news-details
ஞாயிறு மறையுரை
மார்ச் 08, 2026, தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு - விப 17:3-7; உரோ 5:1-2,5-8; யோவா 4:5-42 (தாகம் தீர்க்கும் மெய்யான நம்பிக்கை!)

வாழ்க்கை என்பது ஒரு நீண்ட பாலைவனப் பயணம். இந்தப் பயணத்தில் நாம் அனைவரும் ஏதோ ஒரு தாகத்தோடுதான் நகர்ந்து கொண்டிருக்கிறோம். உடல் சார்ந்த தாகத்தை ஒரு குவளைத் தண்ணீர் தீர்த்துவிடும். ஆனால், அன்பு, அமைதி, ஆற்றல் மற்றும் வாழ்வின் அர்த்தத்தைத் தேடி அலையும் நம் உள்ளத்தின் தாகத்தை இந்த உலகப் பொருள்கள் எவற்றாலும் தீர்க்க முடியாது. நமது ஆன்மா உண்மையான அமைதிக்காகத் தாகம் கொள்கிறது.

தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறான இன்றைய இறைவார்த்தைகள், நம் வாழ்வின் வறண்ட நிலங்களில்வாழ்வு தரும் தண்ணீரைதேடி அலையும் மனிதருக்கும், அந்தத் தண்ணீரை அள்ளித் தரும் இறைவனுக்கும் இடையிலான உறவை அழகுறக் காட்டுகின்றன. முணுமுணுப்பில் தொடங்கி, நம்பிக்கையில் முதிர்ச்சியடைந்து, இறுதியில் உண்மையான வழிபாட்டில் நிலைபெறுவதே இன்றைய வழிபாட்டின் மையச் செய்தி.

இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் பாலைநிலத்தில் தாகத்தால் தவிக்கிறார்கள். எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தங்களை விடுவித்த கடவுளின் வல்லமையை அவர்கள் மறக்கிறார்கள். நன்றி மறந்து கடவுளைச் சோதிக்கும் விதமாக மோசேயைக் கடிந்துகொள்கின்றனர். தங்கள் அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்படவில்லையே என்று முணுமுணுக்கின்றனர். சிலவேளைகளில் தங்கள் வெறுப்புணர்ச்சியைக் காட்டவும் முணுமுணுத்தனர். “எங்களைச் சாகடிக்கவா எகிப்திலிருந்து அழைத்து வந்தாய்?” (விப 17:3) என்று அவர்கள் மோசேயிடம் சண்டையிடுகிறார்கள். எந்த அளவுக்கு என்றால், தன்மீது இந்த மக்கள் கல்லெறிவார்களோ (17:4) என்று மோசேயே பயம்கொள்ளும் அளவிற்கு அவர்களின் நன்றி மறந்த நடவடிக்கைகள் இருந்தன என்பதைப் பார்க்கின்றோம்.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் இஸ்ரயேல் சமூகத்தில்கல்லால் எறிந்து கொல்லுதல்என்பது மிகக் கடுமையான மற்றும் பொதுவான தண்டனையாகக் கருதப்பட்டது. இது வெறும் தண்டனை மட்டுமல்ல; தீயவர்களை அழிப்பதன் மூலம் பாவத்தைத் தங்கள் சமூகத்திலிருந்து விரட்டும் ஒரு புனிதச் செயலாகவே மக்களால் பார்க்கப்பட்டது. விபச்சாரம், தெய்வ நிந்தனை மற்றும் ஓய்வுநாளை மீறுதல் போன்ற பெரும் குற்றங்களுக்கு இத்தண்டனை வழங்கப்பட்டது. திருவிவிலிய வரலாற்றில் இயேசுவின் காலத்திலும் (யோவா 8:7), திருத்தூதர் பணிகள் காலத்தில் ஸ்தேவான் போன்ற தொடக்க காலப் புனிதர்களிடமும் (திப 7:58) இத்தண்டனை நடைமுறைப்படுத்தப்பட்டதை நாம் காண்கிறோம்.

இன்றைய முதல் வாசகத்தில், மோசே, மக்கள் தன்னை நோக்கி கற்களை வீசப்போகிறார்கள் எனும் அச்சம் மரணத்தைப் பற்றியது மட்டுமல்ல; தான் கடவுளால் கைவிடப்பட்ட ஒருபாவிஎன்று மக்கள் முத்திரைக் குத்திவிடுவார்களோ என்ற தவிப்பைப் பற்றியது. இந்த இக்கட்டான நிலையில் மோசே ஆண்டவரை நோக்கிக் கதறுகிறார் (17:4). ஆண்டவர் உடனடியாகச் செயலில் இறங்குகிறார். இது மக்களின் முணுமுணுப்பிற்காக அல்ல; மாறாக, “நான் உன்னோடு இருப்பேன் (விப 3:12) என்று தாம் மோசேக்குக் கொடுத்த வாக்குறுதிக்காக! எகிப்தில் நைல் நதியை அடித்து வியத்தகு செயல்களைச் செய்த அதே தடியைக் கொண்டு செல்லுமாறு ஆண்டவர் பணிக்கிறார். அந்தத் தடி, மோசே தனிமையில் இல்லை என்பதையும், கடவுளின் வல்லமை அவரோடு இருக்கிறது என்பதையும் மக்களுக்கு உணர்த்தும் அடையாளமாக அமைந்தது. இறுதியில், பாறை பிளந்து தண்ணீர் புறப்படுகிறது.

பிற்காலத்தில் புனித பவுல் இந்த நிகழ்வை மிக அழகாக விளக்குகிறார். அன்று பாலைவனத்தில் மக்களின் தாகத்தைத் தணிக்கப் பிளக்கப்பட்ட அந்தப் பாறை கிறிஸ்துவையே குறிக்கிறது (1கொரி 10:4). அவரே நம் ஆன்ம தாகத்தைத் தீர்க்கும் உண்மையான பாறை; அவரே நமக்கு வாழ்வளிக்கும் வற்றாத ஊற்று.

இஸ்ரயேல் மக்கள் பாறையிலிருந்து தண்ணீர் பெற்ற நிகழ்விற்கும், இன்றைய நற்செய்தியில் சமாரியப் பெண் வாழ்வு தரும் தண்ணீரைப் பெறுவதற்கும் இடையேயான ஓர் ஆழமான இறையியல் தொடர்பு, பழைய ஏற்பாட்டில் மோசே பாறையை அடித்தபோது தண்ணீர் புறப்பட்டது. புதிய ஏற்பாட்டில் இயேசு தம் அன்பால் அந்தப் பெண்ணின் இதயத்தைத் தொட்டபோது, அங்கேநம்பிக்கைஎன்னும் ஆன்மிக ஊற்று புறப்படுகிறது.

அக்காலச் சூழலில் நிலவிய யூத-சமாரியப் பகைமை மற்றும் பாலினத் தடைகளைத் தகர்த்து, இயேசு அந்தப் பெண்ணிடம் உரையாடத் தொடங்குகிறார். சமாரியப் பெண்ணிற்கும் இயேசுவிற்கும் இடையிலான அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உரையாடல், வெறும் ஒரு கிணற்றடிச் சந்திப்பு மட்டுமல்ல; அது சமூக மற்றும் ஆன்மிகச் சுவர்களைத் தகர்த்த ஒரு பெரும் புரட்சியாகும். திருவிவிலியப் பின்னணியில் இதைக் கூர்ந்து நோக்கும்போது, பல ஆழமானஉடைத்தல்கள்அங்கே நிகழ்கின்றன. ஒரு யூத ஆடவர் பெண்ணோடு பொதுவிடத்தில் பேசுவதும், தீட்டானவர்களாகக் கருதப்பட்ட சமாரியர்களிடம் தண்ணீர் கேட்பதும் அக்காலச் சூழலில் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று. சமாரியப் பகுதிகளைப் புறக்கணித்துச் செல்லும் யூதப் பழக்கத்தையும், சமாரியர்கள் வழிபாடு குறித்துக் கொண்டிருந்த தவறான (ஐந்து கணவர்கள் - ஐந்து கடவுள்கள்) கருத்துகளையும் இயேசு தம் உரையாடலால் சுக்கு நூறாக உடைத்து, ‘ஒரே கடவுள்என்னும் அசைக்க முடியாத நம்பிக்கையை உருவாக்குகிறார். வழிபாடு என்பது இடத்தைச் சார்ந்தது அல்ல; மாறாக, இறைத் தந்தையின் உண்மை இயல்புக்கு ஏற்ப அவரைஆவியோடும் உண்மையோடும் (யோவா 4:24) வழிபடுவதே என்ற புதிய ஆன்மிகப் புரிதலை அவர் நிலைநாட்டுகிறார். இதன் மூலம், மனிதர்களால் உருவாக்கப்பட்ட பிரிவினைச் சுவர்களையும், தவறான வழிபாட்டு முறைகளையும் அகற்றி, இறையாட்சியின் சமத்துவப் பாதையை அவர் திறந்து காட்டுகிறார்.

இயேசு அச்சமாரியப் பெண்ணிடம், “குடிக்க எனக்குத் தண்ணீர் கொடும் (யோவா 4:8) என்று கேட்ட வேண்டுகோள், அப்பெண்ணின் இதயக் கதவைத் திறக்கும் திறவுகோலாக மாறியது. முதலில் வெறும் தாகமுள்ள சாதாரண யூதராகத் தெரிந்த இயேசு (4:9), உரையாடல் வளர வளர அவருக்கு ஒருவள்ளலாகவும்’ (4:14), பின்னர் அவரது வாழ்வின் கசப்பான உண்மைகளைச் சுட்டிக்காட்டிய போது ஓர்இறைவாக்கினராகவும் (4:19) வெளிப்படுகிறார். இறுதியில், அவரே எதிர்பார்த்திருந்தமெசியா (4:25) என்பதை அந்தப் பெண் கண்டடையும்போது, அவரது நம்பிக்கை அதன் முழுமையை எட்டுகிறது. இந்த மாற்றத்தின் உச்சக்கட்ட அடையாளமாக அவர் தன் தண்ணீர் குடத்தை அங்கேயே விட்டுவிட்டு ஊருக்குள் ஓடுகிறார். சமூகம் தன்னை ஏளனம் செய்யும் என்று அஞ்சி, தனிமையில் தண்ணீர் எடுக்க வந்த அந்தப் பெண் (4:6), இப்போது அதே சமூகத்திடம் நற்செய்தியை அறிவிக்கும் துணிச்சல் மிக்கவராக மாறுகிறார். அப்பெண் விட்டுச் சென்ற குடம், அவரது பழைய பாவ வாழ்வு, கடந்த காலப் பயம் மற்றும் உலகப் பற்று ஆகியவற்றின் அடையாளம்.

புனித பவுல் கூறுவதுபோல, இந்த மெய்யான நம்பிக்கையே அப்பெண்ணை ஒருபோதும் ஏமாற்றாத மீட்பிற்கு அழைத்துச் சென்றது. கிறிஸ்துவின் அன்பைப் பற்றிக்கொண்ட அந்தப் பெண்ணிற்கு, உலகத் தண்ணீர் தேவையில்லாமல் போனதுபோல, உண்மையான நம்பிக்கைப் பாதையில் நடப்பவர்களுக்கு இவ்வுலகின் தற்காலிக இன்பங்கள் இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. சமாரியப் பெண் கிணற்றடியில் கண்டடைந்த அந்த ஆன்மிக முதிர்ச்சியை, பவுல் ஓர் இறையியல் சட்டகமாக விவரிக்கிறார். “நாம் நம்பிக்கையினால் கடவுளுக்கு உகந்தவர்களாகியுள்ளோம் (உரோ 5:1). இது வெறும் சடங்கு சார்ந்த நம்பிக்கை அல்ல; இந்த நம்பிக்கை நம்முடைய தகுதியின் மேல் உருவானதும் அல்ல; நாம் பாவிகளாய் இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார் (5:8). அந்தப் பெண் ஐந்து கணவர்களோடு வாழ்ந்து, பாவச் சூழலில் இருந்தபோதே இயேசு அவரைத் தேடி வந்து வாழ்வளித்தார்.

நிறைவாக, சமாரியப் பெண்ணின் மாற்றமும், பாலைவனத்தில் பாறை பிளக்கப்பட்ட நிகழ்வும் நம்முடைய அன்றாட வாழ்விற்குத் தேவையான சில முக்கியமான உண்மைகளைக் கற்றுத் தருகின்றன.

முதலில் வரும்போது இஸ்ரயேல் மக்களைப் போலக் குறைகளை மட்டும் பார்க்காமல், கடந்த காலத்தில் கடவுள் செய்த நன்மைகளை நினைவு கூர்வது நம் நம்பிக்கையை வளர்க்கும். இரண்டாவதாக, சமாரியப் பெண் தன் வாழ்வின் கசப்பான உண்மைகளை இயேசுவிடம் மறைக்காமல் அறிக்கையிட்டதுபோல, நாம் நம் பலவீனங்களை ஒப்புக்கொள்ளும்போதுதான் கடவுளின் அருள் நம்முள் செயல்படும். மூன்றாவதாக, வழிபாடு என்பது சடங்கு அல்ல; அது நம் இதயத்தின் துடிப்பு. நம் சொல்லும் செயலும் ஒன்றாக இருந்து, ஒரே இறைவனை மெய்யான நம்பிக்கையோடு வழிபடுவதே உண்மையான வழிபாடு. அந்த மெய்யான நம்பிக்கை நம் தாகத்தைத் தீர்க்கட்டும்; நம் வாழ்வைப் புதுப்பிக்கட்டும்.