தமிழ்நாட்டுத் தேர்தல் களப் பெரும்பான்மைக் கருத்துக்கணிப்புகளில் ஆளும் தி.மு.க. அரசு முந்துகிறது. நம்பகத்தன்மை வாய்ந்த அந்தக் கருத்துக்கணிப்புகளே தேர்தல் களத்தை வெப்பமாக்கி உள்ளன.
தி.மு.க. ‘மதச்சார்பற்ற
கூட்டணி’ எனத்
தன்னை அடையாளப்படுத்துகிறது. தி.மு.க.
கூட்டணி 2017 முதல்
14 தொடர் வெற்றிகளில் தலை நிமிர்கிறது. எதிர் உள்ள 16 கட்சிகளைக் கொண்ட தேசியச் சனநாயகக் கூட்டணி
(என்.டி.ஏ.) அ.தி.மு.க.
தலைமையில் உள்ளது. ஆனால், என்.டி.ஏ. கூட்டணி
முடிவுகளை அமித்ஷா எடுக்கிறார். அங்கேயே அது முரண்பட்டு நிற்கிறது. சரி, வாருங்கள்... தமிழ்நாட்டின் இரு பெரும் அணிகளின் நிறை-குறைகளை நோக்குவோம்.
தி.மு.க. கூட்டணிக்
கட்சிகள் அனைத்துமே சமத்துவம், சமதர்மம், சமூகநீதி பேசும் இடதுசாரிக் கட்சிகள். தி.மு.க.
கூட்டணி சிறுபான்மை மக்கள் வாக்கு, தலித் மக்கள் வாக்கு, மகளிர் வாக்கு எனப் பெரும் வாக்கு வங்கியைக் கொண்டது. தி.மு.க.
நலத்திட்டங்கள் என்ற பெயரில் மக்களிடையே அதிக மதிப்பெண் பெறுகிறது. பெண்களைக் குறிவைத்த மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம், புதுமைப் பெண் திட்டம் என வெளுத்து வாங்குகிறது.
‘விடியா அரசு’ என்று விமர்சித்த எதிர்க்கட்சிகளுக்கு ஒரு விடியலில் அதிர்ச்சி தந்தது. பா.ச.க.
மகளிர் உரிமைத் திட்டத்திற்கு தனது அடியாள்கள் வழி இடைக்காலத் தடை வாங்க முயற்சி செய்தது. இதை மோப்பம் பிடித்த தமிழ்நாடு அரசு மத்திய உளவுத்துறையின்
கண்களில் மண் தூவி, மகளிர் உதவி தொகை ரூ. 5000 வழங்கியது.
இளைஞர்களுக்குத்
தமிழ்ப் புதல்வன், ‘நான் முதல்வன்’
என்ற திட்டங்களும் தி.மு.க.வைத் தேர்தல் களத்தில் முன் தள்ளுகிறது. தமிழ்நாடு பள்ளிக் குழந்தைகளுக்கான காலை உணவுத் திட்டம் உலக அளவில் கவனம் பெற்றது. இரட்டை இலக்கப் பொருளாதார வளர்ச்சி, கல்வி, சுகாதாரம், தொழில் வளர்ச்சியில் திராவிட மாடல் அரசு தேசிய அளவில் முதல் மூன்று இடங்களைத் தொடர்ந்து பிடிக்கிறது. “எங்களுக்குப் போட்டி இந்தியாவில் உள்ள பிற மாநிலங்கள் இல்லை; வளர்ந்த அயல் நாடுகள்” என நெஞ்சு நிமிர்த்துகிறது
தமிழ்நாடு.
தி.மு.க. வலுவான
கட்டமைப்பும் அடித்தளமும் கொண்ட கட்சி என்பதால், தி.மு.க.வின் நுண்நிலை தேர்தல் பணிகள் வியப்பு தருபவை. ஒரு வாக்குச் சாவடிக்கு 350 ஓட்டுகளைப் பெறுவது என்ற இலக்கில் தேர்தல் பணிகள் கடந்த ஆறு மாதங்களாக நடக்கிறது. ஒரு வாக்குச்சாவடிக்கு பத்து தி.மு.க.வினர் வாக்குச்சாவடி முகவர்களாக நியமனம் செய்யப்பட்டு பணிகள் நடக்கின்றன.
முதல்வரின் தேர்தல் பிரச்சாரம், நலத் திட்டங்கள் வழங்குதல் எனக் களத்தில் மேலும் பரபரப்பு கூட்டப்படுகிறது. இடையே தேசிய அளவிலான ‘இந்தியா’ கூட்டணிக்கு ஸ்டாலின் தலைமை தாங்கவேண்டும் என்ற குரல்கள், அவரது தேர்தல் கால உருவத்தை
(இமேஜ்) உயர்த்துகிறது.
மாநில
சுயாட்சி என்ற தி.மு.க.வின் ஐம்பெரும் முழக்கத்தை முதல்வர் ஓங்கி ஒலிக்கிறார். மாநில சுயாட்சி முழக்கம் தேசிய அளவிலும், தமிழ்நாடு தேர்தல் களத்திலும் கவனம் பெறுகிறது. நாற்பது ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள ஈழத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்கவேண்டும் என்ற குரல், உலகத் தமிழர் மத்தியில் கவனம் பெறுகிறது. மேலும், ஒன்றிய அரசு தமிழ்நாடு அரசு கேட்ட நிதியைத் தருவதில்லை; மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடக்கிறது எனப் பா.ச.க.
எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு
உள்ளது.
‘தி.மு.க.
மீது குறைகள் இல்லையா?’ என்ற முணுமுணுப்புகள் கேட்கின்றன. தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற முடியவில்லை. உட்கட்சிப் பூசல்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பொறுப்பற்ற செயல், அடிப்படை மக்கள் பணிகளைச் செய்யாத செயலற்றத்தன்மை போன்றவை மக்கள் மனத்தில் அதிருப்தியை உருவாக்கியுள்ளன. தி.மு.க.
ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு வாக்குகள் மூன்றாகப் பிரிகிறது என்பது தி.மு.க.வுக்கு உள்ள சாதகமாகும்.
அ.தி.மு.க.-வுடனான பா.ச.க.
கூட்டணியை ‘எலி-தவளை கூட்டணி’ என்கிறார் தென் சென்னை மக்களவை உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன். இது காரிய கூட்டணி கொள்பவர்கள் என்பதும் உண்மையே. 2021-ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி, சிறு சேதாரம் இருந்தாலும் அப்படியே உள்ளது. இக்கூட்டணி ஆளும் தி.மு.க.
அரசு மீதான வாக்குகளை அறுவடை செய்ய நினைக்கிறது. அதற்கான முழு பிரச்சார வலிமையையும் பயன்படுத்தும். அதில் மோடி, அமித்ஷா, நிர்மலா சீதா ராமன் ஆகியோர் வருவார்கள்.
கடந்த
காலங்களில் 41 முறை மோடி பிரச்சாரத்திற்கு வந்தும் பயன் எதுவும் இல்லை.
“நூறுமுறை மோடி வந்தாலும் எதுவும் நடக்காது”
என்கிறார் தொல். திருமாவளவன். அது உண்மையே! பா.ச.க.வோடு அ.தி.மு.க.வும் வெறுப்பு
பிரச்சாரத்தைத் தேர்தல் களத்தில் கட்டவிழ்த்து விடும். எப்படியாவது முதல்வராகி விடவேண்டும் என்ற எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சு, நடுநிலை வாக்காளர்களை முகம் சுழிக்க வைக்கிறது.
தமிழ்நாட்டில்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பு
ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்துவிடுகிறது. அதுவே அ.தி.மு.க. கூட்டணியின்
தேர்தல் பிரச்சாரமாக இருக்கிறது. அதற்கேற்பத் தொடர் பிரச்சாரம் நடக்கிறது. தமிழ்நாட்டில் வாரிசு அரசியல், சட்டம்-ஒழுங்கு சரியில்லை; போதைப்பொருள் புழக்கம்; பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனக் காரணங்களை அடுக்குகின்றனர். தி.மு.க.வோ பா.ச.க. ஆளும் மாநிலங்களைவிட
குறைவுதான் எனப் பதிலடி தருகிறது.
தி.மு.க. தலைவர்,
“தி.மு.க.வைத்
தவிர யார் ஆட்சி அமைத்தாலும், அது டெல்லி ஆட்சியாக இருக்கும்”
என எச்சரிக்கை தருகிறார். அதற்குப் பதிலடி தந்த அ.தி.மு.க. மேனாள் அமைச்சர்
திண்டுக்கல் சீனிவாசன் கூறுகிறார்: “டெல்லி ஆட்சி தானே, இருந்துட்டுப் போகட்டும்.” அடிமைகளிடம் இதைத் தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்? இதே மேனாள் அமைச்சர் “மோடிக்காக எங்களுக்கு வாக்களிக்காம விடாதிங்க”
எனக் கெஞ்சுகிறார்.
அ.தி.மு.க.
மேனாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறிய வார்த்தைகள் உண்மையானவை: “நான் சென்னை - இராயபுரம் பகுதியில் முடிசூடா மன்னனாக இருந்தேன்; பா.ச.க.வோடு கூட்டணி சேர்ந்ததால்
தோற்றுப்போனேன்.” இதுதான் தேர்தல் களத்தில் பா.ச.க.வோடு கூட்டணி சேர்ந்தவர்களின் நிலையாகும்.
எடப்பாடி
பழனிச்சாமி தமிழ்நாட்டு மக்களுக்கு எதுவும் செய்யாத ஒன்றிய அரசின் வரவு-செலவு அறிக்கையை வரவேற்றது மக்களிடையே பெரும் கோபத்தை உருவாக்கி உள்ளது. தமிழ்நாட்டுப் பேரிடர் காலத்தில் தமிழ்நாட்டிற்கு வராத, நிதி ஒதுக்காத பா.ச.க.வோடு அ.தி.மு.க. கூட்டணி என்பது மக்கள்
விரோதக் கூட்டணி என மக்களிடையே பேசப்படுகிறது.
இந்திய மக்களைப் பாதிக்கும் உழவர் மசோதா, குடியுரிமை மசோதா, முத்தலாக் எனப் பா.ச.க.வின் அனைத்து அதிகாரச் சட்டங்களுக்கும் அ.தி.மு.க. முட்டுக் கொடுத்தது.
நூறு நாள் வேலைத்திட்டம் மகாத்மா காந்தி பெயர் மாற்றம் குறித்து “காந்தியோ, இராமரோ, பெயரா முக்கியம்?” என்கிறார் அ.தி.மு.க.-வின் மேனாள்
அமைச்சர் சி.வி. சண்முகம்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடையாளங்களை அழிக்கிற பா.ச.க.வுக்குத் துணை போகிறவர்களும் அழிவார்கள் என்பதே தமிழ்நாட்டுத் தேர்தல் களம் கற்றுத் தரும் பாடமாகும்.