news-details
சிறப்புக்கட்டுரை
கோபத்தூண்டில் (வலையும் வாழ்வும் – 40)

காலை வேளைகளிலெல்லாம் என்னவோ நேரம் வழக்கத்திற்கு மாறாகவே காலில் சலங்கைக்  கட்டிக்கொண்டு பேயாட்டம் போடுகிறது. அப்படித்தான் வினுவின் வீடும் இருந்தது. வேலைக்குப் போகிற அவசரத்துல அவன் வீடு போர்க்களமாய் காட்சியளித்தது.

வினு கொஞ்சம் கோபக்காரன். நேரத்திற்கு நினைத்தது நடக்கவில்லையென்றால், அன்று வீடே இரணகளமாகிவிடும். அன்றும் அப்படித்தான்.

வச்ச இடத்தில் ஒன்றும் இருக்கமாட்டேங்குது. ஜெசி! கார் சாவிய பாத்தியா?” என்று தன் மனைவியிடம் கேட்டுக்கொண்டே சாவியைத் தேடியலைந்தான். மகனுக்குச் சாக்ஸ் மாட்டிவிட்டுக் கொண்டிருந்த ஜெசி, “நான் பார்க்கலங்க. டிவி மேசையில இருக்காணு பாருங்கஎன்றாள்.

எங்குத் தேடியும் கார் சாவி கிடைக்காத ஆத்திரத்தில் பொறுமையை இழந்திருந்த வினு தன் கையிலிருந்த டிபன் பாக்சைத் தரையில் ஓங்கி அடித்தான். டிபன் பாக்சின் மூடி கழன்று லெமன் ரைசும் முட்டையும் தரையில் சிதறிக்கிடந்தன.

பயத்தில் உறைந்து போயிருந்த வினுவின் மகன் கதறியழ ஆரம்பித்தான். ஜெசி என்ன செய்வதென்று தெரியாமல் நட்டுவைத்த கல்தூண் போலத் திகைத்துப்போய் அங்கேயே நின்றாள்.

ஆத்திரத்தில் கதவைத் திறந்து வெளியே வந்த வினு காரின் அருகில் சென்று கார் கதவைத் திறந்து பார்த்தான். கார் சாவி காரிலேயே இருந்தது. கோபம் கொண்டு காலையிலேயே எல்லாருடைய மனத்தையும் காயப்படுத்திவிட்டோமே என்ற எண்ணம் சிறு துளிகூட இல்லாமல் காரை இயக்கிவிட்டு வேகமாகச் சாலையில் சென்று கொண்டிருந்தான்.

நகரின் அருகில் போகப்போக மனத்தின் சலசலப்பே சாலையிலும் பிரதிபலித்தது. மனிதர்கள் சாலையை மொய்த்திருந்தனர். வாகனங்களின் எண்ணிக்கை, மெட்ரோ இரயில் பணிக்காகத் தோண்டப்பட்டிருந்த குழிகள் என்று பல காரணங்களால் வாகனங்கள், சக்கரங்கள் இருந்தும் ஊர்ந்தே சென்றன. ஏற்கெனவே கோபத்திலிருந்த வினுக்கு இந்தடிராபிக்சூழல் எரிச்சலை அதிகப்படுத்தியிருந்தது. திடீரென்று எங்கிருந்தோ வந்த பைக் ஒன்று திரும்பும்போது, வினுவின் காரில் மோதி நின்றது. காதறுந்ததுபோல காரின் பக்கவாட்டிலிருந்த கண்ணாடி தொங்கிக்கொண்டிருந்தது. கோபத்தில் பொரிந்துகொண்டிருந்த வினு காரின் வெளியே வந்து கெட்ட வார்த்தையால் திட்டிக்கொண்டே இருந்தான்.

வினு அவனை விட்டப்பாடில்லை. “பார்த்துவர தெரியாது? காலையிலேயே எனக்கென்றே வருவீங்களோ? சனியன்களா! இந்தக் கண்ணாடிக்கு உன் அப்பனா காசு தருவான்?”

யார்மீது தவறு?’ என்றுநீயா நானா?’ நடத்திப் பார்ப்பதற்கு நேரமில்லைபெருங்கூட்டம் அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தது. இதுவரை ஒரு வார்த்தைக்கூட பேசாத பைக் ஓட்டி மெதுவாகப் பைக்கிலிருந்து இறங்கினான். வினுவின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டான். நலிந்த உருவம் என்றாலும், பைக் ஓட்டியின் அறை வினுவின் முகத்தைப் பளுக்கச் செய்திருந்தது.

ஒரு நொடிப்பொழுது மண்டை அதிர்ந்து அடங்கியது. தன்னையே உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தவர்களின் முன்னால் அவமானத்தால் நின்று கொண்டிருந்தான் வினு. திருப்பித் தாக்குவதற்கான துணிவு இல்லை அவனுக்கு.

அப்படி ஒன்றுமே பேசாமல் கன்னத்தில் கை வைத்துக்கொண்டு கார் இருக்கையில் வந்து அமர்ந்தான். கூட்டம் கலையத் தொடங்கியது. பைக் ஓட்டியும் கிளம்பியிருந்தான். கார் கதவை இறுக அடைத்துக்கொண்டான். எங்குத் திரும்பினாலும் அந்த பைக் ஓட்டியின் முகம்தான் கண் முன்பாக வந்தது அவனுக்கு.

அந்த நாள் முழுவதும் அலுவலகத்தில் யாரிடமும் எதுவும் அவன் பேசவில்லை. வீடு திரும்பியவன் கார் சாவியைப் பத்திரமாக டிவி மேசையில் வைத்தான். தன் மனைவியிடம் முதல் வார்த்தையாகசாரிமா, என்ன மன்னிச்சுக்கஎன்று கூறிவிட்டு அவளைக் கட்டியணைத்துக்கொண்டு தேம்பித் தேம்பி அழுதான்.

கோபமடைவது அல்லது பிறரைக் கோபமடையச் செய்வது என்பது இன்றைய இணைய உலகில் மலிந்து கிடைக்கின்றது. யார் வேண்டுமென்றாலும் யாரையும் சீண்டலாம், வெறுப்புணர்வை விதைக்கலாம். இதன் வழியாகப் பார்வையாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கலாம். இத்தகைய யுக்தியைப் பயன்படுத்தி அதிகப் பணம் சம்பாதிக்கலாம் என்று நினைக்கிறது இணைய உலகம்.

இணையத்தில் ஒரு பதிவர், உண்மையில் தனக்கு அந்தக் கருத்து இருக்கிறதோ இல்லையோ, வேண்டுமென்றே மக்களைக் கோபப்படுத்தும் வகையில் ஒரு பதிவைப் போடுவார். அதைப் பார்த்து மக்கள் ஆவேசமடைந்து கருத்தூட்டுவதாலும் (Comment), அதனை அதிகளவில் பகிர்வதாலும் (Share) அந்தப் பதிவு அதிக மக்களிடம் சென்றடையும். இந்த எதிர்மறை விளம்பரத்தின் (negative promotion) மூலம் தங்களின் வருமானத்தையோ அல்லது செல்வாக்கையோ உயர்த்துவதே இவர்களின் நோக்கமாகும்.

மக்களை எரிச்சலூட்டும் விதமாகவோ, ஆத்திரமூட்டும் விதமாகவோ அல்லது புண்படுத்தும் விதமாகவோ பேசி, அவர்களின் கோபத்தை வேண்டுமென்றே தூண்டுவதற்காக இணையத்தில் பகிரப்படும் உள்ளடக்கத்தை (Content) ‘கோபத்தூண்டில் (Rage bait) என்கின்றனர். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் இந்த வார்த்தையை 2025-ஆம் ஆண்டிற்கான வார்த்தையாக (Word of the Year– 2025) தேர்ந்தெடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு உதாரணமாக, அண்மையில் கேரளாவில் பேருந்தில் பயணித்தபோது தீபக் என்பவர் தன்னை உரசியதாகக் கூறி பெண் ஒருவர் சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் காட்டுத் தீயைப் போல் பரவியது. தீபக் உள்நோக்கத்துடன் பெண்ணை உரசுவது போலத் தெரியவில்லை. இறங்கும்போது பையை எடுக்கும்போது தெரியாமலேயே அப்பெண் மீது கைப்பட்டது போலவே இருக்கிறது என்று ஒரு சிலரும், சில நெட்டிசன்கள் பெண்ணுக்கு ஆதரவாகவும் கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் இக்கருத்துகளால் வேதனையடைந்த தீபக் அவமானமடைந்து தற்கொலை செய்துகொண்டார். இந்த நிகழ்வு கேரளாவில் பேசு பொருளாக மாறி, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. தற்போது இந்த வீடியோவைப் பகிர்ந்த இளம் பெண்ணைப் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் கருதி கைது செய்திருக்கிறது கேரள காவல்துறை.

பேருந்தில் தனக்குத் துன்புறுத்தல் நடப்பதாக உணர்ந்தால், உடனடியாக அதைத் தட்டிக்கேட்டு இருக்கலாம். ஆனால், வீடியோ எடுப்பதிலேதான் அந்தப் பெண் ஆர்வமாக இருந்தார் என்று சிலர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அவசரப்பட்டு அந்தப் பெண் மீது களங்கம் விளைவிக்க வேண்டாம் என்று மற்றொரு தரப்பினரும் வலைதளங்களில் காரசாரமாக விவாதித்து வருகிறார்கள்.

எதுவாக இருந்தாலும் இத்தகைய அல்லது இதுபோன்ற செய்திகளைச் சமூக ஊடகங்களில் பரப்புவதன் வழியாககோபத்தூண்டில் (Rage bait) என்னும் யுக்தியைப் பயன்படுத்தித் தங்களின் வருமானத்தை அல்லது செல்வாக்கைச் சமூக ஊடகச் செயல்பாட்டாளர்கள் (cyber-activists) பெருக்கிக்கொள்கின்றனர் என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.