தமிழ்நாட்டில் 2031-இல் பா.ச.க. ஆட்சியென ஆர்.எஸ்.எஸ். அமைப்பு கனவு காண்கிறது. அதற்கான சதுரங்க விளையாட்டின் ஆட்டக் காய்களை வேகமாக நகர்த்துகிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தன் இலக்கை அடைய அ.தி.மு.க.வை வளைத்துவிட்டது. கரூர் துயரச் சம்பவங்களுக்குப் பின்பு த.வெ.க.வும் தானே வலையில் விழுந்துவிட்டது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஆலகால நஞ்சு தமிழரின் மூச்சுக்குழலை நெருக்கும் வலைப் பின்னல் வழி இறுகுகிறது.
இனி
திராவிடக் கட்சிகள் இல்லாத தமிழ்நாடு, ஊழலில்லாத தமிழ்நாடு, புதிய மாற்றம் என்ற பிரச்சாரங்கள் சங்பரிவார் அமைப்புகளால் விதைக்கப்படுகின்றன. ‘நடுநிலையாளர்கள்’ என்ற
போர்வையில் மெத்தப் படித்தவர்களும் திரைத்துறையினரும் ஊடகங்களும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஊதுகுழலாக அதையே திரும்பத் திரும்ப ஊதுகின்றனர். நடிகர் ரஜினி அன்று, அரசு இயந்திரச் செயல்பாட்டு முறைகளில் மாற்றம்வேண்டும் என்றார். பின்பு அவரே மாறிப்போனார்.
வருமான
வரிப் பிரச்சினைகளில் மாட்டிய நடிகர் விஜய் அவர்களை, வருமான வரித்துறை அதிகாரியே
காப்பாற்றிய அதிசயம் நடந்தது. திரைமறைவில் வருமான வரித்துறை அதிகாரி விஜய்யின்
அரசியல் ஆசைக்குத் தூபம் போடுகிறார். மறைமுக அரசியல் ஆலோசனைகள் வழங்குகிறார். ஒரு கட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தூண்டுதலின் பேரில் விருப்ப ஓய்வு கொடுத்த மறுநாளே த.வெ.க.வில் சேர பணிவிடுப்பு செய்யும் அதிசயம் நடந்தது. எந்த ஐ.ஏ.எஸ்.,
ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். அதிகாரியும் ஒரே நாளில் பணி விடுப்புச் செய்யப்படுவதில்லை என்பது வரலாறு.
அருண்ராஜ்
அவர்கள் த.வெ.க.
கட்சியில் சேர்ந்தவுடன் அவருக்குக் கொள்கை பரப்புப் பொதுச் செயலாளர் பதவி தரப்படுகிறது. அவர் அப்பொழுது அளித்த நேர்காணலில், அரசு வழங்கும் இலவசங்கள் குறித்து, மக்கள் பெறுகிற சலுகைகள் குறித்து எதிர்க்கருத்தை வைக்கிறார். இதன் தொடர்ச்சியாக, கரூர் துயரச் சம்பவங்களுக்குப் பின்னான த.வெ.க.
சிறப்புப் பொதுக்குழு கூட்டத்தில், “தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்படும் ரூபாய் 1000-த்தை விட்டுக்கொடுங்கள்” என்று
தமிழ்நாட்டு மகளிருக்கு விஜய் முன்நின்று வேண்டுகோள் வைக்கிறார்.
கொஞ்சம்
பின்னோக்கிப் போவோம். த.வெ.க.
தலைவர் நடிகர் விஜய் நடித்த ‘சர்க்கார்’
திரைப்படம்
2018-இல் வெளிவருகிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை ‘கோமளவல்லி’,
‘கருவிலே நான் வில்லி’ எனக் கடுமையான
தன் பழைய பகை சாடலுடன் காட்சிகள் திரையில் விரிகின்றன. நடிகர் விஜய் தானொரு ‘கார்ப்பரேட் கிரிமினல்’
என வசனம் பேசுவார். ‘சர்க்கார்’ திரைப்படத்தில்
கதாநாயகனின் வீர வசனங்களால் பொதுமக்கள் அரசின் இலவசப் பொருள்களைத் தெருவில் வீசி எரிப்பதாகக் காட்சிகள்
இருக்கும். த.வெ.க.
தலைவரின் திரைக் காட்சிக்கும், த.வெ.க.
கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் அவர்கள் பேச்சிற்கும் பொருந்திப் போகிறது. இது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்து விதைப்பு அல்லவோ!
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு வரலாற்று ரீதியாக ஜனரஞ்சக
மற்றும் பொது நீதியின் அடிப்படையில் பொறுப்பற்ற இலவசங்களை அரசுகள் வழங்குவதை விமர்சிக்கிறது. ஒன்றிய மோடி அரசு, மாநில அரசுகளின் இலவசங்கள் குறித்து அடிப்படை ஆர்.
எஸ்.எஸ். பார்வையில் அதிருப்தி அடைகிறது.
மாநில அரசுகளின் இலவசங்கள் குறித்து பிரதமர் மோடி அவர்களும், நிதி
அமைச்சர் நிர்மலா சீதா ராமன் அவர்களும் தொடர்ந்து அதிருப்தி தெரிவிக்கிறார்கள். பீகார் தேர்தலில் மகளிர் தொழில் தொடங்க ரூபாய் 10,000 வழங்கி ஓட்டு திருடினர். இந்தத் திருட்டு
மகாராஷ்டிரா மாநிலத்திலும் அரங்கேறியது என்பதே பா.ச.க.வின் வெற்றி வரலாறு.
பா.ச.க. சார்ந்த
வழக்கறிஞர் மாநில அரசுகளின் இலவசத் திட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் செல்கிறார். அது தி.மு.க.,
ஆம் ஆத்மி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் போன்ற மாநிலக் கட்சிகள் வழங்கிய தேர்தல் வாக்குறுதிகள், அது சார்ந்த இலவசங்கள் சார்ந்தது. உச்ச
நீதிமன்றம், அது தேர்தல் ஆணைய வரம்புக்கு உட்பட்டது என்றும், அது மக்கள் வாழ்வாதாரம் சார்ந்த அடிப்படை உரிமை என்பதால் தாம் தலையிட இயலாது என பின்வாங்கிவிட்டது. இது சுதந்திரமான
மற்றும் நியாயமான தேர்தல்களைச் சீர்குலைக்கிறதா? என்பதை
மறுபரிசீலனைக்குட்படுத்த
வேண்டும் என்பதை மட்டுமே பார்க்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்திற்கு ஆலோசனை கூறியது.
இந்தியப்
பொருளாதாரம் அடிப்படையில் விவசாயம் மற்றும் கிராமப்புறங்கள் சார்ந்தது. விவசாயம் பருவகாலத் தொழில் என்பதால், விவசாயக்கூலிகள் பலன்பெற மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டம் உள்ளது. இது கிராம மராமத்து வேலைகளை
அடிப்படையாகக் கொண்ட நூறுநாள் வேலைத்திட்டம் எனப்படுகிறது. இது இந்திய தேச மக்களின் வாழ்வாதாரம் சார்ந்தது.
நம்
நாட்டில் மட்டுமல்ல, பல நாடுகளில்,
ஏன் ஐரோப்பிய நாடுகளில்கூட பொருளாதார மந்த நிலை ஏற்படுகிறது. மக்களிடையே பணப்புழக்கம்
குறைகிறது. மக்களின் கைகளில் காசு இல்லை. அரசுகள் பெரிய அளவில் பணத்தை அச்சிட்டு, பொதுமக்களின் வங்கிக்கணக்கில் செலுத்திவிடும். இதற்கு
‘ஹெலிகாப்டர் மணி’ என்ற பெயர் உண்டு. ஏன், செல்வச் செழிப்பான அமெரிக்காவில், அரசு வழங்கும் உணவு அட்டை வழியாகப் பசியாறுபவர் ஆயிரமாயிரம் வறிய மக்கள்.
இந்தியாவில்
இதுபோன்ற இலவசத் திட்டங்களால் வறுமைக்கோட்டிற்கு உள்பட்டோரின் எண்ணிக்கை 27.1-லிருந்து 5.3 விழுக்காடாகக் குறைந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. த.வெ.க.
கட்சி பா.ச.க.
குறித்தும், சிறப்பு வாக்காளர் பட்டியல் குறித்தும் மென்மைப் போக்கும் குறியீடு அரசியலும் நடத்துகிறது.
அட்டைக்கத்தி ஆட்டம் நடத்துகிறது. ‘நாம் தமிழர் கட்சி’ போல, த.வெ.க.
கட்சியும் இலவசங்கள் குறித்து எதிர்க்கருத்து கொண்டதா? என்பதை அறிவிக்கவேண்டும். த.வெ.க.வின் செயல் திட்டங்கள் வெளிப்படைத்தன்மை கொண்டதாக அமையவேண்டும். ஏழை, எளிய மக்களின் நலனுக்கு எதிரான ஆர்.எஸ்.எஸ். கருத்துகளைத் த.வெ.க.வினர் ஏன்
வழிமொழிகிறார்கள் என்ற விளக்கம் தமிழ்நாட்டு மக்களால் கேட்கப்படுகிறது.
த.வெ.க. என்பது
தமிழ்நாட்டுச் சிறுபான்மையினரின்
வாக்குகளைப் பெற ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் உருவாக்கப்பட்ட கட்சி என்ற
குற்றச்சாட்டு உண்டு. த.வெ.க.வின் இரண்டாம் கட்ட நிர்வாகிகளான பொருளாளர், இணைப் பொதுச்செயலாளர், தேர்தல் மேலாண்மைச் செயலாளர் என அனைவரின் மீதும்
ஆர்.எஸ்.எஸ். காவிச்சாயம் பூசப்படுகிறது. த.வெ.க.
தன்னை ஒரு திராவிடக்
கட்சி என்றும், ‘எல்லாருக்கும் எல்லாமுமான சமூகநீதி’
என்பதாகத் தன்னைக்
காட்டியது. ஆனால்,
செயல்பாட்டு ரீதியில் ஆர்.எஸ்.எஸ். செயல்திட்டங்களை ஆதரிப்பது, த.வெ.க.
மீதான ஆர்.எஸ்.எஸ். சார்பு ஐயப்பாட்டை உறுதி செய்வதாகும்.
தமிழ்நாட்டு
வாக்கு அரசியல் என்பது எளியோருக்கான, சிறுபான்மை மக்களுக்கான, சமூக நீதிக்கான அரசியலாகும். சமூகநீதியைப் புறந்தள்ளுபவர்களை தமிழ்நாட்டு மக்களும்
புறந்தள்ளுவர். இந்த நியதி பா.ச.க.வுக்கு மட்டுமல்ல, த.வெ.க. வுக்கும்
பொருந்தும்.