(தந்தை அன்புச் செல்வன், தாய் மார்த்தா, மகன் அகஸ்டின், மகள் கிறிஸ்டினா இவர்களோடு அருள்பணியாளர் தாமஸின் உரையாடல் தொடர்கிறது)
அன்புச்செல்வன்:
“தந்தையே, கடந்தமுறை நாம் உரையாடியபோது, வாழ்வில் மேலோட்டமான பார்வை, ஆழமான பார்வை என்ற இரு பார்வைகள் உள்ளன என்று கூறினீர்கள். ‘நீ வேறு-நான்
வேறு’ என்று
பிரித்தும் பகுத்தும் பார்க்கின்ற பார்வை மேலோட்டமான பார்வை என்றும், எல்லாம் ஒன்றோடொன்று இணைந்தும் பிணைந்தும் இருக்கின்றன என்ற பார்வை ஆழமான பார்வை என்றும் கூறினீர்கள். மேலோட்டமான பார்வையிலிருந்து ஆழமான பார்வையை நோக்கி நாம் நகர்வதற்காக நமக்குக் கொடுக்கப்பட்டவையே கட்டளைகள் என்பதையும் தெளிவுபடுத்தினீர்கள். மேற்கண்ட இரு பார்வைகள் குறித்து நான் சிந்தித்துக் கொண்டிருந்தபோது, ஆழமான பார்வைக்கும் பிரபஞ்சத்தின் உண்மைத்தன்மைக்கும், அதாவது அதன் இருப்புக்கும் தொடர்பு இருப்பதாக எனக்குத் தென்பட்டது. மேலோட்டமான பார்வை நம்மைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் தவறாகப் பார்க்கும் முறை என்றும், ஆழமான பார்வை அனைத்தையும் சரியாகப் பார்க்கும் முறை என்றும் கருதுகிறேன்.”
அருள்பணி:
“நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை! ஓர் உதாரணம் இக்கருத்தைத் தெளிவுபடுத்தும்! நாம் மேலோட்டமாகப் பார்க்கும்போது சூரியன் பூமியைச் சுற்றிவருவதாக நமக்குத் தென்படுகிறது. ஆனால், கலிலியோ பிரபஞ்சத்தை உற்றுநோக்கி, சூரிய இயக்கத்தைப் பற்றிய ஆழமான பார்வையைத் தனதாக்கினார். பூமியே சூரியனைச் சுற்றிவருகிறது என்ற உண்மையை எடுத்துரைத்தார். கலிலியோவின் ஆழமான பார்வையே பிரபஞ்சத்தின் உண்மைநிலை என்பது நாம் அறிந்ததுதானே!”
மார்த்தா:
“மேலோட்டமான பார்வை தவறானது என்றாலும், அதை அவ்வளவு எளிதில் நம்மால் விட்டுவிட முடிவதில்லையே! பூமிதான் சூரியனைச் சுற்றி வருகிறது என்று தெரிந்தாலும், நம் அன்றாட வாழ்வில் ‘சூரியன் உதிக்கிறது’, ‘சூரியன்
உச்சிக்கு வந்துவிட்டது’, ‘சூரியன்
மறைகிறது’ என்று
சூரியன்தான் நகர்கிறது என்பது போலல்லவா நாம் பேசுகிறோம்!”
அருள்பணி: “நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை. பல விசயங்கள் நமக்குத்
தவறு என்று தெரிந்தாலும், அவ்வளவு எளிதில் நம்மால் அவற்றை விட்டுவிட முடிவதில்லை. அதற்கான ஒரு காரணம் பழக்கதோஷம்!”
கிறிஸ்டினா:
“தந்தையே, வாழ்வின் மட்டிலான மேலோட்டமான பார்வை நம் வாழ்விற்குள் பல பிரச்சினைகளைக் கொண்டு
வருவதாகக் கடந்தமுறை கூறினீர்கள். அது குறித்துக் கொஞ்சம் கூறமுடியுமா?”
அருள்பணி:
“ஒருசில பிரச்சினைகளைப் பார்க்கலாம். முதலாவதாக, மேலோட்டமான பார்வை கொண்டு வாழும் மனிதர்கள் உறவின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்வதில்லை. தனிமனிதத் தன்மைகளையும், தனிமனித முன்னேற்றத்தையும் அளவுக்கதிகமாகத் தூக்கிப் பிடிப்பதன் காரணமாக, தங்களை அறியாமலேயே தங்களைச் சுற்றி எதிரிகளையும் எதிர்ப்புகளையும் உருவாக்கிக் கொள்கிறார்கள். நம்மைச் சுற்றி எதிரிகளும், எதிர்ப்பு மனநிலை உள்ளவர்களும் வாழ்ந்தால் அதற்கு மத்தியில் வாழ்வது எவ்வளவு கடினமானது என்பது நமக்குத் தெரியும்.”
மார்த்தா:
“ஐயய்யோ! அது நரக வாழ்க்கை! எங்களுக்கே ஓர் அனுபவம் உண்டு. திருமணம் ஆன புதிதில் நாங்கள்
இருவரும் ஒரு வாடகை வீட்டில் குடியேறினோம். அதற்கு அடுத்த வீட்டில் வாழ்ந்தவர் என் கணவரோடு கல்லூரியில் வேலை பார்த்தவர். அங்கு நடந்த சிறு சிறு மனத்தாங்கல்களால் அவர் எங்களை எப்பொழுதுமே எதிரியாகப் பார்த்தார். அவருடைய வீட்டுக்கும் எங்களுக்குமிடையே சுமூகமான சூழல் கிடையாது. இதன் காரணமாக, எங்கள் வீட்டில் ஏதாவது மகிழ்ச்சியான நிகழ்வு நடந்தால், அவர் வீட்டில் இழவு நடந்ததுபோலச் சோகமாக இருந்தார். எங்கள் வீட்டில் ஏதாவது பிரச்சினை நடந்ததென்றால், அந்த நாள்களில் குதூகலமாக இருப்பார்.”
அருள்பணி:
“மேலோட்டமான வாழ்வு அந்நியப்பட்ட மனநிலைக்குக் காரணமாக இருக்கிறது. அந்நியப்பட்ட மனநிலையோ பிறரது இன்பத்தை நம் துன்பமாகவும், பிறரது துன்பத்தை நம் இன்பமாகவும் பார்க்க வைக்கிறது.”
கிறிஸ்டினா: (கிண்டலாக) “தந்தையே, நீங்கள் கூறுவதைப் பார்த்தால் நமக்கு நிறைய எதிரிகள் இருப்பது நல்லதுபோலத் தெரிகிறதே! காரணம், அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போதெல்லாம் நாம் இன்பமாக இருப்போம் அல்லவா!” (அனைவரும் சிரிக்கிறார்கள்)
அன்புச்செல்வன்:
“நமக்குப் பிடிக்காதவர்களுக்குத் துன்பம் நேரிட்டால், நாம் இன்பமாக இருப்போம் என்பது உண்மைதான். ஆனால், அவர்களுக்கு இன்பம் நேரிட்டால்?”
அகஸ்டின்:
(சிரித்துக்கொண்டே) “வேறென்ன? நமது வயிறு எரிய வேண்டியதுதான்.”
மார்த்தா:
“இப்படித்தான் பல மனிதர்களது வாழ்வு
போய்க்கொண்டிருக்கிறது.
எனக்கு ஒரு கதை நினைவிற்கு வருகிறது. ஒரு மனிதர் மருத்துவரிடம் சென்று, ‘எனக்கு வயிறெல்லாம் எரியுது டாக்டர்! தாங்க முடியலை. எனக்கு மருந்து கொடுங்க’ என்றாராம். மருத்துவர், ‘எப்பொழுதிருந்து வயிற்றெரிச்சல் இருக்கிறது?’ என்று கேட்க, வந்தவர், ‘என் பக்கத்து வீட்டுல பரமசிவம்னு ஒருத்தர் இருக்கிறார். எனக்கும் அவருக்கும் ஆகாது. அவரு என்னைக்குக் கார் வாங்கினாரோ அன்றிலிருந்து எனக்கு வயிற்றெரிச்சல் ஆரம்பித்துவிட்டது’ என்றாராம்.”
கிறிஸ்டினா: “மேலோட்டமான மனநிலையோடு வாழும்போது வரும் இரண்டாவது பிரச்சினை என்ன தந்தையே?”
அருள்பணி:
“சக மனிதர்களை வசதியிலும் பொருளாதாரத்திலும் திறமையிலும் போட்டியாளர்களாகக் கருதி, அவர்களுடன் போட்டி போடுவது. அவர்களை விட ஒருபடி மேலே நாம் இருந்தால்தான் நாம் வாழ்வைச் சரியாக வாழ்வதாக நினைத்துப் புளகாங்கிதம் அடைகின்றோம். ஒருவேளை அவர்களைவிடக் கீழான நிலையில் இருக்க நேரிட்டால், கவலையாலும் கண்ணீராலும் நம் வாழ்வைக் கசப்பாக்கிக் கொள்கின்றோம்.”
அகஸ்டின்:
“நமது மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தனது ‘அக்கினிச் சிறகுகள்’
என்ற புத்தகத்தில், ‘நான் பத்மபூஷன் விருது பெற்றவுடன், என்னுடன் பணிசெய்த ஒருசில விஞ்ஞானிகளால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதுவரை என்னோடு நட்போடு பழகியவர்கள் என் எதிரிகளாக மாறினார்கள்’ என்று
குறிப்பிடுகிறார்.”
மார்த்தா: “மேலோட்டமான மனநிலை மற்றுமொரு முக்கியமான பிரச்சினைக்கும் காரணமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். கடவுளின் உறவிலிருந்து அந்நியப்பட்டவர்களாக நாம் மாறுவதே அந்தப் பிரச்சினை. காரணம், நாம் மனிதர்களிடமிருந்து அந்நியப்படும்போது கடவுளிடமிருந்தும் அந்நியப்படுகிறோம்
என்று திருவிவிலியம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது. ‘மிகச் சிறியோராகிய என் சகோதரர்-சகோதரிகளுள் ஒருவருக்கு நீங்கள் செய்ததையெல்லாம் எனக்கே செய்தீர்கள் என உறுதியாக உங்களுக்குச்
சொல்லுகிறேன்’ (மத்
25:40) என்று இயேசு கூறியிருக்கிறாரே!”
அருள்பணி: “நீங்கள் கூறுவது மிகவும் சரி! சக மனிதர்களின் உறவிலிருந்து
அந்நியப்படுவது கடவுளிடமிருந்து நாம் அந்நியப்படுவதற்குக் காரணமாக இருக்கிறது. கடவுளிடமிருந்து அந்நியப்படுவது பிரபஞ்சத்திலிருந்தே நம்மைத் துண்டித்துக்கொள்வதற்கு இணையானது. ஒரு மரத்திலிருக்கும் ஒரு கிளை தன்னை அம்மரத்திலிருந்து துண்டித்துக்கொள்வதாக நினைத்துக்கொள்வோம். இதன் காரணமாக மரத்திற்குப் பெரிய அளவில் பாதிப்பு இல்லை; ஆனால், துண்டிக்கப்பட்ட கிளை வாடி, வறண்டு ஒன்றுமில்லாமலேயே ஆகிவிடுகிறது.”
அன்புச்செல்வன்:
“என்னைப் பொறுத்த அளவில், இன்றைக்குப் பல மனிதர்கள் பொருளாதார
வசதியில் திளைத்தாலும், உறவைப் பொறுத்த அளவில் சக மனிதர்களிடமிருந்தும் கடவுளிடமிருந்தும் பிரபஞ்சத்திலிருந்தும் துண்டிக்கப்பட்ட வாழ்வு வாழ்கின்றனர்.
இதன் காரணமாக மகிழ்வைப் பொறுத்த அளவில் அவர்களது வாழ்வு வாடி, வறண்டு ஒன்றுமில்லாததாக இருக்கிறது.”
அருள்பணி:
“இத்தகைய துண்டிக்கப்பட்ட வாழ்வே, அதாவது பாவ வாழ்வே நம்மில் சோகமாக, தனிமையாக, பயமாக, கவலையாக… என்று பல நிலைகளில் பரிணமிக்கிறது. இதுபோன்ற
பிரச்சினைகள் ஏற்படாமல் வாழ்வை நாம் சரியாகவும் சிறப்பாகவும் வாழ வேண்டுமெனில், அதற்கான ஒரே வழி வாழ்வின் ஆழத்திற்குள் பயணிப்பதே! வாழ்வின் ஆழத்திற்குள் செல்லும் மனிதர்களே ‘நீ வேறு-நான்
வேறு’ என்ற
மனநிலையைக் களைந்துவிட்டு (அதாவது ‘களைகளை’ நீக்கிவிட்டு), உறவு மனநிலையோடு வாழ ஆரம்பிக்கின்றனர். ‘வாழ்வின் ஆதாரம் உறவு’ என்கின்ற உண்மையை, ஒருவர் அனுபவப்பூர்வமாக உணரும்போது மேற்காணும் தீமைகளும் துன்பங்களும் தாமாகவே களையப்படுகின்றன. இவ்வாறு வாழ்வின் ஆழத்திற்குள் பயணிப்பதற்கான மாபெரும் வாய்ப்பை வழங்கும் அருளடையாளமே ஒப்புரவு!”
(தொடரும்)