news-details
ஞாயிறு மறையுரை
மார்ச் 22, 2026, தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு - எசே 37:12-14; உரோ 8:8-11; யோவா 11:1-45 (நலிந்தோரை நல்வாக்கால் திடப்படுத்தும் இறைவன்!)

வாழ்க்கைப் போராட்டத்தில் நாம் பலமுறை நலிந்து போகிறோம். வறுமையால் வாடும்போதும், தீராத நோயால் உடல் நலியும்போதும், உற்றார் உறவினரின் சொல்லம்புகளால் மனம் நலியும்போதும், ‘எப்படியாவது வாழ்ந்துவிட மாட்டோமா?’ என்ற ஏக்கம் நமக்குள் எழுகிறது. கவலைகள் என்னும் சுமையால் அழுத்தி வைக்கப்பட்ட நம் இதயம், ஒரு கல்லறையைப் போலக் கனக்கிறது. ‘இனி யாரால் என்னை மீட்டெடுக்க முடியும்? எல்லாம் முடிந்துவிட்டதே...’ என்று நாம் முடங்கிக் கிடக்கும் அந்த இருண்ட வேளையில், இன்றைய இறைவார்த்தை நம்மை நோக்கிப் பாயும் ஒரு நம்பிக்கைக் கீற்றாக அமைகிறது.

அன்று பெத்தானியாவின் ஒரு மூலையில், இலாசரின் மரணத்தால் அந்த வீடே நலிந்து போயிருந்தது. மார்த்தாவும் மரியாவும் சிந்திய கண்ணீர், இன்று நம் ஒவ்வொருவருடைய குடும்பத்திலும் வடியும் கண்ணீரின் சாட்சியாக இருக்கிறது. ஆனால், அன்று மரணத்தின் வாசலில் நின்று கொண்டு, “இலாசரே, வெளியே வா!” என்ற ஒற்றைநல்வாக்கால்இறந்த உடலை உயிர்ப்பித்த இயேசு, இன்றும் நம் வாழ்வின் இக்கட்டான சூழல்களில் அதே வல்லமையோடு நம்மை அழைக்கிறார்.

இன்று நாம் தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறைக் கொண்டாடுகிறோம். இன்றைய இறைவார்த்தைகள் நமக்கு ஒரு மாபெரும் உண்மையைப் பறைசாற்றுகின்றன: ‘மரணம் என்பது வாழ்வின் முடிவல்ல; மாறாக, கல்லறைக்கும் அப்பால் ஒரு புதுவாழ்வு - ஒரு நிறைவாழ்வு நமக்காகக் காத்திருக்கிறதுஎன்பதை இன்றைய வாசகங்கள் நமக்கு ஆழமாக நினைவுபடுத்துகின்றன.

பாபிலோனிய அடிமைத்தனத்தின் இரும்புப் பிடியில் சிக்கி, ஒவ்வொரு நாளும் செத்துக்கொண்டிருந்த இஸ்ரயேல் மக்களுக்கு, இறைவன் மீண்டும் வாழ்வை வழங்குவார் என்ற பெரிய நம்பிக்கையை இறைவாக்கினர் எசேக்கியேல் வழியாகக் காண்கிறோம். எங்குப் பார்த்தாலும் உலர்ந்த எலும்புகள் சிதறிக்கிடந்த அந்தப் பள்ளத்தாக்கில், இறைவனின் ஆவி வீசியபோது, அவை தசையும் தோலும் பெற்று, உயிருள்ள ஒரு பெரும் இராணுவப் படையாய் எழுந்து நின்ற அதிசயக் காட்சியை எசேக்கியேல் 37-ஆம் அதிகாரத்தின் தொடக்கத்தில் காண்கிறோம்.

இஸ்ரயேல் மக்கள் யாவே இறைவனால் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். அவர்கள் எண்ணிக்கையில் சொற்பமானவர்களாக இருந்தபோதிலும், இறைவன் அவர்கள்மீது கொண்ட அளவற்ற அன்பினால் அவர்களைத் தம் சொந்த மக்களாக வரித்துக்கொண்டார் (இச 7:6-8). “ஒரு தாய் தன் கருவிலுள்ள பிள்ளையை மறந்தாலும், நான் உன்னை மறக்கமாட்டேன் (எசா 49:15) என்று உருகிய இறைவன், அவர்களின் இன்ப-துன்பங்களில் பங்கெடுத்தார். பாலைவனப் பயணத்தில் உணவாகவும், தாகம் தணிக்கும் நீராகவும், தளர்ந்த வேளையில் துணிவூட் டும் தோழனாகவும் உடனிருந்தார்.

ஆனால், மக்கள் இறைவனோடு செய்த உடன்படிக்கையை மறந்து வழிவிலகியபோதும், அவர்களை வழிநடத்திய தலைவர்கள் சுயநலத்தால் மக்களைக் கைவிட்டபோதும் (எசே 34:2), இறைவன் அவர்களைக் கைவிடவில்லை. “நானே என் மந்தையைத் தேடிச்சென்று பேணிக் காப்பேன் (34:11) என்று வாக்குறுதி அளித்தார். சிதறிப் போனவர்களை ஒன்றிணைத்து, வலுவற்றவர்களைத் தோள்மீது சுமந்து, நலிந்தவர்களைத் தம் நல்வாக்கால் திடப்படுத்தும் நல்லாயனாக அவர் உருவெடுத்தார்.

அடிமைத்தனத்தால் நம்பிக்கையிழந்து, ‘உலர்ந்த எலும்புகளைப் போலவாழ்ந்த மக்களுக்குள், இறைவன் மீண்டும் தம் உயிர் மூச்சைப் புகுத்துகிறார் (37:5).  “என் மக்களே! இதோ நான் உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன். உங்களை உங்கள் கல்லறைகளினின்று மேலே கொண்டு வருவேன் (37:12) என்று இறைவன் அன்று கொடுத்த வாக்குறுதி, இன்றும் நலிந்து கிடக்கும் ஒவ்வொரு நம்பிக்கையாளருக்கும் உரியது. இறைவன் இஸ்ரயேல் மக்களின் ஆயராக இருந்து, தளர்ந்த வேளையில் அவர்களைத் தேடிச்சென்று திடப்படுத்தியதுபோல, இன்றும் நம்மைத் தேடி வருகிறார்.

இன்றைய நற்செய்தியில் ஆண்டவர் இயேசு, இலாசரை உயிர்ப்பித்து, நலிந்தோர் வாழ்வில் ஒரு புதிய விடியலைத் தருவதைக் காண்கிறோம். கானாவூர் திருமண வீட்டில் (யோவா 2) தொடங்கிய இயேசுவின் அரும்பெரும் அடையாளங்கள், இலாசரின் கல்லறையில் நிறைவு பெறுகின்றன. இந்த வல்ல செயல் நிகழ்வதற்கு முன்னால், இயேசு எருசலேமில் பல சவால்களைச் சந்தித்தார். பார்வையற்றவருக்குப் பார்வை அளித்ததால் யூதத் தலைவர்கள் அவர்மீது கொலைவெறி கொண்டனர். அவரைபித்துப்பிடித்தவன்என்றும், ‘பேய் பிடித்தவன்என்றும் பழித்தனர். கற்களை வீசித் தாக்க முயன்றனர் (யோவா 10:30,31).

இந்த வன்முறைச் சூழலில் இருந்து விடுபட்டு, இயேசு தமது சீடர்களுடன் யோர்தான் நதிக்கு அப்பால் சென்றார். அங்கே, தாம் திருமுழுக்குப் பெற்ற இடத்தில் தங்கியிருந்தபோது (10:40), தந்தையின் அரவணைப்பைத் தேடினார். ஒருவேளை அந்தப் போராட்டமான நேரத்தில், தமக்கு ஆறுதல் தரும் உறவுகளை அவர் நினைத்திருக்கக்கூடும். நாமும் பலவேளைகளில் தாங்க முடியா வேதனைகளை அனுபவிக்கும்போது நம்மைத் தாங்கிப்பிடிக்க உறவுகளைத் தேடுவது எதார்த்தம்தானே! அப்போதுதான் அவருக்குபெத்தானியாநினைவுக்கு வருகிறது. பெத்தானியா என்றால்துயரத்தின் இல்லம்என்று பொருள். இயேசு எப்போதெல்லாம் எருசலேமில் வெறுப்பைச் சந்தித்தாரோ, அப்போதெல்லாம் அவர் ஆறுதல் தேடிச் சென்ற இடம் இலாசர், மார்த்தா, மரியாவின் இல்லம்.

இலாசர்என்ற பெயருக்குகடவுள் உதவினார்என்று பொருள். அந்தப் பெயருக்கேற்ப, அவரது மரணத்தில் கடவுளின் வல்லமை வெளிப்பட்டது. நோயுற்றிருந்த இலாசருக்காக அவரது சகோதரிகள் இயேசுவுக்கு அனுப்பிய செய்தி மிகச் சுருக்கமானது: “ஆண்டவரே, உம் நண்பன் நோயுற்றிருக்கிறான் (11:3). இச்செய்தியில் ஒரு பெரிய பட்டியல் இல்லை. ஆனால், “உம் நண்பன்என்ற உறவின் ஆழம் மட்டுமே இருக்கிறது. கானாவூரில் அன்னை மரியாதிராட்சை இரசம் தீர்ந்துவிட்டது (2:3) என்று கூறியது போன்ற ஆழமான, சுருக்கமான வேண்டுதல் இது. நம் தேவைகளை ஆண்டவரிடம் அப்படியே சமர்ப்பிப்பதே உன்னத செபம்.

இயேசு பெத்தானியாவுக்கு வந்தபோது, இலாசரை அடக்கம் செய்து நான்கு நாள் ஆகியிருந்தது (11:17). யூத நம்பிக்கையின்படி, மூன்று நாள்கள்வரை ஆன்மா உடலோடு தங்கியிருக்கும். ஆனால், நான்கு நாள் ஆகிவிட்டால் உடல் அழுகத் தொடங்கிவிடும், ஆன்மா நிரந்தரமாகப் பிரிந்து விடும் என யூதர்கள் நம்பினர். ஏற்கெனவே இயேசு இரண்டு பேரை உயிர்ப்பித்த நிகழ்வுகள் உடனடியாக நிகழ்ந்தன (மத் 9:25; லூக் 14-15). ஆனால், இங்கு நான்கு நாள் ஆனதால் மீண்டும் ஒரு வல்ல செயல் நிகழும் எனச் சுற்றி நின்றவர்கள் நம்பியிருக்க வாய்ப்பில்லை. இந்தச் சூழ்நிலையில் இயேசு பெத்தானியாவுக்கு வந்த செய்தியைக் கேள்விப்பட்ட மார்த்தா விரைந்து சென்று, “ஆண்டவரே, நீர் இங்கே இருந்திருந்தால் என் சகோதரன் இறந்திருக்க மாட்டான் (11:21) என்று தன் இதயத்தில் பூட்டி வைத்திருந்த ஆதங்கத்தைக் கொட்டுகிறார். தாங்க முடியா வேதனைகள் நம்மைச் சூழ்ந்து நெருக்கும்போது, ஆண்டவரிடம்தானே முறையிட முடியும்! மார்த்தாவின் செயல் இயேசுவின்மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கையைக் காட்டுகிறது.

நிறைவாக, இந்த நாள் நமக்குக் கற்றுத்தரும் வாழ்வியல் பாடங்கள்: முதலாவதாக, இயேசு காற்றையும் கடலையும் அடக்கிய வல்லமை கொண்டவர் என்றாலும், இலாசரின் கல்லறைக் கல்லைத் தானாகவே நகரச் செய்திருக்க முடியும். இருப்பினும், அவர்கல்லை அகற்றி விடுங்கள் (11:39) என்று கட்டளையிட்டது, இறைவன் தம் வல்ல செயல்களில் எப்போதும் மனித ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார் என்பதையே காட்டுகிறது. அதேபோல், உயிர் பெற்ற இலாசரால் தன் கட்டுகளைத் தானே அவிழ்க்க முடியாது என்பதால், நம்மிடையே நடைப் பிணங்களாக வாழ்வோரின் கட்டுகளை அவிழ்த்து அவர்களைப் புதுவாழ்விற்கு விடுவிக்க இறைவன் நமக்கே கட்டளையிடுகிறார்.

இரண்டாவதாக, இலாசர் இறந்து நான்கு நாளாகிவிட்டதால்நாற்றம் அடிக்குமே (11:39) என்று மார்த்தா தயங்கியது, அழுகிப்போன இறந்த காலத்திலேயே தேங்கி நிற்கும் மனித மனத்தின் போராட்டத்தைக் காட்டுகிறது. ஆனால், இயேசு அந்தத் தடுமாற்றத்தை நீக்கி, முடங்கிக் கிடக்கும் இறந்த காலத்தை மூடியிருக்கும் கல்லை அகற்றி விட்டு, நம்பிக்கையோடு நிகழ்காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் அடியெடுத்து வைக்க மார்த்தாவையும் நம்மையும் அழைக்கிறார்.

இறுதியாக, அழுகிய உடலுக்குப் புத்துயிர் ஊட்டும் இறைவல்லமையால்கடவுளால் இயலாதது ஒன்றுமில்லை (லூக் 1:37) என்பதை இயேசு மெய்ப்பிக்கிறார். வல்ல செயல் நிகழும் முன்பே அவர் தந்தைக்கு நன்றி கூறியது (யோவா 11:41), நாம் வேண்டுவது கிடைத்துவிட்டது என்ற ஆழமான நம்பிக்கையோடு இறைவனை அணுகவேண்டும் என்ற பாடத்தை இயேசு கற்றுத் தருகிறார்.

அன்பானவர்களே! சாவை வென்று மறுவாழ்வு பெறத் தேவையான தூய ஆவிக்குரிய இயல்புகளை வேண்டி, நலிந்தோரை நல்வாக்கால் திடப்படுத்தும் இறைவனின் துணையோடு சவால்களை எதிர்கொள்ள இந்நாளில் உருக்கமாக மன்றாடுவோம்.