கிறித்தவ வழிபாட்டு ஆண்டின் மிக முக்கியமான வாரமான ‘புனித வாரத்தின்’ தொடக்கமே குருத்து ஞாயிறு. தெருக்களில் குருத்தோலைகளை ஏந்தி ‘ஓசன்னா’ என்று பாடிச் செல்வது வெறும் மதச்சடங்கல்ல; அது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எருசலேம் வீதிகளில் நிகழ்ந்த ஒரு மாபெரும் அரசியல் எழுச்சியின் மறுபதிப்பு. இயேசுவின் எருசலேம் பயணம் என்பது வெறும் ஆன்மிகப் பயணம் மட்டுமல்ல; அது அதிகார மையங்களை நோக்கி விடப்பட்ட நேரடி சவால்! அது எளியவர்களின் அதிகாரம், நீதிக்கான வேட்கை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக அமைந்த ஓர் ‘அரசியல் முன்னெடுப்பு.’
கழுதை எனும்
குறியீடு...
அக்காலத்து
அரசர்கள் போர்க்குதிரைகளின் மீது அமர்ந்து, ஆயுதப் படைகளுடன் நகருக்குள் நுழைவார்கள். அது அச்சத்தையும் ஆதிக்கத்தையும் பறைசாற்றும் நுழைவு. ஆனால், இயேசு ஒரு கழுதைக் குட்டியைத் தேர்ந்தெடுத்தார். இது ஒரு குறியீடு.
குதிரை
போரின் அடையாளம்; கழுதை அமைதியின் அடையாளம். இயேசுவின் நுழைவு வன்முறைக்கு மாற்றாக அறப்போராட்டத்தை முன் வைத்தது. இது அமைதிக்கான அரசியல். கழுதை என்பது அடித்தட்டு மக்கள் பயன்படுத்தும் விலங்கு. அது எளியவர்களின் அடையாளம். ஓர் அரசன் சாமானியர்களோடு தன்னைப் பொருத்திக்கொள்வது என்பது அன்றைய நிலப்பிரபுத்துவச் சூழலில் ஒரு புரட்சிகரமான அரசியல் செயல். இது ‘முகமற்றவர்களின் முகமாக’ அவர் மாறிய தருணம்.
உண்மைக்கும் நீதிக்குமான
பயணம்...
இயேசு
எருசலேமிற்குள் நுழைந்தது தற்காப்புக்காக அல்ல; உண்மையை உரக்கக் கூறுவதற்காக. எருசலேம் அன்றைய யூதச் சமூகத்தின் மதம் மற்றும் அரசியல் அதிகாரத்தின் மையப்புள்ளி. அங்கு நிலவிய ஊழல்களையும் ஆன்மிகச் சுரண்டல்களையும் கேள்வி கேட்கவே அவர் அங்கு சென்றார்.
இந்தப்
பயணம் நீதிக்கான பயணம். ஆலயத்திற்குள் சென்று வியாபாரிகளை விரட்டியடித்தது ஒரு மதச் சீர்திருத்தம் மட்டுமல்ல; அது ஏழை மக்களின் பொருளாதாரத்தைச் சுரண்டும் அமைப்பிற்கு எதிரான தாக்குதல். ‘குரலற்றவர்களின் குரலாக’ அவர்
ஒலித்தார். அன்றைய உரோமானிய ஆதிக்கத்திற்கும், அவர்களுக்குத் துணை நின்ற மதத் தலைவர்களுக்கும் இந்த நுழைவு ஓர் அச்சுறுத்தலாகத் தெரிந்தது. அதனால்தான் அவர்கள் அவரைக் கொல்லத் திட்டமிட்டனர்.
மனித மாண்பும்
உரிமைகளும்...
சமகால
அரசியல் சூழலில் இயேசுவின் இந்தப் பயணத்தைப் புரிந்துகொள்ள திருத்தந்தை 14-ஆம் லியோ அண்மையில் வெளியிட்ட ‘மக்களின் மாண்பு’ குறித்த செய்தியை நாம் நினைவுபடுத்த வேண்டும்: “ஒவ்வொரு மனிதனும் இறைவனின் சாயலில் படைக்கப்பட்டவன்; எனவே, அவனது உரிமைகளைப் பறிப்பதும், அவனை அடிமைப்படுத்துவதும் இறைவனுக்கு எதிரான செயல். சமூகத்தின் விளிம்புநிலை மக்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதே உண்மையான நற்செய்திப் பணி.” திருத்தந்தையின் இந்த வரிகள் குருத்து ஞாயிறின் அரசியலோடு பொருந்திப் போகின்றன. இயேசுவின் பயணம் மனித மாண்பை நிலைநாட்டும் பயணமாகும். அதிகாரம் என்பது அடக்குமுறைக்கு அல்ல; மாறாக, பலவீனமானவர்களைக் காப்பதற்கே என்பதை அவர் தமது செயல்கள் மூலம் உணர்த்தினார்.
வெறும் பார்வையாளர்களாக
அல்ல;
பங்கேற்பாளர்களாக...
இன்று
நாம் குருத்து ஞாயிறைக் கொண்டாடும்போது, வேடிக்கை பார்க்கும் ஒரு கூட்டமாக இருக்கக்கூடாது. இயேசுவோடு இணைந்து எருசலேம் வீதிகளில் பயணிக்கும் உண்மையான பங்கேற்பாளர்களாக நாம் மாறவேண்டும். இன்றைய சூழலில் எருசலேம் பயணம் என்பது, சமூகத்தில் நிலவும் சாதிய, மதவாதச் சுவர்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பது; எளியவர்களின் நிலங்கள் பறிக்கப்படும்போதும், சுற்றுச்சூழல் சீரழிக்கப்படும்போதும் நீதிக்காகப் போராடுவது; அதிகார வர்க்கத்தின் பொய்களுக்கு எதிராக உண்மையை உரக்கப் பேசுவது.
இயேசுவின்
அரசியல் என்பது ஆசனங்களைப் பிடிப்பதல்ல; மாறாக, கடைசி வரிசையில் இருப்பவனை முதல் வரிசைக்குக் கொண்டு வருவதாகும். அது ‘சகோதரத்துவத்தின்’ அரசியல்.
இன்றைய குருத்து ஞாயிறு, நமது கைகளில் இருக்கும் ஓலைகளைவிட, நமது இதயங்களில் இருக்கும் சமூக நீதி உணர்வை அதிகம் எதிர்பார்க்கிறது.
ஆகவே,
குருத்து ஞாயிறு என்பது ஒரு வெற்றியின் கொண்டாட்டம் மட்டுமல்ல; அது ஒரு தியாகத்தின் தொடக்கம். நீதிக்காகப் பேசுபவன் சிலுவையைச் சுமக்க நேரிடும் என்பதை இயேசு அறிந்திருந்தார். ஆனாலும் அவர் பின்வாங்கவில்லை. நாமும் இன்று குருத்தோலைகளை ஏந்தும்போது, ‘ஓசன்னா’ என்று முழங்கும்போது ‘இயேசுவைப்
போல நானும் ஒடுக்கப்பட்டவர்களின் குரலாக இருப்பேன்; அநீதியைக் கண்டு அஞ்சமாட்டேன்; உண்மையான சனநாயகத்தையும், சமத்துவத்தையும் நிலைநாட்ட எனது பயணத்தைத் தொடர்வேன்’
என உறுதிமொழி எடுப்போம்.
குருத்து
ஞாயிறு என்பது வெறும் ஒருநாள் நிகழ்வல்ல; அது வாழ்நாள் முழுவதற்குமான ஒரு போராட்டத்தின் அறைகூவல்!