news-details
சிறப்புக்கட்டுரை
தலையாட்டி பொம்மையும்! விளையாட்டுப் பிள்ளைகளும்!

தேர்தல் அரசியலில்கூட்டணி  என்பதே வெற்றிக்கான அடிப்படைச் சூத்திரம். எந்தக் கட்சி பிற கட்சிகளைக் கவர்கிறதோ, அந்தத் தலைமைக் கட்சி அமைக்கிற கூட்டணியே வெற்றிபெறும். தமிழ்நாட்டில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது 2026 - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலின் பெரும் முடிச்சு; இடியாப்பச் சிக்கல்; தீர்க்க முடியாத பெரும் பிரச்சினை. புதிதாய்ப் பிறந்த குழந்தையான .வெ.., ஆடி மாத ஜவுளிக்கடை தள்ளுபடி போல,  ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்குஎனக் கூவி அழைத்தது. ‘கடை விரித்தேன், கொள்வாரில்லைஎன்பதைப்போல .வெ.. தமிழ்நாடு தேர்தல் களத்தில் தற்போது தனித்து நிற்கிறது.

முன்னொரு காலத்தில் இயக்குநர் எஸ்.. சந்திரசேகர், தனது மகன் விஜய் அரசியலில் ஈடுபட இரசிகர் மன்றங்களை வலுவாகக் கட்டமைத்தார். கிளிக்கு இறக்கை முளைத்தவுடன் தனியே பறக்க நினைக்குமாம்! கட்சி ஆரம்பித்த தனது தந்தைக்கும் அக்கட்சிக்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை  என்று நடிகர் விஜய் அறிவித்தார். பின் தனது முதல் கொள்கை அறிவிப்பு மாநாட்டிற்குத் தனது பெற்றோரை அழைத்துச் சமாதானம் செய்தார். ‘எனது மகனின் அரசியல் கனவுகள் முட்டுச் சந்தில் நிற்கிறதே...’ என இயக்குநர் சந்திரசேகர் கவலை கொள்கிறார். அவர் பொதுவெளியில் தனது மகனின் .வெ.. கட்சியோடு காங்கிரஸ் கூட்டணி சேரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்தார். மேலும், ஒரு படி மேலே சென்று, “தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி இழந்த பலத்தை .வெ.. கூட்டணியால் மீண்டும் பெறமுடியும்என காங்கிரஸ் கட்சிக்கு ஆசை காட்டினார், வலை விரித்தார்.

.வெ.. தலைவர் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்து மூன்று ஆண்டுகளாகிய நிலையில், தேர்தல் காலத்தில் கூட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லவில்லை. தேர்தல் அறிவிப்பு வெளியாகிற  காலத்தில் வாரம் ஒருமுறை மட்டுமே மக்களைச் சந்திக்கிறேன் என்கிறார். தனது மகனின் - நடிகர் விஜய்யின் அடிப்படைக் குறைபாட்டை, இயக்குநர் சந்திரசேகர் உணர மறுக்கிறார். தமிழ்நாட்டின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சித் தலைவர்கள் கடந்த மூன்று மாதங்களாகச் சட்டமன்றத் தொகுதி வாரியாக மக்களைச் சந்திக்கிறார்கள்; பரபரப்பாகப் பேசுகிறார்கள்; உறக்கம் தொலைக்கிறார்கள்; வெற்றிக்காகப் பாடுபடுகிறார்கள்.

இயக்குநர் சந்திரசேகருக்கு இராமாயணத்தில் வரும் தூக்க வரம் பெற்ற கும்பகர்ணன் பற்றித் தெரியும். அவராவது ஆறு மாதம் நித்திரையும், ஆறு மாதம் விழித்திருப்பும் பெறுவார். அதுபோலவே, நடிகர் விஜய்யும் தேர்தல் காலத்திலும்கூட களம் காணமாட்டேன் எனத் தூங்கியே அடம்பிடிப்பது அதிர்ச்சி தருவதோடு, அதை அவர் வழக்கமாகவும் கொண்டுள்ளார்.

அவர் தப்பித் தவறி வெளியே வரும்போது கூட, பெரியாரைக் கொள்கைத் தலைவராகக் கொண்ட .வெ.., மூடநம்பிக்கைகளில் மூழ்கித் தவிக்கிறது. .வெ.. தலைவரோடு  நாள் குறித்து, திசை சொல்கிற  மூடத்தனத்தில் ஜோதிடர் ஒருவர் சுற்றுப் பயணங்களில் உடனிருக்கிறார். நடிகர் விஜய் தமிழ்ச் சமூகத்தில் நடந்துள்ள சமத்துவ, அடிப்படைச் சமூக சீர்திருத்தங்களை, சமூக நீதிக் கொள்கைகளை அறிந்துள்ளாரா? என்பது பெரும் கேள்வி. அவர், தான் முதல்வராகி விட்டால் அனைத்தையும் ஒரே இரவில் மாற்றிவிடலாம் எனக் கனா காண்கிறார்.

தமிழ்நாட்டை நசுக்கும் ஒன்றிய டெல்லி ஏகாதிபத்தியம் குறித்த அடிப்படை அறிவைப் பெற்றுள்ளாரா? என்பது ஐயப்பாடாகும்.      நடிகர் விஜய் தான் என்ன செய்யப் போகிறேன்? தனது மாற்று அரசியல் எவ்வாறு இருக்கும்? போன்ற செயல்திட்டங்கள் ஏதுமில்லை. சில  நிகழ்வுகளில் .வெ.. கட்சிக்குக் கருத்து இல்லாதபோது, மூத்த இரு நிர்வாகிகள் மாறுபாடான கருத்துகளை வைக்கிறார்கள். இதை நடிகர் விஜய் அறிவாரா? என்பதே தெரியாத அதிர்வாகும்.

தேர்தல் காலப் பணிகள் - வாக்குச் சாவடி முகவர்கள் என்பதில் .வெ.. 68,000 முகவர்களை வைத்துள்ளது. ஆனால், ஆளும் தி.மு..வோ இதைவிடப் பத்து மடங்கு வாக்குச் சாவடி முகவர்களைக் கொண்டுள்ளது. .வெ..வுக்கும் தி.மு..வுக்கும்தான்  போட்டி என்கிற விஜய், தேர்தல் களத்தில் பலமற்றத் தன்  நிலைக்கு மாற்று என்ன செய்யப் போகிறார்? எழுதிக் கொடுத்த வசனங்களை ஒரு வாரம் உட்கார்ந்து மனப்பாடம் செய்து, இருபது நிமிடங்கள் பேசுவதல்ல அரசியல். மக்களின் பிரச்சினைகளைக்  கண்டுணர்ந்து, மாற்றுத் தேடப் பாடுபடுவதே அரசியல்.

கரூர் பெருந்துயரத்திற்குப் பிறகு 72 நாள்கள்  .வெ..வும், நடிகர் விஜய் அவர்களும் தலைமறைவானது, பதுங்கியது மக்கள் மனத்தில் வெகுஜன அபிப்பிராயத்தைக் குலைத்து, குற்றுயிராக்கி விட்டது. சமூக ஊடகங்களில் மட்டும் வாழும் .வெ..வினர், கரூர் பெருந்துயர நாள்களில், தங்கள் சமூக ஊடகப் பக்கங்களை மூடிவிட்டு ஓடினர் என்பதும் நடந்த நிகழ்வே. அரசியல் என்பது திரைப்படங்களைப் போலக் கற்பனையில் கோட்டை கட்டுவதல்ல.

திரைப்படக் கதாநாயகனாக  வாழும்போதுகேரவனில்பதுங்கிக்கொள்ளலாம்; அரசியல் என்பது பாமர மக்களின் கேள்விகளுக்குப் பதில் கூறவேண்டிய இடமாகும். பல ஊர்களில் பொதுமக்கள் அரசியல்வாதிகளைப் பார்த்துக் கூறக் கேட்டிருக்கிறேன்: “வா மாப்பிள்ளை, எத்தனை நாளைக்கு ஓடி ஒளிவே? எலெக்சன் வரட்டும், ஓட்டுக் கேட்க வீதி வீதியாய், வீடு வீடாக வருவாய் அல்லவா... அப்ப வச்சுக்கிறேன்எனச் செய்த சம்பவங்களும் உண்டு. நடிகர் விஜய் இவைகளை அறிவாரா? இல்லை, தான் ஒரு கூட்டுப்புழு அரசியல்வாதி, நுனிப்புல் மேய்கிற கருத்தாளன் என்ற நிலையிலே தொடர்வாரா என்பதே பொதுமக்களின் கேள்வியாகும்.

ஒரு தேர்ந்த அரசியல்வாதி நடப்பு அரசியலை அறிந்தவராக, அது குறித்துச் சக நபர்களிடம் உரையாடுபவராக, அதில் தேர்ச்சி பெற்றவர்களிடம் ஆலோசனை பெறுபவராக இருப்பார். இதில் எதிலும் பொருந்திப் போகாத அரசியல்வாதியாக நடிகர் விஜய் இருக்கிறார். அவரது வெற்றி-தோல்வியை விட தேர்தல் ஆட்டத்தைக் குலைப்பராக விஜய் இருப்பார் என்பதே அரசியல் வல்லுநர்களின் கணிப்பாக அமைகிறது.

நடிகர் விஜய் இரசிகர்கள் எந்த அரசியல் தெளிவும், அடிப்படை நாகரிகமும் அறியாத இரசிக வெறியில் மிதக்கிறார்கள். இரசிக மனப்பான்மையில், விஜய்யைத் திட்டிய பொதுக்கூட்டத்தில் திட்டிய பேச்சாளரை அடித்துத் தவறு செய்கிறார்கள். எட்டு இளைஞர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, வாழ்க்கையைத் தொலைத்து நடுத்தெருவில் நிற்கிறார்கள். அவர்களது வெளிநாட்டு வேலைவாய்ப்பு, அரசு வேலைவாய்ப்பு, இராணுவத்தில் சேரும் கனவுகள் கலைந்து கதறுகிறார்கள். நடிகர் பின் செல்லும் இளைஞர்கள் விழிப்புணர்வு பெறவேண்டும். நடிகர் விஜய் அவர்களை அவரது வார்த்தைகள் வழி, இளைஞர்கள் அடையாளம் காணலாம்.

.வெ.. கட்சி, அதன் தலைவர் விஜய் அவர்களின் தமிழ்நாடு முதல்வர் குறித்த விளிப்புகள், தமிழ்நாட்டு மக்களை முகம் சுழிக்க வைக்கிறது. சவால்கள் என்ற பெயரில் ஆணவப் பேச்சு, விஜய்யின் வெறுப்பு  அரசியலின் அவரது உளப்பாங்கை வெளிக்காட்டியது. மக்களின் மரபார்ந்த சனநாயகக் கடமை என்பது மக்கள் நலன் காக்கிற, மதச்சார்பற்றக் கூட்டணியை ஆதரிப்பதாகும்.