news-details
சிறப்புக்கட்டுரை
வரலாற்றில் இருக்கின்றவராக இருக்கின்றவரின் மானுடப் பிறப்பு!

வரலாறு என்பது கடந்த கால நிகழ்வுகளை ஆவணப்படுத்துவது மட்டுமல்ல; மாறாக, அது முக்காலத்தையும் இணைக்கும் காலக் கண்ணாடி. ஒரு புள்ளியைச் சென்றடையும் திட்டமிடாத பயணம் அல்ல; விடுதலையை நோக்கியத் திட்டமிடப்பட்ட மனிதப் பயணம். வரலாற்றிற்கு ஒரு தனித்துவமான உயிர் உள்ளது. ஏனெனில், வரலாறு நிறைவின்மையிலிருந்து நிறைவை நோக்கி முன்னேறுகிறது. அந்த நிறைவை நோக்கி மனிதகுலத்தை நகர்த்த, கடவுள் இறைத்திட்டத்தை ஏற்படுத்தி, அதற்காகத் தம் ஒரே மகனை வரலாற்றில் பயணிக்கும் நபராக இந்த உலகத்திற்குத் தருகிறார்.

இஸ்ரயேலர்களின் வரலாற்றுக் கடவுள்

இஸ்ரயேல் மக்களின் வாய்மொழி உரையாடலாக இருந்த இறையனுபவ நிகழ்வுகள் எழுத்து வடிவம் பெறும்போது, அது உயிரோட்டமுள்ள வரலாறு கொண்ட புனித நூலாக மாறுகிறது. அப்படிப்பட்ட நிகழ்வுகளில்தான் கடவுள் தம்மை மோசேவுக்குஇருக்கின்றவராக இருக்கின்றவர் (விப 3:14) என்று வெளிப்படுத்துகிறார். கடவுள் நேற்றும் இன்றும் என்றும் மாறாத நபராகத் தம்மை வெளிப்படுத்துகிறார். மோசேவுடன் பயணித்த கடவுள் அவருக்குப் பின் வந்த யோசுவாவுடனும் பயணிக்கும் கடவுளாக இருக்கிறார். “மோசேவுடன் இருந்தது போல் நான் உன்னோடு இருப்பேன். உன்னைக் கைநெகிழ மாட்டேன், கைவிடவும் மாட்டேன் (யோசுவா 1:5) என்கிறார் கடவுள்.

மோசேவுக்குப் பிறகு இஸ்ரயேல் மக்களை யோசுவா வழிநடத்தினார். இஸ்ரயேல் மக்களின் வரலாற்று வழிநடத்துதலில் மோசேவைப் போலவே யோசுவா கடவுளுடன் நெருக்கமாக இருந்தார். எகிப்திலிருந்து இஸ்ரயேல் மக்களை மீட்டு பாலைவனத்தில் மோசே வழிநடத்தியதுபோல, புதிய நாட்டைக் கைப்பற்றுவதில் வீரராக யோசுவா இருந்தார். நாடோடி இனமாக அலைந்த இனத்தை, தேசிய இனமாக மோசே மாற்றியது போல, இஸ்ரயேல் மக்களை நாட்டின் குடிமக்களாக யோசுவா உருவாக்கினார்.

மோசே நாட்டை உளவு பார்க்க ஒற்றர்களை அனுப்பியதுபோல, யோசுவா ஒற்றர்களை அனுப்பினார். மோசேவைப்போல யோசுவா இஸ்ரயேல் மக்களை யோர்தான் ஆற்றைக் கடக்கவும், உடன்படிக்கைப் பேழைக்கு முக்கியத்துவமும் கொடுத்தார்.

யோசுவாவிற்குப் பின் வருகின்ற நீதித்தலைவர்கள், அரசர்கள் மற்றும் இறைவாக்கினர்கள் வழியாகக் கடவுள் தொடர்ந்து வரலாற்றில் பயணித்துள்ளார்.

மேற்கண்ட நிகழ்வுகள் அனைத்தும் வரலாற்றுச் சான்றுகளுடனும், அகழ்வாராய்ச்சிக் கண்டுபிடிப்புகளுடனும் ஒத்துப்போகின்றன. இதன் மூலம் இறைவன் காலத்திற்கும் அழியாத நபராக நம்மோடு பயணித்துக் கொண்டிருக்கிறார்.

இறைத்திட்டத்தில் வரலாற்று நபர்களாக மரியா-யோசேப்பு

அன்னை மரியாவும் வரலாற்றில் பயணித்த நபராக இருந்தார். அவரும் இறைவனின் திட்டத்தில் வரலாற்று நபராக இருந்து இறைத்திட்டத்திற்கு ஓர் ஊடலாகச் செயல்பட்டார். அந்த ஊடல் பணியில் என்றும் கன்னியாக இருந்து தன் வாழ்வைப் புனிதமாக்கிநாமே அமல உற்பவம்என்று வெளிப்படுத்தினார். மரியாவும் பத்து மாதம் கடவுளின் குழந்தையைச் சுமந்து, பேறுகால வேதனையுற்று, இயேசுவை இந்த உலகத்திற்குக் கொடுத்தார்.

யோசேப்பும் கடவுளின் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் தனது முழு ஒத்துழைப்பையும் கொடுத்தார். அவர் அன்னை மரியாவைப் போன்று இறைத்திட்டத்தின் ஊடலாகச் செயல்பட்டார். யோசேப்பு, இயேசுவைத் தன் வயிற்றில் கருத்தரிப்பதைத் தவிர்த்து மற்ற எல்லாச் செயல்களிலும் நிகழ்வுகளிலும் மரியாவைப் போன்று செயல்பட்டார். அவரும் மரியாவைப் போன்று என்றும் இயேசுவின் தந்தையாக இருந்து தன் முழு பங்களிப்பையும் கடவுளின் மீட்புத் திட்டத்திற்குக் கொடுத்தார்.

இதன்வழியாக வரலாற்றில் வாழும் நம் அனைவரையும் இறைவனின் திட்டத்திற்கும், இயேசு விரும்பிய இறையாட்சி சமுதாயத்தை உருவாக்கும் கருவியாகவும் செயல்பட இந்தக் கிறிஸ்து பிறப்பு நம்மை அழைக்கிறது.

கட்டமைக்கப்படும் வரலாறுகள்

தத்துவவியலாளர் ஹெகல், “வரலாற்றாளருக்குச் சான்றுகள் இருந்தால் மட்டும் போதாது; சான்றுகளைப் புரிந்துகொள்ளும் ஆற்றலை வழங்கும் தத்துவப் பார்வையும் அவசியம்என்கிறார்.

இன்று வரலாற்று வழியாகத் தெரிந்த உண்மைகள் ஒவ்வொன்றாக மாற்றியமைக்கப்பட்டு, புதிய போலியான சிந்தனைகளை இந்துத்துவா அமைப்புகள் தொடர்ந்து நம் நாட்டில் ஊடகங்கள் வழியாகவும், சர்ச்சைக்குரிய சொற்பொழிவுகளாலும் மறைமுகமாகத் திணித்து வருகின்றன. எடுத்துக்காட்டாக, குஜராத் மாநிலத்தில் ஒன்பதாம் வகுப்பு கேள்வித்தாளில், ‘காந்தி எப்படி தற்கொலை செய்து கொண்டார்?’ என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

காலங்காலமாகத் திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றி வந்த இடத்தில் இன்று புதிய வரலாறாகப் போலியான கருத்தை அந்த அமைப்பு விதைக்கிறது. ‘வந்தே மாதரம்என்ற நமது தேசியப் பாடலின் 150-ஆம் ஆண்டு விழாவில் போலியான கருத்துகளை முன்வைத்து தற்பொழுது ஆளும் தலைவர்கள் சர்ச்சைகளை ஏற்படுத்துகிறார்கள்.

மேலும், மக்கள் மத்தியில் பிளவு ஏற்படுத்தி புதிய கட்டமைப்பை உருவாக்க இந்துத்துவா முனைந்து செயல்படுகிறது.

தொடக்கத்தில் யூதர்களில் ஒரு நபர்கூட காசா பகுதியில் வாழ்ந்ததில்லை. ஆனால், ‘அந்த நாடு எமக்குக் கொடுத்ததுஎன்று இஸ்ரயேல் பிரதமர் புதிய வரலாற்றை முன்வைத்து பல இலட்சம் மக்களின் உயிர்களைப் போர்கள் மூலம் பறித்துக் கொண்டிருக்கிறார்.

வரலாற்றை முழுமையாகத் தெரிந்து கொள்ளவில்லை என்றால், நம் நம்பிக்கையும் நம் வாழ்க்கையும் பொருளற்றுப் போய்விடும். அறியாமை மக்களிடம் எளிமையான பிளவை உண்டாக்கி வலது சாரிகளை ஆதரிப்பதற்கும், அவர்களை உருவாக்குவதற்கும் உதவியாக மாறிவிடும்.

எனவே, வரலாற்றில் இருக்கின்றவராக இருக்கின்றவரை உணர்ந்து, அவரது மீட்புத் திட்டத்தின் பதிலிருப்பாகப் பிறக்கப் போகும் வரலாற்று இயேசுவை நம் உள்ளத்தில் பிறக்கவைத்து, வரப்போகும் புதிய ஆண்டில் புத்துலகம் படைக்க முற்படுவோம்.

கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்!