news-details
ஆன்மிகம்
நிறைவு பெறும் யூபிலி 2025: தொடரட்டும் எதிர்நோக்கின் திருப்பயணம்

கிறிஸ்து பிறப்பின் 2025-ஆம் ஆண்டுகளின் நிறைவு, மகிழ்ச்சியான யூபிலி விழாவாகக் கொண்டாடப்படும் என்ற அறிவிப்பினைத் திருத்தந்தை பிரான்சிஸ் 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 11-ஆம் நாள் அறிவித்தார். ‘எதிர்நோக்கின் திருப்பயணிகள் நாம்என்ற அழைப்பை யூபிலி 2025-க்கான மையப்பொருளாக முன்மொழிந்தார். ‘புதிய நற்செய்தி அறிவிப்புபணிக்குழுவிடம் திருத்தந்தை பிரான்சிஸ் இதற்கான தயாரிப்பினை மேற்கொள்ள அழைப்பு விடுத்திருந்தார்.

2023-ஆம் ஆண்டு இரண்டாம் வத்திக்கான் சங்க மறுமலர்ச்சி மற்றும் புதுப்பித்தலை உணர்த்த நான்கு கொள்கைத் திரட்டுகளை வாசிக்கவும், மறுவாசிப்பு செய்யவும், அதன் அடிப்படையில் தனிமனித வாழ்விலும், திரு அவையில் மறுமலர்ச்சியைச் செயல்படுத்தவும் திருத்தந்தை அழைப்பு நல்கினார். 2024-ஆம் ஆண்டை யூபிலிக்கான தயாரிப்பில்இறைவேண்டலின் ஆண்டாகஅறிவித்து இறைவேண்டல் முன்னிறுத்தும் இறைவனைத் தேடுதல், தளரா நம்பிக்கையுடன் வாழ்தல் மற்றும் இறைவேண்டலையே நம் வாழ்வாக மாற்றுதல் எனும் சீரிய சிந்தனைகளை முன்வைத்தார்

2025-ஆம் ஆண்டு யூபிலி விழாவாகச் சிறப்பிக்க அழைப்புவிடுத்த திருத்தந்தை பிரான்சிஸ், யூபிலி ஆண்டின் நோக்கத்தையும் மையக்கருத்தையும் விளக்கி, தன் ஆணைமடலை (Bull) 2024-ஆம் ஆண்டு மே மாதம் 9-ஆம் நாள் இயேசுவின் விண்ணேற்றப் பெரு விழா அன்று உரோமையில் இலாத்தரன் பேராலயத்தில் வெளியிட்டார். அம்மடலில் புனித பவுலின்எதிர்நோக்கு ஒருபோதும் ஏமாற்றம் தராது (உரோ 5:5) என்ற ஆழமான பொருள் நிறைந்த வார்த்தைகளை மையமாக அமைத்துஎதிர்நோக்கின் பயணிகள்என்பதன் பொருள் என்ன என்பதைத் தெளிவுபடுத்தினார்.

வெற்றுக் கொண்டாட்டங்களையோ, வெறுமையான விழாக்களையோ மையப்படுத்திக் கொண்டாடும் நிகழ்வாக அல்லாமல், நம்பிக்கையாளர்களின் இறைநம்பிக்கையைப் (Faith) புதுப்பிக்கவும், பிறரன்புச் செயல்களை (Love-Charity) இன்றைய காலகட்டத்தில் எப்படித் தொடர வேண்டுமெனவும், திரு அவையைத் தூண்டியெழுப்பும் நோக்குடன் சிந்தனைகளை ஆணைமடலின் மையச்செய்தியாக முன்வைத்தார். இதன் தொடர்ச்சியாக, 2024, டிசம்பர் 24-ஆம் தேதி மாலை உரோமையில் (வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தில்), கிறிஸ்து பிறப்புப் பெருவிழாத் திருப்பலிக்கு முன்பாக புனிதக்  கதவினை (Holy Door) திறந்துவைத்தார். உரோமையில் 2026-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதி வரையிலும், பிற இடங்களில் 2025-டிசம்பர் 28-ஆம் தேதி வரையிலும் யூபிலி ஆண்டாக அறிவிப்பு செய்யப்பட்டது.

நற்செய்தி மதிப்பீடுகளை வாழ்வதில் திரு அவை நிறைவு காணவேண்டும்

எதிர்நோக்கின் திருப்பயணம் உலகம் சார்ந்த நிறைவை அல்ல; மாறாக, நற்செய்தி மதிப்பீடுகளை வாழ்வதில் அடையும் நிறைவை முன்னிறுத்துகிறது. உலகப் பயன்பாடுகளையோ, ஆடம்பரக் கொண்டாட்டங்களையோ அல்ல; மாறாக, அன்பையும் அமைதியையும் விதைக்கும் பணியையும், நீதிக்கும் நேர்மைக்கும் உண்மைக்கும் பகிர்வுக்கும் நம்மைச் சாட்சிகளாக்கும் செயல்பாட்டாளர்களாக உருவாக்குகிறது. கிறித்தவ வாழ்வு ஓர் இலக்கு நோக்கிய பயணமெனில், இந்தப் பயணம் நம்மை ஏமாற்றமாட்டா. நம்பிக்கையும் அன்பும் எதிர்நோக்கும் நம்மை ஏமாற்றாது எனும் உண்மையைத் திருவிவிலியம் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.

எதிர்நோக்கு வாழ்வு என்பது மனிதர்களை மையப்படுத்தியது அல்ல; அது மூவொரு கடவுளை மையப்படுத்திய நம்பிக்கை வாழ்வு, திருவிவிலிய வரலாற்றில் மிக உயர்ந்த நம்பிக்கை கொண்ட குலமுதுவர்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, தொடங்கி மோசே வழிவந்த இறைவாக்கினர்களின் பணியிலும் வாழ்விலும் ஏமாற்றம் தராத எதிர்நோக்கு வாழ்வை அவர்கள் வாழ்ந்ததைக் காணமுடிகிறது.

எதிர்நோக்குஎனும் இலக்கில் மணிமகுடமாக அமைந்ததுதான் இயேசுவின் வாழ்வும் பணிகளும். அதே எதிர்நோக்கைத் தம் சீடர்களின் உள்ளத்திலும் விதைத்தார் இயேசு. துவண்டுபோன வேளைகளிலும் அவர்தம் சீடர்களை நம்பிக்கையில் உறுதிப்படுத்தி எதிர்நோக்குடன் பயணிக்க அறிவுறுத்தி, அவர்களுக்கு முன்மாதிரிகை காட்டும் பயணத்தை மேற்கொண்டார். பொதுநலனுக்காக, பிறர்வாழ்வுக்காகத் தம்மையே ஒப்படைத்ததனால் துன்பத்திற்கு ஆளான கிறிஸ்துவைத் திரு அவை பின்பற்ற முன் வரவேண்டும்.

இறையாட்சிப் பணியில் எதிர்நோக்கு...

எதிர்நோக்கு என்பது மனவுறுதியுடன் பயணித்தல் ஆகும். மனவுறுதி என்பது சமரசம் செய்யாத நிலைப்பாடு என்பது உண்மை. இந்த மனவுறுதியைக் கடவுளின் ஆவியார் நம் ஒவ்வொருவருக்கும் நாம் பெற்ற திருமுழுக்கில் ஏற்கெனவே வழங்கியுள்ளார். திருமுழுக்குடன் நாம் தொடங்கியது ஓர் இலட்சியப் பயணம். இலக்கை நோக்கி நாம் பயணிப்பதில் பல்வேறு சவால்களை நாம் எதிர்கொள்கிறோம். ஆட்சியாளர்கள், அதிகார அமைப்புகள், அரசு அமைப்புகள், பணபலமும் ஆள்பலமும் ஆதிக்க பலமும் கொண்ட சில பல மனிதர்களும் நிறுவன அமைப்புகளும் இயக்கமாகச் செயல்படும் திரு அவையின் இறையாட்சிப் பயணத்திற்குச் சவால்களாக அமைந்துள்ளன. மனவுறுதி கொண்டு பயணித்த உண்மையான இறைவாக்கினர்கள் சமூக விழுமியங்களை எடுத்துரைத்தது மட்டுமல்ல, சமூக அநீதிகளை இடித்துரைத்தனர். சமரசம் செய்யாமல் பணியாற்றுவதே நம் இறைவாக்குப் பணி என்பதை உணரவேண்டும்.

இறைவாக்குச் சமூகமாய் பயணிக்க...

இறையாட்சிப் பயணத்தை நிகழ்த்திய இயேசுவோ அநீதிகளை விதைக்கும் அமைப்புகளையும் அதிகார வர்க்கத்தையும் எதிர்த்து நின்றார். எனவே, அவரின் வாழ்வும் பணியும் நமது பணியாகவும் வாழ்வாகவும் மாற உழைப்பதும் பயணிப்பதும் நம்பிக்கையாளர்களாகிய நம் அனைவரின் கடமையாக மாறுகிறது. இன்று நாமும் பல்வேறு அநீதிகளோடும் அநீதி அமைப்புகளோடும் மிக எளிதாகச் சமரசம் செய்கிறோம். இது நமது எதிர்நோக்குடன் கூடிய இலட்சியப் பயணத்திற்குத் தடையாக அமைந்து விடக் கூடாது. எனவே, மனவுறுதியுடன் தீமைகளை எதிர்த்து நிற்கவும், நன்மைத்தனமான செயல்பாடுகளை ஊக்குவிக்கவும், இறைவாக்குத் திரு அவையாகப் பயணிக்கவும் உறுதியேற்போம்.

மாற்றம் தேடும் தமிழ்நாடு திரு அவை

யூபிலி 2025, திரு அவையின் ஆடம்பரக் கொண்டாட்டங்களில்  மற்றொன்றாக  மட்டும் அமைந்துவிடாமல், மறுமலர்ச்சிக்கான, மாற்றத்திற்கான நிகழ்வாக தமிழ்நாடு திரு அவையில் தடம் பதிக்கவேண்டும். தமிழ்நாடு திரு அவை தன்னையே புதுப்பித்துக்கொள்ளத் தயக்கமின்றி, தடைகளைத் தாண்டி முன்வரவேண்டும். அமைப்பு நிலையிலும், நிர்வாக நிலையிலும், பணி நிலையிலும், பங்கேற்பு நிலையிலும் மாற்றத்தின் செயல்பாடுகள் வெளிப்படையான மறுமலர்ச்சி காண வேண்டும். சமநீதி, சமூக நீதி, சமத்துவம் இவற்றின் அடிப்படையில் கட்டியெழுப்பப்படும் இறையாட்சி இயக்கமாக அது உருவாகவேண்டும்.

புதுப்பித்தல் இன்றி யூபிலி 2025 உண்மையான மகிழ்வின் நிகழ்வாக நிறைவுபெறாது. சமத்துவம் என்பது இலக்கு நோக்கிய தொடர் பயணம் என்பதையும், இயேசுவின் இறையாட்சி இலட்சியமே சமத்துவ சமூகம் படைத்தல் என்பதையும் முன்னிறுத்தி தமிழ்நாடு திரு அவை இலட்சியத்தோடு பயணிக்கவேண்டும். தனிமனித வாழ்வில் கிறிஸ்துவின்மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையானது அச்சத்தை அகற்றவேண்டும். ஏனெனில், கிறிஸ்துவின் நம்பிக்கையும் செயல்பாடும் நல்லவை என்பதால், எப்போதும் நன்மை செய்யும் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். ஆகவே, இயேசு கிறிஸ்துவை மாதிரியாகப் பின்பற்றி நன்மை செய்து வாழ்வோம்.

இறுதியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குப் பிறகு புதிய திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நம் திருத்தந்தை லியோ, இந்த யூபிலி ஆண்டின் செயல்பாடுகளைத் தொடர்ந்து நடத்துவதும், திரு அவைக்கு மிகச் சிறப்பான தலைமைத்துவத்தைக் கொடுத்துக் கொண்டிருப்பதும் எதிர்நோக்கின் காணத்தக்க அடையாளமேதிருத்தூதர்கள் பேதுரு, பவுல் வழிவரும் பணியாளர்களிலும், அன்னை மரியாவின் அர்ப்பண வாழ்வை வாழும் துறவியர்களிலும், நம்பிக்கையாளர் அனைவரின் வாழ்விலும்எதிர்நோக்கு ஒருபோதும் நம்மை ஏமாற்றாதுஎனும் உறுதிப்பாடு உயரட்டும், உண்மையாகட்டும்.