1. ஓர் எச்சில் தீர்ப்பு
“தம்மை
இறைமகன் என்று சொன்னாரா?”
“ஆம்!”
“ஆலயத்தை
மூன்று நாளில் கட்டுவேன் என்றாரா?”
“ஆம்!”
“பாவிகளை
மன்னித்தாரா?”
“ஆம்!”
“ஏழைகளின்
சக்தியைத் திரட்டினாரா?”
“ஆம்!”
“இவைதாம்
இயேசுவின் பாவங்களா?”
“இல்லை.
பணிகள்!”
2. ஒரு
சிலுவைத்
தோள்
“தொட்டாயா?”
“ஆம்!”
“முத்தமிட்டாயா?”
“ஆம்!”
“சுமக்காமலே
கனக்கிறதா?”
“ஆம்!”
“உன்
பெயர்தானா சீடன்?’
“இல்லை...
பக்தன்”
3. ஒரு
வீழ்ச்சி
மண்!
“தரையில்
விழுந்தாயா?”
“ஆம்!”
“மண்ணை
முத்தமிட்டாயா?”
“ஆம்!”
“கல்லையும்
முள்ளையும் பார்க்கிறாயா?”
“இல்லை
மண்ணுக்குள் வேர்களை!”
4. ஒரு
சந்திப்புக்
கண்!
“பேசவில்லையா?”
“ஆம்!”
“அழவில்லையா?”
“ஆம்!”
“ஆறுதல்
சொல்லவில்லையா?”
“ஆம்!”
“பிறகு
ஏன் பார்த்தாய்?”
“இல்லை.
சந்தித்தேன்.”
5. ஓர்
உடன்-பாதம்
“உதவி
செய்யப் போறியா?”
“ஆம்!”
“கட்டாயப்படுத்தினார்களா?”
“ஆம்!”
“சிலுவை
சுமக்க மனமிருக்கா?”
“இல்லை.
சிலுவையில் பூட்ட சக்கரங்கள் இருக்கு.”
6. ஒரு
நட்புத்
துணி
“கோடை
காலமா?”
“ஆம்!”
“செடிகள்
வாடுகின்றனவா?”
“ஆம்!”
“மழை
மேகத்திடம் கெஞ்சலா?”
“இல்லை.
நானே நீர் பாய்ச்ச வேண்டும்!”
7. ஒரு
நடை
இரத்தம்!
“தோல்வியா?”
“ஆம்!”
“முயற்சி
செய்தாயா?”
“ஆம்!”
“மற்றொரு
முயற்சி செய்யும் முனைப்பு இருக்கிறதா?”
“ஆம்!”
“அப்ப...
இன்னும் நீ தோற்கல”
8. ஒரு
சோகக்
கண்ணீர்
“கைக்குட்டை
தயாரா?”
“ஆம்!”
“துண்டு
தயாரா?”
“ஆம்!”
“கண்ணீரைத்
துடைப்பதற்குத்தானே?”
“இல்லை
வியர்வையை!”
9. ஒரு
சரிவு
வியர்வை!
“பாதை
தயாரா?”
“ஆம்!”
“பயணம்
தயாரா?”
“ஆம்!”
“சிலுவை
தயாரா?”
“ஆம்!”
“பிறகு
என்ன தயக்கம்?”
“வாடகை
இயேசு கிடைக்கவில்லை!”
10. ஒரு
மிச்ச
ஆடை...
“பிச்சைக்காரியா...?”
“ஆம்!”
“சேலை
கிழிந்துவிட்டதா?”
“ஆம்!”
“தூக்கி
எறியப் போகிறாயா?”
“இல்லை,
தங்கச்சிக்குத் தாவணி!”
11. ஒரு
காய
ஆணி
“ஆகாயம்
அழகா?”
“ஆம்!”
“பூமி
அழகா?”
“ஆம்!”
“வாழ்க்கை
அழகா?”
“ஆம்!”
“அப்ப...
கையில் நிறைய காசிருக்குதுபோல?”
“இல்லை.
காயங்கள்!”
12. ஓர்
இழப்பு
மூச்சு
“விளம்பரமா...?”
“ஆம்!”
“மீட்புப்
பணியா...?”
“ஆம்!”
“சம்பளம்
என்ன?”
“இழப்பு!”
13. ஒரு
பூரிப்பு
மடி!
“புனித
மரியாவே...”
“எங்களுக்காக
வேண்டிக்கொள்ளும்”
“புனித
அந்தோணியாரே...”
“எங்களுக்காக
வேண்டிக்கொள்ளும்”
“புனித
செபஸ்தியாரே...”
“..............................”
“பதில்
சொல்ல மாட்டியா?”
“மாட்டேன்.
நீ எப்ப எனக்காக வேண்டப் போற?”
14. ஒரு
விதைப்புக்
கல்லறை
“சாவுப்
பூசைக்குப் போனியா?”
“ஆம்!”
“கல்லறைக்குப்
போனியா?”
“ஆம்!”
“மலர்
வளையம் வைத்தாயா?”
“ஆம்!”
“அது
சரி... அவன் வாழும்போது நீ ஏன் செத்துப்
போயிருந்தாய்?”
15. ஓர்
உயிர்ப்பு
வெளிச்சம்
“கல்லறைக்குத்தானே
போறோம்?”
“ஆம்!”
“வாசலில்
பெரிய கல் இருக்குமே?”
“ஆம்!”
“நமக்காகக்
கல்லைப் புரட்ட ஆள் தேடுவோமா?”
“வேண்டாம்.
நாமே புரட்டுவோம்!”
• கல்லுக்குள் இருக்கும் சிற்பம் வெளியில் வந்தால் - உயிர்ப்பு!
• “இலாசரே! வெளியே
வா”
என்ற சாகாத் தன்மையே வாழ்வதே உயிர்ப்பு! வெளிச்சம் நிரந்தரம்
• ‘அழைப்பை’ ஆராதிப்பவன் பக்தன். ‘அழைப்பை’
’அடைபவன் சீடன்.
• இறந்த இயேசுவை அல்ல - உயிர்த்த இயேசுவைத் தேடிக்கொண்டே...
• பாடுகள் தொடரும். பாசனங்கள் படரும். இறையாட்சி இலட்சியம் முழுமை பெறும் வரை.
வெளிச்சம்
நம்மில்!