ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே நிலவும் போர் பதற்றங்கள் குறித்து செய்தியாளர்களிடம் உரையாற்றிய திருத்தந்தை, அமைதிக்காக உழைக்கவும், பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவும் மீண்டும் ஒருமுறை உலகளாவிய சமூகத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளார். “அமைதிக்காக இறைவேண்டல் செய்யுங்கள், வெறுப்பைக் குறையுங்கள்; உலகில் வெறுப்பு உணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது” என்று வேதனையுடன் தெரிவித்த திருத்தந்தை, “ஆயுதங்கள் மூலமாகவோ அல்லது பரஸ்பர மிரட்டல்கள் மூலமாகவோ ஒருபோதும் நிலையான அமைதியைக் கட்டியெழுப்ப முடியாது” என்று குறிப்பிட்டுள்ளார். ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களை நினைவுபடுத்திய அவர், “ஆயுதங்கள் அழிவையும் துயரத்தையும் மட்டுமே விதைக்கும். நேர்மையான மற்றும் பொறுப்புள்ள பேச்சுவார்த்தைகள் மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வாகும்” என்றார்.