news-details
ஆன்மிகம்
மரியாவை என்றும் கன்னியாகத் திரு அவை முன்னிறுத்துகிறது! (திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களுடைய மரியன்னை மறைக்கல்வி - 31)

கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின் பொழுது மரியா வெளிப்படுத்திய கன்னியாக இருக்க விரும்பிய அவரின் எண்ணமானது பின்னர் மாற்றப்பட்டது என்பதற்கான எந்த ஆதாரமும்  இல்லை. 

1. திரு அவையானது மரியாவின் என்றைக்குமான கன்னித்தன்மையின் மீதான தனது நம்பிக்கையை எப்பொழுதுமே வெளிப்படுத்தியுள்ளது. மிகப் பழமையான ஏடுகள் இயேசு கருவில் உருவானதைக் குறிப்பிடும் பொழுது, மரியாவை வெறுமனேகன்னிஎன்றே அழைக்கின்றன. மேலும், இந்தக் குணத்தை அவருடைய வாழ்நாள் முழுவதும் என்றென்றைக்குமான உண்மையாகவே அவர்கள் கருதினார்கள் என்றும் அவ்வேடுகள் அனுமானிக்கின்றன.

தொடக்ககாலக் கிறித்தவர்கள்ஏய்பர்த்தேனுஸ் (aeiparthenos) அதாவதுஎன்றும் கன்னிஎன்ற கிரேக்க வார்த்தை வழியாகத் தங்களது திடமான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள். இச்சொல்லாடலானது மரியாவை ஒரு தனித்துவமான மற்றும் பயனுள்ள முறையில் விவரிக்கவும், ஒரே வார்த்தையில் திரு அவையின் நம்பிக்கையான அவரது என்றென்றைக்குமான கன்னித்தன்மையை வெளிப்படுத்தவும் உருவாக்கப்பட்டது. மேலும், கிறிஸ்துவின் மனுவுருவாதலோடு தொடர்புபடுத்தி கி.பி. 374-ஆம் ஆண்டு புனித எபிபானியுஸ் (St. Epiphanius) இயற்றிய இரண்டாவது நம்பிக்கை அறிக்கையில் (Second Symbol of Faith) இச்சொல்லாடலானது பயன்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம். இயேசு கடவுளின் மகனாகப் பிறந்தார்; அதாவது, “அவர் எப்பொழுதும் அருள்நிறைந்த கன்னி மரியாவால் தூய ஆவியாரின் வழியாகச் சரியானதொரு வழியில் மனிதராக உருவாக்கப்பட்டார் (Ancoratus, 119,5; DS 44). 

என்றும் கன்னிஎன்கின்ற சொல்லாடலானது, இரண்டாம் கான்ஸ்டான்டிநோபிளின் திருச்சங்கத்தால் (கி.பி. 553) கையாளப்பட்டது. இச்சங்கமானது, “புனித மற்றும் மகிமைமிகு இறைவனின் தாயும் என்றும் கன்னியுமாகிய மரியாவிடமிருந்து மனுவுருவான கடவுளின் வார்த்தையானவர் (DS 422) என்பதை உறுதி செய்கின்றது. இக்கொள்கை வரைவானது நான்காவது இலாத்தரன் திருச்சங்கம் கி.பி. 1215 (DS 801), இரண்டாவது லியோன் திருச்சங்கம் (கி.பி. 1274 (DS 852) மற்றும் மரியாவின் என்றென்றைக்குமான கன்னித்தன்மை அவர் உடலிலும் ஆன்மாவிலும் விண்ணக மகிமைக்கு அழைத்துச் செல்லப்பட்டதற்கான ஒரு காரணியாக ஏற்றுக்கொண்ட மரியாவின் விண்ணேற்பு பற்றிய கோட்பாட்டு வரைவு அறிக்கை கி.பி.1950 (DS 3903) வழியாகவும் உறுதி செய்யப்படுகின்றது

மரியா இயேசுவின் பிறப்பிற்கு முன்னும், பிறப்பின் பொழுதும், அதற்குப் பின்னும் கன்னியாகவே இருந்தார்

2. சுருக்கமானதொரு நம்பிக்கை அறிக்கையில் திரு அவையானது மரியாவை, ‘பிறப்பிற்கு முன்னும், பிறப்பின்பொழுதும், அதற்குப் பின்னும் கன்னிஎன்ற தன்னுடைய நிலைப்பாட்டை முன்வைக்கின்றது. இந்த மூன்று தருணங்களையும் குறிப்பிடுவதன் வழியாக, அவர் ஒருபோதும் கன்னியாக இருப்பதை நிறுத்தவில்லை என்பதை உறுதிப்படுத்துகிறது.

இம்மூன்றில், ‘பிறப்பிற்கு முன்அவரின் கன்னித்தன்மையை உறுதிப்படுத்துவது சந்தேகத்திற்கு இடமின்றி, மிக முக்கியமானதொன்றாகும். ஏனென்றால், அது இயேசு கருவாக உருவாவதைக் சுட்டிக்காட்டுவது மட்டுமல்லாமல், மனுவுருவாதல் மறையுண்மையையும் நேரடியாக வெளிப்படுத்துகின்றது. இதன் காரணமாகவே, தொடக்கத்திலிருந்தே இது திரு அவையின் நம்பிக்கையில்  தொடர்ந்து காணப்படுகின்றது.

பிள்ளைப்பேற்றின் பொழுதும் அதற்குப் பின்னரும்அவரது கன்னித்தன்மை, திரு அவையின் ஆரம்ப நாள்களிலிருந்தே மரியாவிற்குக் கூறப்பட்டகன்னிஎன்ற தலைப்பில் மறைமுகமாக இருந்தாலும், சிலர் வெளிப்படையாகச் சந்தேகங்களை எழுப்பத் தொடங்கியதிலிருந்து, அது ஆழமான கோட்பாட்டு ஆய்விற்கு உட்பட்டது. “கடவுளின் மகன் மனிதனாக ஆனார்; காலத்திலும் முறையிலும் ஒரு மனிதனாகவே பிறந்தார் மற்றும் தன் தாயின் கருப்பையைத் திறப்பதற்காகப் பிறந்தார் (லூக் 2:23). மேலும், “கடவுளின் வல்லமையின் வழியாக, தன் தாயின் கன்னித் தன்மையைக் கலைக்கவில்லைஎன்று திருத்தந்தையான புனித ஹோர் மிஸ்தாஸ் விளக்குகின்றார். இரண்டாம் வத்திக்கான் திருச்சங்கமும் மரியாவின்  முதல் மகன்தன் தாயின் கன்னி ஒருமைப்பாட்டைக் குறைக்கவில்லை; மாறாக, அதைப் புனிதப்படுத்தினார் (இறைத் திட்டத்தில் திரு அவை, எண்.  57) என்று இக்கோட்பாட்டை உறுதிசெய்கின்றது.

பிறப்பிற்குப் பிந்தைய அவரின் கன்னித் தன்மையைப் பொறுத்தவரை, கிறிஸ்து பிறப்பு அறிவிப்பின் பொழுது (லூக் 1:34) ஒரு கன்னியாகவே இருக்கவேண்டும் என்று மரியா வெளிப்படுத்திய தனது எண்ணத்தை, பிறகு மாற்றிக்கொண்டார் என நினைப்பதற்கு எந்தக் காரணமும் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டவேண்டும். மேலும், மரியாவையும், சிலுவையின் அடியில் நின்ற அவரின் அன்புச் சீடரையும் நோக்கி இயேசு கூறிய, “பெண்ணே, இதோ, உன் மகன், “இதோ, உன் தாய் (யோவா 19:6) என்ற வார்த்தைகளின் உடனடிப் பொருள் மரியாவுக்கு வேறு குழந்தைகள் இல்லை என்பதையே குறிக்கின்றன.

பிறப்பிற்குப் பிறகு அவரின் கன்னித் தன்மையை மறுப்பவர்கள் நற்செய்தியில் இயேசுவிற்குக் கூறப்படும்முதற்பேறானவர் (லூக் 2:7) என்ற சொல்லாடலின் அடிப்படையில், இயேசுவிற்குப் பிறகு மரியா மற்ற குழந்தைகளைப் பெற்றெடுத்தார் என்பதை இந்த வார்த்தை உணர்த்தியது போன்றதோர் உறுதியான வாதத்தை முன்வைக்கின்றனர். ஆனால், ‘முதற்பேறானவர்என்ற சொல்லின் அர்த்தம்இக்குழந்தைக்கு முன்புஅதாவது, இயேசுவுக்கு முன்பு மரியாவுக்கு எந்தக் குழந்தையும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்பதைக் குறிக்கின்றதேயன்றி, இயேசுவுக்குப் பிறகு அவருக்கு மற்ற குழந்தைகள் இருந்தார்கள் என்பதைக் குறிக்கவில்லை. மேலும், ஒரு தாயானவள் மற்ற குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கலாமா? என்பதைத் தவிர்த்து, நற்செய்தியாளர் குழந்தையின் இந்தத் தன்மையை அதாவதுமுதற்பேறானவர் (லூக் 2: 23) என்பதை ஏன் வலியுறுத்துகிறாறென்றால், யூதச் சட்டத்தில் முதல் குழந்தையின் பிறப்புடன் சில கடமைகள் இணைக்கப்பட்டுள்ளன

இவ்வாறாக, தாய்க்கு ஒரே மகனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் உரியவற்றை நிறைவேற்றுவதற்குஆண் தலைப்பேறுஎன்கின்ற முறையில் மோசேவின் சட்டப்படி தூய்மைச் சடங்கை நிறைவேற்றவேண்டிய நாள் வந்தபோது குழந்தையை ஆண்டவருக்கு அர்ப்பணித்து அதை நிறைவேற்றினார்.

சகோதரர்என்ற வார்த்தையானது பலவிதமான உறவின் வகைகளைக் குறிக்கின்றது

3. சிலருடைய கூற்றுப்படி யாகப்பர், யோசேப்பு, சைமன் மற்றும் யூதாஸ் போன்ற இயேசுவின் நான்கு சகோதரர்களும் (மத் 13:55-56) மற்றும் பல சகோதரிகளும் இருந்தார்கள் என்ற நற்செய்திக் குறிப்புகளின் அடிப்படையில் (கிறிஸ்துவினுடைய) பிறப்பிற்குப் பிந்தைய மரியாவின் கன்னித்தன்மையானது மறுக்கப்படுகிறது.

உறவினர்என்ற வார்த்தையை வெளிப்படுத்த எபிரேய மற்றும் அரமேயிக் மொழிகளில் குறிப்பிட்ட சொல் எதுவும் இல்லை என்பதையும், ‘சகோதரர்மற்றும்சகோதரிஎன்ற சொற்கள் மிகவும் பரந்த உறவுகளை உள்ளடக்கியது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். உண்மையில், ‘இயேசுவின் சகோதரர்கள்என்ற சொல்லாடலானது, கிறிஸ்துவின் சீடராக இருந்த மரியாவின்குழந்தைகள்என்பதைக் குறிக்கிறது (ஒப்பிடுக. மத் 27:56). மேலும், அவர்மற்ற மரியாஎன்று குறிப்பிடத்தக்க வகையில் வேறுபடுத்தப்படுகின்றது (மத் 28:1). பழைய ஏற்பாட்டு கூற்றின்படி, அவர்கள் இயேசுவின் நெருங்கிய உறவினர்கள் ஆவார்கள் (Catechism of the Catholic Church, எண். 500).

எனவே, புனித மரியாஎப்பொழுதும் கன்னியாகஇருக்கின்றார். இது கிறிஸ்துவின் மீட்புப் பணிக்கு அவரை முழுமையாக அர்ப்பணித்த அவரது தெய்வீகத் தாய்மையின் விளைவு மற்றும் சிறப்புரிமை ஆகும்.

மூலம்: John Paul II, The Church presents Mary as ‘Ever Virgin’, in «L’Osservatore Romano», Weekly Edition in English, 4 September 1996, p. 11.