வாக்கு அரசியல் என்பது அடிப்படை அறமற்றது; தரம் தாழ்ந்தது; எதிரையும் புதிரையும் இணைத்து வைப்பது; எலியும் பூனையும் கூட்டணி அமைப்பது; பழம் நழுவித்தேன் கலந்த பாலில் விழுவது; வல்லவர்கள் வாகை சூடத் துணை நிற்பது; நல்லவர்களைத் தோல்வியில் தள்ளுவது.
தோழர்
நல்லகண்ணு இருமுறை சட்டமன்றத் தேர்தலிலும், ஒருமுறை நாடாளுமன்றத் தேர்தலிலும் தோற்றுப் போனார். இதைத் தேர்தல் அரசியலின் அழிச்சாட்டியம் என வருணிக்கலாம்.
‘இங்கு யார் அடுத்த முதல்வர்?’ என்ற அதிரடி ஆட்டமே நடக்கிறது. அரசியலில் நியாயத் தர்மங்களுக்கு இடமில்லை, நல்லவர்களுக்கு வாழ்வில்லை.
தமிழ்நாடு
தேர்தல் களத்தில் மதச்சார்பற்ற அணி எனப்படும் தி.மு.க.
கூட்டணி ‘ஆட்சியில் பங்கு இல்லை; அதிகாரத்தில் பங்கு இல்லை’ என அழுத்தமாகக் கூறிவிட்டது.
மு.க. ஸ்டாலினே மீண்டும்
முதல்வர் என்கிறது.
என்.டி.ஏ. கூட்டணியில்
எடப்பாடி பழனிச்சாமி, ‘நான்தான் முதல்வர்’
என மார் தட்டுகிறார். அமித்ஷா, மோடி வகையறாக்களோ ‘என்.டி.ஏ. ஆட்சி’ என்கிறார்கள்.
மூன்றாவது அணியின் நடிகர் விஜய் அவர்களோ தான் முதல்வராகிவிட்ட எண்ணத்தில் காலம் தள்ளுகிறார். நான்காவது அணியோ என்றும்போல் தனித்தே நிற்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களோ எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி தலைக்கொள்ளியோ அதை எடுத்துத் தலையில் சொறிந்து கொண்டு காலங்காலமாகக் கதறி அழுகிறார்கள்.
தமிழ்நாடு
வாக்காளர்கள் விழிப்புணர்வு கொண்டவர்களா? என்பதே கேள்விக்குறி. ஏ.ஐ. தொழில்நுட்பம்
என்ற புதிய விஞ்ஞானத்தை மெச்சிக்கொள்கிறோம். இக்காலத்தில் மக்களோ உதயசூரியன், இரட்டை இலை, கை எனப் பரம்பரை
வாக்காளர் மனப்பான்மையில் இருக்கிறார்கள். கடந்தகாலத் தேர்தல் முடிவுகள் இந்த ‘சின்ன வாக்களிப்பு’ பிம்பத்தையே பிரதிபலிக்கிறது.
விதிவிலக்காக, தமிழ்நாட்டு மக்கள் சிலர் ‘மாற்றத்திற்கு எங்கள் வாக்கு’ என்கிறார்கள். அவர்களுக்காக 2016-இல் அப்படி அமைக்கப்பட்ட மக்கள்நலக் கூட்டணி பெரும் தோல்வியைச் சந்தித்தது. மாற்றத்திற்கான கூட்டணி வெற்றி பெற்றிருந்தால், பத்து ஆண்டுகளுக்கு முன்பே நடிகர் விஜயகாந்த் முதல்வராகி இருப்பார்.
அண்மையில்
ஓர் இளம்பெண் கூறுகிறார்: “எங்கள் முதல்வர் வேட்பாளருக்கு அழகு, நடிப்பு, நடனம் தெரியும்.” மற்றோர் இளைஞரோ, “எங்கள் முதல்வர் வேட்பாளரைப் போலப் பிற முதல்வர் வேட்பாளர்களுக்கு மேடைப்பேச்சு பேசவருமா?” எனக் கேட்கிறார். இவர்கள் குறிப்பின் அடிப்படையில் பார்த்தால், நடிகர் சிவாஜி கணேசன் முதல்வராகி ஐம்பது வருடங்களாகி இருக்கவேண்டும். வைகோ முதல்வராகி 25 ஆண்டுகள் காலம் கனிந்திருக்கலாம்.
தமிழ்நாட்டுத்
தேர்தல் காலத்தில் பெரும் பிரச்சினையே ‘கூட்டணி வென்றால் யார் முதல்வராவது?’ என்பதே. இதில் மக்கள் பிரச்சினைகள் பின்தள்ளப்படுகின்றன.
பருவகாலம்
போலவே தமிழ்நாட்டுத் தேர்தல் களம் அனலாகித் தகிக்கிறது. பத்திரிகைச் செய்திகள் கூறுகிறது: ‘காவேரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா அரசு திட்ட அறிக்கை தயாரிக்கிறது.’ ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு முன்வைக்க காய்களை நகர்த்துகிறது.
உலகளாவிய
கீழ்மடை பாசன நீர் பயனாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கிறது. தமிழ்நாட்டில் மாநிலக் கட்சிகளின் முதுகில் ஏறி சவாரி செய்கிற தேசியக் கட்சிகள், தமிழ்நாட்டு விவசாயிகளின் காவிரி நீர் உரிமையைக் கிஞ்சித்தும் கண் காண்பதில்லை, நியாயமாக நடப்பதில்லை. கர்நாடகாவின் வாக்கு அரசியலுக்கு காவிரிப் பாசன விவசாயிகளைப் பலி தருகிறார்கள். கூட்டணி, சீட், அதிகாரம் என்பதில் அடாவடி செய்கிறார்கள். வாக்கு அரசியலே பிரதானம் என்கிறார்கள். காவிரி மட்டுமல்ல, கேரள அரசோடு முல்லைப் பெரியாரில் இழுபறி நீடிக்கிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு முட்டுக்கட்டை போடுகிறார்கள். தேர்தல் காலத்தே நதிநீர் தாவாக்கள், தீர்வுகள் குறித்துப் பேசப்படவேண்டும்.
தேசிய
அளவில், நீண்ட காலமாகத் தீர்க்கப்படாத தமிழ்நாட்டுப் பிரச்சினைகள் குறித்து தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து குரல் எழுப்பவேண்டும். தங்கள் பார்வையை, தீர்வுகளை முன்னெடுக்க கருத்தாக்கங்களைத் தேர்தல் காலத்தே உருவாக்கலாம். இந்தி மொழித்திணிப்பு, நீட் தேர்வு விலக்கு, கச்சத்தீவு, மாநிலங்களின் உரிமை பறிப்பு, நிதிப் பகிர்வில் மாநிலங்களிடையே காட்டப்படும் பாரபட்சம் என்பது அடிக்கோடிட்ட, அடிப்படை முன்னெடுப்புகள் எனலாம்.
ஒன்றிய
அரசு மாநில அரசுகளை, உள்ளாட்சி அமைப்புகள் போல நடத்தும் அடிமைத்தனத்திற்கு, அடாவடிக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். எங்கும் எதிலும் உரிய பிரதிநிதித்துவம் கட்டாயம் எனலாம்.
தேசத்தில்
ஐம்பது விழுக்காடு உள்ள பெண்களுக்கு, அவர்களின் விழுக்காட்டு அளவிற்கு இடஒதுக்கீடு இல்லை.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைப் பா.ச.க.
கிடப்பில் போட்டுவிட்டது. பா.ச.க.வின் தாய் வீடான ஆர்.எஸ்.எஸ். பெண்களின் உரிமைகளை மறுக்கிற அடிப்படைவாத அமைப்பாகும்.
ஆர்.எஸ்.எஸ். சிறுபான்மை மக்களை இரண்டாந்தரக் குடிமக்களாகக் கருதுகிறது. ஆகவே சிறுபான்மை மக்களுக்கும் போதிய பிரதிநிதித்துவம் இல்லை.
தமிழ்நாட்டில்
சிறுபான்மையோர் 15 முதல் 20 விழுக்காடு என்கிறது புள்ளிவிவரம். தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தில் நான்கு இசுலாமிய அமைப்புகள் தி.மு.க.வின் கூட்டணியில் உள்ளன. இதைச் சமன் செய்ய தென் மாவட்டங்களில் பெரும்பான்மையாக
உள்ள ஒரு குறிப்பிட்ட சாதியின் நான்கு கட்சிகளை அ.தி.முக.வின் என்.டி.ஏ. கூட்டணி
சேர்த்துள்ளது. இது சாதிவாரியான வாக்குகளைப் பெற உதித்த திட்டமாகும். இந்த அடிப்படையில்தான் பா.ம.க.
கட்சிக்கு அதிகச் சீட்டும், மருத்துவர் அன்புமணிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் என்.டி.ஏ. கூட்டணியால்
வழங்கப்பட்டது. இதேபோல, சாதிக் கட்சிகளுக்கு, அதிக சீட் வழங்கி வெற்றி வாய்ப்பை நழுவவிட்டவர் மு. கருணாநிதி என வரலாறு பாடம்
போதிக்கிறது. ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும், திராவிட முதல்வர்களால் தமிழ்நாடு வளர்ந்தது என்பதே மறுக்க முடியாத உண்மையாகும்.
தமிழ்நாடு
தன்னிறைவு பெற்ற மாநிலமாக வருணிக்கப்படுகிறது. மாநில மக்களின் தனிநபர் வருவாய் உயர்ந்துவிட்டது. கல்வி, சுகாதாரம், பெண்களின் வேலைவாய்ப்பு எனப் பெருமை பேசப்படுகிறது. தமிழ் மக்கள் முழு நிறைவு பெறவில்லை. விவசாயிகள் பருவ மாற்றப் பாதிப்பில், விவசாயத்தில் நட்டம் அடைகிறார்கள். விவசாய விளைப்பொருள்களுக்குரிய விலை இல்லை. நெசவுத் தொழில் அழிந்துவிட்டது. மீன்பிடித் தொழில் எல்லை தாண்டிய பிரச்சினைகளால் வாழ்வா? சாவா? என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் சிறு-குறு தொழில்கள் பாதியளவு அழிந்துவிட்டதாகப் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மாற்றுத் திட்டங்கள் தேடப்படவேண்டும்.
பன்னாட்டு
பெரு நிறுவனங்களின் ஆதிக்கம், சுற்றுச்சூழல் பாதிப்பு என தமிழ்நாடு வளர்ச்சிக்கான
சவால்கள் பல்லாயிரம். இவை தேர்தல் காலத்தில், தேர்தல் களத்தில் பேசப்படவேண்டும். ஆனால், புதிய கலாச்சாரமாக முதல்வர் பதவி வகித்த ஒருவர், நான்காம் தரப் பேச்சாளர்போல ஊருக்கு ஊர் தரம் தாழ்ந்து பேசுகிற அநாகரிகம் நடக்கிறது. பா.ச.க.வோடு கூட்டணி சேர்ந்த அ.தி.மு.க. சேர்க்கையே இதன்
திசை வழியாகும்.
தேர்தல்
காலத்தே தமிழ்நாட்டு மக்களின் வாழ்வுரிமை, மொழியுரிமை, கலை-பண்பாட்டுக் காப்புரிமை என்ற நகர்வுகளில் ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறவேண்டும். விழிப்புணர்வு பெறும் வாக்காளரே தமக்கான நல்லாட்சிக்கு வாக்களிக்க இயலும்.
நாம்
மண்சார்ந்த, தமிழ் மரபு சார்ந்த, மொழி சார்ந்த விவாதங்களில் விழிப்புணர்வு பெறுவோம். நல்லாட்சி அமைய வாக்களிப்போம்.-