இன்றைய நவீன எண்ணிம (டிஜிட்டல்) உலகில், சமூக வலைதளங்கள் வெறும் தகவல் பரிமாற்றக் கருவிகள் மட்டுமல்ல; அவை இறையழைத்தலை வளர்க்கும் ஒரு புனிதமான பணித்தளம் என்று அண்மையில் நடைபெற்ற பன்னாட்டு இணையவழி கருத்தரங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. ‘சமூக ஊடகங்களும் இறையழைத்தல் மேம்பாடும்’ என்ற தலைப்பில் பிப்ரவரி 27, 2026 அன்று நடைபெற்ற இந்நிகழ்வில், உலகம் முழுவதிலுமிருந்து சுமார் 548 துறவியர் மற்றும் தொடர்பாளர்கள் பங்கேற்றனர். இதில் உரையாற்றிய ஊடகவியலாளர் இரபேல் புஸ்கெமி, “இணைய உலகம் மாயையல்ல; அது உண்மையானது. அங்கு நாம் பதிவிடும் உள்ளடக்கங்களை விட, நமது நேர்மையான நோக்கமே முக்கியம்” என்றார். சமூக வலைதளங்களை வெறும் ‘தொலைக்காட்சி’ போல ஒருதலைபட்சமாகப் பயன்படுத்தாமல், இளைஞர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் உரையாடல் தளமாக மாற்றவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், “டிஜிட்டல் கண்டத்தில் திறந்தநிலை மடாலயமாக இருந்து, தேடுதலில் உள்ள இளைஞர்களுக்குத் துணைநிற்பதே எங்களது பணி” என்று அவர்கள் பகிர்ந்து கொண்டனர். சமூக வலைதளங்களில் தனிநபர் புகழைத் தவிர்த்து, சமூகமாக இணைந்து செயல்படுவதன் அவசியத்தையும் இக்கருத்தரங்கம் வலியுறுத்தியுள்ளது.