திருப்பலி முன்னுரை
திருவருகைக்
காலத்தின் மூன்றாம் ஞாயிறான இன்று மகிழ்ச்சியின் திரியை ஏற்றி, நிலையான மகிழ்ச்சியைத் தரக்கூடிய ஆண்டவரில் நிலைத்து வாழ, அன்னையாம் திரு அவையோடு இணைந்து இத்திருவழிபாட்டிற்கு உங்களை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம். இயேசுவின் வருகை பார்வையற்றோருக்குப் பார்வையையும், கால் ஊனமுற்றோருக்கு நடக்கும் ஆற்றலையும், தொழுநோயாளருக்குச் சுகத்தையும், காது கேளாதோருக்குக் கேட்கும் திறனையும், இறந்தோருக்கு உயிரையும், இல்லாதோருக்கு வாழ்வையும் கொடுத்தது. இயேசுவின் பிறப்பிற்காக நம்மைத் தயாரிக்கும் நாம் பொருளைத் தேடுவதில் மகிழ்ச்சிகொள்ளாமல், இயேசுவின் அருளைத் தேடுவதில் மகிழ்ச்சி காண்போம். யோவானையும், யோவானின் சீடர்களைப் போன்றும் மெசியாவைக் கண்டுகொள்வோம்.
கிறித்தவ
வாழ்வின் மகிழ்ச்சி என்பது கடவுளை அறிவதிலும், அவரை அன்பு செய்வதிலும்தான் உள்ளது. நமது மகிழ்ச்சியிலும் துக்கத்திலும் நோயிலும் தனிமையிலும் ஆண்டவர் நமக்குத் துணைவராகவும் நண்பராகவும் நம்முடன் இருக்கின்றார். இமைப்பொழுதும் நீங்காது காத்துவரும் இறைவனின் பேரன்பில் மகிழ்ச்சி காண்போம். நாம் சந்திக்கும் அனைவருக்கும் வாழ்க்கையாலும் வார்த்தையாலும் உடனிருப்பாலும் மகிழ்ச்சியைக் கொடுப்போம். நாம் வாழும் சமுதாயத்தில் பல்வேறு பிரச்சினைகளால் உள்ளம் சோர்ந்திருக்கும் அனைவருக்கும் கிறிஸ்துவிடமிருந்து பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியைப் பகிர்ந்துவாழ்வோம். வாழ்க்கையில்
எல்லா நிலைகளையும் கடந்து செல்ல கடவுள் துணைநிற்கிறார் என்ற மகிழ்ச்சியில் இணைவோம் இத்திருப்பலியில்.
முதல் வாசகம்
முன்னுரை
ஆண்டவரின்
வருகை இவ்வையகத்திற்கு அமைதியையும் மகிழ்ச்சியையும் கொடுக்கும். ஆண்டவர்மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் அற்புதங்களையும் அதிசயங்களையும் காண்பார்கள்; அவர் கொண்டு வந்த மீட்பை அனுபவிப்பார்கள். ஆண்டவரின் பிள்ளைகளாகிய நாமும் அவர் கொண்டு வந்த அன்பையும் மகிழ்ச்சியையும் சுவைத்து வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
இரண்டாம் வாசகம்
முன்னுரை
நம்
வாழ்க்கையில் அமைதி நிலைக்கவும், உறவுகள் வளரவும், மனது இலகுவாகவும், ஆரோக்கியத்துடன் வாழவும் அவசியமாக இருப்பது பொறுமை. ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் ஆண்டவர்மீது கொண்டுள்ள நம்பிக்கையில் தளர்ச்சி இல்லாது, வாழ்க்கையில் வருகின்ற இன்னல்கள், இக்கட்டுகள் அனைத்தையும் பொறுமையாக ஏற்றுக்கொண்டு, அனைத்திலும் இறைவனின் திருவுளம் அறிந்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.
மன்றாட்டுகள்
1. அன்பின்
ஆன்டவரே! எம் திரு அவையை வழிநடத்திவரும் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் உமது மதிப்பீடுகளைத் தொய்வின்றி விதைக்கவும்,
இயேசு என்ற ஒப்பற்ற செல்வத்தை தங்களின் வாழ்க்கையால் எடுத்துரைக்கவும், தேவையான ஞானத்தையும் ஆற்றலையும் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
2. எம்மோடு
வாழும் ஆண்டவரே! மகிழ்ச்சி என்ற திரியை ஏற்றி இருக்கும் நாங்கள் அனைவரும், இயேசு என்ற பேரொளியால் ஒளிர்விக்கப்பட்டு மகிழ்வோடும் மனநிறைவோடும் வாழவும், ஒருவர் மற்றவருக்கு மகிழ்ச்சியின் தூதுவராகச் செயல்படவும் தேவையான நல்மனத்தை எங்களுக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
3. அன்பின்
இறைவா! எம் நாட்டுத் தலைவர்கள் அனைவரும் சுயநலம் அகற்றி, மக்கள் நலனில் அக்கறை கொண்டு வாழவும், எம் நாட்டில் உள்ள பிரிவினைச் சக்திகள் அனைத்தும் அழிந்து மக்கள் மகிழ்வோடு வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.
4. ஞானத்தின்
ஊற்றே எம் இறைவா! எம் பங்கிலுள்ள குழந்தைகள் அனைவரும் ஞானத்திலும் இறைநம்பிக்கையிலும் நாளும் வளரவும், நாங்கள் அனைவரும் அவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.