‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று உலகளாவிய சகோதரத்துவத்தைப் பறைசாற்றிய புண்ணிய பூமி நம் இந்தியத் திருநாடு. ஆனால், இன்று அது சனநாயகப் பண்புகளின் சிதைவைக் கண்டு விம்மிக்கொண்டிருக்கிறது. இந்திய அரசமைப்பின் முகப்புரை இந்நாட்டை ஒரு ‘சமூக நீதி காக்கும் மதச்சார்பற்ற சனநாயகக் குடியரசு’ என்று கம்பீரமாகப் பறைசாற்றுகிறது. ஆனால், அறம் பிறழ்ந்த அரசியல் களமாகவே அது இன்று காட்சியளிக்கிறது. சமகால அரசியல் நகர்வுகள் இந்த அறம் சார்ந்த வரையறைகளைத் தகர்த்து, சனநாயகத்தை வெறும் ‘பணநாயகமாக’ உருமாற்றி வருவது வேதனையளிக்கும் எதார்த்தம்.
ஒரு
நாட்டின் சனநாயகம் என்பது ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்குச் செலுத்துவதில் அல்ல; மாறாக, சட்டத்தின் ஆட்சி, ஊடகச் சுதந்திரம், சிறுபான்மையினரின் பாதுகாப்பு மற்றும் ஊழலற்ற நிர்வாகம் ஆகிய தூண்களால் தாங்கப்பட வேண்டிய கோபுரம்! இன்று அந்தத் தூண்கள் ஒவ்வொன்றாகச் சரிந்து வருவதை உலகளாவிய ‘சனநாயகக் குறியீடுகள்’ வெளிப்படையாகவே
தோலுரித்துக் காட்டுகின்றன.
இலண்டனைத்
தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ‘எக்கனாமிஸ்ட்’ (Economist Intelligence Unit) என்ற
அமைப்பின் ஆய்வறிக்கை, இந்தியச் சனநாயகத்தின் தற்போதைய நிலையைத் தெளிவாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. 2010-ஆம் ஆண்டில் 8.15 புள்ளிகளுடன் ‘முழுமையான சனநாயக நாடாகத்’ திகழ்ந்த இந்தியா, 2024-ஆம் ஆண்டில் 7.81 புள்ளிகளாகச் சரிந்து, ‘குறைபாடு உடைய சனநாயக நாடாக’ அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
பணத்திற்கும் சனநாயகத்திற்கும் இடையிலான இந்தச் சிக்கலான உறவு, அதிகாரத்தில் இருப்பவர்களின் பேராசையால் மேலும் நஞ்சாகிக் கொண்டிருக்கிறது.
பணம்
என்பது இன்று அரசியல் பங்கேற்பிற்குத் தேவையானது என்றாலும், அது கட்டுப்பாடற்ற முறையில் புழங்கும்போது, சனநாயகத்தின் தரத்தையே தரம் தாழ்த்திவிடுகிறது. குறிப்பாக, பெரும் செல்வந்தர்கள் மற்றும் தொழிலதிபர்களின் மறைமுகத் தலையீடு, பொதுநலனைப் புறந்தள்ளிவிட்டு, ஒருசில தனிநபர்களின், சிறு குழுவின் தனிப்பட்ட நலனுக்காகத் தேசிய முடிவுகளை எடுக்கத் தூண்டுகிறது. இது இந்திய ஒன்றிய அரசியலில் அண்மைக்காலங்களில் அதிகமாகவே ஊடுருவியிருக்கிறது.
இன்றைய
இந்திய அரசியலின் ஆகப்பெரும் சாபக்கேடாக உருவெடுத்திருப்பது ‘மக்கள் பிரதிநிதிகளின் விலைபேசப்படும் பண்பு.’ ஒரு கட்சியின் கொள்கைக்காகவும் சின்னத்திற்காகவும் மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை, ஆளும் ஒன்றிய பா.ச.க.
அரசு தனது அதிகார பலத்தாலும், பண பலத்தாலும் ஒவ்வொரு
மாநிலத்திலும் விலைக்கு வாங்கும் கலாச்சாரம் சனநாயகத்தின் ஆன்மாவையே சிதைத்து வருகிறது.
தேர்தல்
முடிவுகளுக்குப் பிறகு, மக்களின் தீர்ப்பைத் தமக்கு ஏற்றாற் போல மாற்றிக்கொள்ளக் கோடிக்கணக்கான ரூபாய் கைமாறுகிறது. இது வெறும் கட்சித்தாவல் அல்ல; வாக்களித்த கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கைக்கு இழைக்கப்படும் பெரும் துரோகம். மேலும், ஒன்றிய - மாநில அரசுகளின் இணக்கமான கூட்டாட்சித் தத்துவத்திற்குப் பதிலாக, மாநில அரசுகளைக் கவிழ்க்க முனையும் இத்தகைய ‘குதிரைப்பேரங்கள்’ இந்தியாவை
ஒரு சர்வாதிகாரப் பாதையை நோக்கி நகர்த்துகின்றனவே தவிர, வளர்ச்சி நோக்கிய உண்மையான அகண்ட பாரதம் நோக்கி அல்ல. சனநாயகக் குறியீடு சரிவதற்கு இதுவும் ஒரு முதன்மைக் காரணியே!
அவ்வாறே,
உலக அரசியல் முதல் - நம் உள்ளூர் அரசியல் வரை, தேர்தல் சனநாயகம் இன்று ஒரு சந்தையாகவே மாறிவிட்டது. ஆட்சிக் காலங்களில் கல்வி, மருத்துவம், சுகாதாரம் போன்ற அடிப்படைத் தேவைகளுக்கு நிதி இல்லை என்று கைவிரிக்கும் அரசுகள், தேர்தல் நேரங்களில் வாக்குகளைப் பெறுவதற்காக அரசு நிதியிலிருந்து ஆயிரக்கணக்கான ரூபாய்களை வாக்காளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாகச் செலுத்துவது இன்றைய புதுவகையான ‘பணநாயக’ அணுகுமுறையாக இருக்கின்றது.
வாக்காளர்களுக்கு
உணவு, பரிசுப் பொருள்கள் மற்றும் இலவசங்கள் என்ற போர்வையில் வழங்கப்படும் சலுகைகள் அவர்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்கின்றன. அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களைப் பணக்குவியல்களைக் கொண்டு களமிறக்குவதும், தேர்தல் செலவுகள் - தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதும் சனநாயகத்தின் சமத்துவக்கொள்கைக்கு எதிரானது. அதேநேரத்தில், பணம் மட்டுமே தேர்தல் முடிவைத் தீர்மானித்துவிட முடியாது என்பதைக் கடந்தகாலத் தேர்தல்கள் உணர்த்திய பின்பும், நமக்கு வாய்த்த அரசியல் ‘வியாதிகள்’
திருந்துவதாக இல்லை. இதைக் கட்டுப்படுத்த வேண்டிய தேர்தல் ஆணையம் போன்ற ‘தன்னாட்சி அமைப்பு’ கண்ணிருந்தும் குருடராய், காதிருந்தும் செவிடராய் இத்தகைய முறைகேடுகளைத் தடுக்கத் தவறி, ஆளும் வர்க்கத்தின் ஊதுகுழலாகச் செயல்படுவது வேதனையிலும் வேதனை!
சனநாயகத்தின்
நான்காவது தூணாகக் கருதப்படும் ஊடகங்கள் இன்று பெரும்பாலும் ஆட்சியாளர்களின் பிடியில் சிக்கியுள்ளன. உண்மைச் செய்திகளை மறைத்து, பொய்யை உண்மையாக உலாவிட்டு, அதிகார வர்க்கத்தின் புகழ்பாடும் கருவிகளாக ஊடகங்கள் விலைபேசப்படுகின்றன. கேள்வி கேட்கும் துணிவு கொண்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சமூகப் போராளிகள்மீது ஏவப்படும் அடக்குமுறைகள் கருத்துரிமையைக் கேள்விக்குள்ளாக்குகின்றன.
‘மதச்சார்பற்ற இந்தியா’ என்ற அடையாளத்தைச் சிதைக்கும் வகையில், சிறுபான்மையினரின் உரிமைகள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஒரு குறிப்பிட்ட மதக்கட்டமைப்பை முன்னிறுத்தி, மற்றவர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தும் போக்கு தேசிய ஒருமைப்பாட்டிற்கே ஊறு விளைவிக்கிறது.
நீதித்துறை மற்றும் புலனாய்வு அமைப்புகள் நடுநிலையாகச் செயல்பட வேண்டிய தருணத்தில், அவை அரசியல் அழுத்தங்களுக்கு அடிபணிவது சனநாயகத்தின் வீழ்ச்சியை மேலும் துரிதப்படுத்தவே செய்கின்றன.
உலகளவில்
இந்தியா ஒரு பொருளாதார வல்லரசாக உருவெடுக்க முயன்றாலும், அதன் சனநாயகப் பண்புகள் சிதையும் போது அந்த வளர்ச்சி அர்த்தமற்றதாகிவிடுகிறது. ‘பணநாயகம்’
என்ற அரக்கன் ‘சனநாயகம்’
என்ற தேவதையின் கழுத்தை நெரித்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில், விழிப்புணர்வுள்ள குடிமக்களாக நாம் கேள்வி எழுப்ப வேண்டிய தருணம் இது.
குறிப்பாக,
தேர்தல் நிதி மற்றும் பிரச்சாரச் செலவுகள் கடுமையாக முறைப்படுத்தப்பட வேண்டும்; மக்கள் பிரதிநிதிகள் கட்சி மாறுவதைத் தடுக்கும் சட்டங்கள் இன்னும் வலுப்படுத்தப்படவேண்டும்; அரசு நிறுவனங்கள் (தேர்தல் ஆணையம், சி.பி.ஐ.,
அமலாக்கத் துறை) அரசியல் தலையீடின்றிச் செயல்பட வேண்டும்; தகவல் அறியும் உரிமை மற்றும் பேச்சுச் சுதந்திரம் எவ்வித அச்சமுமின்றிப் பாதுகாக்கப்படவேண்டும் என்பதே ஒரு சாமானியனின் அடிப்படை எதிர்பார்ப்புகளாக இருக்கின்றன.
இந்தியாவின்
எதிர்காலம் என்பது எண்ணிமத் தொழில்நுட்ப வளர்ச்சியிலோ அல்லது பிரமாண்டமான சிலைகளிலோ இல்லை; மாறாக, அது கடைக்கோடி ஏழை மனிதனின் வாக்குரிமையும், கருத்துரிமையும் எவ்விதப் பணபலத்திற்கும் அடிபணியாமல், சுதந்திரமாக இயங்குவதில்தான் உள்ளது. பணத்தால் பெறப்படும் அதிகாரம் ஒருபோதும் மக்கள் சேவையைச் செய்யாது. எனவே, பணநாயகத்தைத் தூக்கியெறிந்து, அறம் சார்ந்த சனநாயகத்தை மீட்டெடுப்பதே வரும் தலைமுறைக்கு நாம் செய்யும் ஆகச்சிறந்த கைம்மாறாகும்.
பாரத
நாட்டின் எதிர்காலம்
பணத்தின்
கைகளில் அல்ல;
பண்பட்ட
சனநாயகத்தின்
கைகளில்தான்
மிளிரவேண்டும்!
அன்புத்
தோழமையில்,
அருள்முனைவர்
செ.
இராஜா
@ இராஜசேகரன்
முதன்மை
ஆசிரியர்