‘ஏழைகளுக்கு முன்னுரிமை’ அல்லது ‘ஏழைகள் மட்டில் தனிப்பட்ட அக்கறை’ என்ற சொல்லாடல் கொலம்பியா நாட்டில் உள்ள மெடலினில் (1968), பின்பு மெக்சிகோ நாட்டு ‘புவேப்லா’ நகரில் (1979) நடந்த இலத்தீன் அமெரிக்க ஆயர்கள் பேரவை கூட்டங்களில் பிறந்தது. விடுதலை இறையியலின் மையக் கருத்து இப்பேரவைகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்பு திரு அவைப் படிப்பினையிலும் இது அதிகாரப்பூர்வமாக இடம்பெற்றது.
ஏழைகளுக்கு
முன்னுரிமை என்பது, மற்றவர்களை ஒதுக்குவதல்ல; மாறாக, கடவுளின் இதயத்தில் சமுதாயத்தால் விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்டவர்களுக்கு ஒரு சிறப்பான இடம் உண்டு என்பதுதான் இதன் பொருள்.
பழைய
ஏற்பாட்டில் கடவுள் ஏழைகளின் கூக்குரலைக் கேட்டு அவர்களை விடுவிப்பவராகத் தம்மை வெளிப்படுத்துகிறார். கடவுளின் இச்செயலே அவரது பெயர்போல ஆனது. “இந்த ஏழை கூவி அழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; எல்லா நெருக்கடியினின்றும் அவர் அவனை விடுவித்துக் காத்தார்”
(திபா 34:6).
ஏழைகளின்
புகலிடம் கடவுள். குறிப்பாக, இறைவாக்கினர்கள் ஆமோஸ், எசாயா வழியாக ஏழைகளுக்கும் பலவீனர்களுக்கும்
எதிராக இழைக்கப்படும் அநீதிகளைக் கடவுள் மிகவே கடிந்து கொள்கிறார். ஏழைகளை ஒடுக்குபவர்கள் கடவுளுக்கு ஏற்புடைய வழிபாடு செய்ய இயலாது என்கிறார்கள் இறைவாக்கினர்கள்.
இயேசு - ஓர்
ஏழை
மெசியா!
கடவுள்
ஏழைகளின் சார்பானவர் என்பது நாசரேத்தூர் மெசியாவில் நிறைவு பெறுகிறது. இயேசு ஏழைகளுக்குச் சார்பானவர் மட்டுமல்லர்; ஏழைகளது வாழ்வைப் பகிர்ந்துகொண்டு, ஏழையாகவே வாழ்ந்தவர்.
இயேசு
மனுவுருவானதில் தம்மை ஏழையாக்கி, அடிமையின் வடிவை ஏற்று, மனித உருவில் தோன்றியவர் (பிலிப் 2:7). அவரின் ஏழ்மை ஆழமானது, வேரோட்டமானது. இந்த ஏழ்மையின் வழி தந்தையின் நிபந்தனையற்ற அன்பை அவர் நமக்கு வெளிப்படுத்தினார் (1யோவா 4:9). இவ்வாறு அவரது ஏழ்மையில் நாம் செல்வராகும்படிச் செய்தார் (2கொரி 8:9).
இயேசு
பிறப்பதற்குச் சத்திரத்தில் இடம் கிடைக்கவில்லை (லூக் 2:7). அவரைக் காப்பாற்ற அவரது பெற்றோர் எகிப்துக்கு ஓட வேண்டியதிருந்தது (மத் 2:13-15). நாசரேத்து தொழுகைக் கூடத்தில் தமது பணித்திட்டத்தை அறிவித்தபோதே அவர் புறக்கணிக்கப்பட்டு, ஊருக்கு வெளியே துரத்தப்பட்டார் (லூக்கா 4:14-30).
இயேசு
எளிய கைவினையராகத் தச்சுத் தொழில் செய்தார் (மாற் 6:3). அவர் கோவிலில் அர்ப்பணிக்கப்பட்டபோது, ஏழைகளின் காணிக்கையான இரண்டு மாடப்புறாக்களை அவரின் பெற்றோர் கொடுத்தனர் (லூக் 2:22-24). அவருக்குத் தலைசாய்க்க இடமின்றி, நாடோடிப் போதகராக வாழ்ந்தார் (மத் 8:20; லூக் 9:58).
இறுதியாக,
சமூகத்தால் நிராகரிக்கப்பட்டு, எருசலேம் நகருக்கு வெளியே எல்லாராலும் கைவிடப்பட்ட ஏழையைப்போல, சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வாறு இயேசு ஓர் ஏழை மெசியாவாக வாழ்ந்தவர் மட்டுமல்லர், ஏழைகளுக்காக வாழ்ந்த மெசியாவும் கூட. திரு அவை இயேசுவைப் போல (பேறுபெற்ற) ஏழைகளின் திரு அவை!
இன்று
பல ஏழைகள் பிச்சையெடுத்து வாழ நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறார்கள்.
இது ஒரு சமூக அவமானம். ஏழ்மையும் வியாதியும் பாவத்தின் விளைவு என்பதை இயேசு மறுக்கிறார்.
ஏழைகளுக்குக்
கடவுள் முன்னுரிமை கொடுப்பதை, அவர்களுக்குத் தனிப்பட்ட அக்கறை காட்டுவதைத் திருவிவிலியம் மிகத் தெளிவாகக் எடுத்துரைக்கிறது. ‘ஆனால், ஏன் அநேகர் இதைப் புரிந்துகொள்ளாமல் புறக்கணிக்கிறார்கள்?’ என்ற கேள்வியை எழுப்புகிறார் திருத்தந்தை லியோ.
இணைச்சட்டம்
6:5 என்பது பழைய ஏற்பாட்டு நம்பிக்கை அறிக்கை. இதன் விளக்கத்தை லேவியர் 19:18 பகுதியைக் கொண்டு இயேசு விளக்குகிறார். ‘கடவுள் மீதுள்ள நம்பிக்கை என்பதன் பொருள், அடுத்திருப்பவர் மீது அன்புகூர்வது’ (மாற்கு
12:29-31) என்கிறார்.
இறை-மனித அன்பு என்பதை ஒன்றிலிருந்து மற்றொன்றைப் பிரிக்க முடியாது (Inseparable). ஆனால்,
ஒவ்வொன்றும் தனித்துவமானது (மத் 25:40).
பிறருக்கு
விருந்து கொடுக்கும்போது, கைம்மாறு செய்ய தங்களிடம் ஒன்றுமில்லாத ஏழைகள் உடல் - கால் ஊனமுற்றோர், பார்வையற்றோரை அழைத்தால் விருந்து கொடுப்பவருக்குக் கைம்மாறு கிடைக்கும் (லூக் 14:12-14). இத்தகையவர்களைப் ‘பேறுபெற்றோர்’ என்கிறார்
இயேசு.
மக்கள்
அனைவருக்குமான தீர்ப்பிலும் (மத் 25: 31-46) ‘என் தந்தையின் ஆசி பெற்றவர்களே!’ என இத்தகையவர்களை அரசர்
விளிக்கிறார் (மத் 25:34).
இது
நம் கவனத்திற்குரியது. எந்த விளக்கமும் தேவைப்படாத தெளிவான புரிதல் இது. எந்தப் புனிதமும் இதைத் தவிர்த்துப் புரிந்துகொள்ள முடியாது.
அன்பு
செயலற்ற நம்பிக்கை, செத்த நம்பிக்கை என்கிறார் யாக்கோபு (2:14-17). ஏழைத் தொழிலாளிக்குக் கொடுக்காத கூலி கடவுளை நோக்கிக் கூக்குரலிடுகிறது (யாக் 5:3-5).
‘தேவையில் உழல்வதைக் கண்டு பரிவு காட்டாதவரிடம் கடவுளின் அன்பு எப்படி நிலைத்திருக்க முடியும்?’ எனக் கேட்கிறார் அன்புச் சீடர் யோவான் (1யோவா 3:17).
“முகமலர்ச்சியோடு கொடுப்பவரே கடவுளின் அன்புக்கு உரியவர்”
(2கொரி 9:7) என்கிறார் பவுல்.
“ஏழைகளுக்கு இரங்கி உதவி செய்கிறவர், ஆண்டவருக்குக் கடன் கொடுக்கிறார். அவர் ஏழைகளுக்குக் கொடுத்ததை ஆண்டவர் திருப்பித் தந்து விடுவார்”
(நீமொ 19:17). “நீங்கள் எந்த அளவையால் அளக்கிறீர்களோ, அதே அளவையால் உங்களுக்கும் அளக்கப்படும்” (லூக்
6:38).