உலகளவில் மதச்சுதந்திரம், மனசாட்சி மற்றும் கருத்துச் சுதந்திரத்தை மேம்படுத்தியதற்காகத் திருத்தந்தை 14-ஆம் லியோவுக்கு 38-வது ஆண்டு ‘லிபர்ட்டி மெடல்’ (Liberty Medal) விருது வழங்கப்படும் என அமெரிக்காவின் தேசிய அரசமைப்பு மையம் (NCC) அறிவித்துள்ளது. அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 2026 ஜூலை 3-ஆம் தேதி பிலடெல்பியாவில் நடைபெறவுள்ள விழாவில் இந்த விருது வழங்கப்படவுள்ளது. அமெரிக்க அரசமைப்பின் முதல் திருத்தத்தில் உள்ள அடிப்படை விழுமியங்களை உலகிற்குத் தனது வாழ்நாள் பணியின் மூலம் திருத்தந்தை கொண்டு சென்றதை இந்த விருது அங்கீகரிக்கிறது. 2025, மே மாதம் திருத்தந்தையாகப் பொறுப்பேற்றது முதல் யூத, இசுலாமிய மற்றும் பிற சமயத் தலைவர்களுடன் உரையாடலை ஏற்படுத்தி, அமைதியான சகவாழ்வை முன்னிறுத்துவதை அவர் தனது முன்னுரிமைப் பணியாகக் கொண்டுள்ளார். இந்தக் கௌரவத்திற்காகத் திருத்தந்தை தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளதாக வத்திக்கான் செய்தித் தொடர்பாளர் மேட்டியோ புரூனி கூறியுள்ளார்.