news-details
சிறப்புக்கட்டுரை
‘அன்பு’ என்னும் சொத்திற்குச் சொந்தக்காரர்! (ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல்)

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுறையும்

தெய்வத்துள் வைக்கப் படும் (குறள் 50)

என்ற தெய்வப் புலவர் திருவள்ளுவரின் வாய்மொழிக்கேற்ப, மண்ணுலகில் ஒரு புனிதமான வாழ்வை வாழ்ந்து முடித்திருக்கிறார் குழித்துறை மறைமாவட்டத்தின் முதல் ஆயர் மேதகு ஜெரோம்தாஸ் வறுவேல் .. அவர்கள்.

ஆண்டவரே என் ஆயர் (திருப்பாடல் 23:1) என்னும் திருவிவிலிய விருதுவாக்கைத் தனது வாழ்வின் உயிர்நாடியாகக் கொண்டு, 74 ஆண்டுகள் ஒரு மேய்ப்பனாக, தந்தையாக, தோழனாக, வழிகாட்டியாகத் திகழ்ந்த அந்த உன்னத ஆன்மா மார்ச் 24, 2026 அன்று இறைவனடி சேர்ந்தது. இது தமிழ்நாடு திரு அவைக்கும் குறிப்பாக, குமரி மண்ணுக்கும் ஈடுசெய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும்.

எளிமையின் சிகரம்...

ஆயர் ஜெரோம்தாஸ் அவர்களின் ஆளுமையைக் குறிக்க ஒரே சொல் போதுமானதென்றால் அதுஎளிமை.’ எளிய தோற்றம், எந்நேரமும் மாறாத இனிய புன்முறுவல், யாரையும் அரவணைக்கும் கனிவான உள்ளம் என அவர் ஒரு நடமாடும் மனித நேயமாகத் திகழ்ந்தவர். அதேவேளையில், ஆழ்ந்த ஞானம் கொண்ட ஒரு கற்றறிந்த மாமேதை.

உரோமை மாநகரின் புகழ்பெற்ற சலேசியப் பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி பயின்று, கல்வியியல் துறையில் சிறந்து விளங்கியவர். அவரது அறிவாற்றல் வெறும் ஏட்டுச் சுரைக்காயாக இல்லாமல், அடித்தட்டு மக்களின் வாழ்வியல் மாற்றத்திற்கான கருவியாகவே எப்போதும் பயன்பட்டது.

தொன்போஸ்கோவின் வழியில் இளையோரின் தோழர்...

புனித ஜான்போஸ்கோவின் வழியில் பயணித்த ஒரு சலேசியத் துறவியாக, இளையோர் மற்றும் குரு மாணவர்களின் வளர்ச்சியில் அவர் காட்டிய ஆர்வம் அளப்பரியது. ஏழைகளின் கல்விக்காகத் தன்னை அர்ப்பணித்த அவர், இளையோர் மத்தியில் புதிய சமுதாயத்தைப் படைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, அவர்களின் திறமைகளையும் வளங்களையும் ஒன்றிணைத்துச் செயல்பட  எப்போதும் இளையோருக்கு அறைகூவல் விடுத்தவர்.

குழித்துறையின் முதல் சிற்பி...

2014-ஆம் ஆண்டு கோட்டாறு மறைமாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட குழித்துறை மறைமாவட்டத்தின் முதல் ஆயராகப் பொறுப்பேற்றபோது, அவர் முன்னால் நின்ற சவால்கள் சாதாரணமானவை அல்ல; பொருளாதாரப் பின்தங்கிய நிலை, நிர்வாகக் கட்டமைப்பு உருவாக்கம், ஆன்மிக ஒருங்கிணைப்பு எனப் பல்முனைப் போராட்டங்களை அவர் முன்மதியோடு கையாண்டார்.

ஒரு புதிய மறைமாவட்டத்திற்குத் தேவையான வலுவான அடித்தளத்தை அமைத்த பெருமை அவரையே சாரும். வெறும் ஐந்து ஆண்டுகளே (2015-2020) அவர் முழுமையாகப் பணியாற்றினாலும், அந்தக் குறுகிய காலத்திற்குள் வரலாற்றுச் சுவடுகளில் தனது பணியை ஆழமாகப் பதிவு செய்தவர். இறைமக்களின் நம்பிக்கையை உறுதிப்படுத்தி, மேய்ப்புப்பணியைத் துரிதப்படுத்திய அவரது செயல்பாடுகள் போற்றத்தக்கதே!

வாழ்வும் இறைப்பணியும்...

1951-ஆம் ஆண்டு, அக்டோபர் 21 அன்று கன்னியாகுமரி மாவட்டம் படுவூரில் பிறந்த ஆயர் ஜெரோம்தாஸ், தனது இளம் வயதிலேயே இறைப்பணிக்காகத் தன்னை அர்ப்பணித்தவர். நாகர்கோவில் கார்மல் பள்ளியில் பள்ளிப்படிப்பையும், ஸ்காட் கிறித்தவக் கல்லூரியில் புகுமுக வகுப்பையும் முடித்து, பின்னர் சலேசியச் சபையில் இணைந்தார்.

சென்னை - பூந்தமல்லி திரு இருதயக் குருமடம், கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரி, உரோமை - சலேசியப் பாப்பிறைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் குருத்துவப் பயிற்சி பெற்று, 1985 - ஆம் ஆண்டு, ஜூன் 2 அன்று  வத்திக்கானில் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான்பால் அவர்களால் அருள்பணியாளராக அருள்பொழிவு செய்யப்பட்டவர். 2014-ஆம் ஆண்டு, டிசம்பர் 22 அன்று குழித்துறை மறைமாவட்டத்தின் முதல் ஆயராகத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்பட்டு, 2015, பிப்ரவரி 24 அன்று ஆயராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். 2020-ஆம் ஆண்டு உடல் நலக் குறைவு காரணமாகத் தனது 68-வது வயதிலேயே விருப்ப ஓய்வு பெற்றார்.

மறையாத நினைவுகள்...

பணியில் இருந்தபோதும், ஓய்வு பெற்ற பின்பும் அவர் கொண்டதாழ்ச்சிஎன்னும் விழுமியம் அவரை உயர்ந்த இடத்திற்கு எடுத்துச் சென்றது. கடந்த சில காலங்களாக சென்னை சேத்துப்பட்டில் உள்ளஏழைகளின் சிறிய அருள்சகோதரிகள்இல்லத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்த அவர், ஓர் எளிய துறவியாகவே தனது இறுதி மூச்சைச் சுவாசித்தார்.

அவரது மறைவுச் செய்தி கேட்டு தமிழ்நாட்டின் பல்வேறு மறைமாவட்ட ஆயர்களும் இறைமக்களும் திரண்டு வந்து அவருக்கு அஞ்சலி செலுத்தியது, அவர் திரட்டி வைத்திருந்தஅன்புஎன்னும் சொத்திற்குச் சான்றாகும். குழித்துறை பேராலயத்தில் 25-03-2026 அன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகையில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வருகிறது.

ஆயர் ஜெரோம்தாஸ் அவர்கள் விட்டுச் சென்ற எளிமை, தாழ்ச்சி மற்றும் அர்ப்பணிப்புள்ள மறைப்பணி என்னும் சுடரை நாம் ஏந்திச் செல்வதே அவருக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும். மண்ணில் வாழ்வாங்கு வாழ்ந்த அந்த உன்னத மேய்ப்பரின் ஆன்மா, விண்ணகத் தந்தையின் முடிவில்லா ஒளியில் இளைப்பாற உருக்கமாக வேண்டுவோம்.

நித்திய இளைப்பாற்றியை இவருக்குத் தந்தருளும் ஆண்டவரே! முடிவில்லா ஒளி இவர்மேல் ஒளிரட்டும்!

முதன்மை ஆசிரியர்