதிர்பார்ப்பே பின்னாளில் மெசியாவைப் பற்றிய எதிர்பார்ப்பிற்கு அடிப்படையாக அமைந்தது. இப்பகுதியில் எசாயா, ஆண்டவரின் ஆவியின் பலன்களாக, ஆறு நற்பண்புகளைக் குறிப்பிடுகின்றார். அவை, ஞானம், மெய்யுணர்வு, அறிவுரைத்திறன், ஆற்றல், நுண்மதி மற்றும் ஆண்டவரைப் பற்றிய அச்ச உணர்வு. இப்படியான பண்புகள் கொண்ட அரசன் இப்போது இல்லை எனவும், நேர்மையையும் உண்மையையும் இடைக்கச்சையாக அணிந்துள்ள அரசர் தோன்றுவார் எனவும் எசாயா முன்பே உணர்ந்திருந்தார் போலும்.
இன்றைய
முதல் வாசகத்தின் இரண்டாம் பகுதி, நீதியுள்ள அரசரின் வருகையின்போது நிலவும் சமத்துவத்தைப்பற்றி எடுத்துரைக்கிறது. மெசியாவின் வருகையில் ஒரு புதிய ஆட்சி மலரும்; அது ஒரு பொற்காலமாக இருக்கும்; அன்பும் அமைதியும் சமத்துவமும் மக்களிடையே நிலவும். இது நிறைவேறும் என ஒரு மாற்றுச்
சமுதாயக் கனவு காண்கிறார் எசாயா (11:6-8)
ஓநாய்-செம்மறி ஆடு, சிறுத்தைப் புலி-இளம் ஆடு, சிங்கக்குட்டி-கன்று, பசு-கரடி என எசாயா வரிசைப்படுத்தும்
விலங்குகள் சேர்ந்து வாழமுடியாதவை. தொடர்ந்து கரடி,
பசு மாட்டோடு மேயும்; சிங்கம் மந்தையைப்போல் வைக்கோல் புசிக்கும்; பால்குடி மறவாத குழந்தை விரியன் பாம்பின் வளைக்குள் கையைவிடும் என மெசியாவின் ஆட்சியின்
சிறப்பை அடையாள ரீதியாகக் குறிப்பிடுகின்றார் எசாயா. எதிரும் புதிருமான தன்மைகொண்ட விலங்கினங்கள் தங்கள் கொடிய இயல்பை விடுத்து, படைப்பின் தொடக்கத்தில் கடவுள் ஏற்படுத்திய இறை-மனித-உயிரின சுமூக உறவிற்குத் திரும்புவர் என்ற ஆழமான அர்த்தத்தை எசாயா இங்கே கொடுக்கிறார். மனித மனங்களில் புதைந்துகிடக்கும் சமத்துவம், சகோதரத்துவம், கருணை, அன்பு என்ற இறைத்தன்மை மேலோங்கி வரவேண்டும் என்பதே எசாயாவின் கனவு. எசாயா குறிப்பிடும் இந்த இயல்புநிலை மாற்றம், மனமாற்றம் நீதியுள்ள அரசரின் வருகையின்போது மீண்டும் உருவாகும் என நம்புகிறார்.
எசாயா
கண்ட கனவை இன்றைய நற்செய்தி வாசகத்தில் திருமுழுக்கு யோவான் வெளிப்படுத்துகிறார். திருமுழுக்கு யோவான் எளிமையான வாழ்வு வாழ்ந்தவர்; “எனக்குப் பின்வருபவரின் மிதியடி வாரை அவிழ்க்கக்கூட தகுதியற்றவராய்...” (யோவா 1:27) தாழ்மையின் நிலையை ஏற்றவர்; மெசியாவின் வருகைக்காக மக்களைத் தயாரித்தவர். ஒட்டக மயிராடை, தோள்கச்சை, வெட்டுக்கிளி, காட்டுத் தேன் போன்றவற்றைக் குறிப்பிட்டு, அவரை இரண்டாவது எலியாவாகச் சித்தரிக்கின்றார் மத்தேயு.
இன்றைய
நற்செய்தியில் யோவான், “மனம் மாறுங்கள்; ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது” (மத்
3:2) எனப் போதிக்கிறார். வெளி வேடத்திற்குப் பெயர்போன பரிசேயர்களும் சதுசேயர்களும் தாங்கள் மனம்மாறத் தேவையில்லை என்ற மனநிலையோடு அவரை அணுகியபோது அவர் அவர்களுக்குச் சவால் விடுத்தார். இத்தகைய மனநிலையும் இரட்டைவேடமும் ஒரு புதிய வாழ்வைத் தொடங்குவதற்கும், கடவுளின் அருளைப் பெற்றுக் கொள்வதற்குமான வாய்ப்பை வழங்காது. எனவே, கடவுளை வரவேற்பதற்கு ‘மனம் வருந்துதல்’ மிக
முக்கியம். ஆகவேதான் திருமுழுக்கு யோவான் ‘மன மாற்றத்தை அதற்கேற்ற
செயல்களால் காட்டுங்கள்’ என்கிறார்
(மத் 3:8).
‘மனமாற்றம்’
(Conversion) என்ற வார்த்தையின் பொருள் வாழ்க்கைமுறை மாற்றம் என்பதாகும். தீமைகள் நிறைந்த உலகில் தீமைகளைத் தவிர்த்தல் மட்டுமல்லாது, தீமைகளை
எதிர்த்து வாழும் புதிய வாழ்க்கை முறையே மனமாற்றம் ஆகும். அதாவது, தீய பிரிவினை நாட்டங்கள் மறைவதும் நீதி, உண்மை, அன்பு, அமைதி, சமத்துவம், சகோதரத்துவம், பகிர்தல் எனும் இறையாட்சித் தன்மையில் ஒளிர்வதுமே உண்மையான மனமாற்றம். மனமாற்றத்திற்கான கிரேக்க வார்த்தையான ‘Metanoia’ எனும் சொல்
பாவங்களையும் பாவ வாழ்வையும் விட்டு விலகுவது மட்டுமல்ல, தீய வழிகளை விட்டு விட்டு ஆண்டவரை நோக்கி நெருங்கி வருவதைக் குறிக்கிறது.
அடிப்படையில்
மனமாற்றம் என்பது இரு பொருள் கொண்டது. ஒன்று, தீமைகளைத் தவிர்த்து நன்மை செய்வது; மற்றொன்று, பாவ வாழ்விலிருந்து விடுபட்டு வாழும் உயிருள்ள கடவுளை நோக்கித் திரும்பி வருவது. எனவே, இயேசுவின் வருகையை எதிர்நோக்கித் தயாரிப்புடன் காத்திருக்கும் இத்திருவருகைக் காலத்தில் நாம் மனமாற்றத்தின் வழியே இயேசுவை நோக்கித் திரும்புவதே இறையாட்சியில் பங்குபெற, இயேசுவைச் சந்திக்கத் தகுந்த, சரியான வழியாகும்.
ஆகவே,
எசாயா மற்றும் திருமுழுக்கு யோவான் கண்ட ‘மாற்றுச் சமுதாயம்’
என்பது நீதியும் நேர்மையும் அன்பும் அறனும் அமைதியும் எளியவரை ஏற்றலும் இயற்கையோடு இணைந்து வாழும் வாழ்க்கை முறையாகும். அத்தகைய ஒரு சமுதாயத்தை உருவாக்க நாம் தொடர்ந்து உழைக்க வேண்டியுள்ளது. நாமும் நமது அன்றாட வாழ்வில் வேறுபாடுகளைக் களைந்து, அனைவரும் ஒன்றிணைந்து வாழும் இறையாட்சிக்கான இயேசுவின் கனவை நனவாக்க முற்படவேண்டும்.
இன்றைய
இரண்டாம் வாசகத்தில் ஒற்றுமையின் தேவையையும் நீதியையும் பற்றி விளக்கும் பவுல், இயேசுவிற்கு ‘யூதரன்றோ யூதரல்லாதவரென்றோ இல்லை; அவர் அனைவரையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். எவ்விதத்திலும் தகுதி இல்லாத பாவிகளாகிய நம்மை அவர் ஏற்றுக்கொண்டது போல, நாமும் நமது வாழ்வின் எல்லா நிலைகளிலும் பிறரை ஏற்றுக்கொள்வது மட்டுமே கடவுளைப் பெருமைப்படுத்தும்’ என
எடுத்துரைக்கிறார்.
ஆகவே,
பழைய ஏற்பாட்டு மக்கள் எசாயாவின் வார்த்தைகளை நம்பி மெசியாவின் வருகைக்குத் தங்களையே தயாரித்ததுபோல, ஆண்டவரின் இரண்டாம் வருகைக்காகக் காத்திருக்கும் நாம் பழைய பாவ வாழ்க்கை முறையை விலக்கி, புதிய வாழ்க்கை முறையைத் தழுவிக்கொள்வோம். நல்லவை நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் நாம் தொடங்கியுள்ள திருவருகைக் காலத்தில் மீட்பரின் வருகையை, அர்த்தமற்ற வழிகளில் எதிர்பார்க்காமல், தனக்குள் தொடங்கும் மாற்றங்களை ஏற்றுக்கொண்ட அன்னை மரியாவைப்போல மாசற்ற வழியில் பயணிப்போம். அமல அன்னையின் பரிந்துரையாலும் வழிநடத்துதலாலும் நாம் திருவருகைக் காலத்தில் இறைவனின் வருகையையும், கிறிஸ்துமஸ் பெருவிழாவின் முழுப்பொருளையும் உணர்ந்து வாழும் வரம் வேண்டுவோம்.
“மனம் மாறுங்கள்; ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது!” என்ற தொனியில் ஒலிக்கும் திருமுழுக்கு யோவானின் குரல் இன்று நம் செவிகளுக்கு எட்டட்டும்!