ஆன்மிகமும் அரசியலும்
காலத்தின்
வேகத்தில் எண்ணிம உலகின் மாயத்தில் இரண்டிற்கும் சற்று அலட்சியமாக மனிதன் பயணிக்க தொடங்கிவிட்டான் என்பதே இரு சொற்றொடர்களுக்கும் அச்சாணியாகத் திகழ்கிறது.
பனி
பொழிய, குளிர்காற்று சருமத்தை வருட அனைவர் மனத்திலும் ஒரு புத்துணர்ச்சி. பெரு மகிழ்ச்சி! காரணம், கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டம். அதேவேளையில், சிலர் காலத்தைத் தனதாக்க, பலர் வேதனையை அனுபவிக்க நெருங்கி வந்து கொண்டிருக்கிறது தேர்தல்.
தித்திக்கும்
தேன்போல சிலருக்கு இனித்தாலும் ‘ஐயோ தெரிந்தே அரளிக்காயைச் சுவைப்பதா?’ என்பதுபோல் சிந்தனைகள் சிதறிக்கொண்டிருக்கின்றன. ஆக, கிறிஸ்து பிறப்புக் கொண்டாட்டம் தொடங்கியது என்று மகிழ்வதா? இல்லை,
வாக்காளர் பட்டியல் சிறப்புச் சீர்திருத்தம் கண்டு கலங்குவதா?
“வாக்கு மனிதரானார்” (யோவா
1:14) - இது கிறித்தவ இறையியலின் இதயத் துடிப்பு “மனிதன் வாக்கானான்!” - இது மனித அரசியலின் ஆழமான உண்மை.
“வாக்கு மனிதரானார், நம்மிடையே குடிகொண்டார்” என்ற
வரி கடவுள் நிலையான அன்பால் மனித வரலாற்றிற்குள் நுழைந்து அன்பு, மீட்பு, ஒற்றுமை ஆகியவற்றின் மூலம் சமூகத்தை மாற்றிய புரட்சியை ஆழமாக வெளிப்படுத்துகிறது. இது ஒரு சாதாரண அறிக்கை அல்ல; மனிதகுலத்தின் மதிப்பை உயர்த்தும் இறையியலின் அடிப்படை நோக்கம். ஆனால், இன்றைய உலகில் குறிப்பாக, அரசியல் வர்ணனையில் ‘வாக்கு’ வெற்றிக்கான ஓர் எண், ஒரு கணக்குத்தொகை, ஓர் அதிகாரக் கருவியாக மட்டுமே பார்க்கப்படுகிறது. ஒரே ஒரு வாக்கு என்பதில் ‘ஒரு மனிதன், ஓர் உயிர், ஒரு மதிப்பு’ என்பது மறந்துவிடப்படுகிறது. அதிகாரத்தைப் பிடிக்க, பகையை உருவாக்க வாக்கு பயன்படுகிறது.
“அரசியல் வாக்கு பகையின் கதவைத் திறக்கும் போது, இறைவனின் வாக்கு அமைதியின் கதவைத் திறக்கிறது.”
‘வாக்கு மனிதரானார்’- அன்பு
மனிதகுலத்தைக் காப்பாற்ற வந்தது; ஆனால், மனிதன் வாக்கின் அடிமையானான் - இன்று ஒரு நாள் வாக்கிற்காக மனிதன் தனது சுயமரியாதையையும் அடிப்படை மதிப்புகளையும் இழக்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். புனிதமான பொறுப்பாக இருந்த வாக்கு, இன்று பல இடங்களில் சந்தைப்பொருளாக
மாறிவிட்டது என்பது சமூகத்தின் வேதனையான சாயல்.
ஆபிரகாம்
லிங்கன் எச்சரிப்பதுபோல, “ஒரு மனிதனின் வாக்கை விலைக்கு வாங்க முடிந்தால், அந்தச் சமூகத்தை அடிமைப்படுத்த முடியும்.” வாக்கு
ஒரு செல்வம்; அதைப் பாதுகாப்பது ஒவ்வொருவரின் புனிதக் கடமை. ஒரு காலத்தில் அரசியல் ஒரு தியாகமாக இருந்தது; ஆனால், இன்று அது பலருக்கும் முதலீடாக மாறிவருகிறது. முன்பு மக்கள் தங்கள் நலனுக்காகத் தலைவர்களை உருவாக்கினார்கள்; இன்று சிலர் தங்கள் நலனுக்காக வாக்காளர்களையே உருவாக்க முயல்கின்றனர். “நீ உனக்கான அரசியலைப்
பேசவில்லையெனில், நீ வெறுக்கும் அரசியலால்
ஆளப்படுவாய்” என்கிறார்
லெனின்.
நேற்று
வாக்கு ஓர் உண்மை; இன்று வாக்கு ஓர் உதவி! திருத்தந்தை பிரான்சிஸ் கூறுவது போல, “அரசியல் என்பது அன்பின் உயர்ந்த வடிவம்; அன்பு இல்லாத இடத்தில் அதிகாரம் அடக்குமுறையிலும் அடிமைத்தனத்திலும் மாறுகிறது.”
மனிதனைச்
சுதந்திரமாகப் படைத்த இறைவன், அந்தச் சுதந்திரத்தைப் பாதுகாக்க நமக்குக் கொடுத்த கருவிதான் வாக்கு. ஆனால், அதைத் தவறாகப் பயன்படுத்தும்போது, சுதந்திரமே சங்கிலிகளாகி விடுகிறது. ஆகவே,
நம்முடைய வாக்கின் புனிதத்தையும் பொறுப்பையும் விழிப்புடன் காக்க வேண்டும்.
வாக்கு
மனிதரானது - மனிதனை அடிமைத்தனத்திலிருந்து மீட்க; ஆனால், மனிதன் வாக்காகும்போது, தன்னைத்தானே மீண்டும் அடிமைத்தனத்திற்கு ஒப்படைக்கிறான்.
ஆகவே,
நடந்தவையாக இருக்கட்டும். இனிமேலும் நமக்குக் கொடுக்கப்பட்ட வாக்கை அறிவுடனும் ஆழ்ந்த பொறுப்புடனும் கையாள்வோம்.