பேறுபெற்ற பெத்லகேமே- நீ
வேறுபட்ட
பெத்லகேமே!
பேரருளின்
பெட்டகமானாய் -நீ
பேரரசரின்
பிறப்பிடமானாய்!
நாடப்படா
இடமாய் கிடந்த நீ,
தேடப்படும்
இடமாய் உயர்ந்தாய்!
சிறு
கிராமமாகிய நீ -இயேசுவே
சிசுவான
சிங்கார வனமானாய்!
வைக்கோலின்
மணமாய் இருந்த நீ,
வான்
தேவனின் பிறப்பின் கனமானாய்!
அற்பமான
மாட்டுத் தொழுவத்தை நீ
ஆசிர்வாதமான
இல்லமாக்கினாய்!
மதிக்கப்படாமல்
வாழ்ந்த மேய்ப்பர்களை நீ
மாண்புமிக்க
சாட்சிகள் ஆக்கினாய்!
அச்சத்துடன்
வாழ்ந்த மனிதர்களை நீ
ஆச்சரியத்தால்
மகிழச்செய்தாய்!
மாட்டுத்
தொழுவம் கூட - இறைமகிமையைப்
பாட்டாக்க
முடியும் எனக் கற்றுத் தந்தாய்!
இருள்
சூழ்ந்து சோர்ந்த இடமதில் நீ
இறை
அருள் சூழ்ந்து ஒளிர்ந்திட வழி வகுத்தாய்!
உயர்ந்த
மாளிகைகள் இல்லாத நீ
உன்னத
தேவனின் உறைவிடமானாய்
அயர்ந்த
மனிதருக்கு ஆறுதல் தந்தாய் நீ
அன்பினால்
அனைவருக்கும் தேறுதல் தந்தாய்!
வரலாறு
உன்னை மதிக்கவில்லை - ஆனால்
வானமே
உன்னை வர்ணிக்கச் செய்தாய்!
ஆசிர்வதிக்கப்பட்ட
நகரமானாய்-இறை
அன்பு
சூழ்ந்த சிகரமானாய்!
புனித
நகரமே, புண்ணிய பூமியே!
பூபாளங்கள்
முழங்கிடச் செய்தாய்,
புன்னகை
பூத்திடச் செய்தாய்
உன்னை
நினைக்கையில்,
உள்ளம்
குளிரச் செய்தாய்!
நம்பிக்கை
நகரமே,
நித்தியத்திற்குத்
துணை நின்றாயே!
வேதம்
அறியாத நீ அமைதியில்
போதனை
செய்கின்றாயே!
இதயத்தில்
தாழ்ந்தோரை,
இன்பமுடன்
வாழ அழைத்தாய்!
குறைகளால்
நிறைந்தோரை
இறையருளைச்
சுவைக்கச் செய்தாய்!
கருணை
நிறைந்த தேவனை,
கண்
திறக்க வைத்தாயே உன் மடியில்!
விண்ணின்
ஆசிர் மண்ணில் மலர,
உன்னையே
தாரைவார்த்துத் தந்தாயே!
அரவமற்ற
இரவுதனில் - இறை
அமைதியைச்
சுவைத்திட அழைப்பு விடுத்தாய்!
விண்மீன்களால்
மட்டுமல்ல அந்த இரவு
மன்னவனின்
கருணையாலும் ஒளிரச் செய்தாய்!
பொன்னோ
பொருளோ அல்ல
உன்னைச்
சிறப்பித்தது,
அரசனோ
அறிவியலோ அல்ல
உன்னை
உயர்த்தியது,
அன்பு
நிறைந்த ஆன்மிகமும்
தாழ்ச்சி
நிறைந்த தியாகத் திருமகனும்தான்!
வாரி
வழங்கும் வள்ளல் தேவனைப்
பாரினில்
மலரச் செய்தாயே!
பேறுபெற்ற
பெத்லகேமே,
உன்னில்
பூரிப்படைந்துதான் போகிறேன்!