சென்னை, கலைவாணர் அரங்கில் கடந்த 13.02.2026 அன்று நடைபெற்ற தமிழ்நாடு அரசின் திரைப்பட மற்றும் சின்னத்திரை விருதுகள் வழங்கும் விழாவில், 2022-ஆம் ஆண்டிற்கான ‘சிறந்த சின்னத்திரை பின்னணி இசையமைப்பாளர்’ மாநில விருதினைத் திரு. ஜோ சுகந்த் வென்றுள்ளார். இந்த மகிழ்ச்சியான தருணத்தில், ‘நம் வாழ்வு’ இதழின் துணை ஆசிரியர் ஜெ. ஞானசேகரன் அவர்கள் மேற்கொண்ட சிறப்பு நேர்காணல்:
• சார், வணக்கம்!
முதலாவதாக,
உங்களைப்
பற்றிய
ஓர்
அறிமுகத்தை
‘நம்
வாழ்வு’ வாசகர்களுக்காகப் பகிர்ந்துகொள்ள
முடியுமா?
“வணக்கம்! நான் ஜோ சுகந்த். தற்போது
எனது குடும்பத்துடன் சென்னை சின்மயா நகர் பங்கிற்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருகிறேன். எனக்குத் திருமணமாகிவிட்டது. ஒரு தம்பியும், ஓர் அண்ணனும் உள்ளனர். எங்கள் குடும்பத்தைப் பொறுத்தவரை இன்றும் ஒரு கூட்டுக்குடும்பமாகவே வாழ்ந்து வருகிறோம். என் பெற்றோர், உடன்பிறந்தவர்கள், குழந்தைகள் என அனைவரும் ஒரே
கூட்டுக்குடும்பமாக வாழ்கிறோம். இதை நான் பெருமையாகக் கருதுகிறேன். என் பெற்றோர் எப்போதும் ஒரு கருத்தைச் சொல்வார்கள்: ‘நாங்கள் இருக்கும் வரை இந்த வீட்டில் ஒரே அடுப்புதான் எரியவேண்டும்’ என்று.
அந்தப் பாரம்பரியத்தையும் ஒற்றுமையையும் இன்றுவரை சிதையாமல் கட்டிக் காத்து வருகின்றோம். நாங்கள் மகிழ்ச்சியோடும் ஒருமித்த கருத்தோடும் வாழ்வதற்கு அடிப்படையே எங்கள் பெற்றோரின் ஆழ்ந்த இறைப்பற்றுதான். குறிப்பாக, என் தாய் ஒருநாளும் ஆலயம் செல்லாமல் இருந்ததில்லை என்று சொல்லும் அளவிற்கு இறைநம்பிக்கையில் ஊறியவர். அந்த நற்பண்புகளே எங்களையும் வழிநடத்துகின்றன.”
• உங்கள் இசைப்
பயணத்தின்
தொடக்கம்
எப்படி
அமைந்தது?
இசைத்துறையில்
ஆர்வம்
ஏற்படக்
காரணமாக
இருந்த
தருணத்தைப்
பகிர்ந்து
கொள்ளுங்கள்...
“ஆரம்பத்தில் என் தாயார் ஆலயப் பாடகர் குழுவில் (Choir) பாடி
வந்தார். அப்போது எனக்குள் ஓர் அழகான ஆசை இருந்தது. அம்மா பாடும்போது, நான் அவருக்குப் பின்னணியில் கீபோர்டு வாசிக்கவேண்டும் என்பதுதான் அது. ஒருமுறை தற்செயலாக அங்கிருந்த கீபோர்டைத் தொட்டதற்காக, அந்த இசை ஆசிரியர் என்னைக் கடுமையாகக் கண்டித்துவிட்டார். அந்தத் தருணம் எனக்குள் ஒரு பெரிய வைராக்கியத்தை ஏற்படுத்தியது. ‘கண்டிப்பாக இசை பயிலவேண்டும்’ என்ற
வேட்கையை அந்தத் திட்டுதான் எனக்குள் விதைத்தது.
அப்போதுதான்
மெல்லிசை மன்னர் எம்.எஸ். விஸ்வநாதன் அவர்களோடு பணியாற்றிய அனுபவம் கொண்ட மூத்த கலைஞர் திரு. அலெக்ஸ் மானுவேல் அவர்கள் எனக்கு அறிமுகமானார். அவரிடம் இசை பயிலத் தொடங்கினேன். ஆச்சரியமாக, ஒரே மாதத்தில் இசையின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்டேன். எந்த இடத்தில் நான் அவமானப்படுத்தப்பட்டு, இசைக்க முடியாமல் நின்றேனோ, அதே இடத்தில் என் தாயார் பாட, நான் கீபோர்டு வாசித்தேன். அது என் வாழ்வின் மறக்க முடியாத தருணம். இன்று நான் இசை பயிற்றுவித்த ஏராளமான குழந்தைகள் பல்வேறு ஆலயங்களில் கீபோர்டு வாசிப்பதைக் காணும்போது, என் மனத்திற்கு மிகுந்த திருப்தியும் மகிழ்ச்சியும் கிடைக்கிறது.”
• உங்கள் திரைத்துறைப்
பயணம்
எப்படி
நிகழ்ந்தது?
உங்களை
இந்தத்
துறைக்கு
அடையாளம்
காட்டி
வழிநடத்தியவர்
யார்?
“ஆலயங்களில் நான் கீபோர்டு வாசிக்கத் தொடங்கிய காலகட்டத்தில், பட்டாபிராம் பங்கைச் சேர்ந்த திரு. கிளமண்ட் அவர்கள் எனது திறமையைக் கவனித்தார். அப்போது அவர் ‘சன்’ தொலைக்காட்சியில் பணியாற்றி வந்தார். தற்போதும் அங்குதான் பணியாற்றி வருகிறார். ‘உன்னால் முடியும்; நீ சின்னத்திரைத் தொடர்களுக்கு
இசையமைக்க முயற்சி செய்’ என்று அவர்தான் என்னை முதன் முதலில் ஊக்கப்படுத்தினார். அவர் விதைத்த அந்த நம்பிக்கையான வார்த்தைகள்தான், இன்று என்னை இந்த உயரத்திற்கு இட்டுச் சென்றிருக்கின்றன என்று துணிந்து சொல்வேன். அன்று தொடங்கிய எனது இசைப் பயணம், இன்று ஏறத்தாழ 10,000 அத்தியாயங்களுக்கு (Episodes) பின்னணி
இசையமைக்கும் அளவிற்கு விரிவடைந்துள்ளது.
சன்
டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என
முன்னணித் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான பல சூப்பர் ஹிட்
தொடர்களுக்கு நான் இசையமைத்துள்ளேன். குறிப்பாக, மகராசி, செவ்வந்தி, பூவே உனக்காக, இலட்சுமி ஸ்டோர்ஸ், அருந்ததி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், பிரியாத வரம் வேண்டும், நாச்சியார்புரம் உள்ளிட்ட ஏராளமான சூப்பர் ஹிட் தொடர்கள் எனது இசையில் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.”
• அண்மையில் நீங்கள்
பெற்ற
உயரிய
மாநில
விருது
பற்றி
உங்கள்
உணர்வுகளைப்
பகிர்ந்துகொள்ள
முடியுமா?
“கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி நடைபெற்ற தமிழ்நாடு அரசின் திரைப்பட மற்றும் சின்னத்திரை விருது வழங்கும் விழாவில், 2022-ஆம் ஆண்டிற்கான ‘சிறந்த சின்னத்திரை பின்னணி இசையமைப்பாளர் விருது’ எனக்கு அறிவிக்கப்பட்டபோது அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. 700-க்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு மத்தியில், ‘திருமகள்’
தொடருக்காக இந்த மாநில விருதினைப் பெற்றது எனக்குக் கிடைத்த பெரும் கௌரவம். இந்த வெற்றியை எனது அன்பிற்குரிய தந்தை மற்றும் தாய்க்கு அர்ப்பணிக்கிறேன்.
என்
வாழ்க்கை ஒரு காலத்தில் பெரும் கேள்விக்குறியாகவே இருந்தது. ‘இவன் என்ன செய்துவிடப் போகிறான்?’ என்றுதான் உறவினர்களும் சுற்றத்தாரும் என்னைப் பார்த்தார்கள். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தூத்துக்குடியில் எனக்கு ‘அப்துல் கலாம் விருது’ வழங்கப்பட்டபோது கூட, ‘இந்த விருது வாங்க எவ்வளவு பணம் கொடுத்தாய்?’ என்று என் குடும்பத்தாரிடமே ஏளனமாகப் பேசியவர்கள் உண்டு. ஆனால், இன்று அதே நபர்கள் என் இல்லத்திற்கு நேரில் வந்து, ‘உன்னால் நம் குடும்பத்திற்கே பெருமை’ என்று பாராட்டுகிறார்கள். என் தாயிடம் சென்று, ‘உன் மகனை நினைத்துப் பெருமைப்படுகிறோம்’ என்று
அவர்கள் சொல்லும்போது, என் கண்கள் கலங்கிவிட்டன.
இந்த
நேரத்தில் நான் ஒன்றை மட்டும் உறுதியாகக் கூற விரும்புகிறேன். எனது இசைப் பயணம் இறைவனுக்காகவே தொடங்கியது. ஆலயங்களில் நான் இசை மீட்டியபோது யாரிடமும் கைம்மாறு கருதியது இல்லை. ஒருமுறை வாணுவம்பேட்டை புனித யூதா ததேயு ஆலயத்தில் சிலுவைப் பாதையில் இசை மீட்டியபோது, திரைத்துறையில் நுழைய வேண்டும் என்று அந்தச் சிலுவைநாதரிடம் மனமுருகி வேண்டினேன். ஆச்சரியமாக, நான் கேட்ட ஒரே வாரத்தில் சின்னத்திரையில் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. இன்று நான் அடைந்துள்ள இந்த வளர்ச்சியும், இந்த மாநில விருதும் முழுமையாக அந்த இறைவனின் அருள்தான்.”
• சின்னத்திரையில் பின்னணி
இசையமைப்பது
என்பது
எளிதான
காரியம்
அல்ல;
இதில்
நீங்கள்
சந்திக்கும்
நடைமுறைச்
சவால்கள்
மற்றும்
சிரமங்கள்
குறித்துப்
பகிருங்களேன்.
“திரைப்படத்திற்கும் சின்னத்திரைக்கும் மிகப் பெரிய வேறுபாடு உண்டு. திரைப்படத்திற்கு ஒரு தெளிவான தொடக்கமும் முடிவும் இருக்கும். ஆனால், சின்னத்திரை என்பது ஒரு நீண்ட நெடும் பயணம். ஒவ்வொரு நாளும் நேயர்களின் வரவேற்பிற்கு ஏற்ப கதையோட்டம் மாறும்; அந்த மாற்றத்திற்கு ஏற்ப, நொடிப்பொழுதில் இசையையும் மாற்றியமைக்க வேண்டியது பெரும் சவால்.
உண்மையைச்
சொல்லப்போனால், ஒரு திரைப்படத்திற்கு இசையமைப்பதைக் காட்டிலும் சின்னத்திரைப் பணி அதிக அழுத்தம் நிறைந்தது. இன்று படமாக்கப்படும் ஒரு காட்சி, நாளை அல்லது அடுத்த சில தினங்களிலேயே ஒளிபரப்பாக வேண்டும். தினமும் 20 முதல் 30 நிமிடக் காட்சிகளுக்குப் பின்னணி இசை (BGM) கோர்க்க
வேண்டியிருக்கும். இதற்காக வாரத்தின் ஏழு நாள்களும் ஓய்வின்றி உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
ஒரு
தொடர் ஆயிரம் அத்தியாயங்களைக் கடந்து செல்லும்போது, ஒரே மாதிரியான உணர்ச்சிகரமான காட்சிகளுக்குத் திரும்பத் திரும்ப இசையமைப்பது ஒரு கலைஞனுக்குச் சலிப்பைத் தரக் கூடும். ஆனால், நேயர்களுக்கு அந்தச் சலிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் நான் கவனமாக இருப்பேன். சோகம், மகிழ்ச்சி என உணர்வுகள் மாறும்போது,
ஒவ்வொரு முறையும் ஒரு புதுமையைப் புகுத்த வேண்டியிருக்கும். மேலும், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் ஒரு பிரத்யேகமான இசை (Character theme)
இருக்கவேண்டும்; அது கதையின் போக்கிற்கு ஏற்ப உருமாறவும் வேண்டும். இவ்வளவு கடின உழைப்பு இருந்தபோதிலும், திரைப்பட இசையமைப்பாளர்களுடன் ஒப்பிடுகையில் சின்னத்திரை கலைஞர்களுக்குக் கிடைக்கும் வருமானம் குறைவுதான் என்பது ஒரு கசப்பான உண்மை.”
• இன்றைய டிஜிட்டல்
உலகில்
ஏ.ஐ.
(Artificial Intelligence) தொழில்நுட்பம் இசைத்துறையில்
பெரும்
தாக்கத்தை
ஏற்படுத்தி
வருகிறது.
சின்னத்திரை
இசையமைப்பாளர்களுக்கு
இது
எந்த
மாதிரியான
சவால்களை
உருவாக்குகிறது?
“நிதர்சனமாகச் சொல்லப்போனால், செயற்கை நுண்ணறிவை (AI) நான்
ஒரு பெரும் அச்சுறுத்தலாகவே பார்க்கிறேன். ஏனெனில், இது பல கலைஞர்களின் வாழ்வாதாரத்தைக்
கேள்விக்குறியாக்கி வருகிறது. மெகா சீரியல்களைப் பொறுத்தவரை, தினமும் 20 நிமிடக் காட்சிகளுக்கு இசையமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இன்றுள்ள ஏ.ஐ. மென்பொருள்கள்
சோகம், மகிழ்ச்சி அல்லது ‘த்ரில்லர்’
என நாம் கேட்கும் உணர்வுகளுக்கு ஏற்ப, நொடிப்பொழுதில் ஓர் அடிப்படை இசையை உருவாக்கித் தந்துவிடுகின்றன. ஆனால், ஏ.ஐ. உருவாக்கும்
அந்த இசை பெரும்பாலும் இயந்திரத்தனமாகவே இருக்கிறது. ஒரு மெகா சீரியலில் வரும் மிக நுணுக்கமான உணர்ச்சிகளை ஏ.ஐ.-ஆல்
துல்லியமாகப் பிரதிபலிக்க முடியாது. உதாரணமாக, ஒரு தாய்-மகன் பாசம் அல்லது ஒரு துரோகத்தின் வலி போன்ற உணர்ச்சிகளுக்கு உயிரோட்டமான இசை தேவை. இரத்தமும் சதையுமான ஒரு கலைஞன் தனது ஆன்மாவை வருத்தித் தரும் அந்த இசைநயத்தை, எந்தவொரு மென்பொருளாலும் ஒருபோதும் தந்துவிட முடியாது.
இன்று
தயாரிப்பாளர்கள் தங்களின் பட்ஜெட்டைக் குறைப்பதற்காக ஏ.ஐ. தொழில்நுட்பத்தை
நாடத் தொடங்குவது மிகுந்த கவலையளிக்கிறது. மனித உழைப்பைத் தேடாமல், இலவச அல்லது குறைந்த விலை மென்பொருள்களை இயக்குநர்கள் பயன்படுத்த முற்படும்போது, திறமையுள்ள பல இளம் கலைஞர்களின்
வாய்ப்புகள் பறிபோகும் அபாயம் உள்ளது. தொழில்நுட்பம் வளரலாம், ஆனால் அது ஒரு கலைஞனின் இடத்தைப் பிடிப்பது ஆரோக்கியமானதல்ல.”
• நிறைவாக, உங்கள்
எதிர்காலக்
கனவு
என்ன?
இந்தத்
தலைமுறை
இளைஞர்களுக்கு
நீங்கள்
சொல்ல
விரும்புவது
என்ன?
“என்னுடைய மிகப்பெரிய கனவு என்பது வெறும் புகழைத் தேடுவது மட்டுமல்ல; இந்தத் துறையில் நான் ஈட்டும் வருமானத்தைக் கொண்டு, வசதி வாய்ப்பற்ற ஏழை எளிய குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு உதவவேண்டும் என்பதுதான். இசை மீது அதீத ஆர்வம் இருந்தும், ஒரு கீபோர்டு வாங்கக் கூடப் போதிய வசதியில்லாத திறமையான குழந்தைகள் எங்கு இருந்தாலும், அவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளைச் செய்ய விரும்புகிறேன். அவர்களைப் பயிற்றுவித்து, இந்தச் சமூகத்தில் ஓர் உயர்ந்த நிலைக்குக் கொண்டு வருவதையே எனது வாழ்நாள் இலட்சியமாகக் கொண்டுள்ளேன்.
இன்றைய
இளைஞர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான்: ஏதேனும் ஒரு தனித் திறமையை வளர்த்துக்கொள்வதில் உங்கள் முழுக் கவனத்தையும் செலுத்துங்கள். இன்றைய சூழலில் சமூக வலைதளங்கள் (Social Media) போன்ற
கவனச்சிதறல்களில் உங்கள் பொன்னான நேரத்தை வீணடிக்காமல், ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபாடு காட்டுங்கள். விடாமுயற்சியும், தணியாத ஆர்வமும் இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் உங்களால் முன்னேற முடியும்.”
மிக்க நன்றி...
திரு.
ஜோ
சுகந்த்
அவர்களே!
உங்களது
பொன்னான
நேரத்தை
எங்களோடு
பகிர்ந்து
கொண்டதற்கும்,
உங்கள்
வாழ்வின்
வெற்றிப்
பயணத்தைத்
திறந்த
மனத்தோடு
விவரித்ததற்கும்
நன்றியைத்
தெரிவித்துக்
கொள்கிறோம்.
நீங்கள்
இசைத்துறையில்
இன்னும்
பல
சாதனைகளைப்
புரிந்து,
பல
சிகரங்களைத்
தொட
‘நம்
வாழ்வு’ இதழின் சார்பாக
மனமார
வாழ்த்துகிறோம்.
நன்றி!