news-details
சிறப்புக்கட்டுரை
மானுட மரபின் வேரும் ஒளியும் பெண்! (2026, மார்ச் - 8 அகில உலகப் பெண்கள் தினம்)

இயற்கை

உலகை நகர்த்தும் இயற்கைக் கடிகாரம் பெண்கள். மானுட வரலாற்றின் முதல் துடிப்பு பெண்ணிலிருந்தே தொடங்குகிறது. மனிதகுலத்தின் வேராகவும், அதன் பயணத்தை ஒளிரச்செய்யும் தீபமாகவும் பெண் திகழ்கிறாள். பெண் என்பவர் ஒரு தனி மனிதர் அல்லர்; அவள் மரபின் வேர். அந்த வேரிலிருந்துதான் குடும்பம் பிறக்கிறது, பண்பாடு வளர்கிறது, மனிதம் நிலைக்கிறது.

உலகின் எந்தச் சமூகமாக இருந்தாலும், அதன் அடித்தளத்தில் பெண் நிற்கிறாள்; அவள் கருவில் மனிதன் உருவாகிறான்; அவள் கைகளில் மனிதம் வடிவெடுக்கிறது. பெண் மரபு என்பது வெறும் பழக்கவழக்கங்களின் தொடர்ச்சி அல்ல; அது அன்பு, பொறுமை, தியாகம், நம்பிக்கை ஆகியவற்றின் நிலையான பாரம்பரியம்.

உலகப் பெண்கள் தினத்தைக் கொண்டாடும் இந்தப் புனிதமான தருணத்தில், பெண் என்பவள் உயிரின் பிறப்பிடம் என்பதை உணர்வோம். அவளது கருவறையில் மனிதன் உருவாகிறான்; அவளது மடியில் மனிதம் வளர்கிறது. தாய் என்ற பெயரில் அவள் வேராகி, மனிதத்தை நிலைநாட்டுகிறாள். அந்த வேர் இல்லையெனில், மரம் இல்லை; மரமில்லையெனில், நிழலும் கனியும் இல்லை. அதுபோலவே பெண் இல்லையெனில், மனிதச் சமூகம் உயிரோட்டமற்றதாக மாறி விடும்.

குழந்தை கருவில் உருவாகும் போதே பெண்ணுள் உருப்பெறும் உணர்வுகள், உள்ளன்பு, உதிரத்தோடு செய்கிற தியாகம், சொல்லாமல் சுமக்கின்ற பாரங்கள் அனைத்தும் மனித வரலாற்றில் மறைக்கப்பட்டதாகவே உள்ளன. இன்னும் எத்தனை சுமைகளைத் தந்தாலும் எங்கள் சிறகுகள் விழுவதில்லை. நல்லது-தீயது எதுவென்று எண்ணங்கள் வழியாகச் செயலோடு அறிவித்து வாழ்ந்து காட்டுகின்றாள். அந்த வாழ்வே மனிதத்தின் முதல் பாடமாகிறது.

மனித வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால் ஒவ்வொரு மாற்றத்திற்கும் பின்னால் ஒரு பெண் இருப்பதைக் காணலாம். தாயாக, சகோதரியாக, துணைவியாக, வழிகாட்டியாக வெளிப்படும் பெண்ணின் பொறுமை, பரிவு, ஒழுக்கம், நம்பிக்கை ஆகியவற்றின்மீது குடும்பமும் சமூகமும் கட்டப்படுகிறது. குழந்தைகளின் முதல் பள்ளி தாயின் மடிதான். அவள் கற்றுத் தருவது சொற்கள் மட்டுமல்ல; மனிதம், அன்பு, இரக்கம், நம்பிக்கை, பகிர்வு போன்ற வாழ்க்கையின் அடிப்படை நெறிகளே. அவளின் சொல்லும் செயல்களும் வருங்காலச் சமூகத்தின் விதைகளை விதைக்கின்றன. அதேசமயத்தில், இருளில் வழிகாட்டும் தீபம்போலப் பெண்கள் சமுதாயத்தைத் திறன்பட ஒளிரச்செய்கிறார்கள். அறிவு, உழைப்பு, நீதி, நம்பிக்கை இவற்றின் ஒளியாக அவள் பிரகாசிக்கிறாள்.

வரலாற்றைப் பார்க்கும்போது பெண்கள் அமைதியாக ஆனால், உறுதியாக மாற்றங்களை உருவாக்கி ஆன்மிகம், கல்வி, மருத்துவம், அறிவியல், அரசியல் என அனைத்துத் துறைகளிலும் ஒளிர்வதை இன்றும் நாம் காணலாம். மனித மரபு பாதுகாக்கப்பட பெண்மை போற்றப்பட வேண்டும்.

இன்றைய பெண் பல முகங்களைக் கொண்டு வாழ்கிறாள். தாய், சகோதரி, மகள் என்பதோடு மட்டுமல்லாமல், தலைவி, தொழிலாளி, சிந்தனையாளர், திறன்மிகு நிர்வாகி, இறைவாக்கினர் எனப் பல நிலைகளில் வாழ்கிறாள். வாழ்க்கைப் பயணத்தின் பாதை எளிதானதல்ல; சமத்துவத்திற்கான போராட்டங்கள், உரிமைகளுக்கான குரல்கள், அடையாளத்தை மீட்டெடுக்கும் முயற்சிகள் அனைத்தையும் கடந்துதான் அவள் முன்னேறி வருகிறாள். அவள் தன் வேரை மறக்கவில்லை. ‘இருளாக வாழ்க்கை என்றுமே இருந்துவிடுமோ?’ என்று கவலை கொள்ளாத கனவுகள் முளைப்பது இருளில்தான். அதேசமயம், பிறருக்கு ஒளியாக வழிகாட்டுகிறாள்.

நம்பிக்கையின் பார்வையில் பெண் கடவுளின் தனித்துவமான வரம். திருவிவிலியத்தில் நாம் காணும் பெண்கள் - சாராள், மிரியம், ரூத், எஸ்தர், மரியா போன்றோர் மனித வரலாற்றில் கடவுளின் திட்டத்தை முன்னெடுத்த வலிமையான வேர்களும், ஒளிமிக்க சாட்சிகளும் ஆவர். சிறப்பாக, மரியா - கடவுளின் வார்த்தையைத் தன் உள்ளத்தில் ஏற்றுக்கொண்டு, உலகிற்கு ஒளியைக் கொடுத்த தாய். பெண்களின் அழகிய மகுடமான அவர் கீழ்ப்படிதலின் வேர், நம்பிக்கையின் ஒளி, உலக மாந்தர் அனைவருக்கும் தாய்.

ஐக்கிய நாடுகள் சபையானது இந்த ஆண்டை அகில உலகப் பெண் விவசாயிகள் ஆண்டாக அறிவித்திருக்கும் இச்சூழலில், உலகளவில் வேளாண்மைத் தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்துப் பெண்களையும் நாம் நன்றியோடு நினைப்போம். கிராமப்புறங்களிலிருந்து நகர்ப்புறங்களுக்கு வெளியேறுகின்ற ஆண்களைக் காட்டிலும் பெண்கள் குறைவுதான். நிலத்தை உழுது, விதை விதைத்து, நாற்று நட்டு, களை பறித்து, அறுவடை செய்து, தானியங்களை மண்டிகளில் சேகரிப்பது வரை பெண்களாகத்தான் இருக்கின்றனர். ஆனால், அவர்கள் நமது நினைவுகளிலிருந்து மறக்கப்படுகிறார்கள்.

குடும்பப் பொறுப்புகளுடன் ஆண்களின் பொருளாதாரச் சுமையையும் பகிர்ந்துகொள்ளும் நவீன வீரமங்கைகள், சரித்திரம் படைக்க உருவாக்கப்பட்டவர்கள் பெண்கள். காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் பருவநிலை மாற்றம் ஏற்பட்டு, அடிக்கடி விவசாயத்தில் இழப்பு ஏற்படுவதால் பெண் விவசாயிகள் குறிப்பாக, நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள் கடுமையான துயரத்தில் இருப்பதாக அண்மைக் கால ஆய்வுகள் வெளிப்படுத்துகின்றன.

2026-ஆம் ஆண்டுஅகில உலகப் பெண்கள் தினம்பெண்களைப் புகழ்ந்து பேசுவதற்கான ஒரு நாளாக மட்டுமல்ல; அவர்களின் வேர்களை மதித்து, அவர்களின் ஒளியைப் பாதுகாத்து, மேலும் பிரகாசிக்கச் செய்யும் நாளாக மாறவேண்டும். பெண்கள் வளர்ந்தால் குடும்பம் வளரும்; குடும்பம் வளர்ந்தால் சமூகம் மாறும்; சமூகம் மாறினால் மனிதகுலம் ஒளிரும்.

பெண்ணை மனிதகுலத்தின் அடித்தளமாகவும், எதிர்காலத்தின் வெளிச்சமாகவும் ஏற்றுக்கொள்வோம். பெண்களும் தங்களின் கடமைகளையும் பொறுப்புகளையும் உணர்ந்து வாழவும், ஆண்கள் அவர்களது கனவுகளை மதிக்கவும் அவர்களை ஆதரிப்போம!

வாழட்டும் பெண்மை! ஒளிரட்டும் சமூகம்!!

சூரியன் இன்றி பூமி சுழலாது;

பெண்கள் இன்றி இப்பூவுலகம் இயங்காது.’