news-details
கவிதை
பூமிப் பந்தின் புழுதி துடைப்போம்!

காற்றின் முகத்தில் கரிபூசி விட்டாய்!

பருகத் துடிப்பது

அமுத மழையா? அமிலத்துளியா?

ஓசோன் பேர்வையில்

ஓட்டைகள் துளைத்து

சூரியச் சூட்டைச் சுவிகரித்த நீ

தென்றலின் முத்தத்தில்

தேன் சுவைப்பாயோ?

 

மேகக் குடங்களைப்

பூமிக்குச் சுமந்து வரும்

தாவரக் கரங்களைத் தரைமட்டமாக்கி விட்டாயே!

சோலைவனங்களையெல்லாம் சூனியமாக்கிவிட்டு

பாலைவனங்களிலா

பல்லுயிர் பெருக்குவாய்?

 

குருவியின் குரல்வளை நெரித்துவிட்டாய்!

அருவியின் அருமை

குலைத்து விட்டாய்!

மலைகளின் பெருமையைச் சிதைத்து விட்டாய்!

நதிகளின் பயணம் தடுத்துவிட்டாய்!

 

பின்னர் உயிரின் வனப்பை

எந்த ஓவியத்தில் இரசித்து விடப்போகிறாய்?

குளத்தின் வயிற்றில் விசம்;

நிலத்தின் வளத்தில் கசம்;

அழிவின் வசம் உலகில் நிசம்!

 

உயிரினங்களைப் பயிரினங்களைக்

கொலை செய்துவிட்டு நீங்கள்

கொண்டாடப் போவது யாரை?

சுகம் தரும் காட்டையா?

இல்லை சுடுகாட்டையா?

இயற்கை செத்து எதற்குச் சொத்து?

 

குடும்ப உறவுகளைக்

கூகுளில் தொலைத்துவிட்டு

அவர்கள் கல்லறைக்குள் புகுந்த

பின்பா கன்னத்தோடு கன்னம் உரசி

கருணை காட்டப் போகிறீர்கள்?

 

அலைப்பேசியில்

நேரத்தைப் புதைத்துவிட்டு

கடைசியில் கட்டியிருக்கும்

கடிகார முள்களையா

கடிந்து கொள்ளப்போகிறீர்கள்?

 

கல் ஆனாலும் கணவன்

புல் ஆனாலும் புருஷன்

ஆக மொத்தம்

போதையிலே கணவன்

வீதியிலே குடும்பம்

தாலியில்லா மனைவி

நாதியில்லாக் குழந்தை

தோள் கொடுப்பான் தோழன்

அதுவன்றோ பழமொழி!

 

மைக்கில் மட்டும் பெண்ணியம்

மற்றபடி எங்கே கண்ணியம்?

கருப்பையில்

நெருப்பைக் கொட்டியவன்

வெறுப்பை உமிழ்ந்து

பொறுப்பை மறந்து

இணைப்பை மாற்றுவது

விடுதலைக் காதலா?

தறுதலைக் காதலா?

 

குளத்தில் வழுக்கி விழுந்தால்

தண்ணீரில் பாசமாம்!

குடும்பத்தில் தடுக்கி விழுவதென்னவோ

நாள்தோறும் தாய்ப் பாசம்தானே!

 

தாயிற் சிறந்த கோயிலுமில்லை

சேய்களின் மனத்தில் ஈரமுமில்லை!

உற்றார் துரத்திய

பெற்றோர் ரோட்டில்!

தந்தை சொல் மிக்க

மந்திரம் இல்லை இன்றோ!

 

மைந்தனின் சிந்தையில்

தந்தையே இல்லை எனில்

நாளைய பூமி நலம் பெற வழி?

உறவின் சிறப்பையும்

உலகின் வனப்பையும்

யாவரும் சேர்ந்து

அழகுறச் செய்வோமே!

கிழிசலை நெய்வோமே!

புத்தம் புது பூமி புறப்பட்டு வரும்!