மனித வாழ்வை மேம்படுத்தும் பணிகளில் தன்னை முழுமையாக அர்ப்பணித்த லெவே அடிகளாரின் வாழ்வில் புனிதம் மிளிர்கின்றது. அவரது வாழ்க்கை ‘அன்பும் சேவையும்’ என்ற இரண்டு தூண்கள் மேல் தழைத்து நின்றது. அடிகளார் கிறிஸ்துவின் போதனையை உள்வாங்கி, தன்னை ‘ஒடுக்கப்பட்டோரின் தோழன்’ எனக் கருதி வாழ்ந்தார். சமத்துவம், அன்பு, கருணை, மனிதநேயம் ஆகியவற்றையே உயர்ந்த மதிப்பீடாகக் கொண்டார்.
சொல்லில் வலிமை, செயலில்
மேன்மை
லெவே
அடிகள் சொல்வது போலவே செயலிலும் மேன்மை விளங்கும். சொல்லால் மட்டுமல்ல; தன் தியாகத்திலும்
அவரின் புனிதம் வெளிப்பட்டது. அவர், தான் கடவுளின் கருவி என்றே வாழ்ந்தவர்; கடமையைத்
தியாகமாக மாற்றியவர். தான் பார்த்த ஒவ்வோர் ஏழையிலும் இயேசுவின் திருமுகத்தைக் கண்டவர்.
பசியோ, நோயோ, துயரோ அனைத்தும் தந்தை அவர்களுக்கு இறைவனின் அழைப்புப் போல இருந்தது.
ஏழைகளோடு பேசுவதால் மட்டுமல்ல; அவர்களின் துயரைத் தன் தோளில் சுமந்ததால் அவரின் சேவை
ஒரு புனித மொழியாக மாறியது.
தந்தை
லெவே மக்களிடம் பெறுவதில் இல்லை; கொடுப்பதில் மகிழ்ச்சி கண்டார். சிறு உதவியிலும் கூட
மிகுந்த மகிழ்ச்சி பெற்றார். ஒரு பசியாளன் வயிறு நிறைந்தால், ஒரு குழந்தை எழுத்து கற்றால்,
ஒரு நோயாளன் குணமானால் அத்தகைய மகிழ்ச்சி அவருடைய கண்களை ஒளிர வைத்தது. யாருக்கும்
தெரியாமல் உதவி செய்யும் பண்புள்ளவர். ஏழை ஒருவர் துன்புற்றால் அது அவருக்குப் பெரிய
அழைப்பு. யாருடைய பாராட்டையும் எதிர்பார்க்கும்
பண்பு அவரிடம் இல்லை. அதுபோல் அவர் செய்த உதவிக்கு எங்கும் அவர் பெயர் எழுதப்படவில்லை.
ஆனால், சென்ற பங்குகளில் மக்களின் வரலாற்றில் அவர் பெயர் நிலைத்திருந்தது.
அன்பில் மலர்ந்த ஆன்மிகம்
தந்தை
லெவேயின் வாழ்க்கையின் மிகப்பெரிய சக்தி சொல்லிலும் இறைவேண்டலிலும் தளராத நம்பிக்கையிலும்தான்
இருந்தது. எந்த ஒரு செயலுக்கு முன்னும் இறைவேண்டல் என்பதே வாழ்வானது. அவருக்குச் செபமே சுவாசமாயிருந்தது; அதுவே மக்களுக்கு
வாசமாயிருந்தது. லெவே தந்தையில் இறைத்தந்தையின், இயேசுவின், தூய ஆவியாரின் உடனிருப்பு
ஒளிர்ந்ததால், இறைவனை முழுமையாக நம்பியதால் மனித முயற்சியைத் தாண்டி அற்புதங்களை நிகழ்த்தும்
சக்தியைக் கொண்டிருந்தார். அவருடைய செபம் காயங்களை ஆற்றும் மருந்தாயிற்று. குறிப்பாக,
1920-ஆம் ஆண்டில் காலரா கொள்ளைநோய் தாக்கியபோது நோயுற்ற பிள்ளைகளைப் பெற்றோரும், தொற்றுப்
பற்றிக்கொண்டோரை அவர்களது உறவினர்களும் கைவிட்டு ஓடிப்போனபோது, லெவே அடிகள் ஊரிலேயே
தங்கி நோயாளிகளைப் பராமரித்து, உதவிகள் செய்தும், இறந்தோரை நல்லடக்கம் செய்தும் அருந்தொண்டாற்றினார்.
தந்தை லெவே விவசாயிகளின் தோழன். கால்நடைகள், ஆடு
மாடுகள் நோயுற்றபோது அவர்கள் தந்தையிடம் ஓட்டிவர, அவர் செபம் செய்து புனித நீரை ஊற்றிட,
கால்நடைகளின் நோய் நீங்கியன. ஒருமுறை மழையில்லாமல் பயிர்கள் கருகிட, தந்தை நடுப்பகலில்
சுட்டெரிக்கும் தரையில் முழந்தாளிட்டு நீண்ட நேரம் கைகளை விரித்து வானை நோக்கிச் செபம்
செய்ய, மக்கள் வியக்கும் வண்ணம் பெருமழை பெய்தது.
விவசாயிகளின் பயிர்களைப் பூச்சிகள் நாசம் செய்யும்போது தந்தையிடம் வர, பனை ஓலையில்
செபத்தை எழுதி அதை வயலின் நடுவில் ஒரு சிலுவையைக் கம்பில் கட்டி வைக்கச் சொல்வார்.
தந்தை மந்தரித்துக் கொடுத்த தீர்த்தத்தை வயலில் தெளிக்கப் பூச்சிகள் ஒழிந்து போனது,
விவசாயம் நல்ல பலனைத் தந்தது.
லெவே
அடிகளாரின் உள்ளம் எப்போதும் குறைவுகளைக் காணாதது. அவர் பார்த்த ஒவ்வொரு மனிதரிடமும்
நல்லதையே கண்டவர். ஒருவர் எவ்வளவு எளியவராக இருந்தாலும், எவ்வளவு வறுமையில் இருந்தாலும்,
எத்தனை குறைகளுடன் வாழ்ந்தாலும், அவர்களிடம் இருக்கும் சிறு நம்பிக்கையையே அவர் பெரிதாகக்
கண்டார்.
அவரின்
அளவில்லாக் கருணை புரிதல் அன்பு! எவரைக் கண்டாலும் அவர்களை முழுமையானவர் போலவே பார்க்கும்
நெறியை உருவாக்கியது. எல்லாரையும் நிறைவான படைப்பாகக் காணும் அந்தத் தூய பார்வையே அவரின்
புனிதத்தை உலகிற்கு உணர்த்தியது. லெவே தந்தையின் உள்ளத்தில் பிறரின் பாதுகாப்பு என்பது
ஒரு பணி அல்ல; ஒரு பொறுப்பு; ஓர் அர்ப்பணிப்பு!
அவர்
இருந்த இடத்தில் யாராவது அபாயத்தில் இருக்கிறார்கள் என்ற செய்தி கேட்டால், அதை அவர்
தனது வலியாக உணர்ந்தார். சருகணியில் ஒருமுறை மழைநீர் பெருகி, பள்ளிக்குச் செல்லும்
சிறுமிகள் பயந்து நின்றனர். நீர் ஆறு போல ஓடியதால் பெற்றோரும் குழந்தைகளை அனுப்பத்
தயங்கினர். அதை அறிந்த லெவே தந்தை, அந்தச் சாலையிலே தானே நின்றார். எதுவும் சாப்பிடாமல்,
மழை நனைத்தாலும் கவலைப்படாமல் அந்தக் குழந்தைகள் ஒவ்வொருவரும் பாதுகாப்பாகக் கடந்து
செல்லும்வரை அவர்களுடன் நடந்தார். அவரை நனைந்த உடையுடன் பார்த்த ஒரு கிராம முதியவர்
கேட்டார்; “தந்தையே! இதை ஏன் நீங்கள் செய்கிறீர்கள்?” அவர் மெதுவாகச் சிரித்துக்கொண்டே,
“அவர்கள் பாதுகாப்பாக இருந்தால், அதுவே எனக்கு உண்மையான ஆசிர்வாதம்.” இந்த நிகழ்வு
கிராமத்தில் யாராலும் மறக்கமுடியாத நினைவாகி, மக்கள் அனைவரின் மனத்திலும் அவரின் கருணை
பசுமரத்து ஆணியைப் போலப் பதிந்தது.
இளையோரும் பெண்ணிய மாண்பும்
லெவே
அடிகள் பணியாற்றிய பகுதிகளில் இளம்பெண்கள் இரவு நேரங்களில் சாலையில் நடந்து செல்ல வேண்டிய
சூழல்கள் இருந்தன. அந்தப் பகுதிகளில் தெரு விளக்குகள் குறைவாக இருந்தன. சில இடங்களில்
குடிபோதையில் நடமாடும் மனிதர்களும் இருந்தனர். பெண்களுக்கு இது பயத்தை உண்டாக்கும்
சூழல். இந்த நிலையை மாற்றவேண்டியதை லெவே அடிகள் ஆழமாக உணர்ந்தார். பாதுகாப்பாக அவர்கள் இரவு திரும்ப பாதை அமைத்தார். அவர் கிராமத்
தலைவர்களையும், ஆலயக் குழுவினர்களையும் அழைத்து, இளம் பெண்கள் பள்ளி அல்லது தையல் பயிற்சி
மையங்களில் இருந்து திரும்பும் நேரத்தில் தன்னார்வப் பாதுகாப்புக் குழு அமைத்தார்.
அதாவது சில நம்பகமான இளைஞர்கள் அவர்களுடன் நடந்து செல்ல ஏற்பாடு. அதற்கு லெவே அடிகள்
வழிகாட்டினார்.
இளைஞர்களைப்
பொறுப்புள்ளவர்களாய் வளர்த்தார். “ஒரு பெண் பயப்படாமல் நடக்க முடிகிறதா? அது உங்கள்
மனிதநேயத்தின் அளவு” என்று அவர் இளைஞர்களிடம் அடிக்கடிக்
கூறுவார். இதனால் அந்தக் கிராமத்தில் இளைஞர்கள் பெண்களை மதிக்கும் மனப்பான்மை வலுவடைந்தது.
மனிதரை
மனிதராகப் பார்க்கின்ற, மதிக்கின்ற மகத்துவத்தில்தான் இறைவனைக் கண்டுகொள்ள முடியும்.
மற்றவர்களின் குறைகளைப் பொறுத்துக்கொள்ளும் கருணை; துயரிலும் கூட மனம் தளராமல் நிற்கச்
செய்யும் நம்பிக்கை இவை அனைத்தும் மனித முயற்சியால் மட்டுமல்ல, இறைவன் தரும் உள்ளார்ந்த
அமைதி என்பதால்தான் வருகிறது.
மனிதரை
மதிக்கும் மனமே, உண்மையான இறை அறிவு. ஒருவன் யார் என்பதைப் பார்த்து அல்ல; இவன் இறைவனின்
படைப்பே என்பதால் தந்தை லெவே அனைவரையும் மதித்தார். இதுதான் ஆன்மிகத்தின் உச்சம். பொறுமை
மனிதனின் மனத்தைத் தெய்வீகமாக்கும்; கனிவு அவரது உள்ளத்தை ஒளியாக்கும். மற்றவரை மதிக்கும்
பண்பு அவரது வாழ்க்கையை இறைவனின் சாயலாக்கியது. தந்தை லெவே வாழ்வில் கிறிஸ்துவின் இதயத்துடிப்புடன்,
கிறிஸ்துவின் கண்களால் உலகைப் பார்த்தார். இதற்கு அவரின் வாழ்க்கையே ஒரு சாட்சி.
மக்களை நேசித்த மகான்
- மனித மனங்களில் என்றுமே வாசம்
மக்களை
நேசித்த தந்தை லெவேயின் வாழ்க்கை மரணத்தால் முடிவடையாது. அவர் உடல் மண்ணில் கலந்தாலும்,
அவர் செய்த எண்ணற்ற நன்மைகளால் மக்களின் நெஞ்சங்களில் நீங்காத நினைவலைகளாய் வலம் வருகிறார்.
அன்பு கொண்டவரின் வாழ்க்கைக்கு முடிவு கிடையாது. பிறர் துயரத்தைத் தன் துயரமாகக் கொண்டு,
அவர் விதைத்த அன்பினால் ஒவ்வொரு நெஞ்சிலும் ஓர் உயிராகவே தொடர்ந்து வாழ்கிறார். செய்த
சேவையை மரணம் அழிக்காது, அழிக்க முடியாது. நோயாளிகளுக்கு மருந்தாகவும், ஏழைகளுக்கு
முதல் நம்பிக்கையாகவும், கல்வியில்லாக் குழந்தைக்குத் தூண்டுதலாகவும் வாழ்ந்தவர். ஒருவர்
தன் உயிரை மட்டும் இழக்கிறார்; ஆனால், அவர்தம் அன்பு பல ஆயிரக்கணக்கான உள்ளங்களில்
பதிந்து விடுகிறது. நினைவாக அல்ல விளக்காக வாழ்கிறார். ‘அவர் இன்றும் நம்மோடு உள்ளார்’ என்று உணர்கிறார்கள். காரணம் அவர் காட்டிய மனிதநேயம் அவர்களை,
அவர்களின் வாழ்வை மாற்றத் துண்டுகிறது.
சிறந்த
வாழ்க்கை மரணத்தை வெல்லும். தந்தை வாழ்வில் தூய்மை, தியாகம், கருணை இவையனைத்தும் காலத்தால்
அழிக்கப்படாத அடையாளங்கள். மண்ணில் கலந்த உடல் மட்டும் மறைந்து போகும். ஆனால், மனிதர்களின்
இதயங்களில் அவர் நிலையாக வாழ்கிறார். அவரின் ஆன்மாவின் ஒளி எண்ணற்ற மனங்களில் தினமும்
ஒளிர்ந்துகொண்டே இருக்கிறது.
லெவே
அடிகளின் வாழ்க்கை என்பது ஒரு மனிதனின் பயணம் அல்ல; ஓர் ஒளியின் பிறப்பு. பேச்சைவிட
செயலின் மேன்மையை உலகிற்கு எடுத்துக்காட்டியவர். ஏழைகள் தன் மக்கள் என்று எண்ணி அவர்களின்
நெஞ்சில் இறைவனைக் கண்டவர். யாரும் பார்க்காத இடத்தில் உதவிபுரிந்து, யாரும் கேட்காதபோதும்
செபித்து, யாரும் துணை நின்றிடா நேரங்களில் ஆதரவாக நின்ற புனித ஆன்மா. பொறுமை, கனிவு,
கருணை, அன்பு இவை அனைத்தையும் கலந்த ஒளிமிகு செயல்களால் மண்ணில் மாய்ந்தாலும் மக்களின்
மனங்களில் மறையாத மகான் அவர்! அன்பை விதைத்து மனிதனை உயர்த்திய லெவே அடிகள் தன் வாழ்வால்
அதைக் கற்றுக் கொடுத்தார்.
இறைவனைக்
காணவேண்டுமெனில் மனிதனை நேசிக்கவேண்டும் என்ற அவரின் செம்மையான சேவையின் ஒளி இன்றும்
எண்ணற்ற உள்ளங்களில் வழிகாட்டும் தீபமாகத் தொடர்ந்து எரிகிறது. தந்தை லெவே அவர்களின்
தாரக மந்திரம், “இயேசுவே அன்பின் அரசே! உமது அன்புள்ள இரக்கத்தை நம்புகிறேன்.” இதையே
அவர் தானும் செபிப்பதோடு மற்றவர்களையும் இச்செபத்தைச் சொல்லி இறை எழுப்புதல் செய்வார்.
லெவே
அடிகள் ஒரு கிறித்தவத் துறவியாக மட்டுமல்ல; ஒரு மனிதநேயப் புனிதராக வாழ்ந்தவர். அவர்
செய்த கல்வி சேவை, மீனவர் நலப்பணி, சமத்துவப் போராட்டம் ஆகியவை இன்றும் சமூகத்தில்
நம்பிக்கை விதையாக உள்ளது. தந்தை லெவே அவரின் வாழ்விலிருந்து அன்புடன் பணிபுரியவும்,
நல்லெண்ணத்துடன், வாழவும் ஒடுக்கப்பட்டோருக்குக்
குரல் கொடுக்கவும் கற்றுக் கொள்வோம்.