news-details
ஞாயிறு தோழன்
தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு (22-03-2026) எசே 37:12-14; உரோ 8:8-11 யோவா 11:1-45

திருப்பலி முன்னுரை

அன்பார்ந்த இறைமக்களே, கிறிஸ்துவின் உயிர்ப்புப் பெருவிழாவை எதிர்நோக்கி நாம் பயணிக்கும் இந்தத் தவக்காலத்தின் ஐந்தாம் ஞாயிறு திருவழிபாட்டிற்கு உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். இன்று, “உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானேஎன்ற இயேசுவின் வார்த்தை, நம்முடைய நம்பிக்கையைப் புதுப்பித்து, பாவ வாழ்விலிருந்து எழுந்து, நிலை வாழ்வை நோக்கிப் பயணிக்க அழைப்பு விடுக்கிறது.

இலாசரின் கல்லறையை நோக்கி நடந்த இயேசு, இன்று நம் இதயக் கதவுகளைத் தட்டுகிறார். பாவம், சுயநலம் மற்றும் தீய பழக்கவழக்கங்கள் என்னும் பாறைகளால் மூடப்பட்டிருக்கும் நம் ஆன்மாவின் கல்லறைகளைத் திறக்க அவர் அழைக்கிறார். ‘வெளியே வா!’ என்ற கிறிஸ்துவின் அதிகாரமிக்க குரல், இன்று நம் வாழ்வின் தேக்க நிலையை உடைத்து, புதுவாழ்வை நோக்கிப் பயணிக்க நமக்கு அழைப்பு விடுக்கிறது.

எனவே, நாம் சாவிற்கு ஏதுவான நமது பழைய மனித இயல்புகளையும், தீய பழக்க வழக்கங்களையும் களைந்துவிட்டு, கிறிஸ்துவின் ஒளியில் புதிய படைப்புகளாக உயிர்த்தெழுவோம். நம்மிடம் உள்ள சோர்வுகள் நீங்கி, இறப்பின் அச்சத்திலிருந்து முழுமையான விடுதலை பெற்று, நிலைவாழ்வின் குழந்தைகளாக உருமாற இத்திருப்பலியில் உருக்கமாகச் செபிப்போம்.

முதல் வாசக முன்னுரை

அடிமைத்தனத்தில் உழன்ற இஸ்ரயேல் மக்களை, உலர்ந்த எலும்புகளுக்கு ஒப்பான இறந்த நிலையிலிருந்து மீட்க இறைவன் முன்வருகிறார். “உங்கள் கல்லறைகளைத் திறக்கப் போகிறேன், என் ஆவியை உங்கள்மீது பொழிவேன்என்ற இறைவாக்கினரின் ஆறுதல் மொழிகள், நமக்கும் வாழ்வின் நம்பிக்கையைத் தருகின்றன. அழிவின் விளிம்பிலும் புதிய உயிர் தரவல்ல இறைவனின் வாக்குறுதிக்கு நம்பிக்கையோடு செவிசாய்ப்போம்.

இரண்டாம் வாசக முன்னுரை

பாவத்தின் ஊற்றான ஊனியல்பிற்கு ஏற்ப வாழ்வோர் கடவுளுக்கு உகந்தவர்களாக இருக்க முடியாது என்று எச்சரிக்கும் புனித பவுல், கிறிஸ்து இயேசுவை உயிர்ப்பித்த அதே தூய ஆவியார் நம்மில் குடியிருந்தால், அவரே நம் சாவுக்குரிய உடல்களையும் உயிர்ப்பிப்பார் என்ற விடுதலையின் செய்தியை வழங்குகிறார். இவ்வாசகத்தைக் கவனமுடன் கேட்டு, பாவ அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெறுவோம்.

நம்பிக்கையாளர் மன்றாட்டுகள்

1. மன்னிப்பின் இறைவா, எம் திரு அவையின் ஆயர்கள், பணியாளர்கள், பொதுநிலையினர் அனைவரும் ஒப்புரவு அருளடையாளத்தின் வழியாகத் தங்கள் பாவக் கறைகளைக் களைந்து, மனமாற்றத்தின் வழியே இயேசுவின் உயிர்ப்பின் மகிமையில் பங்குகொள்ள அருள்புரிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

2. நீதியின் இறைவா, எம் நாட்டை ஆளும் தலைவர்கள் சுயநலப் போக்கைக் கைவிட்டு, எளிய மக்களின் கண்ணீரையும் தேவைகளையும் உணர்ந்து, நீதியோடும் நேர்மையோடும் மக்கள் பணியாற்றிடத் தேவையான நல்மனதைத் தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

3. ஆற்றலின் இறைவா, இயற்கை வளங்களை நாங்கள் பேணிக் காத்திடவும், போதிய மழையினால் நீர்நிலைகள் செழித்து, விவசாயப் பெருமக்களின் வறுமை நீங்கி அனைவரும் வளமுடன் வாழவும் அருள்மாரி பொழிய வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.

4. உயிர்ப்பின் இறைவா, நோய்களாலும் வறுமையினாலும் முடங்கிக் கிடக்கும் மக்கள் அனைவரும் உம் வல்லமையுள்ள வார்த்தையால் குணம் பெற்று, இழந்த நம்பிக்கையை மீண்டும் அடைந்து புதுவாழ்வு பெற்றிட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்.