சில வாரங்களுக்கு முன் ஓர் அருள்தந்தையுடன் நடந்த ஒரு சிறிய உரையாடல் என் உள்ளத்தில் நீண்ட சிந்தனையின் கதவைத் திறந்தது. அவர் சாதாரணமாக உச்சரித்த இரண்டு ஆங்கிலச் சொற்களான Communication மற்றும் Communion. இந்த இரண்டு வார்த்தைகள் என் மனத்தைத் தொட்ட விதம் வித்தியாசமானது.
சிமியோன்
மரியாவிடம் கூறிய வார்த்தைகள் அவரது இதயத்தை ஊடுருவியதைப்போல, அந்தச் சொற்கள் என் சிந்தனைகளைத் துளைத்தன. ஓடும் நதியில் உருண்டு வரும் கற்கள் காலப்போக்கில் மெருகேறுவது போல, அந்த இரண்டு வார்த்தைகள் என் எண்ணங்களையும் மெதுவாக வடிவமைத்தன.
Communication
- தொடர்பு. Communion - ஒன்றிணைவு, உறவு. உறவிலிருந்துதான் தொடர்பு பிறந்தது. ஆனால், இன்று தொடர்புகள் பெருகி வரும் உலகில் உறவுகள் குறைந்து வருகின்றன. ஒரு காலத்தில் மனிதர்கள் ஒன்றுகூடிப் பேசுவதற்காக நேரத்தைத் தேடினார்கள். இன்று பேசாமல் இருக்க தொழில்நுட்பமே பல காரணங்களை உருவாக்கிவிட்டன.
இன்றைய உலகம் மின்னணு இணையத் தொழில்நுட்பத்தின் வலையில் சுருங்கியிருக்கிறது. சமூக வலைதளங்களில் ஆயிரக்கணக்கான நண்பர்களைக் கொண்ட மனிதன் கூட, தன் வீட்டில் இருக்கும் மனிதர்களுடன் பேச நேரமின்றி வாழ்கிறான். ஒரே வீட்டில், ஒரே மேசையில், ஒரே உணவைப் பகிர்ந்துகொள்ளும் குடும்பம் கூட இன்று அமைதியாக அமர்கிறது. ஆனால், அந்த அமைதியில் அன்பு இல்லை; அது திரை உலகின் அமைதி. ஒவ்வொருவரின் கண்களும் அலைப்பேசி திரையில்! ஒவ்வொருவரின் மனமும் வேறு உலகங்களில்! அப்போது மனத்தில் ஒரு கேள்வி எழுகிறது.
ஊடகம்
உறவுகளை இணைக்கும் பாலமா? அல்லது உறவுகளைப் பிரிக்கும் சுவரா? இந்தக் கேள்வி வெறும் சிந்தனை அல்ல; அது நம் காலத்தின் ஒரு காயம். முதியோர் இல்லங்களின் அமைதியான அறைகளில், அனாதை இல்லங்களின் வெறுமையான வழித்தடங்களில், மறக்கப்பட்ட பெற்றோரின் அமைதியான கண்ணீரில் இந்தக் கேள்வியின் பதில் ஒலிக்கிறது. ஒரு காலத்தில் குழந்தைகள் பெற்றோரின் கைகளைப் பிடித்து நடந்தார்கள். இன்று அவர்கள் மொபைல் போன்களைப் பிடித்தபடி உலகத்தைச் சுற்றுகிறார்கள்.
திரு.
இறையன்பு தனது ‘ஓடும் நதியின் ஓசை’ என்ற நூலில், ஓர் இடத்தில் மனிதநேயம் வற்றிப் போகும் சமுதாயத்தைப் பற்றி வேதனையுடன் எழுதுகிறார். மனிதநேயம் குறைந்தால் சமூகம் உயிரற்ற உடலாக மாறிவிடும் என்று அவர் எச்சரிக்கிறார். ஆனால், இன்று மனிதநேயம் வற்றுவதற்கான காரணங்களில் ஒன்று மனிதனை மனிதனிடமிருந்து பிரிக்கும் டிஜிட்டல் உலகம்.
திருவிவிலியம்
மனித உறவுகளின் ஆழத்தை எளிய வார்த்தைகளில் வெளிப்படுத்துகிறது. “இருவர் ஒருவரைவிட மேலானவர்... ஒருவர் விழுந்தால் மற்றவர் தூக்கிவிடுவார்” (சஉ
4:9-10). மனிதன் தனிமைக்காகப் படைக்கப்படவில்லை. அவன் உறவுகளுக்காகப் படைக்கப்பட்டவன். ஒரு மனிதன் விழும்போது அவனைத் தூக்குவதற்காக மற்றொருவர் இருக்கவேண்டும். அதேபோல், நாம் பேசும் வார்த்தைகளின் வலிமையையும் இறைவார்த்தை நினைவூட்டுகிறது: “கெட்ட வார்த்தை எதுவும் உங்கள் வாயினின்று வரலாகாது. கேட்பவர்களுக்கு
அருளை அளிக்கும் வகையில், தேவையறிந்து அவர்களைக் கட்டியெழுப்பத் தகுந்த நல்ல வார்த்தைகளையே பேசுங்கள்”
(எபே 4:29).
ஒரு
வார்த்தை ஒரு மனிதனை உடைக்கவும் முடியும்; அதே வார்த்தை ஒரு மனிதனை உயிர்ப்பிக்கவும் முடியும். அன்பின் உண்மையைத் திருவிவிலியம் இன்னும் தெளிவாகக் கூறுகிறது: “நாம் சொல்லிலும் பேச்சிலும் அல்ல; செயலில் உண்மையாக அன்பு செலுத்தவேண்டும்” (1யோவா
3:18).
சமூக
வலைதளங்களில் ஆயிரம் ‘Likes’கிடைத்தாலும் ஒரு
மனிதனின் உண்மையான அன்பை அது மாற்றமுடியாது. திருத்தந்தை பிரான்சிஸ் ஒருமுறை கூறினார்: “இன்று தகவல் பரிமாற்றம் அதிகமாக இருக்கிறது. ஆனால், உண்மையான உரையாடல் குறைந்து வருகிறது. நாம் திரைகளைப் பார்க்காமல், மனிதர்களின் கண்களைப் பார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். மனித முகங்களை மறந்து திரைகளை மட்டுமே நோக்கும் உலகமாக நாம் மாறிவிடக் கூடாது.”
திருத்தந்தை
புனித இரண்டாம் ஜான்பால் அவர்கள் கூறியது இன்னும் ஆழமானது: “ஊடகங்கள் மனித மாண்பைப் போற்றவேண்டும்; குடும்ப உறவுகளை வலுப்படுத்தவேண்டும்.” ஊடகங்கள் மனிதனை உயர்த்தவேண்டும்; அவரைத் தனிமையில் தள்ளக்கூடாது. தகவல் தொழில்நுட்பம் உலகத்தை நெருக்கமாக்கியது. ஆனால், இதயங்களை அந்நியமாக்கிவிட்டது. தூரத்தில் இருந்தவர்கள் இன்று நெருக்கமாகிவிட்டார்கள். ஆனால், நெருக்கத்தில் இருந்தவர்கள் இன்று தூரமாகி விட்டார்கள். இதுவே ‘டிஜிட்டல் தனிமை.’
சில
நேரங்களில் நாம் திரைகளிலிருந்து நோன்பு ஏற்கவேண்டும். அலைப்பேசியை விட்டு மனிதர்களுடன் பேசவேண்டும். குடும்பத்துடன் சிரிக்கவேண்டும். நண்பர்களுடன் மனத்தைப் பகிரவேண்டும். இணையத்தில் வெறுப்பை விதைப்பதற்குப் பதிலாக அன்பையும் உண்மையையும் விதைக்கவேண்டும்.
ஊடகங்கள்
நம் வாழ்க்கையின் எஜமானர்கள் அல்ல; அவை நம் வாழ்க்கைக்கு உதவும் கருவிகள் மட்டுமே. ஆகையால், ஊடகங்கள் உறவுகளுக்குப் பாலமாக இருக்கட்டும்; ஆனால், அவை உறவுகளைப் பிரிக்கும் சுவராக மாறவிடக்கூடாது.
தொழில்நுட்பம்
வசதிகளைத் தரலாம்; ஆனால், மனிதநேயம் மட்டுமே ஒரு சமூகத்திற்கு உயிர் கொடுக்க முடியும். அதனால்தான் ஒரு சிந்தனையாளர் கூறினார்: “அன்பு என்பது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருப்பது அல்ல; இருவரும் ஒரே திசையை நோக்கிப் பார்ப்பது.”