news-details
சிறப்புக்கட்டுரை
கட்டாயமாகும் வந்தே மாதரம்

1985-ஆம் ஆண்டு சூலை மாதத்தின் ஒரு நாள்! பிஜாய், பின்னுமோள், பிண்டு எம்மானுவேல் எனும் பெயர் கொண்ட பள்ளி மாணவியர் மூவர் கேரளத்தின் பள்ளியொன்றில் படித்து வந்த நிலையில், ஒருநாள் இம்மூவரும் பள்ளியிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். ஏன் தெரியுமா? இம்மாணவியர்யெகோவாசபையைச் சார்ந்தவர்கள்! பள்ளியில் நாள்தோறும் நடைபெறும் காலை கூடுகையின்போது (assembly)  பாடப்பெறும் தேசிய கீதம் நிகழ்வில், அனைத்து மாணவியரும் தேசிய கீதத்தினை இணைந்து பாடவேண்டும். மேலே குறிப்பிடப்பட்ட மூன்று மாணவியரும் கூடுகையில் கலந்து கொண்டனர். ஆனால், தேசிய கீதத்தை வாய்திறந்து பாடவில்லை. காரணம்? அவர்களின் சமய நம்பிக்கை அவர்களை அனுமதிக்கவில்லை என்பதால் இம்மாணவிகள் பாடவில்லை. வாய் திறந்து பாடவில்லையே தவிர, வேறு எந்தவித அவமரியாதையும் செய்யவில்லை. அமைதியான கூடுகைக்கு வேறு எவ்வித இடர்ப்பாடும் காட்டவில்லை.

கேரள மாநில அரசின் அமைச்சர் ஒருவர் எழுப்பிய பிரச்சினை காரணமாக, தாக்குப்பிடிக்க இயலாத பள்ளி நிர்வாகம்  இம்மூவரையும் வெளியேற்றியது. கேரள உயர் நீதிமன்றம் பள்ளி மாணவியர்மீது எடுக்கப்பெற்ற நடவடிக்கையைச்சரிஎன்று தீர்ப்புரைக்க, வழக்கு உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது. உச்ச நீதிமன்றம் உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தள்ளுபடி செய்தது.

உச்ச நீதிமன்றத்தின் அன்றைய நீதியரசர் சின்னப்ப ரெட்டியார் அவர்கள் அளித்த தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புடையது: “இம்மாணவியர் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டமை, இந்திய அரசமைப்பு உரிமைச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளான பேச்சுரிமைக்கும் மதச் சுதந்திரத்திற்கும் எதிரானது; பள்ளியில் தேசிய கீதம் பாடப்பட்டபோது, இம்மாணவியர் எழுந்து நின்று உரிய மரியாதை செய்தனர். அனைத்து மாணவியரும் பாடிய நிலையில், இம்மூன்று மாணவியரும் பாடவில்லை என்பதாலேயே, தேசிய கீதத்தை அவமதித்தனர் என்று குற்றம் சாட்டுவது தவறு. மரியாதையோடு எழுந்து நிற்பது; ஆனால், இசைந்து பாட மறுத்தல் என்பது எவ்வகைச் சட்டத்தையும் மீறுதல் அல்ல (‘தி இந்து, பிப்ரவரி 13, 2026).

இந்து தேசியத்தை வேதமயமாக்க முயன்று வரும் இந்து தேசியர்கள், ‘வந்தே மாதரம்எனும் மந்திர கீதம் தோன்றிய 150 ஆண்டு நிறைவை நாடாளுமன்றத்தில் நெடிய விவாதப்பொருளாய் மாற்றியமையை அறிவோம்.

வந்தே மாதரம்என்ற முழக்கத்தை எவரும் எதிர்க்கவில்லை. ‘வந்தே மாதரம்என்ற பாடல் வங்காளத்தில் பக்கிம் சந்திர சட்டர்ஜி அவர்களால் எழுதப்பட்ட ஒன்று. இவ்வாசிரியர் பின்னாளில் எழுதியஆனந்த மடம்என்ற புதினத்தில் இதன் நீட்சியாகச் சேர்க்கப்பட்ட பகுதிகளில் இந்தியா எனும் நிலப்பரப்பை, துர்க்கையாகவும் இலட்சுமியாகவும் சரஸ்வதியாகவும் பார்க்கச் செய்கிறார். தாய் நாடாம் (Mother Land) இந்தியாவைத் துர்க்கையாகவும், பத்து வகை ஆயுதங்களைத் தரித்தவளாகவும் காட்டுகிறார்.

இந்தியா எனும் தாய்நாட்டை வணங்குவது வேறு; இந்தியா எனும் தாய்நாட்டைத் துர்க்கையாகவும் சரஸ்வதியாகவும் கருதி வணங்குதல் வேறு. ஆனால், வணங்க வேண்டுமென்பது குடிமக்களின் மதச்சுதந்திரத்தின் மீது நடத்தப்பெறும் வன்முறை இல்லையா? இந்து மதவாதிகள் ஏற்றுக்கொண்ட இந்து இராஷ்டிரத்தில் இது சாத்தியமாகலாம். சமயச் சார்பற்ற நாட்டில் பல்வேறு நம்பிக்கைகளைக் காப்பாற்றி வரும் ஒரு நாட்டில் இது எப்படிச் சாத்தியம்?

வந்தே மாதரம்எனும் பாடலின் முதல் இரண்டு வரிகளைப் பாடுவதில் எவருக்கும் தயக்கமில்லை. 1937-இல் கொல்கத்தாவில் கூடிய காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் இவ்விரு வரிகளையும் பாடவேண்டும் என்ற தீர்மானத்தை டாக்டர் இராஜேந்திர பிரசாத் அவர்கள் முன்மொழிய, வல்லபாய் படேல் வழிமொழிய, அத்தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவ்விரு வரிகளைத் தாண்டி, ஏனைய வரிகளை எல்லாரையும் ஏற்றுக்கொள்ள வற்புறுத்துவது மதம் சார்ந்தோரின் உணர்வுகளைச் சிறுமைப்படுத்தவே செய்யும் என்று நம்பிய அரசமைப்பு அவை முழுப்பாடலைப் பாட வேண்டும் என்பதை நிராகரித்தது

இந்தியச் சனநாயகம் காக்க உருவான இந்திய அரசமைப்புச் சட்டம், இரு நாட்டுக் கோரிக்கைகள் வலுவாக உருப்பெற்றிருந்த காலத்தும்கூட இசுலாமியர்களின் நம்பிக்கையை அங்கீகரிக்கும் வகையில் இம்முடிவை எடுத்தது. பல்சமய நம்பிக்கைகளைக் காப்பது சமயச் சார்பின்மையின் உயிராக இருக்கையில், தேசியத் தலைவர்களின் இம்முடிவை இசுலாமியர்களைத் திருப்தி செய்யும் (Appeasement) போக்கு எனக் குற்றம் சுமத்தினர். இன்றும்வந்தே மாதரம்எனும் பாடலின் முழு ஆறு வரிகள், அனைத்து அரசு நிகழ்வுகளிலும் குடியரசுத் தலைவர் கலந்துகொள்ளும் நிகழ்வுகளிலும் முழுமையாகப் பாடப்பெற வேண்டுமாம்! இப்பாடல் பாடப்பெறுகையில் அனைவரும் எழுந்து நிற்க வேண்டுமாம்! பள்ளிகளில் காலை கூடுகை இக்கீதத்தில்தான் தொடங்க வேண்டுமாம்! இந்திய அரசமைப்பு ஒதுக்கிய இந்த நான்கு வரிகள், இக்கீதத்தில்  கட்டாயம் இடம்பெற வேண்டுமாம்! துர்க்கைஆயுதம் தாங்கிய துர்கையின் ஆசியைப் போற்றலும், இலட்சுமியின் ஆசிர்வாதத்தையும், சரஸ்வதி தரும் அறிவையும் போற்றும்இவ்வரிகளை அனைவரும் அனைத்து நிகழ்வுகளிலும் பாடவேண்டுமாம்!

ஒரு சனநாயகக் குடியரசு, அதன் குடிமக்களை ஒரு சமயம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்க கட்டாயப்படுத்த முடியுமா? ஒரு சமயம் சார்ந்த பாடல் ஒன்றினைதேசியக் கீதம்என அறிவித்து, அப்பாடலைக் குடிமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, மறுக்காமல் பாடவேண்டும் என்று வற்புறுத்துவதும், பாட மறுப்பது தேசத்துரோகம் என்று பழிப்பதும் அல்லது பாடுவதும்தான் தேசப்பற்று என்று முத்திரை குத்துவதும் என்ன நியாயம்?

வந்தே மாதரம்என்ற பாடல் தோன்றிய சூழமைவு  மதிக்கப்பெறவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இப்பாடலின் முதல் இரண்டு வரிகள் (Stanzas) காலனி ஆதிக்கத்தை எதிர்க்கும் உணர்ச்சியைத் தூண்ட எழுதப்பெற்றவை. விடுதலைப் போராட்டக் களத்தில், அரசியல் கூட்டங்களில், சிறைச்சாலைகளில் இந்துகளும் இசுலாமியரும் இணைந்து பாடியதுண்டு. விரும்பி ஏற்றுப் பாடிய  காலம் இருந்தது. இந்திய நாட்டின் தேசியத் தலைவர்கள் பேசிய தேசியத்துள் அனைவரையும் உள்ளிழுக்கும் போக்கு மலிந்திருந்தது. இந்திய அரசமைப்பின் முன்னோடிகள் அனைவரும் இந்திய தேசியத்தின் ஆதரவாளர்களே.

இந்திய தேசிய எழுச்சியில், ‘வலதுசாரித்தனத்தைஉள்வாங்கியவர்கள் இருந்தனர். அரசியல் நிர்ணய சபையின் தலைவராக இருந்த டாக்டர் இராஜேந்திர பிரசாத், ‘இரும்பு மனிதர்என்று அழைக்கப்பட்ட வல்லபாய் பட்டேல் போன்றோரும், ஏன் காந்தியடிகளும்கூட இந்து மதநெறிகளை மறந்தவர்களில்லை. அரசியல் நிர்ணய சபையில்வந்தே மாதரம்பற்றிய விவாதம் நிகழ்ந்தபோது, இவர்களில் எவருமே இப்பாடலின் அனைத்து வரிகளும் பாடப்பெறவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்கவில்லை என்பதுதான் உண்மை.

நாட்டுப்பற்றின் வெளிப்பாடு என்பது தேசியக் கீதத்தில்தான் இருக்கிறது என்று ஏற்றுக்கொள்வது அறிவீனம். தேசம், தேசியம், தேசப்பற்று என்ற பதங்கள் மூலம் வளர்க்கப்பெறும் நாட்டுப்பற்று உண்மையுள் அடங்கிய ஒன்றல்ல. இந்நாட்டில் அந்நியருக்கு எதிராக நடத்தப்பட்ட விடுதலைப் போராட்டத்தில் எந்தப் பங்கும் பெறாத இன்றைய ஆளும் கட்சி, அன்றைய காங்கிரசின் ஒப்பற்றத் தலைவர்களை இன்றும் அவமதித்துவரும் இன்றைய ஆளும் கட்சி, இந்தியாவின் தேசியக் கொடியின் உள்ளடக்கத்தை மதரீதியானது என்று கொச்சைப்படுத்திய இன்றைய ஆளும் கட்சி, ‘வந்தே மாதரம்என்ற பாடலின் முழு வரிகளையும் பாடுவதால் பாரத மாதா சிறப்பிக்கப்படுகிறாள் என்று கூறுவதில் தேசப்பற்று கொஞ்சமும் இல்லை. மாற்றுச் சமயங்கள் மீதான பகையும் பாகுபாடுமே இங்கு எஞ்சி நிற்கிறதுமாற்றுக் கருத்தியல் மீதான தாக்குதலேவந்தே மாதரம்என்ற நிகழ்வு எடுத்துரைக்கிறது என்பதை எப்போது உணரப் போகிறோம்?

கிறித்தவத்தின் மௌனம்

இந்துத்துவ அரசின்வந்தே மாதரம்தொடர்பான நடவடிக்கை கிறித்தவர்களிடையே எத்தகைய அதிர்வுகளையும் உருவாக்கியதாகத் தெரியவில்லை. இந்நிகழ்வு அல்லது இந்துத்துவ அரசு முன்னெடுத்த இப்பாடல் பற்றிய முன்னெடுப்பு, இந்துத்துவம் எப்போதும் பேசும் நாட்டுப்பற்று சிறுபான்மையினர் மீதான வெறுப்புணர்வு என்று எடுத்துக்கொண்டனரோ என்றுதான் தோன்றுகிறது. ஆனால், கிறித்தவம்- கிறித்தவ அடையாளம் பற்றிக் கவலைப்படும் எவரும் இப்போக்கை எளிமையாக எடுத்துக்கொள்ள முடியாது.

கொசு நுழைய முடியாத இடங்களில் கூட கல்விப் பணித்தளத்தை விரித்து, நற்பணி ஆற்றி வரும் கிறித்தவ நிறுவனங்கள் தம் நிறுவனங்கள் மூலம் விரும்பியோ விரும்பாமலோ கிறித்தவ அடையாளத்தை மக்களிடம் காட்டிக் கொண்டுதான் இருக்கின்றன என்ற உண்மையை உலகம் மறந்திடாது. நம் எளிய அருள்சகோதரிகள், அருள்தந்தையர்கள் தம் பள்ளிக்கூடுகையின்போது துர்க்கை, சரஸ்வதி, இலட்சுமியைத் துதிபாடியே பணியைத் தொடங்க வேண்டிய காலகட்டாயம் சட்டத்தால் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றால், கொள்கை வீச்சில் வாழவேண்டிய கிறித்தவ நிறுவனங்கள் இச்சவாலை எப்படி எதிர்கொள்ளப்போகின்றன?

ஒன்றிய அரசு ஆளும் மாநிலங்கள் அனைத்திலும், மனித உரிமைகளையும், கருத்துச் சுதந்திரத்தையும் மதச்சுதந்திரத்தையும் அப்பட்டமாக மீறும் மதமாற்றத் தடைச்சட்டத்தை இயற்றி, மதப்போதகர்களை மிரட்டிவரும் போக்கு இன்று கண்டுகொள்ளாமையால் அதிதீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

கிறிஸ்துவை அறிவிக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட மாபெரும் கல்வி நிறுவனங்கள்வெறும் போட்டி நிறுவனமாக மாறிவிட்ட நிலையில் ஒரு மதவாத அரசு இப்படித்தான் செயல்படும் என்ற தெளிவும் இன்றி, அப்படியே செயல்பட்டாலும் நாம் பெற்ற கல்வி மூலம் அத்தீயத் திட்டத்தை எதிர்கொள்ளும் சட்ட அறிவுமின்றி மௌனித்து வருதல் பெரும்  பாவமில்லையா?

வந்தே மாதரம்என்ற பாடலின் முதல் பகுதியை நாம் ஏற்றுக்கொள்ளலாம், பாடலாம்! அப்பாடலின் ஏனைய பகுதிகளைக் கேள்வியின்றி நாம் பாடத்துணிந்தால் நம் அடையாளம் கேள்விக்குள்ளாகும் என்பதோடு நம் நம்பிக்கையும் பொய்யாகும் என்பதே உண்மை. என்ன செய்யப் போகிறோம்?