news-details
சிறப்புக்கட்டுரை
திருத்தந்தையின் முதல் திருத்தூதுப் பயணம்: அமைதிக்கான பயணம்

அஸ்ஸலாமு அலைக்கும் (Assalamu Alaikum) என்று கூறி அமைதிக்கான அழைப்பை மீண்டும் இவ்வுலகிற்கு அளித்துள்ளார் நம்முடைய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள். இவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல் முறையாக மக்களிடையே தோன்றிய பொழுதுஉங்களுக்கு அமைதி உண்டாகுகஎன்று இவ்வுலகை வாழ்த்தி மகிழ்ந்தார். அதன் தொடர்ச்சியாக  அமைதியை நிலைநாட்ட பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார். அந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக நம் திருத்தந்தையின் முதல் திருத்தூதுப் பயணம் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.

நம் திருத்தந்தை தனது முன்னோடி திருத்தந்தையான புனித ஆறாம் பவுல், புனித இரண்டாம் ஜான்பவுல், பதினாறாம் பெனடிக்ட் மற்றும் பிரான்சிஸின் வரிசையில் திருத்தந்தை பதினான்காம் லியோவும் துருக்கி மற்றும் லெபனானை நோக்கி தன்னுடைய திருத்தூதுப் பயணத்தை நிகழ்த்தியுள்ளார்.

துருக்கியில் 33.000 கத்தோலிக்கர்களும், லெபனானில் 1.34 இலட்சம் கத்தோலிக்கர்களும் உள்ளனர். இப்பயணம் தற்போதைய திருத்தந்தையின் முதல் பயணம் என்பதாலும், போர்கள் நிறைந்த இவ்வுலகச் சூழலில் அமைதியையும் ஒற்றுமையையும் வலியுறுத்துவதாலும் தனிக் கவனம் பெற்றுள்ளது. மேலும், கத்தோலிக்கர் அல்லா ஊடகங்களும் சகோதரர்களும் திருத்தந்தையின் இப்பயணத்தின்மீது கவனம் செலுத்துவது தனிச்சிறப்பாகும்.

கடந்த 27, நவம்பரில் உரோம் நகரிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கிய திருத்தந்தை, “ஒரே ஆண்டவர், ஒரே நம்பிக்கை, ஒரே திருமுழுக்கு (எபே 4:5) என்ற விருதுவாக்கை மையமாக வைத்து, துருக்கியில் மூன்று நாள் பயணம் மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து நவம்பர் 31 முதல் டிசம்பர் 2 வரைஅமைதியை ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர் (மத் 5:9) என்ற விருதுவாக்குடன் லெபனானின் மக்களுக்குத் தன் உடனிருப்பை உணர்த்தினார்.

இன்சிக்என்று அறியப்படும் துருக்கியின் நகர் முன்னர்நைசியாஎன்று அழைக்கப்பட்டது. இவ்விடத்தில் கி.பி. 325-ஆம் ஆண்டு நைசியா பொதுச்சங்கம் (First Council of Nicaeaநடைபெற்றது. இச்சங்கத்தின் 1700-ஆம் ஆண்டு நினைவானது இவ்வாண்டு கொண்டாடப்படுகின்றது. இதன் பொருட்டு கீழை மரபுவழித் திரு அவையின் தலைவராக அறியப்படும் கான்ஸ்டேடின் முதலாம் பர்த்தலமேயு திருத்தந்தைக்கு அழைப்பு விடுத்திருந்தார். இச்சமயத்தில், துருக்கி சென்ற திருத்தந்தையின் பயணம் கிறித்தவப் பொதுச்சங்கத்தின் ஒற்றுமைக்கான முயற்சிகளுக்கு வலுசேர்த்துள்ளது.

நவம்பர் 27 அன்று துருக்கியின் தலைநகரைச் சென்றடைந்த திருத்தந்தையைத் துருக்கியின் சுற்றுலாத்துறை அமைச்சர் அரச மரியாதையுடன் வரவேற்றார். அதன் பின்பு, துருக்கி குடியரசின் தந்தை முஸ்தபா கெமால் ஆதாதுர்க்கின் கல்லறை நினைவிடத்திற்குச் சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். அங்குள்ள நினைவுகளைப் பதிவிடும் தங்கப் புத்தகத்தில்,  “துருக்கி நாட்டிற்கு வருகை தர முடிந்ததற்காக நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்; மேலும், இந்த நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் நிறைவான அமைதி மற்றும் வளமை கிடைக்க நான் இறைவேண்டல் செய்கிறேன்என்று பதிவிட்டுக் கையெழுத்திட்டார்.

அதன் பின்னர் அங்காராவில் உள்ள அரசுத் தலைவர் மாளிகையில் அந்நாட்டின் அரசு அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் மற்றும் பல முக்கியப் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றினார். அவ்வுரையில், ‘அனைவரும் உண்மையிலும் நட்பிலும், கடவுளின் உதவியை நம்பி ஒன்றிணைந்து நடப்போம்என்று அவர்களுக்கு கிறிஸ்துவின் பிரதிநிதியாக வாழ அழைப்புவிடுத்தார். துருக்கியின் திரு அவைப் பிரதிநிதிகள், ஆயர்கள், குருக்கள் மற்றும் பொதுநிலையினருடன் இணைந்து திருப்பலி நிறைவேற்றினார். மேலும், ஏழைகளின் சிறிய சகோதரிகளால் நடத்தப்படும் முதியோர் இல்லத்திற்குச் சென்று அங்குள்ள அருள்சகோதரிகளின் தன்னலமற்ற கிறிஸ்துவின் பணிக்காக அவர்களுக்கு ஆசிர் வழங்கினார்.

நவம்பர் 28-அன்று, முதல் திருச்சங்கமான நைசியா திருச்சங்கத்தின் 1700-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் பல்வேறு திரு அவைகளின் தலைவர்களுடன் இணைந்து, கிறித்தவர்களின் ஒற்றுமைக்காகச் சிறப்பாக இறைவேண்டல் செய்தார். மேலும், அமைதியை முன்னிறுத்தி, நம்முடைய திருத்தந்தை கீழை மரபுவழித் திரு அவைகளின் தலைவரான காண்ஸ்டேடின் முதலாம் பர்த்தலமேயு அவர்களுடன் இணைந்து கூட்டுப் பிரகடனத்தில் (Joint Declaration) கையெழுத்திட்டார்மதத்தின் பெயரால் எவ்வித வன்முறைகளுக்கும் துணை நிற்கக்கூடாது என்பது அப்பிரகடனத்தின் சிறப்பம்சமாகும்.

அடுத்த நாள் நவம்பர் 29 அன்றுநீல மசூதிஎன்றழைக்கப்படும் சுல்தான் அகமது மசூதியில் காலணிகளை அகற்றி, மரியாதையுடன் சென்று பிற மதச் சகோதரர்களிடம் திரு அவை கொண்டுள்ள உறவை வெளிப்படுத்தினார்.

துருக்கியை நோக்கிய நம்முடைய திருத்தந்தையின் இந்தப் பயணமானது கிறித்தவர்களின் ஒற்றுமையையும், பல்வேறு நம்பிக்கையைச் சேர்ந்த மக்களின் ஒன்றிணைப்பையும் உலக அரங்கில் எடுத்துரைத்துள்ளது.

துருக்கியில் தன்னுடைய பயணத்தை முடித்துக் கொண்ட திருத்தந்தை, அங்கிருந்து லெபனானை நோக்கித் தன்னுடைய திருப்பயணத்தைத் தொடர்ந்தார். நவம்பர் 30 அன்று லெபனானின் தலைநகரான பெய்ரூட்டிற்குச் சென்ற திருத்தந்தை, பிரதமர் மற்றும் அரசு பிரதிநிதிகளிடத்தில் நம்பிக்கை, மன்னிப்பு மற்றும் அமைதியின் வலிமை குறித்து உரையாற்றினார். அண்மையில் இஸ்ரேல் இராணுவத்தின் ஏவுகணைகளால் தாக்கப்பட்ட பெய்ரூட்டில், திருத்தந்தை அமைதியைக் குறித்து உரையாடியது சிறப்பு வாய்ந்ததாகும்.

லெபனானின் பல்வேறு கத்தோலிக்கக் கிறித்தவர்களைச் சந்தித்து அவர்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தினார். மேலும், கிறித்தவர்களின் சிறப்புமிக்க பல்வேறு தளங்களுக்குச் சென்று அமைதியை வலியுறுத்தி ஆசியுரை வழங்கினார்டிசம்பர் 1 மாலையில், லெபனானின் இளைஞர்களைச் சந்தித்து அவர்களுக்கு ஆசி வழங்கினார்.

டிசம்பர் 2 அன்று பெய்ரூட்டிலுள்ள பிரான்சிஸ்கன் திருச்சிலுவை அருள்சகோதரிகள், நோயாளிகள் மற்றும் பணியாளர்களுக்கு ஆசியுரை வழங்கிய திருத்தந்தை, அவர்களுடன் உரையாடுகையில், “நீங்கள் செய்யும் இந்தப்  பணியானது இந்த நாட்டை மட்டுமல்லாமல், முழுமனிதச் சமுதாயத்திற்கும்  வலிமையான பாடமாக உள்ளதுஎன்று கூறி அங்குப் பணிபுரியும் அனைவரையும் வாழ்த்தினார். அதன் பின்பு, பெய்ரூட்டில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த இடங்களைப் பார்வையிட்டு, இறந்த மக்களுக்காக இறைவனிடத்தில் மன்றாடினார். தன்னுடைய முதல் திருத்தூதுப் பயணத்தின் இறுதி நிகழ்வாக, பெய்ரூட் கடற்கரையில் ஏறத்தாழ ஓர் இலட்சம் நம்பிக்கையாளர்கள் கூடிட, அங்குத் திருப்பலி நிறைவேற்றினார்.

திருத்தந்தையின் முதல் திருத்தூதுப் பயண நிகழ்வுகள் அகில உலகக் கிறித்தவர்களின் நம்பிக்கையையும் உலக அமைதியையும் முன்னிறுத்தி நடைபெற்றுள்ளது. “பிரிவினைகளால் பிளவுற்ற இவ்வுலகம் மூன்றாம் உலகப் போரை நோக்கித் தயாராகிக் கொண்டிருக்கின்றதுஎன்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார். அந்தப் பிரிவினைகளைக் களைந்து, ‘ஒரே ஆண்டவர், ஒரே நம்பிக்கை, ஒரே திருமுழுக்குஎன்பதன் அடிப்படையில் அமைந்த திருத்தந்தையின் இப்பயணம் கிறித்தவர்கள் என்ற ஒரு புள்ளியில் ஒற்றுமையாக வாழ அழைத்துள்ளது. மேலும், திரு அவை அமைதியை ஏற்படுத்தும் அமைதியின் தூதனாக விளங்குகின்றது என்று உலக அரங்கிற்குத் தன்னுடைய நிலைப்பாட்டை எடுத்துரைத்துள்ளது.