news-details
ஆன்மிகம்
யாவே கடவுளின் அரசியலாக்க ஈடுபாடு! (கிறித்தவரின் அரசியல் ஈடுபாடு - 2)

சில அல்லது பல கிறித்தவர்களுக்கு இந்தத் தலைப்பு புதிராகவும் அதிர்ச்சியாகவும் தோன்றலாம். ஆனால், முதல் ஏற்பாட்டின் பக்கங்களை நாம் புரட்டினோம் என்றால், யாவே கடவுளின் அரசியலாக்க ஈடுபாடு தெளிவாக வெளிப்படும்.

அரசியலாக்க ஈடுபாடு உள்ளவரா யாவே கடவுள்?

யாவே வரலாற்றின் கடவுள்! அவர் வரலாற்றில் செயல்பட்டார், வரலாற்றை வழிநடத்தினார், வரலாற்றை உருமாற்றினார். மக்களை ஓர் உடன்படிக்கைச் சமூகமாகக் கட்டியெழுப்புவதற்கு ஆதரவாக வரலாற்றை வழிநடத்தினார். உடன்படிக்கை என்பது ஓர் ஒப்பந்தமோ, உடன்பாடோ அல்ல; ஒப்பந்தம்-உடன்பாட்டின் நோக்கம் நிறைவேறியவுடன் அது நிறுத்தப்படலாம். மாறாக, உடன்படிக்கை என்பது ஒப்பந்தம்-உடன்பாட்டில் இருந்து வேறுபட்டது. அடிப்படையில் மக்களுடன் கடவுள் கொண்டுள்ள பிணைப்பு மற்றும் நீண்டகால உறவாகப் பரிணமிப்பது உடன்படிக்கையாகும். கடவுள் இந்த உடன்படிக்கை உறவை வரலாற்று ரீதியாக இஸ்ரயேலர்கள் மூலம் ஏற்படுத்தினார்.

உடன்படிக்கைச் சமூகம் என்பது ஒரு சமத்துவச் சமுதாயமாகும். அங்கு அனைவரும் மனித மாண்போடு வாழ்வர். மனித மாண்பு  என்பது ஒவ்வொரு மனிதருக்கும் உள்ளார்ந்த விதமாகக் கொடுக்கப்பட்ட கொடையாகும். ஏனென்றால், மனிதர் கடவுளின் சாயலிலும் உருவிலும் படைக்கப்பட்டவர்கள் (தொநூ 1:27). கடவுளின் சாயலும் உருவும்தான் ஒவ்வொரு மனிதருக்கும் கொடுக்கப்பட்ட மாண்பாகும்.

மாண்பு என்பது ஒருவருடைய அல்லது ஒரு குழுவின் வாழ்க்கையைப் பகுத்தறிந்து, முடிவெடுக்கும் மற்றும் செயல்படுத்தும் ஆற்றலில் உறுதியாக வெளிப்படுகிறது. உடன்படிக்கை உறவுச் சமூகத்தில் பிணைக்கப்பட்டு, மாண்புநிறை மனிதர்களாக வாழ்வதற்கு, மக்களுக்குச் சக்தியளிக்கும் வரலாற்று நிகழ்வுகளில் கடவுள் பங்கேற்று, மக்களை ஆற்றல்படுத்துவதுதான் கடவுளின் அரசியலாக்க ஈடுபாடாகும்.

வரலாற்றை மாற்றியமைக்கும் கடவுள்

அரசியலாக்க ஈடுபாடு என்பது தனக்கும்-மற்றவர்களுக்கும் மாண்புநிறை வாழ்வை அளிக்கும் ஆற்றலாகும். தமது மீட்புத் திட்டத்தை இஸ்ரயேலர் மூலம் உலகில் உள்ள அனைத்து மக்களுக்கும் வெளிப்படுத்தச் செயல்பட்டவர் யாவே. ஒரு குறிப்பிட்ட மக்களைத் தேர்ந்தெடுப்பதில் தீவிரமாக ஈடுபட்டவர் நமது வரலாற்றின் கடவுள் யாவே ஆவார். பல நாடுகள், இனங்களின் மூதாதையராகிட ஆபிரகாம் தேர்ந்தெடுக்கப்பட்டது (தொநூ 17:5) மக்களைச் சக்திப்படுத்தும், கடவுளின் அரசியலாக்க நடவடிக்கை ஆகும். ‘ஆபிரகாம், ஈசாக்கு மற்றும் யாக்கோபின் கடவுள்என்ற சொற்றொடர் மீண்டும் மீண்டும் வருவது (1குறி 29:18; 2குறி 30:6; மத் 22:32; மாற் 12:26) கடவுள் இஸ்ரயேலை விரும்பித் தேர்ந்தெடுத்ததைக் குறிக்கிறது.

நிலமில்லாதவர் முகமில்லாதவரேஎன்பதற்கேற்ப, நிலம் ஒருவரது மாண்பின் அடையாளமாக உள்ளது. கடவுள் ஒரு மக்களினத்தைத் தேர்ந்தெடுத்து, அவர்களைச் சுதந்திரம், சமத்துவம், நீதி மற்றும் மாண்பு கொண்ட மக்களாக மாற்றிட நிலத்தை அவர்களுக்கு வழங்குவது, மக்களின் மாண்புநிறை வாழ்விற்குச் சக்தி அளிக்கும் அரசியலாக்கச் செயல்பாடாகும். வாழ்ந்திட வாழ்வாதாரம், கண்டிட நிலம் என்பது ஒருவரின் அடிப்படை உரிமையாகும்.

நிலமற்றவராக, நிலம் பறிக்கப்பட்டவராக ஒருவரோ, ஒரு குழுமமோ இருக்கும்போது அவர்களது தான்மையும் மாண்பும் பறிக்கப்படுகின்றன. உரிமை பறிக்கப்பட்ட மக்களை அடிப்படை உரிமையான நிலம் பெறச்செய்து, சுதந்திர மக்களாக்கிடும் கடவுளின் வரலாற்று ஈடுபாடு ஓர் அரசியலாக்கச் செயல்பாடாகும். மூதாதையரான ஆபிரகாம், ஈசாக், யாக்கோபு போன்றோருக்கு நிலம் வழங்கி, மாண்பு நிறைந்த தலைமுறையாக அவர்களை மாற்றியது கடவுளின் அரசியலாக்கச் செயல்பாடே!

ஆற்றல்படுத்தும் விடுதலைக்கான அரசியலாக்கச் செயல்பாடு

தங்களது மாண்பு, தான்மையை இழந்து அடிமைகளாக எபிரேயர்கள் எகிப்தில் தவித்துக்கொண்டிருந்தபோது, யாவே அவர்களின் வரலாற்றில் பங்கு பெற்று, மோசே மூலம் அவர்களைச் சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் கொண்ட நாட்டிற்கு அழைத்து வந்தார் (விப 3:6-17). கடவுளின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாக யாவே அவர்களைக் கானான் நாட்டில் குடியமர்த்தினார். எகிப்தில் அடிமைப்படுத்தப்பட்ட மக்களுக்குக் கானான் நாட்டில் நிலம் தந்து அவர்களைச் ஆற்றல்படுத்தப்பட்டவர்களாக மாற்றிய கடவுளின் ஈடுபாடு ஓர் அரசியலாக்கச் செயல்பாடே!

யாவேயின் உடன்படிக்கைச் சமூகம்

தனிநபர்களுடன் நோவா (தொநூ 6:18), ஆபிரகாம் (15:18), ஈசாக் (17:21), யாக்கோபு (28,35) போன்றவரோடு கடவுள் செய்த உடன்படிக்கையை அறிவோம். ஆனால், இஸ்ரயேலர் என்ற மக்களோடு ஒரு குழுமமாக யாவே உடன்படிக்கை செய்தார் (விப 19-20). பிறகு அவர்களை ஒரு மாறுபட்ட (Contrast Community) மற்றும் எதிர் பண்பாட்டுச் சமுதாயமாக (Counter-Cultural Community) வாழப் பணித்தார்.

மோசே மூலம் கொடுக்கப்பட்ட மனிதநேயப்படுத்தும் வழிமுறைகள், நெறிமுறைகள், சட்டங்கள், கோட்பாடுகள் வழியாக அவர்களை வழிநடத்தினார் (இச 6-30). இஸ்ரயேலரை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து, அவர்களைக் கானானில் எதி-கலாச்சார-தனித்துவமான உடன்படிக்கைச் சமூகமாக மாற்றியது கடவுளின் அரசியலாக்க ஈடுபாட்டில் எழுந்த ஆற்றல்படுத்தும் செயல்பாடாகும்

மீறப்பட்ட உடன்படிக்கையும் ஆற்றல் இழந்த மக்களும்

இஸ்ரயேலர்கள் பழங்குடிக் கூட்டமைப்பு ஆட்சியிலிருந்து (Tribal Confederation) விலகி, முடியாட்சி முறைக்கு மாற விரும்பியபோது, அரசர்கள் தங்கள் அரசராகிய யாவே கடவுளின் சார்பாக ஆட்சி செய்யப் பணிக்கப்பட்டனர். மன்னராட்சி முறை சீரழிந்து, அநீதி, சுரண்டல், வறுமை மற்றும் சமத்துவமின்மையை உருவாக்கியபோது, அவர்களை மீண்டும் உடன்படிக்கைச் சமூகத்திற்குக் கொண்டுவர கடவுள் இறைவாக்கினர்களை அனுப்பிச் செயல்பட்டார்.

அதிகாரம் அளித்திடும் கடவுளின் அரசியலாக்க நடவடிக்கை

பாலஸ்தீனத்தில் இஸ்ரயேலர்கள் வறியவர்களாகவும் சுரண்டப்பட்டவர்களாகவும் அதிகாரம் இழந்தவர்களாகவும் மாற்றப்பட்டபோது, ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களின் சார்பாகவும், ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிராகவும் கடவுளின் குரல் சிங்கம் போல ஓங்கி ஒலித்தது. இறைவாக்கினர்கள் மூலம், கடவுள் தமது மக்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்களைச் சமத்துவம், நீதி, மாண்பு மற்றும் சகோதரத்துவத்துடன் வாழ வைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார்.

அரசியலாக்கப் பணிக்கான கடவுளின் அழைப்பு

மக்களுக்குச் சக்தி அளிப்பதற்காக நமது வரலாற்றில் அரசியலாக்கப் பணியில் ஈடுபட்ட  கடவுளை நாம் இனங்கண்டு கொள்ளவேண்டும், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் உறுதியான வரலாற்று மற்றும் அரசியல் நிகழ்வுகளில் தமது துடிப்பான ஈடுபாட்டின் மூலம் கடவுள் மனிதரின் மீட்பைச் செயல்படுத்தினார்.

அதே கடவுள், கிறித்தவர்களைப் புதிய உடன்படிக்கைச் சமூகமாகவும், இந்தியாவின் உரிமையுள்ள குடிமக்களாகவும்  உறுதிப்படுத்தவும் விரும்புகிறார். இந்தியாவின் உரிமையுள்ள குடிமக்கள் என்ற நமது கிறித்தவ அடையாளத்தையும் மனித மாண்பையும் சிதைத்திடும் அடக்குமுறை மற்றும் சமூக விரோதச் சூழலில் நாம் அரசியலாக்க ஈடுபாடு, அக்கறை இல்லாமல் இனியும் ஒதுங்கி இருக்க முடியாது. யாவே கடவுளின் அரசியலாக்கப் பணியைச் சரியாகத் திருவிவிலிய ஒளியில் புரிந்துகொண்டு, இன்றைய சூழலில் சரியான அரசியலாக்கப் பணியில் கிறித்தவர்கள் முழுமூச்சாகக் களமிறங்கிட வேண்டும். காலம் தாழ்த்திக்கொண்டே சென்றால் இந்தியாவில் கிறித்தவ இருப்பிற்கே ஆபத்துகளைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்படுவோம்.

கிறித்தவராகிய நம்மை மட்டுமல்ல, பிறரையும் ஆற்றல்படுத்தி மாண்புநிறை மனிதராக, இந்தியக் குடிமக்களாக வாழ்ந்திடச் செய்யும் அரசியலாக்கப் பணியில் நாம் அணிவகுக்கவேண்டும். யாவே கடவுளின் அரசியலாக்க ஈடுபாடு நம்மை வழிநடத்தட்டும், ஆற்றல்படுத்தட்டும், மாண்புநிறை கிறித்தவராக இந்தியாவில் தொடர்ந்து வாழ்ந்திடும் சாத்தியங்களை உருவாக்கட்டும்.