news-details
சிறப்புக்கட்டுரை
தேடாதே... உருவாக்கு! (மார்ச் 20 உலக மகிழ்ச்சி தினம்)

மார்ச் மாதம் 20-ஆம் தேதி, அகில உலக மகிழ்ச்சி தினமாகக் கொண்டாடப்படுகிறது. இவ்வருடம் ஈரானுக்கும், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடந்து வருவதை அறிவோம். போரினை நடத்தும் நாடுகளைத் தாண்டி, மத்திய கிழக்கு நாடுகளும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள சூழல் இது. மிகக் குறிப்பாக, நமது நாட்டிலிருந்து பலர் வளைகுடா நாடுகளில் பணிபுரிவதால், போரோடு தொடர்பு அல்லாத நாம் ஒவ்வொருவரும் பயத்திலேயே வாழ வேண்டி உள்ளது.

பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி தெற்கு ஈரானில் மினாப் நகரிலுள்ள மகளிருக்கான தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற தாக்குதலில் மட்டும் 168 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற செய்தியை வாசித்ததும் நெஞ்சம் பதறுகிறது. இவ்வாறு எங்கும் மரண ஓலம், அழிவு, கோபம், பழிவாங்கல், சுயநலம், ஆதிக்க மனநிலை என எதிர்மறை எதார்த்தங்களின் தாக்கம் வெகுவாகவே அதிகமாய் உணரப்படும் சூழலில், மகிழ்ச்சியை எப்படிப் புரிந்துகொள்ளப் போகிறோம்? மகிழ்ச்சியின் வகைகள் என்னென்ன? மகிழ்வான வாழ்விற்கான வழிமுறைகள் எதுவாய் இருக்க இயலும்? என அலசிவிட்டு, மகிழ்வான சூழலை எப்படி உருவாக்குவது? என்பதைக் காண்போம்.

மகிழ்ச்சியை எப்படிப் புரிந்துகொள்கிறோம்?

மகிழ்ச்சி என்பது தனிப்பட்ட, உயிரோட்டமுள்ள நேர்மறை உணர்வுகளையும் (மகிழ்வு, நிறைவு), ஒட்டுமொத்த வாழ்வு குறித்தான நிறைவையும் (பொருள், நோக்கம்) தன்னகத்தே கொண்ட மனத்தின் நிலையாகவே (State of mind) பார்க்கப்படுகிறது. மகிழ்ச்சி என்பதை மனநிலை தொடர்பான தனிநபர் விசயமாகப் பார்ப்பதைவிட, ‘நான் மகிழ்வாக இருக்கும் அதேவேளையில், இச்சமூகத்தின் ஒவ்வொரு தனிநபரின் மகிழ்விற்கும் நான் பொறுப்புஎன்ற கூட்டுப் பொறுப்புணர்வுடன் மகிழ்வைப் பார்ப்பதே இன்றைய அறைகூவல்.

மகிழ்வின் வகைகள்

வால்டிங்கர், ஸ்கல்ஸ் ஆகியோர் இருவகையான மகிழ்வினைக் குறிப்பிடுகிறார்கள். தற்போதைய கணப்பொழுது மகிழ்ச்சியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு, நிரந்தரமற்றது எனத் தெரிந்தும் இன்பத்தைக் கைக்கொள்ள நினைக்கும் மனநிலையைHedonic Happinessஎன்கிறார்கள். தொலைநோக்குப் பார்வையுடன் வாழ்வின் பொருள் மற்றும் நோக்கத்தை மையம் கொண்டு, வாழ்வுக்கான நிறைவைத் தேடும் மனநிலைEudemonic Happinessஎன வகைப்படுத்தப்படுகிறது.

மகிழ்வான வாழ்விற்கான வழிமுறைகள்

தத்துவ மேதை அரிஸ்டாட்டில், “வாழ்வில் மனிதனுக்கு ஒரே ஓர் ஆசைதான் உண்டு; மகிழ்வாக இருப்பதற்கான ஆசை மட்டுமே அது. பிற ஆசைகள் அனைத்தும் மகிழ்வை அடைவதற்கான வழிகள்என்கிறார்மனிதன் நான்கு நிலைகளில் மகிழ்வை அடைய முயல்கிறான். அவை: 1. உடனடியாக அடைய முயலுதல்; 2. ஒப்பிடுதல் மற்றும் சாதித்தல் வழி; 3. நேர்மறையான பங்களிப்பைச் சமூகத்திற்குத் தருவதன் மூலம்; 4. எந்நிலையிலும் - எச்சூழலிலும் நிறைவைக் காண்பதன் வழி. மனிதன் மகிழ்வைத் தேடி அலைகிறான். பொன், பொருள், பதவி, அழகு என மனிதன் தேடி அலைந்து விரக்தியில் தேடல் முடிகிறது. எனவே, உளவியல் அறிஞர் கத்ரீனா ஃப்ளோம், “முன்மொழிவதெல்லாம் மகிழ்ச்சி கண்டெடுக்கப்பட வேண்டியது அல்ல; மாறாக, உருவாக்கப்படவேண்டியதுஎன்கிறார்.

மகிழ்வான சூழலை உருவாக்கல்

Lyubomirsky என்பவர், மகிழ்வைத் தீர்மானிக்கும் காரணிகளாக மரபியல் (Genetics), சிந்தனைகள் (thoughts), சூழல்கள் (Circumstances) ஆகியவற்றைக் கண்டறிகிறார். மகிழ்வான வாழ்விற்கு ஒவ்வொரு மனிதனின் மரபியல் கூறுகளும், மனநிலைகளும் முக்கியப் பங்கு வகித்தாலும், இப்போர்க் காலச்சூழல் நமக்கு விடுக்கும் அழைப்பு: தன்னலத்தையும் வன்முறையையும் தாண்டிய அமைதிக்கான சூழலை உருவாக்குவது என்பதை நம்மால் மறுக்க முடியாது.

நேர்மறைச் சிந்தனை மகிழ்வைக் கொணருமா? அல்லது நேர்மறைச் செயல்பாடுகள் மகிழ்வைத் தருமா? என்ற விவாதம் உளவியல் அறிஞர்களுக்கு மத்தியில் எழுவதுண்டு. நேர்மறைச் சிந்தனைகள் நிலையானவை அல்ல; மாறிக்கொண்டே இருக்கிறது என்பது டேனியல் கில்பர்ட், மேத்யூ கில்லங்ஸ் ஓர்த் இவர்களின் ஆய்வு.

நமது சிந்தனைகள் நமது கட்டுப்பாட்டில் முழுமையாக இல்லை. எனவே, சிந்தனைகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் மகிழ்வைக் கொணர முடியாது என்பது ஒருசாராரின் வாதம். இவர்களின் முன்மொழிதல் எல்லாம், “நேர்மறை எண்ணங்களைத் தாண்டி, நேர்மறைச் செயல்பாடுகளே மகிழ்வைக் கொணரமுடியும்என்பதுதான். கூர்ந்துநோக்கின், நேர்மறைச் செயல்பாட்டிற்கும் நேர்மறை எண்ணங்களே அடிப்படையாக அமைகின்றன.

எனவே, நல்லதை எண்ணுவோம், நல்லதைச் செயல்படுத்துவோம். பொறாமை, பழிவாங்கல், துன்புறுத்தி இன்பம் காணும் எதேச்சதிகாரத் தன்னல மனப்பான்மையிலிருந்து விடுபட்டு, பிறரைப் பாராட்டுவதும், துன்பங்களில் உடனிருப்பதும், ஆக்கப்பூர்வமான பிறரன்புப் பணிகளில் ஈடுபடுவதும் மட்டுமே நம் செயல்பாடுகளில் மிளிரட்டும். இதுவே மகிழ்வான உலகைக் கட்டியெழுப்ப நம் அடி நாதமாக அமையட்டும்.

நிறைவாக, திருப்பாடல் 126:3 எடுத்துரைப்பது போல, “ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் மகிழ்ச்சியுறுகிறோம்என்ற இறைநம்பிக்கையும் நன்றியுணர்வும் நம்மில் இருக்கும் வரை நம்முள் இருக்கும் மகிழ்வை யாரும் பறித்துவிட முடியாது.