news-details
சிறப்புக்கட்டுரை
‘Gen Z’ புரட்சி (வலையும் வாழ்வும் – 33)

ஹார்ன்சத்தம், காலை வெப்பம், கடுத்திருக்கும் முகங்கள், கலைந்திருக்கும் முடிகள், புகை கக்கும் வாகனங்கள், புழுதி கிளப்பும் மனித பெருமூச்சுகள்.... என்று சென்னை மாநகரம் வழக்கம் போலவே விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. மெட்ரோ இரயில் பணிகளினால் குறுகிய வாடிவாசலிலிருந்து வெளியேறும் கட்டுக் கடங்கா காளைகளைப்போல, சிலர் குறுகிய பயணப்பாதையில்கூட முண்டியடித்துக் கொண்டு வாகனங்களை ஓட்டிச்சென்றனர். எங்கும் பரபரப்பு என்னும் கொடிய வியாதி எல்லாரையும் தொற்றிக்கொண்டதாகவே தெரிந்தது.

இத்தகைய கூட்ட நெரிசலில் பெண் ஒருத்தி இருசக்கர வாகனம் ஒன்றில் தன் ஆறு வயது மகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தாள். பின்னிருக்கையில் அமர்ந்திருந்த அப்பெண்ணின் மகள் புதிய டிரஸ் அணிந்திருந்தாள். இன்று அவளுக்குப் பிறந்த நாளாக இருக்கக்கூடும். தனது பிறந்தநாளில் தன்னோடு படிக்கும் குழந்தைகளுக்குசுவீட்ஸ்கொடுக்க வேண்டும் என்பதற்காகச் சாக்லேட் பாக்ஸ் ஒன்றைக் கையில் வைத்திருந்தாள்.

அவர்கள் டிராபிக் சிக்னலில் நின்று கொண்டிருக்கும்போது பைக்கில் வந்த ஒருவன் அவர்கள் ஓட்டிவந்த இருசக்கர வாகனத்தை மோதித்தள்ளினான். கீழே தூக்கிவீசப்பட்ட அச்சிறுமி பலத்த காயங்களுடன் சாலையில் இரத்த விரிப்பின் மேல் நினைவற்றுக் கிடந்தாள். அவளின் கைகளிலிருந்த சாக்லேட் சாலையெங்கும் சிதறிக் கிடந்தன. இதற்கிடையில் பைக்கிலிருந்து இறங்கிய அந்த முரட்டு உருவத்திற்குச் சொந்தக்காரன் அந்தப் பெண்ணின் கழுத்திலிருந்த தங்கத்தாலியைத் தன் இரும்பு கையால் பலவந்தமாக இழுத்துப் பறித்தான். எவ்வளவோ போராடிப் பார்த்தும் முடியாததால் தன் தங்கத்தாலியைப் பறிகொடுத்தாள் அந்தப் பெண்.

கீழே விழுந்துகிடந்த அந்த ஆறு வயது சிறுமி திமிறிக்கொண்டு எழுந்து, அந்தத் திருடனின் விரலை இறுக்கமாகப் பிடித்துக் கடித்தாள். வலி தாங்காமல் அவள் தலையில் வேகமாக அடித்து அவளைத் தன் காலால் எட்டி உதைத்தான் அந்த முரடன். காலில் உதைபட்ட பந்துபோலத் தூரமாகப் போய் விழுந்தாள் அச்சிறுமி. பைக்கில் வந்த அந்த உருவம் வந்த பைக்கிலேயே தப்பித்துச்சென்றது.

ஊசியின் காதில் நூல் கோர்க்கும் நேரத்திற்குள் எல்லாம் வேகமாக நடந்து முடிந்திருந்தது. உடைந்து போன தன் இடது காலை இழுத்துக்கொண்டே மூச்சற்றுக் கிடந்த தன் மகளின் அருகில் சென்று கதறி அழுதாள் அந்தத் தாய். தன் மகளின் பிறந்தநாளே அவளுக்கு இறப்பு நாளாகியது. தங்கத்தாலியைத் திருடிச்சென்ற அந்தத் திருடனின் சுண்டுவிரல் இறந்துபோன அச்சிறுமியின் வாயில் இருந்தது.

இவ்வளவு நடந்தபிறகும் அந்தச் சிறுமிக்கு இருந்த தைரியம் யாருக்குமில்லை. கூடியிருந்தவர்கள் யாரும் தடுத்து நிறுத்தவில்லை; தட்டிக் கேட்கவுமில்லை. ஒருசிலர் ஓடிவந்து உதவி செய்தனர். வேறுசிலர் நடந்ததை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர். சிலர் தங்கள் செல்போனில் நடப்பதைப் பதிவு செய்துகொண்டிருந்தனர். இதைவிடக் கொடுமை என்னவெனில் சிலர் அங்குச் சிதறிக்கிடந்த சாக்லெட்டையும் பொறுக்கிச்சென்றனர்.

டிராபிக் சிக்னல் சிவப்பிலிருந்து பச்சைக்குக் குரங்காய் தாவியது. அங்குக் கூடியிருந்தவர்களில் பலரும் உடனடியாகக் கலைந்து சென்றனர். அவர்களில் பலரும் அந்த முரட்டுத் திருடனின் முகமூடியையே அணிந்திருந்தனர் என்று தோன்றியது.

உலகின் போர்களாலும் தீவிரவாதத் தாக்குதல்களாலும் அதிகமாகப் பாதிக்கப்படுவது மகளிரும், சிறுவர்-சிறுமியருமே என்கிறது .நா. சபை. அதேபோல நாட்டின் ஊழல்வாதிகளாலும் இலஞ்சப் பெருச்சாளிகளாலும் அதிகமாகப் பாதிக்கப்படுவது இளையோரே எனலாம். சிலர் நடக்கின்ற அநியாயங்களைத் தட்டிக்கேட்கின்றனர். ஒருசிலர்அது நமது வேலை அல்லஎன்று சாகும் வரை பார்வையாளர்களாகவே இருந்துவிடுகின்றனர். தட்டிக்கேட்கின்றவர்கள் பொய்க்குற்றம் சாட்டப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இலஞ்சம், ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுக்க முன்வருபவர்களின் குரல்வளை நெரிக்கப்படுவதோடு, அவர்கள் கொலையும் செய்யப்படுகிறார்கள்.

சில காலங்களுக்கு முன்பாக ஏழை எளியவர்கள் இதனாலேயே பேச்சற்ற சமூகமாக இருந்து வந்தனர். பெரும் ஊடகங்களின் விசுவரூப வளர்ச்சியினால் சாமானிய ஊடகங்கள் உயிரிழந்து காணப்பட்டன. பெரும் வெகுசன ஊடகங்கள் பெரும் பணக்காரர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கைகளிலேயே இருந்தன. அவர்கள் சொல்லும் கருத்துகளே பேசுபொருள் ஆயின. நாம் எதைச் சிந்திக்கவேண்டும் என்று அவர்கள் வரையறுக்கிறார்களோ, அதுவே ஊடக விவாதங்களாயின.

இன்றும் அத்தகைய சூழல் இல்லாமல் இல்லை. ஆயினும், சமூக ஊடகங்களின் வரவிற்குப் பிறகு ஒவ்வொரு மனிதனும் ஓர் ஊடகவியலாளர் ஆனான். கண்முன் நடக்கும் அநீதிகளைப் படம் பிடித்து உலகிற்கு வெளிப்படுத்தினான்.

சமூக ஊடகங்களில் வெளியாகும் அடித்தள மக்களின் பிரச்சினைகள், ஊழலுக்கு எதிரான, அதிகாரப்போக்கிற்கு எதிரான கருத்துருவாக்கங்கள் சமூக ஊடகங்களின் விவாதப்பொருளாகிப் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, மாற்றங்களுக்கு வழிவகுத்தன. அண்மையில் நேபாளத்தில் எதிரொலித்தGen Zபுரட்சியை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

நேபாளத்தில் நிலவிய சமூகச் சீர்கேடுகளை, அரசியல்வாதிகள் மற்றும் உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளின் குழந்தைகளுடைய சொகுசு வாழ்க்கைமுறையை இளையோர் வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தனர். மேலும், அதிகாரிகளின் ஊழல் போக்கை இளையோர் சமூக ஊடகங்கள் வழியாகத் தொடர்ந்து பதிவிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக, ‘டிஸ்கார்ட் (Discord) மற்றும்பிட்சாட்(Bitchat) போன்ற புதியவகைத் தொடர்பு ஊடகங்களைப் பயன்படுத்தி இணைய உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினர். இதனை எதிர்கொள்ள முடியாத அரசு, அந்நாட்டில் பத்திற்கு மேற்பட்ட சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்கின்றது.

இச்செயல் அந்நாட்டு இளையோரை மேலும் கோபமடையச் செய்கிறது. இதன் தொடர்ச்சியாக, பல்வேறு போராட்டங்கள், வன்முறை நிகழ்வுகள், துப்பாக்கிச் சுடுதல்கள் அரங்கேறுகின்றன. இரு பதிற்கும் மேற்பட்டவர்கள் இவ்வன்முறைச் செயல்களினால் உயிரை இழந்திருக்கிறார்கள். அந்நாட்டின் பிரதமர் தன் பதவியை இராஜினாமா செய்திருக்கிறார். சமூக ஊடகங்களுக்கு எதிரான தடை நீக்கப்பட்டிருக்கின்றது.

இளையோர் சமூக ஊடகங்களைச் சரியாகப் பயன்படுத்தினால் மிகப்பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதைப் பல்வேறு சான்றுகளோடு உறுதியாகக் கூறமுடியும்.

2011-இல் எகிப்தில் நடந்தவீ ஆர் ஆல் காலேத் செட்டு போராட்டம் (We Are All Khaled Said Protest), 2012-ஆம் ஆண்டு மெக்சிகோவில் நடந்த ஆம் நம்பர் 132 போராட்டம் (‘I am Number 132 Protest), 2014-இல் ஹாங்காங்கில் நடைப்பெற்றகுடை போராட்டம் (The Umbrella Movement), 2013-ஆம் ஆண்டு துருக்கியில் நடைபெற்றடு நாட் டச் மை இண்டர்நெட் போராட்டம் (Do not Touch my Internet Protest), 2010-இல் அரபு நாடுகளில் பற்றியெரிந்தஅரபு ஸ்பிரிங் போராட்டம் (Arab Spring Protest), 2014-இல் தைவானில் நடைபெற்றசூரியகாந்தி போராட்டம் (The Sunflower Protest), இந்தியாவில் 2017-இல் தமிழ்நாட்டில் நடந்த மெரினா ஜல்லிக்கட்டுப் போராட்டம், 2020-இல் ஹத்ராஸ் போராட்டம், டெல்லி பெண் கூட்டுப்பாலியல் சீண்டலுக்கு எதிரான போராட்டம் என அடுக்கிக்கொண்டே போகலாம்.

சமூக ஊடகங்கள் ஒரு பொழுதுபோக்குக் கருவி மட்டுமல்ல, போராட்டத்திற்கான ஆயுதம். அதனைச் சரியாகப் பயன்படுத்தும்போது அது சமூக மாற்றத்தைக் கொணர்கிறது என்பதே உண்மை.