அன்று ஊரே பரபரப்பாக இருந்தது. ஞாயிற்றுக் கிழமையென்றாலும், கிழடு கட்டைகளுக்கு அன்று அலுவல் நாள்.
“ஏதோ கட்சி மாநாடாம்! நூறு ரூபாயும் பிரியாணியும் தராங்களாம். திண்ணையில உக்காந்து விட்டத்தை அண்ணாந்து பாத்துக்கிட்டு இருக்கிறதுக்குப் போயிட்டுதான் வாயேன்.”
சுந்தரியின் குடைச்சலைக் காதில் போட்டுக் கொண்டாலும், வாயில் போட்டிருந்த வெற்றிலையை ஐயாகண்ணு இரசித்து மென்றுகொண்டிருந்தார். நீல வானத்தில் வெள்ளைக்கோடு போட்டுக்கொண்டே பாகப்பிரிவினை செய்யும் விமானத்தைப்போல, வறுமையென்னும் சிவப்புக்கோடு சுந்தரியையும் ஐயாகண்ணுவையும் மற்றவர்களிடமிருந்து எப்போதும் பிரித்தே வைத்திருந்தது.
“நல்லது கெட்டதற்குக் கூப்பிடாதவங்க கூட, இந்தக் கட்சி கூட்டத்துக்கு மட்டும் கூப்பிடுறாங்க” என்று சுந்தரி ஐயாகண்ணுவிடம் அடிக்கடி சொல்லி வருத்தப்படுவதுண்டு.
“சேலத்துல ஏதோ கட்சிக் கூட்டமாம். பெரிய சினிமா நடிகர்களெல்லாம் வராங்களாம். வீடு வீடா அந்த ராசாத்தி மகன் அழகேசன் கூப்பாடு போட்டுட்டு இருக்கான்” என்று சுந்தரி சொல்லி முடிப்பதற்கு முன்பாக, “சரி தாயே, நிறுத்து உன் ஒப்பாரியை. நான் சும்மா இருந்தா உனக்கு ஆகாதே. போய் தொலையிறேன்” என்று சொல்லிக்கொண்டு காய்ந்துபோன மரத்தில் ஆடிக்கொண்டிருக்கும் கடைசி இலையைப்போல, கம்பிக்கொடியில் காய்ந்து கொண்டிருந்த சட்டையைப் போட்டுக்கொண்டு வெளியே கிளம்பினார் ஐயாகண்ணு. காரிப்பட்டி கிராமத்திலிருந்து மட்டும் மூன்று பெரிய வண்டி நிறைய சனங்க அந்தக் கட்சிக் கூட்டத்திற்கு வந்திருந்தனர். ஊர்க்காரர்கள் எல்லாம் அங்கு வந்திருந்த நடிகரைப் பார்த்தவுடனே முண்டியடித்துக் கொண்டு மேடையின் பக்கத்திலேயே சென்றுவிட் டனர். ஐயாகண்ணு மட்டும் அந்தப் பெருங்கூட்டத்தில், இரும்புக்கடையில் இனிப்பைத் தேடி அலையும் எறும்பைப்போலத் தனித்து விடப்பட்டிருந்தார். ஐயாகண்ணுக்குக் கொஞ்சம் காது கேட்காது வேறு. தலைவர்கள் கட்சி மேடையில் பேசியதில் பாதிகூட அவர் காதுவரை சென்று சேரவில்லை. அவரின் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தவர்களுக்குத் தமிழ் தெரியாதாம்; ஏதோ இந்திக்காரர்களாம். ஆடலும் பாடலும், அரசியல் பேச்சும் திரைப்பட வசனங்களும் அங்கிருந்த கூட்டத்தையே கட்டிப் போட்டிருந்தது. கூட்டம் குதூகலித்திருந்தபோது, பனை மரம் சரிவதுபோல ஐயாகண்ணு நெஞ்சைப் பிடித்துக்கொண்டு கீழே சரிந்தார். கட்சிக் கூட்டத்திற்குக் கூட்டிக்கொண்டு வந்த ராசாத்தி மகன் அழகேசனும், அவன் கூட்டாளிகளும் வந்து சேருவதற்குள் ஐயா கண்ணுவின் உயிர் போயிருந்தது.
எத்தனையோ ஆயிரம் பேர் கூடியிருக்கும் இடத்தில், ஐயாகண்ணுவின் மரணம் ஒரு சிறு சலசலப்பைக்கூட ஏற்படுத்தவில்லை. அது ஒரு பொருட்டாகவே தெரியவில்லை; யாரையும் திரும்பியும் பார்க்க வைக்கவும் இல்லை. கட்சித் தலைவர்கள் தொடர்ந்து முழக்கமிட்டனர், நடிகர்கள் பாடல் பாடி கூட்டத்தை உசுப்பிவிட்டனர். கூட்டம் ஆர்ப்பரித்தது. குதூகலத்தின் உச்சத்திற்குச் சென்று ஆடிப் பாடியது. காரியப்பட்டி கிராமத்தில் ஐயாகண்ணுவின் மனைவி சுந்தரி, ஐந்நூறு ரூபாயும் பிரியாணியும் எப்போது வீடு வரும் என்ற எண்ணத்தில், வானத்தில் காத்திருக்கும் நிலவு போலத் தூங்காது திண்ணையிலேயே காத்திருந்தாள்.
ஒரு நடிகர் அல்லது அரசியல்வாதியின்மேல் கொண்ட பற்றினால், எப்படி ஒரு பெருங்கூட்டம் அந்த மனிதரையே கடவுளாகப் பார்த்துக் கொண்டிருக்க விரும்புகிறதோ, அதேபோலத் தனக்குப் பிடித்த திரைப்படம் அல்லது தொலைக்காட்சித் தொடரை இடைவிடாமல் பார்த்துக் கொண்டிருப்பதால்தான் அக்கம் பக்கம் என்ன நடக்கிறது என்று கூட தெரியாமல் ஏராளமானவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். அப்படியென்றால், நம்மை ‘பிஞ்ச்-வாட்சிங் அறிகுறியுள்ளவர்கள்’ எனலாம்.
பிஞ்ச்-வாட்சிங் (Binge-watching) என்பது ஒரு தொலைக்காட்சித் தொடர் அல்லது ஓ.டி.டி. தொடர்களின் எபிசோடுகளை வரிசையாகத் தொடர்ந்து பார்க்கும் செயலாகும். நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஜீ5, ஹாட் ஸ்டார் போன்ற ஓ.டி.டி. பிளாட்பார்ம்கள் வந்தபிறகு, இந்தப் பிஞ்ச் வாட்சிங் என்ற ‘தொடர் பார்வை’ முறை அதிகமாகப் பேசப்படுகிறது. அன்றாட சவால்களை எதிர்கொள்ளாமல் எதார்த்த வாழ்விலிருந்து தப்பிச்செல்லவே இன்றைய இளைய தலைமுறையினர் விரும்புகின்றனர். அதற்கு ஒரு வடிகாலாக இந்தப் பிஞ்ச்-வாட்சிங்கைப் பயன்படுத்துகின்றனர். மிகவும் விளையாட்டாகவும் பொழுதுபோக்கிற்காகவும் தொடங்குகின்ற இந்த இடைவிடாத தொடர் பார்வை மெதுவாக அடிக்சனாக, போதையாக மாற வாய்ப்பிருக்கின்றது என்கின்றனர் அறிஞர்கள்.
அண்மையில் உத்தரப் பிரதேசத்தில் ஹாசியாபாத் என்னும் இடத்தில், மூன்று சிறார்கள் அவர்களின் பெற்றோர் அவர்களைக் ‘கொரியன்’ தொடர்கள் பார்க்க அனுமதிக்காததை ஏற்றுக்கொள்ள முடியாமல், அவர்கள் வாழ்ந்த அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து குதித்துத் தற்கொலை செய்து கொண்டனர் என்ற செய்தி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இணையவழி தொடர்களின் ஒவ்வோர் எபிசோட் முடிவிலும் ஒரு சஸ்பென்ஸ் (Cliffhanger) வைப்பார்கள். அதனால் நாம் நினைத்தாலும் நம்மால் நிறுத்த முடிவதில்லை. இந்தப் பிஞ்ச்-வாட்சிங்கின் தீவிரத்தன்மை என்பது உறவுகளிடமிருந்து அல்லது உறவினர்களிடமிருந்து ஒருவரைத் தனிமைப்படுத்துகின்றது. தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற உளவியல் பிரச்சினைகளை வருவிக்கின்றது.
யூடியூப் அல்லது நெட்ஃபிளிக்ஸ் போன்ற தளங்களில் ஒரு வீடியோ முடிந்ததும் அடுத்த வீடியோ தானாகவே தொடங்கும்படி அமைக்கப்பட்டிருக்கும். இதுவே நம்மைத் தூங்கவிடாமல் பார்க்க வைக்கும் முக்கியக் காரணம். எனவே, செட்டிங்ஸில் (Settings) சென்று ‘Autoplay next
video’ என்ற வசதியை நிறுத்தம் செய்யவும்.
மேலும், தூங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே மொபைலைத் தூரமாக வைப்பது (Digital Detox) மிகவும் நல்லது. ‘இன்னும் ஒரே ஒரு எபிசோட் மட்டும்’ என்று சொல்லிக்கொண்டே இரவு முழுவதும் பார்ப்பதைத் தவிர்க்க சுய கட்டுப்பாடுகளை வகுத்துக்கொள்ள வேண்டும்.
சிறார்கள் இத்தகைய ‘பிஞ்ச் வாட்சிங்’குக்குப் பழகிக்கொண்டிருக்கின்றார்கள் என்றால், அவர்களைப் பெற்றோர் அன்புள்ளத்தோடு ஆற்றுப்படுத்தி வழிநடத்திடவேண்டும். பிஞ்ச் வாட்சிங்குக்கு மாற்றான படைப்பாற்றலோடு கூடிய செயல் பாட்டிற்குச் சிறார்களை ஊக்குவிக்க பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் முன்வரவேண்டும்.