news-details
ஆன்மிகம்
புனித யோசேப்பு வல்லமை மிகுந்த புனிதர்! (மார்ச் 19)

விண்ணுலகில் தேர்தல்

ஒருமுறை விண்ணுலகில் தேர்தல் நடைபெற்றதாம்! அத்தேர்தலில் யாரோ ஒருவர் கம்யூனிஸ்டு கட்சிக்கு வாக்களித்துவிட்டார். இதைக் கேள்வியுற்ற தந்தையாம் கடவுளுக்குக் கடும் கோபம் வந்துவிட்டது. “கடவுளே இல்லையென்று சொல்கின்ற கம்யூனிஸ்டுகளுக்கு வாக்களித்தது யார்?” என்று அறிய விரும்பினார் தந்தையாம் கடவுள்.

அதனால், வானதூதர் தலைமையில் ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டது. தீவிர புலன் விசாரணைக்குப் பிறகு கம்யூனிஸ்டு கட்சிக்கு வாக்களித்தது புனித யோசேப்பு என்று கண்டுபிடிக்கப்பட்டது.

புனித யோசேப்பு தந்தையாம் கடவுளின் முன்னிலையில் நிறுத்தப்பட்டார். “நீர் ஏன் கம்யூனிஸ்டுகளுக்கு வாக்களித்தீர்?” என்று கேள்விக் கணையைத் தொடுத்தார் தந்தையாம் கடவுள்.

கம்யூனிஸ்டுகள் தொழிலாளர்களுக்காகக் குரல் கொடுப்பவர்கள். நான் தொழிலாளர்களின் பாதுகாவலன். எனவே, அவர்களுக்கு வாக்களித்தேன்என்று பதில் கூறினார் புனித யோசேப்பு.

என்னவாக இருந்தாலும்கடவுளே இல்லைஎன்று சொல்கின்ற கம்யூனிஸ்டுகளுக்கு வாக்களித்தது பெரும் குற்றமாகும். எனவே, நீர் விண்ணுலகை விட்டு வெளியேற உத்தரவிடுகிறேன்!” என்று ஆணையிட்டார் தந்தையாம் கடவுள்.

அதற்குப் புனித யோசேப்பு, “நான் வெளியேற வேண்டுமென்றால் எனது மகன் இயேசுவையும் அழைத்துச் செல்வேன்என்று பதில் கூறினார்.

இதைக் கேட்டவுடன் தந்தையாம் கடவுள் சற்று அதிர்ந்து போனார். இயேசு ஆண்டவர் தூய மூவொரு கடவுளின் இரண்டாம் ஆள் இல்லாமல் விண்ணுலகம் எப்படி இயங்க முடியும்? எனவே, தந்தையாம் கடவுள் தமது முடிவை மாற்றிக் கொண்டார். புனித யோசேப்பு விண்ணுலகில் தொடர்ந்து வாழ அனுமதிக்கப்பட்டார்.

அன்பு மிகுந்தவர்களே! இக்கதை கூறும் செய்தி என்னவென்றால், புனித யோசேப்பு மண்ணுலகில் மட்டுமன்றி, விண்ணுலகிலும் வல்லமை மிகுந்தவர் என்பதுதான். மண்ணுலகில்  வாழும் மாந்தர்களின் மன்றாட்டுகளுக்குத் தனது மகன் இயேசு ஆண்டவர் வழியாக வரங்களைப் பெற்றுத் தரும் ஆற்றல் வாய்ந்தவர் புனித யோசேப்பு.

திருவிவிலியத்தில் புனித யோசேப்பு

இவர் ஒரு நேர்மையாளர்என்று புனித மத்தேயு நற்செய்தியாளர் கூறுகின்றார் (1:19). நேர்மையாளர் எனும் சொல்லுக்கு மனசாட்சி உடையவர், உண்மையை ஏற்றுக்கொள்பவர், நீதியோடு வாழ்பவர் என்று பொருள் கொள்ளலாம். எனவேதான் அன்னை மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல், கடவுளின் திட்டத்திற்கு அடிபணிகின்றார். அதனால்தான் கவியரசு கண்ணதாசன் புனித யோசேப்பை, ‘சொல்லரும் அறிஞரே! சூசையப்பரே!’ என வாழ்த்துகிறார் (இயேசு காவியம்).

புனித யோசேப்பு பொறுப்பும் கடமையும் உள்ள தந்தையாகச் செயல்பட்டார். கனவில் எச்சரிக்கப்பட்டவுடன் இயேசு பாலகனையும், அன்னை மரியாவையும் அந்த இரவிலேயே எகிப்துக்கு அழைத்துச் செல்கிறார் (மத் 2:14). கடமையை ஆற்றுவதில் ஆர்வமும் விவேகமும் புனித யோசேப்பிடம் இருப்பதைக் காண்கிறோம். இப்புனித யோசேப்பு தாவீதின் வழிமரபினர் என்பது (லூக் 2:4), அவருக்கு மேலும் மாண்பையும் புகழையும் சேர்க்கிறது.

திருத்தந்தை 10-ஆம் பயசின் கூற்று

புனித யோசேப்பு அமைதியானவர்; ஆழ்ந்த நம்பிக்கையின் அடையாளமானவர்; எளிமையானவர்; தாழ்ச்சி உடையவர்; தியாக உள்ளம் கொண்டவர்; கடவுளிடம் தடுமாற்றம் இல்லாத நம்பிக்கை வைத்தவர்; தொழிலாளர்களுக்கு முதன்மையான அடையாளமாகத் திகழ்பவர்; செய்யும் தொழிலை ஊக்கத்தோடும் அர்ப்பணத்தோடும் செய்யும் ஆன்மிகத்தை அருள்பவர்என்று நினைவில் வாழும் திருத்தந்தை 10-ஆம் பயஸ் கூறுகிறார்.

புனித யோசேப்பு ஓர் அருமையான பாதுகாவலர்

புனித யோசேப்பின் பண்பையும் ஆற்றலையும் கண்ணுற்றத் திரு அவை, அவரைப் பல்வேறு நிலைகளுக்குப் பாதுகாவலராய் நியமித்துள்ளது. புனித யோசேப்பு தொழிலாளர்களின் பாதுகாவலர், குடும்பங்களின் பாதுகாவலர், குடும்பத் தந்தையர்களின் பாதுகாவலர், கல்வியின் பாதுகாவலர், பல்கலைக்கழகங்களின் பாதுகாவலர், கற்பின் பாதுகாவலர், கன்னியர் இல்லங்களின் பாதுகாவலர், திருத்தந்தையர்களின் பாதுகாவலர், திரு அவையின் பாதுகாவலர், பயணிகளின் பாதுகாவலர், அகதிகளின் பாதுகாவலர், வழக்கறிஞர்களின் பாதுகாவலர், நல்மரணத்தின் பாதுகாவலர். மேலும், புனித யோசேப்பு ஆஸ்திரியா, குரோவாசியா போன்ற நாடுகளின் பாதுகாவலரும் ஆவார்.

புனித யோசேப்பை நோக்கிய மன்றாட்டுகள்

உலகெங்குமுள்ள பக்தர்கள் புனித யோசேப்பை நோக்கி வேலைவாய்ப்பு கிடைக்க, அன்றாட வாழ்வுக்குப் பாதுகாப்பு கிடைக்க, இறையழைத்தல் கிடைக்க, சுகப்பிரசவம் நடக்க, நல்ல திருமணம் நடைபெற, நல்ல மரணம் கிடைக்க வேண்டுகின்றனர்.

புனித யோசேப்பை நோக்கி எழுப்பப்படுகின்ற மன்றாட்டுகள் அதிக அளவில் நிறைவேற்றப்படுகின்றன. கடும் நோயிலிலிருந்து விடுதலை பெற்ற புனித அவிலா தெரசம்மாள், “புனித யோசேப்பு வழியாக நான் கேட்ட எந்த மன்றாட்டும் நிறைவேற்றப்படாமல் போனதில்லைஎன மொழிகின்றார்.

எனவே, நாம் ஒவ்வொருவரும் புனித யோசேப்பு வழியாகக் கடவுளிடம் வேண்டுவோம். எல்லாம் வல்ல இறைவன் நமது வேண்டுதல்களை நிறைவேற்றுவாராக!