news-details
ஆன்மிகம்
திருப்பலியின் ‘அறிக்கை நேரம்’ சிந்திக்க வேண்டிய தருணம்

ஞாயிற்றுக்கிழமை திருப்பலியின் இறுதி நேரம். கையில் அறிக்கையை எடுத்துக்கொண்டு வாசிக்கத் தொடங்கும் அருள்பணியாளர்கள். நாற்பது நிமிடங்கள் கடந்து சென்றபின்... முன் புறத்தில் சில வயதான பாட்டிகள் அமைதியாக அமர்ந்திருந்தனர். மற்றவர்கள் முகம் சுளித்து, ‘சரி, அப்புறம் பார்க்கலாம்என்ற முகபாவனையுடன் பார்த்தனர். அடுத்த வாரம், மனத்துள் ஏற்பட்ட அதிருப்தியோடு அருள்பணியாளர் சிறிது கடுமையான குரலில் அறிவித்தார்: “அறிக்கை வாசிக்கும்போது வெளியே செல்வோர் அருளடையாளங்களைப்  பெறமுடியாது.”

அமைதியான குழப்பம்நிலவியது. மக்கள் முகத்தில் இன்னும் சொல்லப்படாத எண்ணங்கள் தெரிந்தன. அன்றைய திருப்பலியும் வழக்கம்போல நாற்பது நிமிடங்கள் நீடித்தது. அதைக் கடந்து வந்த வாரங்களில், அறிக்கை நேரம் மூன்றில் நான்கு மடங்காக நீண்டது. சிறப்பு அழைப்பாளர்கள் வந்த நாள்களில் அது ஒருமணி நேரம் வரை சென்றது.

இதுபோன்ற நிலைமைகள் புதிதல்ல. நாட்டின் பெரும்பாலான பங்குகளிலும் இன்று இதேபோல் நடந்து வருகிறது. ஆனால், இந்நிகழ்வுகளின் அடியில் மக்களின் மனநிலை எவ்வாறு மாறி வருகிறது என்பதை நாம் சிந்தித்ததுண்டோ?

எழுபது, அறுபது வயதுகளில் உள்ள மூத்தோர் பெரும்பாலும், “எங்களுக்குச் சுகர், பிரஷர், வலி எல்லாம் இருக்கு. எட்டு மணிக்குப் பூசைக்கு வந்துட்டு பத்து முப்பதுக்கே வீட்டுக்குப் போற நேரத்திற்குள் வெடவெடன்னு ஆகிடுது; அதனால மாதா டி.வி.யில பூசை பார்த்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டோம்என்று கூறத்தொடங்கியுள்ளனர். இது அவர்களின் உடல் சோர்வை மட்டுமல்ல, மனச் சோர்வையும் வெளிப்படுத்துகிறது.

இளம் தலைமுறையினரைப் பற்றிச் சொல்லவே வேண்டாம். அவர்கள் திருப்பலிக்கு வருவதே ஒரு சாதனை. அதன் பின்பு நீண்ட மறையுரை, நீளமான அறிக்கை என்று தொடர்கையில் அவர்களின் பொறுமை துரிதமாகக் கலைந்துவிடுகிறது. கடவுளிடம் அவர்களைக் கொண்டு சேர்க்க வேண்டிய நேரம், பதற்றமூட்டும் நேரமாக மாறிவிடுகிறது. அவர்கள் உள்ளங்களில்அன்பான விருந்தினராககடவுள் இருக்க வேண்டினால், அவர்களை ஈர்க்கும் இனிய மொழியில் சுருக்கமான செய்திகளைப் பரிமாறவேண்டும்.

இன்றைய இணையச் சுழற்சி உலகில், மனநிலை வேகமாக மாறுகிறது. சமூக வலைத்தளங்கள், நுகர்வுவெறி, சினிமா கவர்ச்சி, தொழில்நுட்ப நெருக்கடிகள்... இவற்றின் நடுவே கடவுளின் குரல் மெல்லிய ஒலியாய் மட்டுமே கேட்கிறது. இத்தகைய சூழலில், மறையுரை மற்றும் அறிக்கையால் அவர்களை இணைத்துக்கொள்ள வேண்டியவர்கள் திரு அவை அருள்பணியாளர்கள். அவர்களிடம் சிந்தனையும் புதுமையும் கலந்திருக்க வேண்டிய காலம் இது. திருப்பலி, மக்கள் சார்ந்த விழிப்புணர்வாக இருக்கட்டுமேயன்றி, மன அழுத்தம் தரும் நிகழ்வாக மாறாதிருக்க சுருக்கமான, இனிய பாங்கே வழி.

அறிக்கைஎன்பது வெறும் தகவலாக அல்ல; மாறாக, மக்களை ஊக்குவிக்கும் ஆன்மிக உரை என்று பார்க்கப்பட வேண்டும். திருத்தந்தை பிரான்சிஸ்  ஒருமுறை கூறியுள்ளார்: “மறையுரை ஏழு முதல் பத்து நிமிடங்கள் போதும்.” அதேபோல் அறிக்கைகளும் சுருக்கமானதாக இருக்க வேண்டியது அவசியம்.

அறிக்கை என்பது ஆலயத்தின் இதயத்துடிப்பு; அது மக்களை எச்சரிக்கும் விழிப்புணர்வூட்டும் ஒன்றிணைக்கும் ஓர் அசைவு. ஆனால், அதற்கு அளவு மீறிய நீளம் வரும்போது, அந்த இதயத் துடிப்பு சோர்வாகிவிடுகிறது. திருப்பலி என்பது இயற்கையின் அமைதியையும் இறைவனின் நெருக்கத்தையும் உணர்த்தும் பொன்னான தருணம்; அதனைச் சுருக்கமாக, சுவையாக, இனிமையாக வைத்திருக்கிறபோதுதான் மக்கள் உள்ளங்களில் கடவுளின் பெயர் நின்றுவிடும். கடவுளின் வார்த்தை நீண்ட வாக்கியங்களில் அல்ல; மாறாக, மனத்தைத் தொட்ட ஓர் உயிருள்ள சொல் மூலமே செல்வது. அதுவே திருப்பலியின் உண்மையான புனிதம்!