‘உழைப்பு’ தனிமனிதனின், சமூகத்தின் மேம்பாட்டுக்கான குறியீடு. உழைப்பு இல்லையேல் உயர்வு இல்லை! உழைப்பே ஒவ்வொருவருக்கும் சமூக-பொருளாதார வளர்ச்சிக்கான அளவுகோல். உழைப்பாளர்கள் இன்றி வீடும் நாடும் ஒருபோதும் உயர்வடையாது. வளமான வேலைவாய்ப்புகளும் தகுதியான பணியாளர்களும் முறையான சட்ட திட்டங்களும் தனிமனிதனின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு அடிப்படையானதாகிறது.
1950-ஆம் ஆண்டு இந்திய அரசமைப்பின் பிரிவுகள் 14-16, 19(இ), 23-24, 41-43 ஆகியவை தொழிலாளர் உரிமைகள் பற்றிப் பேசுகின்றன. பிரிவு 14, ‘சட்டத்தின் முன் அனைவரும் சமமாக இருக்க வேண்டும்’ என்றும், பிரிவு 15, ‘வேலைவாய்ப்புகளில், பணி நியமனங்களில் அரசு குடிமக்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டக்கூடாது’ என்றும், பிரிவு16, ‘அரசின் கீழ் வேலைவாய்ப்பு அல்லது நியமனத்திற்கான சமவாய்ப்பு உரிமையை வழங்க வேண்டும்’ என்றும், பிரிவு 19, ‘தொழிற்சங்கங்களை உருவாக்க உரிமை உண்டு’ என்றும், குறிப்பாக, அரசமைப்பின் பிரிவு 39-(ன) ‘ஆண்களும் பெண்களும் சம வேலைக்குச் சம ஊதியம் பெறவேண்டும்’ என்றும் கூறுகிறது.
இதன் அடிப்படையில் இந்திய ஒன்றிய அரசிற்கு எதிராக ரத்தீர் சிங் மேற்கொண்ட வழக்கில், ‘சமவேலைக்குச் சம ஊதியம்’ என்ற கொள்கை அரசியல் அமைப்பு ரீதியான குறிக்கோள் என்றும், 1976-இல் வெளிவந்த சம ஊதியச் சட்டத்தின் அடிப்படையில் அரசியல் அமைப்பின் 32-வது பிரிவின் கீழ் அரசமைப்புத் தீர்வுகள் மூலம் அதை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவ்வாறு நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பும்-பின்பும் அதாவது 1930 முதல் 1950 ஆண்டுகளுக்கு இடையில் தொழிலாளர் நலனுக்காக 44 சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அவற்றில் 15 சட்டங்களை நீக்கிவிட்டு, எஞ்சிய 29 சட்டங்களை ஒருங்கிணைத்து ஊதிய விதி (Code on
Wages) 2019, தொழில்துறை தொடர்பு விதி (Industrial
Relations Code) 2020, சமூகப் பாதுகாப்பு விதி (Code on
Social Security) 2020 மற்றும் பணிப் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிச்சூழல் விதி (Occupational
Safety, Health and Working Condition – OSH Code) 2020 என நான்கு சட்டத் தொகுப்புகளாக இப்போது ஒன்றிய அரசு நடைமுறைப்படுத்தி இருக்கிறது. இதன்மூலம் 1436 தொழிலாளர் சட்ட விதிகள் 351-ஆகக் குறைக்கப்பட்டிருக்கின்றன.
1990-களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காண, அன்றைய பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான ஒன்றிய அரசு, புதிய பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தியது. ஆனால், அதற்கேற்றவாறு தொழிலாளர் சட்டங்களைச் சீரமைக்கத்
தனிப்பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அவரது ஐந்தாண்டுகால ஆட்சியில் அது சாத்தியப்படவில்லை. பிறகு வந்த ஆட்சியாளர்களாலும் சீர்திருத்தத்தைக் கொண்டுவர இயலவில்லை.
பா.ச.க.-வின் ஆட்சி காலத்தில், 2015 முதல் 2019 வரையில் நான்கு ஆண்டுகள் தொழிலதிபர்கள், தொழில்துறை பிரதிநிதிகள், தொழிற்சங்கப் பிரதிநிதிகள் என முத்தரப்புக் கலந்தாலோசனை மேற்கொள்ளப்பட்டு, இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு தரப்பினர் மத்தியிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையிலும் இந்தச் சட்டங்கள் நவம்பர் 21-முதல் நடைமுறைக்கு வந்துள்ள ஒன்றிய தொழில்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்துத் தொழில்துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “காலத்திற்கேற்ப பல நாடுகள் தங்களது தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளன; அதன் தொடர்ச்சியாக, தற்போது இந்தியாவிலும் 29 தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, அவை நான்கு சட்டங்களாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்துள்ளார். மேலும், 40 கோடி தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாகவும், அவை வெறும் சீர்திருத்தங்கள் மட்டுமல்ல, தொழிலாளர்கள் நலனுக்காக மேற்கொள்ளப்பட்டிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முன்னெடுப்பு எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
ஒன்றிய முதன்மை அமைச்சரோ, “மகளிர், இளையோர் எனத் தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு, குறைந்தபட்ச மற்றும் உரிய நேரத்தில் ஊதியம், பாதுகாப்பான பணிச்சூழல் மற்றும் இலாபத்தை அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை இத்தொழிலாளர் சட்டங்கள் உறுதி செய்கின்றன” என்று குறிப்பிட்டிருக்கிறார். மேலும், “சுதந்திரம் அடைந்தபிறகு தொழிலாளர்களின் நலனை மையப்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இந்த விரிவான சீர்திருத்தங்கள் தொழிலாளர்களின் உரிமையைப் பாதுகாத்து, இந்தியப் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்த வழிவகுக்கும். இதனால் அதிகப்படியான வேலைவாய்ப்புகள் உருவாவதோடு, ‘வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற இலக்கை விரைவில் அடைய முடியும்; வணிகம் மேற்கொள்வது இனி எளிமையாகும்” எனவும் குறிப்பிட்டிருக்கிறார். ‘யாருடைய வணிகம் எளிதாக இனி மேம்படும்?’ என்பது நமக்குப் புரியாததல்ல; அது ஊரறிந்த, உலகறிந்த உண்மை.
முதன்முறையாக அமைப்புசாரா தொழிலாளர்களைச் சமூகப் பாதுகாப்புப் பலன் வரம்பிற்குள் கொண்டு வருவது, அனைத்துத் தொழிலாளர்களுக்கும் நியமனக் கடிதம் கட்டாயம் என்பது, அனைத்துத் துறைகளிலும் குறித்த நேரத்தில் ஊதியம், பணிக்கொடை பெறும் காலவரம்பு தளர்வு, பல்வேறு ஊதிய மற்றும் விடுப்புப் பலன்கள் உள்ளிட்ட முக்கியக் கூறுகளை இந்தச் சட்ட வடிவு கொண்டிருக்கிறது. இது ஊழியர்களின் நீண்டகால நலனுக்கான ஒரு முயற்சி என்றாலும் கூட, குறைந்தபட்ச ஊதியத்தை ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் வரை சில மாநில அரசுகள் காத்திருக்க வேண்டியிருப்பது தொழிலாளர்களைப் பாதிக்கக்கூடும் எனப் பொருளாதார வல்லுநர்கள் விமர்சித்திருக்கிறார்கள்.
மேலும், புதிய தொழிலாளர் சட்டத்தின் அடிப்படையில் தொழிலாளரின் Basic Salary என்னும் அடிப்படை ஊதியம் மொத்த ஊதியத்திலிருந்து குறைந்தபட்சம் 50 விழுக்காடாக இருக்கவேண்டும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், கையில் வாங்கும் சம்பளம் குறையும் என்ற அச்சமும் எழுந்துள்ளது. அவ்வாறே, புதிய விதியின்கீழ் நிறுவனம் ஊழியருக்கு வழங்கும் CTC எனப்படும் மொத்த ஊதியத்தை மாற்றாமல், வருங்கால வைப்பு நிதி மற்றும் பணிக்கொடைப் பங்களிப்பை அதிகரித்தால் தற்போது வாங்கிக் கொண்டிருக்கும் ஊதியத்தில் 15 விழுக்காடு வரை ஊழியர்கள் இழக்கக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு அண்மையில் நடைமுறைப்படுத்தியுள்ள தொழிலாளர் தொகுப்புச் சட்டங்களுக்குத் தொழில் நிறுவனங்கள் வரவேற்பும், எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிலாளர் சங்கங்கள் எதிர்ப்பும் தெரிவித்துள்ளன. மாறிவரும் சமூகப் பொருளாதாரச் சூழ்நிலையில், இந்தச் சட்டத் திருத்தம் தவிர்க்க இயலாதது என்று ஒன்றிய அரசு முன்வைத்தாலும், இவை நாட்டின் நீடித்த, நிலைத்த வளர்ச்சியை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள சட்டங்கள் அல்ல என்றும், தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவான, தொழிலாளர்களுக்கு எதிரான சட்டங்களாக இவை இருக்கின்றன எனவும் எதிர்க்கட்சிகள் வலுவாகக் குரல் எழுப்புகின்றன.
புதிய சட்டத்தில் எட்டு மணி நேர வேலை எனக் கூறப்பட்டிருந்தாலும், தொழிலாளரின் இசைவுடன் கூடிய கூடுதல் வேலை நேரத்திற்கு இரண்டு மடங்கு ஊதியம் என்பது, பணிநேரத்தை அதிகரிக்க மறைமுகமான தூண்டுதல் என்றும், காலப்போக்கில் அதுவே நிரந்தரமாகிவிடும் என்றும் தொழிற்சங்கங்கள் அஞ்சுகின்றன. மேலும், இனி தொழில் நிறுவனங்களில் தங்களின் ஆதிக்கம் குறைந்துவிடும் எனத் தொழிற்சங்கங்கள் அஞ்சுவதோடு, தொழிலாளர்களில் 51% பேர் உறுப்பினர்களாக இருக்கும் தொழிற்சங்கங்கள் மட்டுமே கோரிக்கைகள் குறித்து நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்னும் விதி தொழிற்சங்கங்கள் பெருகிவிட்ட நிலையில் நடைமுறைச் சாத்தியமல்ல என்பதும் அவர்களது அச்சத்திற்குக் காரணமாக அமைகின்றன. இந்த விதியைப் பயன்படுத்தி அதானி, அம்பானி போன்ற பெருமுதலாளிகள் தங்கள் ஊழியர்களைச் சிறு சிறு குழுக்களாகப் பிரித்தாளும் குறுக்கு வழியைப் பின்பற்றினால் தொழிற்சங்கங்கள் தங்களின் கோரிக்கைகள் குறித்தோ, பேரம் பேசும் வல்லமையின்றியோ போய்விடும் என்பது அச்சுறுத்தும் எதார்த்தம்.
நாடெங்கும் பெரும் அதிர்ச்சியையும் அதிர்வலைகளையும் ஏற்படுத்திய இந்தச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து, பத்து தொழிற்சங்கங்கள் போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றன. திடீரென வெளியிடப்பட்டிருக்கும் இந்த அறிவிப்பை நடைமுறைப்படுத்த கால அவகாசம் அளிக்க வேண்டும் என, தொழில் நிறுவனங்களும் வலியுறுத்தி வருகின்றன.
இந்தியாவில் 15 முதல் 60 வயது பிரிவில் உள்ள 80 கோடி பேரில், 50 கோடி பேர் உழைக்கும் வர்க்கத்தினர். அவர்களில் 10 பேர் மட்டுமே நிரந்தர வேலைவாய்ப்புப் பெறுபவர்கள். இந்த நிலையில், அனைவருக்குமான சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தொழிலாளர் சட்டத் திருத்தம் தவிர்க்க முடியாததாக இருக்கிறது என்று ஒன்றிய அரசு நியாயப்படுத்தினாலும், இது நீண்ட நெடுங் காலமாகப் போராடிப்பெற்ற தொழிலாளர்களின் உரிமையை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் இருப்பதாகவும், முதலாளிகளுக்கு வரைமுறையற்ற அதிகாரத்தை வாரி வழங்குவதாகவும் கருதி, இந்தச் சட்டத்திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துத்
தொழிற்சங்கங்கள் முன்னெடுக்கும் போராட்டங்களுக்கு வலுவூட்ட வேண்டியது நமது கடமை.