news-details
கவிதை
இறையடியார் தந்தை ‘லெவே’ போற்றுக! (திருத்தசாங்கம்)

(பெயர்)

மழலை மொழிக்கிள்ளாய்! அண்ணலாரின் தூய

பழம்பெரும் பேர்புகழைக்கூறு! - நலம் காண

வேண்டினாலும் வண்ணத் தமிழாலே பாடினாலும்

யாண்டும்லெவேயென்றே கூறு.

 

(நாடு)

இன்பத் தமிழ்க் கிளியே! நம் தாத்தா சாமியின்

அன்னைத் திருநாட்டைச் சாற்றிடு - தொன்மை

தகவுரு தேசமும் பக்திபிரான்சும் இராசி

முகவைகண் சீமையென்று ஓது!

 

(நகர்)

கூவும் கருங்குயிலே! நற்செய்தி வித்தகரின்

மேவும்சீர் ஊரெதுவோ? சாற்றுக - பூவேந்தும்

மாஞ்சோலைச் சிட்டுகள், பண்ணிசைக்கும்

சர்வகாணி

தீஞ்சொல் ஞானிஊர் சாற்று!

 

(ஆறு)

பஞ்சவர்ணம் பைங்கிளியே! வாழ்வில் ஒளியேற்றும்

பிஞ்சுமணச் சாமியின் ஆறு என்ன? - கொஞ்சும்

தமிழ்பேசி நற்செய்தி வாழ்வாக்கும் தந்தை

அமைதியுற்றரோகினியே கூறு.

 

(மலை)

பைந்தமிழ் பேசும் கிளியே! வான் தேவபுறா

நம்தேயம் வாழும்மலைசொல்வாய் - மஞ்சுசூழ்

ஆண்டாவூரணி - நல்முகவைசருகணியும்

யாண்டும் புகழும் மலை.

 

(தேர்-ஊர்தி)

பேர்பாடும் மாங்குயிலே ஓரியூர் ஒண்கதிரின்

சீர்மிகு தேர்எது? சொல்வாய்நீ - பார்மிசை

கால்நடையும்காளைமாட்டுவண்டியும் அஞ்சாமல்

தாளாற்றி வந்தசாமி தேர்.

 

(படை)

முத்துமணிக் கிள்ளாய்! கருணை உருவான

சித்தர்படையென்ன சொல்லு - கத்தும்

குயிலோசைப்பீடச்சிறுவர்கள்செம்மண்

புவனம் புகழ்படைசாற்று

 

(முரசு)

செம்பவள வாய்க்கிளியே! யேசுபடை வீரரின்

அன்பென்று கொட்டும்முரசெது?  - இன்பங்கள்

யாவும் பெருக்கெடுக்க மக்களெல்லாம் ஒன்றெனக்

கூவும்நற்செய்திபோற்று.

(மாலை-தார்)

பாடும் தமிழ்க்கிளியே! ஏழைநம் பங்காளர்

நாடுபோற்றும் சாது லெவேதார்என்ன? - நீடு

துயிலினை நீக்கவந்த ஆன்மிகச் சூரியனின்

திருச்செபமாலையென்றே கூறு!

 

(கொடி)

சந்தக்கவிக்கிளியே! ‘சர்வகாணித் தென்றலவர்

சிந்தைமிகு ஞானிகொடியென்ன? -விந்தை மிகு

மாசுதன் ஆட்சியை () ‘ராசியில் ஏற்றிவைத்த

() யேசுவின்... நற்கொடியே பேசு!

 

ராசி - இராமநாதபுரம், சிவகங்கை பகுதி.

குறிப்பு: ஒரு மன்னரை, அரசியை, தெய்வீகக்

குழந்தையை, ஞானியை, சித்தரை, சான்றோரை,

மகான்களை, அரசனாக எண்ணிப் போற்றி,

மன்னர்க்குரிய பத்து உறுப்புகள்கொண்டு பாடுவது

கவிதை இலக்கண மரபு - திருத்தசாங்கம் 10

உறுப்புகள்) அவ்வாறு இறையடியார் லூயி மரி லெவே

அடிகளைப்பற்றிப் பாடப்பட்டது.