news-details
ஞாயிறு தோழன்
தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு (08-03-2026) விப 17:3-7; உரோ 5:1-2,5-8; யோவா 4:5-42

திருப்பலி முன்னுரை

இறைநம்பிக்கையில் வேரூன்றி, இறையனுபவம் பெற்று வாழத் தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு நமக்கு அழைப்பு விடுக்கிறதுஇன்றைய நற்செய்தியில் கிறிஸ்து சமாரியப் பெண்ணுக்குநானே வாழ்வு தரும் தண்ணீர்என்ற உண்மையை வெளிப்படுத்துகிறார். வாழ்வு தரும் தண்ணீர் தம்மிடம்தான் உள்ளது என்பதைச் சமாரியப் பெண் வழியாக இன்று நமக்கும் உணர்த்துகின்றார்.

தண்ணீர் நமது உடல் தாகத்தைத் தணிக்கிறது. இறையனுபவம் நமது ஆன்மிகத் தாகத்தைத் தணிக்கிறது. கிறிஸ்துவின் இரத்தத்தால் மீட்கப் பெற்ற இறைவனின் பிள்ளைகளாகிய நம்மிடம் அன்பிற்கான, நீதிக்கான, உண்மைக்காக, சமத்துவத்திற்கான, நேர்மைக்கான தாகம் இருக்கவேண்டும். இயேசுவின் வார்த்தையால் ஆன்மிகத் தாகம் தணியப் பெற்ற சமாரியப் பெண், இயேசு யார்? தான் யார்? தாகம் தீர்க்கும் தண்ணீர் தருபவர் யார்? என்பதை உணர்ந்து, அகவிடுதலைப் பெற்று அவரைமீட்பர்என்று மனதார அறிக்கையிடுகிறார்.

நமது நம்பிக்கை வாழ்வுக்கு உணவாக, ஆன்மிக உறவாக, நிலைவாழ்வைத் தரும் உயிருள்ள ஊற்றாக நம்மில் வாழும் இறைவனை வல்லமையோடு அறிக்கையிட வரம் வேண்டுவோம். பெண்கள் தினமாகிய இன்று அன்னையாக, மனைவியாக, சகோதரியாக, மகளாக எனப் பன்முகத்தன்மையோடு இந்த உலகத்தை ஒளிர்வித்துக் கொண்டிருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் இறைவன் ஆசியளிக்கவும், ஆண்-பெண் சமத்துவம் இம்மண்ணில் மலரவும் வரம் வேண்டி இணைவோம் இத்திருப்பலியில்.

முதல் வாசக முன்னுரை

இஸ்ரயேல் மக்கள் தண்ணீருக்காக மோசேயை எதிர்த்த வேளையில், ஆண்டவர் அவர்களைத் தண்டிக்காமல் மோசேயின் வழியாக அவர்களின் தாகத்தைத் தணிக்கிறார். ஆண்டவர் அவர்கள்மீது கொண்டிருந்த இரக்கத்தால் அவர்களை அற்புதமாக வழிநடத்தி உடன் பயணிக்கிறார். ஆண்டவரின் வல்லமையையும் பேரன்பையும் அனுபவித்து வாழ அழைக்கும் முதல் வாசகத்திற்குச் செவிமடுப்போம்

இரண்டாம் வாசக முன்னுரை

கடவுளின் பிள்ளைகளாகிய நாம்நமக்காக உயிரைக் கொடுத்த இயேசுவின்மீது தளராத நம்பிக்கை கொண்டு வாழும்போதுதான் கடவுளின் மாட்சியைக் காணமுடியும்கடவுளின் பேரன்பையும், கிறிஸ்து வழியாக நாம் பெற்றுக் கொண்ட மீட்பையும், தூய ஆவியின் வல்லமையையும் உணர்ந்து நம்பிக்கையோடு வாழ அழைக்கும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிமடுப்போம்.

மன்றாட்டுகள்

1. நிலைவாழ்வு தரும் ஊற்றாகிய ஆண்டவரே! எம் திரு அவையை வழிநடத்தும் திருத்தந்தை, ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர், பொதுநிலையினர் அனைவரும் உமது வார்த்தையை வாழ்க்கையால் அறிவிக்கவும், இறையாட்சியின்  மதிப்பீடுகளை விதைக்கவும் வரம் தரவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

2. வாழ்வு தரும் ஊற்றாகிய ஆண்டவரே! நாங்கள் அனைவரும் பாவ வாழ்க்கையை விடுத்து தூய வாழ்வு வாழவும், பொருள் செல்வம் தேடுவதிலேயே நாள்களை நகர்த்தாமல் அருள்செல்வத்தைத் தேடிடவும், ஒப்புரவு அருளடையாளத்தால் உள்ளத்தைத் தூய்மையாக்கவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

3. ‘நானே நல்ல ஆயன்என்று மொழிந்த ஆண்டவரேபெண்கள் தினத்தைக் கொண்டாடும் இன்று, எமது வீட்டையும் நாட்டையும் தங்களது அன்புப் பணிகளால் வாழ்வித்துக் கொண்டிருக்கும் அனைத்துப் பெண்களின் மாண்பு பாதுகாக்கப்படவும், சமத்துவத்தோடு பெண்களை நாங்கள் நடத்தவும், பெண்களின் வாழ்வு வளம் பெறவும் வரம்தர வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.

4. ஞான வெளிச்சமான எம் இறைவா! அரசுத் தேர்வினை எழுதிக்கொண்டிருக்கும் மற்றும் எழுதச் செல்லவிருக்கும் அனைத்து மாணவ-மாணவியரும் ஞானத்தோடு தேர்வு எழுதி, கல்வித் தேர்விலும் வாழ்க்கைத் தேர்விலும் வெற்றி அடையவும், இந்நாள்களில் உடலுக்கும் உள்ளத்திற்கும் தேவையான ஆற்றலைத் தந்து காத்திட வேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகின்றோம்.