news-details
ஞாயிறு தோழன்
தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு (15-03-2026) 1சாமு 16:1,6-7,10-13; எபே 5:8-14; யோவா 9:1-41

திருப்பலி முன்னுரை

தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு, ஒளியின் மக்களாக வாழ நமக்கு அழைப்புவிடுக்கிறது. இன்றைய நற்செய்தியில் இயேசு பிறவியிலேயே பார்வையற்றவரின் புறக்கண்களையும் அகக்கண்களையும் ஒருங்கே திறந்து அவருக்குப் பார்வையையும் இறையனுபவத்தையும் கொடுக்கிறார். பார்வையற்றவர் இயேசுமீது, தான் கொண்டிருந்த நம்பிக்கையினால் முழுப்பார்வை பெறுகிறார். ஆனால், பார்வையுள்ள யூதர்கள் நம்பிக்கையின்மையால் பார்வையற்றவர்களாக மாறுகின்றனர்.

பார்வையற்றவர் கிறிஸ்துவை அறிவதிலும் நம்புவதிலும் படிப்படியாக முன்னேறி இயேசுவை மனிதராக, ஓர் இறைவாக்கினராக, கடவுளிடமிருந்து வந்தவராக நம்பி ஏற்றுக்கொள்கின்றார்; புத்தொளி பெற்றவராய் நற்செய்தியைப் பறைசாற்றுகின்றார்நமது எண்ணத்திலும் வார்த்தையிலும் வாழ்க்கையிலும் மாற்றம்பெற நமது அகக்கண்கள் திறக்கப்பட வேண்டும். வாழ்க்கையில் வருகின்ற துன்பங்களில், தோல்விகளில், தனிமையில், நோயில் இறைவனின் உடனிருப்பை உணரும் அகப்பார்வை பெற வேண்டும்இயேசுவை மட்டும் உலகின் ஒளியாக ஏற்றுக்கொண்டால், நமது இருளான வாழ்வு வெளிச்சமாக மாறும். நமது எண்ணமும் சொல்லும் செயலும் தூய்மையாக இருக்கும்போது, நமது பார்வையும் தூய்மையாக இருக்கும். நாம் அனைவரும்  இயேசு என்ற பேரொளியால் ஒளிர்விக்கப்பட்டு, ஒளியின் மக்களாக வாழ வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

இன்றைய முதல் வாசகத்தில் ஆண்டவர் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த தாவீதைத் தமது பணிக்காகத் தேர்ந்தெடுத்து திருப்பொழிவு செய்கின்றார். மனிதர்கள் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார். ஆண்டவரின் பிள்ளைகளாகிய நாமும் அகத்தைக் கண்டு பழகும் அகவொளி பெற அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

இரண்டாம் வாசக முன்னுரை

இருளின் செயல்களான கோபம், மன்னிக்காமை, மனிதத்தைச் சிதைத்தல், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுதல் போன்ற இருளின் செயல்களை விட்டுவிட்டு கிறிஸ்து என்ற ஒளியால் ஒளிர்விக்கப்பட முயற்சி செய்யவேண்டும். வாழ்வில் விழிப்பாக இருந்து, கிறிஸ்துவின் ஒளியைப் பெற்று கிறிஸ்துவுக்குச் சான்றுபகர்ந்து வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள் 

1. ‘உலகின் ஒளி நானே!’ என்று மொழிந்த ஆண்டவரே! எம் திரு அவைத் தலைவர்கள் அனைவரும் வாழ்க்கைக்கு ஒளியாகவும் வழியாகவும் இருக்கும் உமது வார்த்தையை வாழ்க்கையால் போதிக்கவும், எத்தகைய சூழ்நிலையிலும் உம்மீது கொண்ட நம்பிக்கையில் தளராது வாழவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. எம் வாழ்விற்கு ஒளியான இறைவா! இத்தவக்காலத்தில் எமது குடும்பங்கள் உம்மை அறிவதிலும் அனுபவிப்பதிலும் கருத்தாய் இருக்கவும், எம் உடன் வாழும் சகோதர-சகோதரிகளை நிறை-குறைகளோடு ஏற்றுக்கொண்டு அனைவரையும் அன்பு செய்து வாழவும் தேவையான நல் மனத்தை எமக்குத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. வார்த்தையாக இருந்து எமக்கு வழிகாட்டும் இறைவா! இத்தவக்காலத்தில் திருப்பலி, செபமாலை, நற்கருணைச் சந்திப்பு, குடும்ப செபம் என ஆன்மிகச் செல்வங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வாழவும், உறவுகளைச் சரிசெய்து அனைவரோடும் அமைதியாக வாழ வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஒளியாம் இறைவா! எம் பங்கிலும் குடும்பத்திலும், நாட்டிலும் பல்வேறு நோயினால் துன்பப்படும் அனைவருக்கும் நல்ல சுகத்தைக் கொடுத்து காத்திடவும், பல்வேறு தீராத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களையும் உமது இரத்தத்தால் கழுவிக் காத்தருள வேண்டுமென்றும் இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.