மொழியின் சிறப்பு
வடிவைப்
பெற்று ஒரு மொழி பேசுவதற்கு மட்டுமல்லாமல் கலாச்சாரம், சரித்திரம், உலகப் பார்வை ஆகியவற்றை வெளிப்படுத்தும் மனித இனத்தின் அடையாளமாகவும், சுற்றியுள்ள உலகை அறிந்துகொள்ளவும், அனுபவங்களைப் பகிரவும், மனத்தின் நிலைக்கண்ணாடியாகவும் மொழியே திகழ்கிறது.
மொழியின்
பிறப்பு ஒரு புதிராகயிருந்தாலும், வரலாற்றில் மனித அறிவையும் கலாச்சாரத்தையும் நாகரிகங்களையும் பற்றி வருங்காலச் சந்ததியினர் அறிந்திட எழுத்து வடிவைப் பெற்று ஒரு பொக்கிஷம் போன்று விளங்குவது இதன் தனிச்சிறப்பு. ஏறக்குறைய கி.மு. 3400-இல்
மனித வரலாற்றில், சுமேரியர் எழுத்து முறையைக் கண்டறிந்து அறிவைப் பதிவுசெய்யும் வழியைக் காட்டினர். கி.பி. 15-ஆம்
நூற்றாண்டில் கூட்டன்பெர்க் என்பவர் அச்சு இயந்திரத்தை உருவாக்கி, பதிவு வடிவிலிருந்த அறிவை மக்களிடையே சென்றடைய வழிவகுத்தார். சென்ற நூற்றாண்டின் இறுதியில் உதித்த இணையதளம் (internet) உலகையே
ஒன்றிணைத்தது மட்டுமல்லாமல், பதில்பேசி (chatGPT)
போன்ற பேசும் இயந்திரங்களுக்கு அடித்தளமாகவும் அமைந்தது.
மொழிகள்
இன்று
உலகில் ஏறக்குறைய 7000 மொழிகள் இருப்பதாக உலகமொழி கலைக்களஞ்சியம் (Ethnologue) கூறுகிறது.
இவ்வாறு ஆயிரக்கணக்கான மொழிகள் இருந்தாலும், உலகில் பாதி மக்கள்தொகையினருக்குமேல் 23
மொழிகளைப் பேசுகின்றனர் என்பதுதான் இன்றைய நிலை. இவைகளில், இந்நூற்றாண்டின் இறுதிக்குள் ஏறக்குறைய 50% மொழிகள்
மறைந்துவிடலாம் என்கிறது ஐ.நா.வின்
பிரிவான யுனெஸ்கோ.
கடந்த
ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவில் மட்டும் 250 மொழிகள் அழிந்து போனதாக இந்திய மக்கள் மொழி ஆய்வுக் கழகம் (Peoples’ Linguistic survey of India) கூறுகிறது. வரலாற்றில் மொழிகள் ஏதோ ஒரு காரணத்திற்காக மறைவது இயல்பு; ஆனால், அதன் வேகம் இன்று அதிகம் இருப்பதாக உணரப்படுகிறது.
அழிந்துவிட்ட,
வழக்கொழிந்த,
அச்சுறுத்தப்படும்
மொழிகள்
வழக்கிலிருந்த
ஒரு மொழியைப் பேசுபவர் ஒருவருமில்லாத நிலை அல்லது அம்மொழியைச் சொந்த மொழியாகப் பேசப்படாமலிருப்பது அல்லது அம்மொழியினரின் வாரிசுகள் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லாமலிருப்பது போன்ற காரணங்களால் அம்மொழி அழிந்துவிட்ட (Extinct) மொழி
வரிசையில் உதாரணமாக, பழங்கால சுமேரியம் இன்று சொந்த மொழியாகப் பேச ஒருவரும் இல்லாத நிலையில் அம்மொழி அழிந்த மொழியாகிறது. ஒரு மொழி அந்தச் சமுதாயத்தினரால் பேசப்படாமல், ஆனால் ஒருசில காரணங்களுக்காக மட்டும் அல்லது குறிப்பிட்ட தேவைக்காக, உம்: இலத்தீன் மொழி போன்று உபயோகத்திலிருந்தால், அம்மொழி வழக்கொழிந்த மொழியாகிறது (Dead).
ஒரு
மொழியை நன்கு பேசுபவர்கள் இல்லாமலிருந்தாலும், தங்கள் சமுதாயத் தேவைகளுக்கும், அடையாளத்திற்கென்றிருப்பதைச்
செயலிழந்த (Dormant) வகையைச்
சார்ந்ததென்று கருதப்படுகிறது. சொந்தமாக ஒரு மொழியைப் பேச உள்ளூர் வாசிகளில்லாமல் அல்லது அவர்கள் வேறு ஆதிக்கம் செலுத்தும் (dominant) மொழிக்கு மாறிடும் சூழலில் அச்சுறுத்தப்படும் (Endangered) மொழியாகக்
கருதப்படுகிறது. உம்: வட மற்றும் தென்
அமெரிக்க உள்ளூர் (Indigenous) பெரும்பான்மை
மொழிகள் அனைத்தும் இவ்வகையைச் சார்ந்தவை.
பிராந்திய மொழிகளின்
எதிர்காலம்
வரலாற்றில்
மொழிகள் பல காரணங்களால் அச்சுறுத்தப்பட்டு,
பாதிப்படைந்து, வழக்கொழிந்த மொழிகளாகின. ஆனால், இன்று உலகமயமாதல், இடம்பெயர்தல், மொழியை ஒழித்தல் (linguicide) போன்ற
காரணங்கள், இதன் வேகத்தை முடுக்கிவிட்டிருப்பதாகத் தெரிகிறது. பல மில்லியன் ஆண்டுகளாக
மனித இனத்தின் பழக்கவழக்கங்கள், மருத்துவமுறைகள், பழங்கால வானிலைத் தகவல் முறை என்பவைகளைப் பிரதிபலிக்கும் இவ்வற்புதக் களஞ்சியம், தலைமுறை தலைமுறையாக மனித இனத்தின் புதையல்களாக விளங்குகின்றன.
மொழி
வழக்கொழிந்தால், அம்மொழியின் சொற்களை மட்டும் இழப்பதில்லை; அம்மொழியினரின் கலாச்சார, வரலாறு, பாரம்பரிய அறிவுசார் பொக்கிஷங்கள் என்று அவர்களின் ஒட்டுமொத்த அடையாளமும் இழக்கப்படுகிறது. அண்மை ஆண்டுகளாக உலகளவில் ஆட்சியாளர்களின் கலோனிய (colonial mindset) மனநிலை, அதாவது
பெரும்பான்மையினரின் மொழியைக் கல்வி, அலுவல் மொழிப் பிரிவுகளில் விரிவுபடுத்தல், தேசியமொழி, பிற மொழிகளுக்குப் பாரபட்ச உரிமை போன்ற காரணங்களால் உள்ளூர் மொழி அழிவிற்கு வழிவகுப்பதைக் காண்கிறோம்.
ஏ.ஐ.
மொழி
வளர்ச்சிக்கு
உதவுமா?
இன்று
நாம் ஒரு பெரிய உலகக் கிராமத்தில் (Global village)
வசிக்கிறோம் என்ற சூழலில், ஒருவரோடொருவர் தொடர்பு அத்தியாவசியமாகிவிட்டது. ஏ.ஐ. உலக
நாடுகளின் எல்லைகளைக் கடந்து, தரவுகள் வடிவில் ஊடுருவும் திறன் பெற்றது. ஏ.ஐ. மந்தமான
அல்லது முணுமுணுப்பு (grunt) வேலைகளைத் தவிர்க்கும் ஆற்றலாகவும், மொழி-இலக்கணம், சொல்வளம் என்பவைகளை அறியும் ஆற்றல் கருவியாக இருப்பதும் அதன் சிறப்பு. இருந்தாலும், நுணுக்கம் (nuance), கலாச்சாரம், தொடர்பு என்பவைகளில் மனிதரின் கவனமும் ஈடுபாடும் தேவையென்பதால், மனிதத்துவப் புரிதலுடனான அணுகுமுறைதான் மக்களை இணைக்கும் பாலமாக விளங்குமென்பதில் சந்தேகமில்லை. பாரம்பரிய மொழி கற்றலென்பது புத்தகம், வகுப்பறை, பாடத்திட்டம் என்ற வளையத்திலிருந்தது தொடர்கிறது.
இன்று
நாம் எவ்வாறு கற்கிறோம்? பணி செய்கிறோம்? தொடர்பு கொள்கிறோம்? என்பதை ஏ.ஐ. தொழில்நுட்பம்
மாற்றியமைத்து வருகிறது. வேலைவாய்ப்பு என்பது உலகளாவியதாகிவிட்டது. ஒருவரின் தகுதியோடு, உலகக் கலாச்சாரச் சூழலுடன் ஒன்றிணைந்து பணியாற்றுவதும் தேவை என்றாகிவிட்டது. மொழி கற்றல் ஒருவரை உலகளாவிய வேலைத் தகுதிக்குத் தயார்படுத்திக்கொள்ள உதவுகிறது என்ற கதவைத் திறந்ததினால், ஏ.ஐ. கருவிகள்
(tools) ஒருவரின் பணிக்கேற்ப பிற மொழி கற்றலுக்கும் உதவியாக உள்ளன.
இன்று
உலகில் பல்லாயிரக்கணக்கான மொழிகள் இருந்தாலும், 100 மொழிகளில் மட்டுமே பயிற்சியளிக்கப்பட்ட ஏ.ஐ. கதைப்பான்கள்
(chatbots) உள்ளன. (கதைப்பான் என்பது மனித உரை அல்லது குரலை மொழி ஆய்வு-கற்கும் இயந்திரச் செயலிகள் மூலம் புரிந்து பதிலளிக்கும் மென்பொருள்). கதைப்பான்களில், ஆங்கில-மொழி கதைப்பான் மாடல்களே முதலிடத்தில் உள்ளன என்கிறது உலகப் பொருளாதாரக் கழக அறிக்கை (world economic forum). இது
பிற உலக மொழிகளுக்குச் சாதகமாக அமையுமா? அல்லது பெரும்பான்மையினரின் மொழி - கதைப்பான்களின் ஆதிக்கத்திற்குச் சிறுபான்மையினரின் மொழிகள் ஈடு கொடுக்க முடியுமா? என்ற நிலையையும் உருவாக்குகிறது.
சுருக்கமாக,
நாம் ஏ.ஐ. கருவிகளுடன்
(AI-Tools) கைகோர்த்துச்
செல்லும் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிவிட்டோம். மொழி, இன்றைய தொழில்நுட்ப வேகத்தோடு ஈடுகொடுத்து ஓடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. வணிகம், போர் முனை, நிதி, மருத்துவம், போக்குவரத்து என்ற பல துறைகளில் ஏ.ஐ. ஆதிக்கம் செலுத்தும்
வேகத்தில், பெரும்பான்மையினரின் மொழிகளுக்குச் சிறுபான்மையினரின் மொழிகள் பலிகடாக்களாகிவிடுமோ? என்ற அச்சத்தைக் களைய வேண்டிய தேவை உள்ளது.