news-details
சிறப்புக்கட்டுரை
கல்லறையிலிருந்து கலிலேயா நோக்கிய ஒரு மீட்புப் பயணம்! (உயிர்ப்பு தின சிறப்புக் கட்டுரை)

உயிர்ப்பின் வாழ்த்தும் அமைதியின் பொருளும்!

இயேசு உயிர்த்தார்! அல்லேலுயா!! அனைவருக்கும் உயிர்ப்பின் நல்வாழ்த்துகள்!

உயிர்த்த ஆண்டவர் நமக்கு முதன்முதலில் வழங்கும் ஆசிஅமைதி!’ அமைதி என்பதற்கு எபிரேய மொழியில்ஷாலோம் (Shalom) என்பது பொருள். அமைதி என்பது விரிசல்கள், பிளவுகள் மற்றும் உடைத்தல்கள் இல்லாத ஓர் ஒருங்கிணைந்த நிலை. இது ஒரு நிறைவான மனநிலை. ஆகவே, நாம் ஒருவரை அமைதி அல்லது சமாதானம் கூறி வாழ்த்தும்போது, அவர்கள் எல்லா நன்மைகளும் வரங்களும் பெற்று முழுமையான நலனுடன் வாழவேண்டும் என்று வாழ்த்துகின்றோம். முழுமையான மனநிலை, பிளவுபடாத உள்ளம், விரிசல் இல்லாத வாழ்வு நம் ஒவ்வொருவருக்கும் தேவை என்பதை இந்த உயிர்ப்பின் பெருநாள் நமக்கு ஆழமாக அறிவுறுத்துகின்றது.

புதிய உதயத்தின் அடையாளம்: காலி கல்லறை!

மானுட மதிப்பீடுகளுக்காகவும் நீதிக்காகவும் போராடிய கிறிஸ்துவின் வாழ்க்கை சிலுவை மரணத்தில் மறைந்துபோனது என்று உலகம் கருதினாலும், அது ஒரு புதிய விடியலுக்கான தொடக்கம் என்பதை இன்றைய விழா பறைசாற்றுகின்றது.

இயேசு இங்கே இல்லைஎன்ற அந்தக் காலி கல்லறை அனுபவம் வெறும் வெற்றிடம் அல்ல; அது ஒரு மகத்தான இறை அனுபவம்! கல்லறையின் கட்டுகளிலிருந்தும், மரணத்தின் பிடியிலிருந்தும் விடுதலை பெறுவதே உயிர்ப்பு என்பதற்கான சான்றாக அது அமைகின்றது.

தேடலின் தொடக்கம்: காணாமல் போன கடவுள்!

சில நேரங்களில் கடவுள் நமது வாழ்விலே இல்லாமல் இருக்கின்றார் அல்லது அவர் நம்மை விட்டு எங்கோ மறைந்துவிட்டார் என்கின்ற எண்ணம் நம்மை அழுத்தக்கூடும். இத்தகைய வெறுமை நம்மை ஆட்கொள்ளும்போதுதான், நாம் அவரைத் தீவிரமாகத் தேடத் தொடங்குகின்றோம். அந்தத் தேடலே நம்மை உண்மையான இறை அனுபவத்தை நோக்கிக் கூட்டிச்செல்கின்றது. “நாம் விழித்தெழ அவர் துயில் கொண்டார்; நாம் வாழ்வு பெற அவர் இறந்தார் என்று புனித அகுஸ்தினார் குறிப்பிடுகின்றார்.

கல் புரட்டப்பட்டதன் நோக்கம்: ஓர் இறையியல் பார்வை!

கல்லறையின் கல் புரட்டப்பட்டதைப் பற்றி புனித அகுஸ்தினார் ஓர் ஆழமான இறையியல் விளக்கத்தை அளிக்கின்றார். கல் புரட்டப்பட்டது இயேசுவைக் கல்லறையிலிருந்து வெளியே கொண்டு வருவதற்காக அல்ல; மாறாக, சீடர்கள் உள்ளே சென்று உண்மையைக் காண்பதற்காகவே. நாம் உள்ளே சென்று, ‘எங்கே என் கடவுள்?’ என்று அங்கலாய்ப்பதற்கும், ‘எங்கே நீர் சென்றீர்?’ என்று வினவுவதற்கும், ‘ஏன் எங்களை விட்டுச் சென்றீர்?’ என்ற நம் உள்ளத்தின் ஆதங்கத்தை வெளிப்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாகவே அந்தக் கல் அகற்றப்பட்டது. நாம் இறைவனைத் தேடி உள்ளே செல்வதற்கும், காலி கல்லறையின் வழியாக இறைப் பிரசன்னத்தை உணர்வதற்குமே இந்தச் செயல் அமைந்தது என்று புனித அகுஸ்தினார் மிகத் தெளிவாக விளக்குகின்றார்.

அச்சத்திலிருந்து துணிவுக்கு: சீடர்களின் மனமாற்றம்!

இயேசுவின் மரணத்திற்குப் பிறகு பயந்து பதுங்கியவர்கள், ஓடி ஒளிந்தவர்கள், அவரை மறுதலித்தவர்கள் என அனைவரும்அன்பு செய்யும் உள்ளம் அழிவதில்லைஎன்பதை மூன்று நாள்களுக்குப் பிறகு உணர்ந்தார்கள். இடைவெளி விழுந்த அவர்களின் மனம், காலி கல்லறையைப் பார்த்தவுடன் மாறத்தொடங்கியது. கடவுளுடன் இருந்தபோது அவரது உடனிருப்பின் அருமையையும் அருகாமையையும் உணரத் தவறிய சீடர்கள், அவர் மறைந்த பிறகு பெரும் மாற்றத்திற்கு உள்ளானார்கள். இயேசு உயிர்த்தெழுந்த பிறகு அவர்களின் உள்ளங்களில் ஒரு வியக்கத்தக்க மாற்றம் ஏற்பட்டது. அச்சத்துடன் ஓடி ஒளிந்தவர்களின் முகங்களில் இப்போது துணிவு பிறக்கின்றது. அவநம்பிக்கை இருளில் விழுந்தவர்கள் வாழ்வில் நம்பிக்கையெனும் பேரொளியைக் காண்கின்றார்கள். பொன்னும் பொருளும் அற்ற நிலையிலும் ஒரு தெய்வீக மகிழ்ச்சி அவர்களிடம் மேலோங்குகின்றது.

அன்று பயந்து நடுங்கிய பேதுரு, இன்று மிகுந்த துணிவுடன் நற்செய்தியை அறிவிக்கத் தொடங்குகின்றார். சுயநலத்துடன் வாழ்ந்த பலர், எல்லாவற்றையும் பொது உடைமையாக்கி, பகிர்ந்து உண்டு, அன்பிலும் செபத்திலும் மனம் ஒன்றித்து வாழ்ந்தனர் என்று தொடக்ககாலத் திரு அவை நமக்குக் கற்றுத் தருகின்றது.

தடுத்தாட்கொள்ளும் ஆண்டவர்: உயிர்ப்பின் சாட்சிகள்!

சீடர்களின் வாழ்வில் உயிர்ப்பின் இறையனுபவம் என்பது தற்செயலானது அல்ல; அது உயிர்த்த ஆண்டவரால் உறுதிப்படுத்தப்பட்டு வளர்க்கப்படுகின்றது. உயிர்த்த ஆண்டவர் சோர்விலும் தயக்கத்திலும் இருந்த பலரைத் தேடிச் சென்று வழிமறித்துத் தடுத்தாட்கொள்கின்றார். உதாரணமாக, எம்மாவுப் பயணத்திலே கலங்கி நின்ற சீடர்களைத் தடுத்தாட்கொண்டு அவர்களுக்குத் தம்மை வெளிப்படுத்துகின்றார். அதேபோல், ஐயம் கொண்ட தோமாவையும், அழுதுகொண்டிருந்த மகதலா மரியாவையும் நேரில் சந்தித்து அவர்களுக்குப் புதிய நம்பிக்கையை ஊட்டுகின்றார்.

இயேசு ஒரு வெறும் ஆவி அல்ல; மாறாக, அவர் முழுமையான மனிதர் மற்றும் முழுமையான கடவுள் என்பதைத் தமது காயங்கள் வழியாகவும், உணவருந்தும் செயல்கள் வழியாகவும் அவர்களுக்கு மெய்ப்பிக்கின்றார். ‘அஞ்சாதீர்கள்என்ற ஆற்றல்மிக்க ஆற்றுப்படுத்தும் செய்தியை அவர் வழங்குகின்றார். தமது சீடர்களைசகோதரர்களே!’ என்று உரிமையோடு அழைத்து, அவர்களை மீண்டும்கலிலேயாவிற்குச் செல்லுங்கள்என்று பணிக்கின்றார். மீண்டும் ஒரு முறை கலிலேயாவிற்குச் செல்லுமாறு அவர் விடுக்கும் அந்த அழைப்பு, இன்றைய நமது வாழ்விற்கும் மிக முக்கியமான செய்தியாக நம் கண்முன் நிற்கின்றது.

கல்லறையிலிருந்து கலிலேயா நோக்கி: ஒரு மீட்புப் பயணம்!

கல்லறையிலே தடுத்தாட்கொள்ளப்பட்ட சீடர்களும் பெண்களும் மீண்டும் கலிலேயா செல்லுமாறு ஏன் பணிக்கப்படுகிறார்கள்? ஏனெனில், கல்லறையிலிருந்து கலிலேயாவை நோக்கி ஒரு புதிய பயணம் இப்போது தொடங்குகின்றது. இயேசுவின் பொதுவாழ்வும் பணிவாழ்வும் தொடங்கிய இடமே கலிலேயா. மீன் பிடிப்பவர்களையும், சுங்கச்சாவடியில் இருந்தவர்களையும்மனிதர்களைப் பிடிப்பவர்களாய் மாற்றுவேன்என்று அவர் முதன்முதலில் அழைத்தது, தண்ணீரைத் திராட்சை இரசமாக மாற்றியது, அப்பம் பலுகச் செய்தது மற்றும் வல்ல செயல்கள் பல புரிந்தது என அனைத்தும் இந்த மண்ணில்தான் நிகழ்ந்தன. பிற இனத்தாரும் சாதாரண மக்களும் வாழும் அந்தப் பகுதியை உயிர்த்த ஆண்டவர் இப்போதும் நேசிக்கின்றார். ஆகவேதான், அந்தத் தொடக்க இடத்திற்கே மீண்டும் செல்லுமாறு அவர்களைப் பணிக்கின்றார்.

உயிர்த்த ஆண்டவர் தம்மைத் தண்டித்த பிலாத்துவிற்கோ, மறைநூல் அறிஞர்களுக்கோ அல்லது ஏளனம் செய்தவர்களுக்கோ தம்மை வெளிப்படுத்தித் தற்பெருமை கொள்ள விரும்பவில்லை; மாறாக, தாம் நேசித்த மக்களிடமும், தம்மை மறுதலித்த சீடர்களிடமும் மீண்டும் வருகின்றார். “நீங்கள் தவறு செய்தாலும், நான் உங்களை அன்பு செய்கின்றேன்என்ற செய்தியைத் தமது வருகையின் மூலம் உறுதிப்படுத்துகின்றார். கலிலேயா என்பது நமது தொடக்க நிலை; நாம் திருமுழுக்கின் போது பெற்றுக்கொண்ட அந்த உன்னத புனித அருளின் நிலை. அந்தத் தொடக்க நிலைக்கு நாம் மீண்டும் திரும்பவேண்டும் என்பதே இன்றைய அழைப்பு. பாவமற்ற நிலைக்கு நாம் மாறும்போதுதான் உயிர்ப்பின் உண்மையான பொருளை உணர்கின்றோம். அதனால்தான் இன்று நாம் திருமுழுக்கு வாக்குறுதிகளைப் புதுப்பிக்கின்றோம்.

உயிர்ப்பின் சக்தி: சமூக மாற்றத்திற்கான கருவி!

உயிர்ப்பு என்பது ஏதோ ஒரு வரலாற்று நிகழ்வு மட்டுமல்ல; அது இன்றும் நமக்குள் நிகழவேண்டிய ஒரு மாற்றம். தீமையைத் தகர்த்து, குற்றங்களைக் கழுவி, துயருற்றோருக்கு மகிழ்ச்சியைத் தருவதே உயிர்ப்பின் ஒளி. பகைமையை விரட்டி, மன ஒற்றுமையை உருவாக்கும் இந்த இறையனுபவம் இன்று மனித இனம் அனைத்தோடும் ஒன்றிணைந்துவிட்டது.

புனித பவுல் கூறுவதுபோல, “கிறித்தவர் உயிர்ப்பை நோக்கியே வாழ்கிறார்; சாவை நோக்கி அல்ல.” இயேசுவை உயிர்ப்பித்த அதே ஆவி நமக்குள் குடிகொண்டிருக்கின்றது. அந்த உயிர்ப்பின் சக்தியை நாம் எப்போது உணர்கிறோம்? எப்போதெல்லாம் பிறருடைய துன்பங்களைத் துடைக்க நாம் முன்வருகின்றோமோ, அப்போதெல்லாம் உயிர்ப்பின் சக்தி வெளிப்படுகின்றது. ஒடுக்கப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், கல்வி மறுக்கப்பட்டோர், இருப்பிடமற்றோர் மற்றும் எளிய மக்களின் வாழ்வில் படிந்துள்ள துன்பக் கறைகளை நீக்கும்போது நாமும் உயிர்ப்பின் சக்திகளாக மாறுகின்றோம்.

கிறிஸ்துவில் உயிர்ப்போம்!

வாழ்ந்து கொண்டிருக்கும்போதே கிறிஸ்துவின் உயிர்ப்பில் நாம் பங்குகொள்ளவேண்டும் என்பதே இந்த நாளின் அறைகூவல். கல்லறை முதல் கலிலேயா வரையிலான பயணம் நம் வாழ்வில் தொடங்கட்டும். பாவ நிலையிலிருந்து மீண்டு, தொடக்க அருளின் நிலைக்குச் செல்வோம். இயேசுவை உயிர்ப்பித்த ஆவி நமக்குள் இருக்கின்றது என்கின்ற ஆழமான நம்பிக்கையோடு இந்தப் பயணத்தைத் தொடங்குவோம்.

நான் உன்னோடு இருக்க விரும்புகின்றேன்; உன் பாவச் சூழலால் நீ என்னை மறைத்தாலும் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கின்றேன்என்று இயேசு நம்மிடம் கூறுகின்றார். நாமும் கிறிஸ்துவில் உயிர்ப்போம்; நம் வாழ்வின் வழியாகப் பிறரையும் கிறிஸ்துவில் உயிர்ப்பிக்கச் செய்வோம்.