திருப்பலி முன்னுரை
இயேசுவின்
அன்பும் அருளும், தூய கன்னி மரியின் எளிமையும் தாழ்ச்சியும், புனித யோசேப்பின் உழைப்பும் நேர்மையும் உங்கள் குடும்பங்களிலும் ஒளிர்ந்திட வாழ்த்தி, திருக்குடும்ப விழா திருப்பலிக்கு
வாஞ்சையோடு அழைக்கிறோம்.
குடும்பம்
உறவுகளின் இருப்பிடம், அன்பின் சங்கமம், நகைச்சுவை மைதானம், அறிவுப்பள்ளி, இன்பத்தோட்டம், மகிழ்ச்சியின் ஊற்று, நம்பிக்கையின் விளைநிலம், பண்புகளைக் கட்டியெழுப்பும் பல்கலைக்கழகம். குடும்பம் என்ற குட்டித் திரு அவையே திரு அவைக்கும் நாட்டிற்கும் அடித்தளமாக உள்ளது. திருக்குடும்பத்தில்
அன்னை மரியும் புனித யோசேப்பும் தங்களுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட இன்னல்கள், துயரங்கள், தனிமை அனைத்திலும் இறைவனின் திட்டத்தை அறிந்து அமைதியோடு வாழ்ந்தார்கள். தன்னலமற்ற அன்பையும் தன்னிகரற்ற அமைதியையும் திருக்குடும்பம் உலகில் வாழ்ந்துகாட்டியது. துன்பங்களையும் பாடுகளையும் சுமந்து இல்லறத்தின் புனிதம் காத்தது. இறுதிவரை கடவுளோடு ஒன்றித்திருந்தது. எனவேதான் திருக்குடும்பம் சிறந்த முன்மாதிரியான குடும்பம் என்று அழைக்கப்படுகிறது.
இன்றைய
நாளில் திருக்குடும்பத்திடம் விளங்கிய புனிதமான அர்ப்பணமும் முழுமையான தியாகமும் ஆழமான புரிதலும் நிறைவான அன்பும் நமது குடும்பங்களிலும் நிலைத்திருக்க வரம் வேண்டி இணைந்து செபிப்போம் இத்திருப்பலியில்.
முதல் வாசகம்
முன்னுரை
தந்தை,
தாய் மற்றும் பிள்ளைகளின் கடமையைப் பற்றி முதல் வாசகம் தெளிவாகக் கூறுகிறது. பெற்றோரைப் பேணிக்காப்பது நமது கடமை. பெற்றோரை மதிக்காமலும் பாதுகாக்காமலும் இருந்தால், நாம் ஆசியை இழந்துவிடுவோம் என்று கூறி பண்போடு வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம்
முன்னுரை
தூய
ஆவியின் கனிகளான இரக்கம், கனிவு, பொறுமை மற்றும் இயேசுவின் நற்பண்புகளான அன்பு, பரிவு, நல்லெண்ணம், மனத்தாழ்மை, ஆகியவற்றால் நம்மை அணிசெய்து, குடும்பத்திலும் சமூகத்திலும் புதிய மனிதர்களாக வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1. அன்பின்
இறைவா! நீர் உருவாக்கிய திரு அவை என்ற குடும்பத்தின் உறுப்பினர்களாகிய
நாங்கள் அனைவரும் திரு அவை எமக்குக் காட்டுகின்ற நெறிகளில் வாழவும், எங்கள் திரு அவைத் தலைவர்களோடு இணைந்து செயல்படவும் தேவையான அருள்வரங்களை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. அன்பின்
இறைவா! எமது குடும்பங்களில் அன்பு, அமைதி, பொறுமை போன்ற பண்புளைக் கடைப்பிடித்து, குடும்பம் என்ற குட்டித் திரு அவையைப் பேணிப்பாதுகாக்கவும்,
வயது முதிர்ந்த பெற்றோரை வீட்டில் வைத்துப் பராமரிக்கவும் தேவையான நல்மனதை எமக்குத் தந்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. அன்பின்
இறைவா! எமது குடும்பத்தில் பலவிதமான நோய்களால் துன்பப்படும் அனைவருக்கும் நற்சுகத்தைத் தந்து காத்திடவும், புரிதல் இல்லாமல் பிரிந்திருக்கும் குடும்பங்களில் அமைதி ஏற்படவும், குடும்பங்கள் சிறக்க தேவையான ஆசிகளைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. அன்பின்
இறைவா! எம் பங்கில் உள்ள குழந்தைகள் அனைவரும் பெற்றோருக்கும், வயதில் மூத்தோருக்கும் மதிப்புக் கொடுத்து வாழவும், மெய்ஞானமாகிய கிறிஸ்துவை அறிவதிலும் அன்பு செய்வதிலும் ஆர்வம் கொள்ளவும் தேவையான மனப்பக்குவத்தை எம் குழந்தைகளுக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.