(சென்ற வார தொடர்ச்சி)
திருத்தந்தையும் உரோமைத்
தலைமைச் செயலகமும்
அனைத்து
நம்பிக்கையாளர்களின் கூட்டியக்கம், ஆயர்களின் குழுமப் பண்பு என்பன ஆக்கம்பெற திருத்தந்தையின்
முதன்மை அவசியம். இதனால் “கூட்டியக்கம், குழுமப் பண்பு, முதன்மை என்பன ஒன்றுடன் ஒன்று
தொடர்புடையன” (முஅ 13a). அனைத்துக்
கிறித்தவர்களின் ஒன்றிப்பை வளர்ப்பது திருத்தந்தையின் பணியினுடைய இன்றியமையாத ஒரு கூறு.
திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் வெளியிட்ட ‘அவர்கள் ஒன்றாய் இருக்க’ எனும் சுற்றுமடலில் அவர் விடுத்த அழைப்பிற்குப் பெறப்பட்ட
பதில்களும், கிறித்தவ ஒன்றிப்பு உரையாடல்களில் எட்டப்பட்ட முடிவுகளும் திருத்தந்தையின்
முதன்மை, ஆயர்களின் குழுமப் பண்பு, அனைத்து நம்பிக்கையாளர்களின் கூட்டியக்கம் என்பனவற்றையும்,
அவற்றிற்கு இடையே உள்ள உறவையும் பற்றிய பொதுவான புரிதலை உருவாக்க உதவக்கூடியவை.
உரோமைத்
தலைமைச் செயலகத்தின் சீரமைப்பு, கத்தோலிக்கத் திரு அவையின் கூட்டியக்கப் பயணத்திற்கு
இன்றியமையாதது. அது திருத்தந்தைக்கும் ஆயர்களுக்கும் குறுக்கே நிற்பது அல்ல; மாறாக,
அது இருவரும் தங்களுக்கே உரிய பணிகளை ஆற்ற உதவுவது ஆகும். அது ஒன்றித்த வாழ்வையும்,
நலமான அதிகாரப் பரவலாக்கலையும் வளர்க்க வேண்டும். உரோமைப் பேராயங்கள் தலத்திரு அவைகளுடனும்
தங்களுக்கு இடையிலும் உள்ள உறவை மேம்படுத்துவதும்
அவசியம்.
செயல்படுத்தச் சில பரிந்துரைகள்
1.
பின்வருவனவற்றின் இறையியல் அடிப்படையும் சட்ட வரையறைகளும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்;
அ. ஆயர் பொறுப்பைப் பகிர்தல் மற்றும் கூட்டுப்பொறுப்பு என்பவற்றின் அளவும் வகைகளும்;
ஆ. ஆயர்களது குழுமப் பண்பிற்கும் அவர்கள் தங்கள் இறையியல் மற்றும் அருள்பணிசார்ந்த
மாற்றுக்கருத்துகளை வெளியிடுதல் என்பனவற்றிற்கும் இடையிலான தொடர்பு; இ. இளையோரையும்
வலுவற்றோரையும் பாதுகாக்கவும், அத்தகையோர் மீதான சீண்டல்கள் பற்றி நீதிமுறையிலான நடவடிக்கைகளை
மேற்கொள்ளவும் மற்றொரு தனிக்குழுவைத் திரு அவைச் சட்டப்படி ஏற்படுத்துவது பொருத்தமானதாக
இருக்கும்.
2.
தணிக்கைப் பண்பாடு என்பது கூட்டுப்பொறுப்பை வளர்க்கவும், முறைகேடுகளைத் தடுக்கவும்
உதவுவது. இது கூட்டியக்கத் திரு அவைக்கு இன்றியமையாதது. இதனால் ஆயர் பணியின் செயலாக்கத்தையும்
குறிப்பாக, அதிகாரத்தை அவர் கையாளும் முறை, மறைமாவட்டச் சொத்துகளைச் சார்ந்த அவரது
பொருளாதார நிர்வாகம், பங்கேற்பு அமைப்புகளின் செயல்பாடு, பல்வகை முறைகேடுகளைத் தடுத்தல்
என்பனவற்றையும் அவ்வப்போது மதிப்பீட்டாய்வு செய்வதற்கான அமைப்புகளும் செயல்முறைகளும்
வரையறுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
3.
ஆயர் பேரவை, மறைமாவட்ட அருள்பணிப் பேரவை என்பனவற்றைக் கட்டாயமாக்குவதும், மறைமாவட்டப்
பங்கேற்பு அமைப்புகள் தங்களது கூட்டுப்பொறுப்பை அதிக நன்முறையில் செயல்படுத்துவதும்
உறுதி செய்யப்படவேண்டும். தேவைப்படின் இது சட்டமுறையானது என ஆக்கப்படலாம்.
4.
ஆயர் பணிக்கான ஆள்களைத் தேர்வு செய்யும் முறையில் திருத்தந்தையின் தூதுவரின் அதிகாரமும்,
ஆயர் பேரவையின் பங்கேற்பும் சமன் செய்யப்படவேண்டும். மேலும், அப்பணிக்கெனத் தேர்வு
செய்யப்படுவதற்கு ஒருவரிடம் இருக்கவேண்டிய
தகுதிக் கூறுகளை மறு ஆய்வு செய்தல் அவசியம்.
அதற்கான கலந்தாய்வில் இன்னும் அதிக எண்ணிக்கையில் பொதுநிலையினரையும் துறவியரையும்
ஈடுபடுத்தும் வகையில் அதை விரிவாக்கம் செய்யவும்வேண்டும்.
5.
சகோதர உறவு, ஒன்றிற்கு ஒன்று ஆதரவு, வெளிப்படைத்தன்மை, பரந்துபட்ட கலந்துரையாடல் என்பனவற்றின்
வழியாகப் பல்வேறு நிலப்பகுதிகளில் உள்ள திரு அவைகளின் குழுமப் பண்பு வெளிப்படுகிறது.
அதனை உறுதிசெய்யும் வகையில் உயர் மறைமாவட்டம்
மற்றும் மாநில அளவிலான அமைப்புகளின் செயல்பாட்டை
மறு ஆய்வு செய்வது, அவற்றை வலுப்படுத்துவது அவசியம்.
6.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் ஆயர்களின் உரோமை வருகை (Ad Limina Visit)
தலத்திரு அவைகளின் ஆயர்களுக்கும் உரோமை ஆயருக்கும் அவருடன் நெருங்கி ஒத்துழைக்கும்
வத்திக்கான் தலைமைச் செயலகத்திற்கும் உள்ள உறவின் உச்ச நிகழ்வாகும். “ஒன்றிப்புறவையும்
குழுமப் பண்பையும் கூட்டியக்கத்தின் உண்மையான செயலாக்கத்தையும் வளர்க்கும் வகையில்
ஒருவர் ஒருவருடனான திறந்த பரிமாற்றத்திற்கு வாய்ப்பாக அது திகழும் நோக்கில், அதன் நடைமுறை
மறு ஆய்வு செய்யப்படவேண்டும்” (முஅ 13g).
7.
உரோமைத் தலைமைச் செயலகப் பேராயங்கள் திரு அவையின் கூட்டியக்கப் பண்பைக் கருத்தில் கொண்டு
ஆயர்களுடன் கலந்துரையாடலை வளர்க்கவேண்டும். சூழமைவுகளின் பன்மைநிலையைக் கவனத்தில் கொண்டு
தலத்திரு அவைகளின் குரல்களை அவை இன்னும் அதிகக் கருத்துடன் கேட்க வேண்டும் (முஅ 13h).
8.
திருத்தந்தையின் பணிக்கு உதவுகின்ற வகையில் கர்தினால்களின் ஆலோசனைக் குழுவின் செயல்பாடு
கூட்டியியக்க உணர்வுடன் வலுவாக்கப்படவேண்டும் (முஅ 13j).
9.
ஆயர் பேரவைகளின் கோட்பாடு மற்றும் விதிமுறை சார்ந்த அதிகாரத்தைத் தெளிவாக வரையறுத்தல்
அவசியம். ஒரே நம்பிக்கையின் உண்மையான படிப்பினையைத் தத்தம் சூழமைவுக்குப் பொருத்தமானதும்
பண்பாட்டுக்கு ஏற்றதுமான முறையிலும் வெளிப்படுத்தும் திருவழிபாடு, மறைக்கல்வி, விதிமுறைகள்,
அருள்பணி இறையியல், அருள்வாழ்வு என்பனவற்றின் வடிவங்களைக் கண்டறிய அவற்றின் குழுமச்
செயல்பாடு உதவ முடியும் (2-ஆம் வத். நற்செய்திப் பணி 22).
10. ஆயர் பேரவைகளால் எடுக்கப்பட்ட முடிவுகளை ஒவ்வோர் ஆயரும் தமது மறைமாவட்டத்தில் நடைமுறைப்படுத்துவது உறுதிசெய்யப்பட வேண்டும்.
(தொடரும்)