திருப்பலி முன்னுரை
இயேசுவின்
பிறப்பை அண்மையில் கொண்டாடவிருக்கின்ற நாம், இந்த நான்காம் ஞாயிறு திருப்பலியில் அன்பின் மெழுகுதிரியை ஏற்றுவதன் வழியாக இயேசுவின் அளவற்ற அன்பை நம் வாழ்வில் உணர நம்மைத் தயார்படுத்துவோம். அன்னை தெரேசா கூறுவார்: “அன்புதான் உன் பலவீனம் என்றால், இந்த உலகின் மிகச்சிறந்த பலசாலி நீதான்.” ஆம், நாம் எவ்வளவு கொடுக்கிறோம் என்பதல்ல; நாம் எவ்வளவு அன்பாகக் கொடுக்கிறோம் என்பதில்தான் நிறைவு இருக்கிறது.
மனித
இனத்தின்மீது கொண்ட எல்லையில்லாத அன்பினால் கடவுள் தன்மையில் இருந்த இயேசு தம்மையே வெறுமையாக்கி, முழுவதுமாக மனிதச்சாயல் ஏற்று, மனித வடிவில் பிறக்கவிருக்கிறார். ‘இம்மானுவேல்’ என்றால்
‘கடவுள் நம்மோடு’ என்பது பொருள். நம் கடவுள் ஆண்டுதோறும் கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு மட்டும் வந்துபோகும் விருந்தினர் அல்லர்; மாறாக, நம் அன்றாட நிகழ்வுகளில் நம்முடன் இருந்து நம்மை வழிநடத்துபவர், நம்மோடு கூட வாழவிழைபவர்.
மரியா
கருவுற்றதை அறிந்திருந்தும் அவரை இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல், அன்னை மரியாவை ஏற்று அன்பு செய்து, ஆண்டவரின் தூதர் தனக்குப் பணித்தவாறே இறைத்திட்டத்தை நிறைவேற்றியவர் புனித யோசேப்பு. விண்ணகத்திலிருந்து மண்ணகம் இறங்கி வந்து அன்பை விதைத்தவர் இயேசு. இயேசுவின் அன்பால் மீட்கப்பட்ட நாம், ‘நான்’ என்பதிலிருந்து இறங்கிவந்து எல்லாரையும் அன்பு செய்வோம். அன்பு என்ற ஒளியை ஏற்றியிருக்கும் இந்த வாரத்தில், அன்பின் தூதுவர்களாக வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசக
முன்னுரை
இன்றைய
முதல் வாசகத்தில் இறைவாக்கினர் எசாயா, கடவுள் ‘இம்மானுவேலாக - நம்மோடு’ என்ற வார்த்தையை ஆணித்தரமாக எடுத்துக்காட்டுகிறார். அவர் இறைமகனாய் பிறப்பெடுத்தும், தம் உயர்வான நிலையினை விடுத்து மண்ணகம் இறங்கி வந்து மனிதரின் மீட்பிற்காகப் போராடுவார் என்பதை அவர் பிறக்கும் முன்பே இறைவாக்காக முன் மொழிந்த இவ்வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசக
முன்னுரை
கடவுள்
அன்புமயமானவர்; ஆதலால்தான் உங்களுக்கு அருளும் அன்பும் அமைதியும் தருவதாக கடவுள் தம் இறைவாக்கினர் வழியாக வாக்களித்தார். கடவுளின் சாயலைக் கொண்ட நாம் அனைவரும் அன்புடன் வாழ அழைக்கப்படுகிறோம். பிற இனத்தவராகிய உரோமை இனமக்கள் கடவுள் மீது நம்பிக்கை கொண்டு திருத்தூதுப்பணி செய்வதற்குரிய அருளைப் பெற்றுக்கொண்டது போல, நாமும் திருத்தூது பணியாற்றுவதில் கிறிஸ்துவிற்கு உரிய மக்களாய் வாழ அருள் வேண்டி இரண்டாம் வாசகத்தில் இணைவோம்.
மன்றாட்டுகள்
1. அன்பின்
இறைவா, திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள். துறவறத்தார், இல்லறத்தார் அனைவரும் இறையாட்சியின் மதிப்பீடுகளை வாழ்வாக்கவும், இயேசுவின்
ஒளியைக் கண்டுணரவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. நன்மையே
உருவான இறைவா! தேர்தலை எதிர்நோக்கியுள்ள எம் நாட்டு மக்களை ஆசிர்வதியும். மக்களின் நலன் கருதி பணிசெய்யும் நல்ல தலைவர்களைத் தேர்ந்தெடுக்க, தேவையான ஞானத்தை எங்களுக்குத் தந்தருள வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. ஒளியின்
சுடரே இறைவா! அன்பின் மெழுகுதிரி எரியும் இந்நாளில் எம் குடும்பங்களில் அமைதி, ஒற்றுமை, மன்னிப்பு, விட்டுக்கொடுத்தல், ஏற்றுக்கொள்ளுதல் போன்ற பண்புகள் வளர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. அன்பின்
இறைவா, நாங்கள் கொண்டாடவிருக்கும் கிறிஸ்து பிறப்பு, உண்மையான மகிழ்ச்சியையும் அமைதியையும் தரக்கூடிய விழாவாக இந்த விழா அமையவும், அன்பு, இரக்கம், பரிவு போன்ற நற்பண்புகளால் எம்மவரின் இதயம் நிறைக்கப்படவும் அருள்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.