03.03.2026 - அது ஓர் அழகிய நாள்! ஈரான் நாட்டு மினாப் நகரத்தில் போர் பதற்றத்திற்கும் இடையில் வாழ்க்கையில் முன்னேறத் துள்ளிக் குதித்து வந்த குழந்தைகள்! இவர்களிலிருந்து எத்தனையோ வருங்காலத் தலைவர்கள், சமூகப் போராளிகள், நீதிமான்கள், அர்ப்பணிப்பு உள்ளம் கொண்டவர்களாக மாறவேண்டிய குழந்தைகள் இருந்திருப்பார்கள். யாரும் எதிர்பாராத ஒரு நொடியில் சீறிய அணுகுண்டால் சிதறிய இளம் மொட்டுகள்...
யாரோ
செய்த தவறுக்கு
ஏன் இன்று எண்ணற்ற இளம் இரத்தம் பூமியில் சிந்தின?
வெறும்
பொருளுக்காகவும் பதவிக்காகவும் அந்நியராய்ச் சண்டையிடுகின்றோம். கடவுள் தமது சொந்த இரத்தத்தினால் நம்மைத் தமதாக்கிக் கொண்டார் என்று திருத்தூதர் பணிகள் நூலில் (20:28) வாசிக்கின்றோம். அப்படி இருக்க நாம் அனைவரும் ஒன்றுதானே! அன்று கடவுளுக்குப் புகழ்ச்சியாகவும் நன்றியின் காணிக்கையாகவும் பலிப்பொருளாகவும் இரத்தத்தை வார்ப்பார்கள். இன்று நாம் எதற்கு இந்தப் பிஞ்சுக் குழந்தைகளின் இரத்தத்தைச் சிந்துகிறோம்?
“அவர்களின் இரத்தம் கடவுளின் பார்வையில் விலைமதிப்பற்றது” (திபா
72:14).
ஆபேலின்
இரத்தத்திற்குக் கணக்குக் கேட்ட இறைவன் இன்று இத்தனை உயிர்களுக்கும் கணக்குக் கேட்கமாட்டாரா?
இப்படிப்
பல்வேறு விதங்களில் இரத்தத் துளிகள் மண்ணில் விழுந்ததன் காரணமாகவோ திரு அவையும் புவியும் நிலைநிறுத்தப்பட்டனவோ?!
ஏழை எளியவர்களுக்காகவும், அவர்களின் உரிமைக்காகவும் அநியாயத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்த தன் விளைவு புனித ஆஸ்கரின் இரத்தமும் இயேசுவின் இரத்தமும் ஒன்றாய் கலந்தன. ஆம், திருப்பலி நிறைவேற்றும்போது தன்னுடைய எதிரிகளால் சுடப்பட்டு, இரத்தம் சிந்தப்பட்டுக் கொல்லப்பட்டார்.
புனித
பவுல் பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில், “என் இரத்தத்தையே பலிப்பொருளாக வார்க்க வேண்டி இருப்பினும், அது எனக்கு மகிழ்ச்சியே” என்று
குறிப்பிடுகிறார். அதற்கு ஏற்றார்போல் புனித சார்லஸ் லுவாங்கோ இரத்தத்தைப் பலிப்பொருளாக்கினார்.
ஆப்பிரிக்காவில்
உகாண்டா நாட்டில் வாழ்ந்து வந்த ஒரு கத்தோலிக்க இளைஞர் கிறிஸ்துவை ஏற்று, ஓர் இளையோர் குழுவை உருவாக்கி மறைப்பணி செய்து வந்தார். அப்போது ஆட்சிக்கு வந்த மூவாங்கோ II என்ற
மன்னன், மக்கள் தன்னை வணங்காமல், மதிக்காமல் கிறிஸ்துவை மட்டுமே வணங்குகிறார்கள் என்று எண்ணி அச்சம் கொண்டான். மக்கள் அனைவரையும் கிறிஸ்துவை மறுதலிக்க ஆணையிட்டான். மீறியவர்களைச் சிறையில் அடைத்தான்.
1886-ஆம் ஆண்டு
புனித சார்லஸ் மற்றும் அவர்களது தோழர்களை அரசன் அழைத்து கிறிஸ்துவை மறுதலிக்க ஆணையிட்டான். அவர்களோ மறுத்தார்கள். 1886, ஜூன் 3-ஆம் தேதி அவர்களை நெருப்பிலிட்டான். கிறிஸ்துவுக்காகத் தங்கள் இரத்தத்தைப் பலிப்பொருளாக்கினர். இப்படித் திரு அவையில் எண்ணற்ற புனிதர்கள் தங்கள் இரத்தத்தை ஆண்டவருக்காக, அவரின் மாட்சிமைக்காகப் பலியாக்கினார் .
புனித
அகுஸ்தின் இவ்வாறு கூறுவார்: “இயேசுவின் இரத்தம் மனிதரைக் கடவுளுடன் மீண்டும் இணைக்கிறது.” இது ஒரு புதிய உடன்படிக்கையின் அடையாளம். அதன் வழியாய் நம் அனைவருக்கும் நிலைவாழ்வை வழங்கி உள்ளார். வரவிருந்த தீங்கு அனைத்திலும் இருந்து நம்மை மீட்டார். இத்தகைய விலைமதிப்பற்ற தூய இயேசுவின் இரத்தத்தை நாம் அனுதினமும் திருப்பலியின் வாயிலாகப் பெற்றுக்கொண்டு வருகிறோம். அவர் நமக்காக இரத்தம் சிந்தினார். நாமோ பாவத்திற்கு மேல் பாவம் செய்து பலருடைய இரத்தத்தை வாங்குகின்றோம். அமைதியில் உறையும் இறைவனைப் பல்வேறு அணுகுண்டுகளால் சிதைக்கிறோம். அவரின் இரத்தத்தின் வழியாய் நாம் ஒன்று சேர்க்கப்பட்டோம். ஆனால், இன்று மதத்தால், சாதியால், இனத்தால் பிரிந்துள்ளோம். போரினால் இறந்த உள்ளங்களுக்கு ஒரு சகோதரனாய் நமது பங்கு என்ன? இனியும் தொடர வேண்டுமா இப்போர்?
அன்று
உலக அமைதிக்காக, நம் பாவத்திற்குப் பலியாக, நம் மீட்பிற்காகச் சிலுவையில் வடிந்த இயேசுவின் இரத்தம், இன்று அர்த்தமற்றுப் போகிறது அல்லவா!
இனியும்
போர்கள் வேண்டுமா?
இரத்தம்
சிந்த வேண்டுமா?
குழந்தைகள்
துப்பாக்கிச் சூட்டினால்
மடிய
வேண்டுமா?
உலகம்
உருக்குலைய வேண்டுமா?
வேண்டாம்...
வேண்டவே வேண்டாம்...
போர்கள்
இனியும் வேண்டாம்!