news-details
கவிதை
தந்தையின் தவிப்புக் குரல்! (சிந்தனை - வார்த்தை)

மூன்று மணியளவில் இயேசு, ‘ஏலி, ஏலி லெமா சபக்தானி?’ அதாவது, ‘என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?’ என்று உரத்த குரலில் கத்தினார் (மத் 27:46).

மகனே, என் மகனே.....

உன்னை நான்

கை நெகிழ்ந்தேனே!

தந்தை நான் கதறுகின்றேன்...

தனயன் உன்னை நினைக்கையிலே

எல்லையில்லாத் துன்பமதை

என் மகனே நீ ஏற்றுக்கொள்ள...

வான்மகனை வாட்டும் வதையைக்

கண்டு வலிக்காதோ என் இதயம்?

உடையாதோ என் உள்ளம்?

என் நுகம் நீ... என் முகம் நீ...

எனக்குள் கிழிகிறதே!

என் சித்தம் ஏற்றுக்கொண்டாய்

தாய் மரி முத்தம்

பெற்றுக் கொண்டாய்

பண முத்தம் காட்டிக் கொடுத்தும்

அன்பில் நித்தம் நீ

தொடர்ந்து சென்றாய்!

துரோகத்தை மன்னித்து பூலோகத்தைக் காக்க

பரலோக மகனே

உன்னைக் கையளித்தேன்

கை கழுவி விலகும்

பல பிலாத்துகளையும் மன்னிக்க

கருணாகரனே உன்னைக்

கை நெகிழ்ந்தேனே!

நீ சாய்ந்து போய் மடியும் வேலை

நான் ஓய்ந்து போய் ஒடிகின்றேன்!

பாவத்தின் கொடுக்குப் படைப்பினைத் தாக்க

பரிகாரப் பலிக்கு

உன்னைப் பரிசளித்தேனே!

கெத்சமனி தோட்டத்தில்

மரண பய நாட்டத்தில்

செந்நீர் வியர்வை ஓட்டத்தில்

துயரமது கூடி நிற்க கூடுமானால்

துன்ப கிண்ணம் அகற்ற

நீயும் வேண்டிய போதும்....

ஆபிரகாம் தன் மகனைப்

பலியாக்கும் வேளை

தடுத்து நான் நிறுத்தினேன்.

ஆணி, முள், சிலுவை என

மரணப்பிடியில் என் மகன்

நீ தவிக்கும் வேளை

தடுக்காமல் நான் தவித்தேனே!

உன் வலியில் அழுகின்றேன்

உன் சுவாசத் தவிப்பில்

நான் சுவாசம் இழக்கின்றேன்!

உன் வறண்ட நா வெப்பத்தில்

என் உள்ளம் கொதிக்கிறது!

தந்தை என்னைச் சிதைத்த

தனயன் உன் நிந்தை யாவும்

தரணியின் பாவக் கேட்டை நீக்கவே!

ஆசியையே வழங்கிட்ட கரங்களை

ஆணிகள் தொலைத்திட்ட வேளை

உடைந்து போன

தந்தையின் வேதனை

தணிக்க வேறு தந்தை உண்டோ?

என் நெஞ்சில் எரியும் நெருப்பை

அணைக்கும் நீரைப்

படைக்கும் வேறு கடவுள் உண்டோ?

பாவ மண்ணின் சத்தம்

வரைந்தது என்னில் மீட்பின் சித்தம்

சிந்தப்பட்டது குற்றமற்ற

உன் இரத்தம்.

இதனால் ஒழிந்தது நித்தம்

பாவக் கடன் குத்தம்!

காலத்தினாலும் ஞானத்தினாலும்

கணிக்க முடியா என் பேரன்பைக்

கல்வாரியில் பொழிகின்றேன்!

அதை உன் சிலுவைச் சாவில் மொழிகின்றேன்! சாகடிக்கும் சோதனையில் நான் எழ...

சாதிக்கும் வேதனையில் நீ விழ...

சாவை வென்ற பலனில் நம்பிக்கையாளன் வாழ...!

முடிந்துவிடும் உன் மரண வலி

தொட்டுவிடும் தூரமே!

முடிந்திடாத என் மனவலியோ

தொடர்ந்து கொண்டு நீளுமே!

தொட்டு என்னைத்

தேற்றுவார் யாரோ?

பரிகசித்து பாழ்படுத்தும்

பாவிகளிடத்தில் நீ விழுந்தாய்!

கொடியவரின் கொலைவெறிக்கு

உன்னையே கொடுத்துவிட்டாய்!

இறை உன் முகத்தை

மறைத்துக் கொண்டு

கொடியோரை மன்னிக்கச் செய்தாய்!

இத்தனை பரிகாச கொடுமைகளிலும்

அவர்களுக்காய் பரிந்து பேசினாய்!

என்னை மாட்சிப்படுத்திய

உந்தன் இரத்தம்

மண் சாபங்கள் தீரவே!

நம் சாயல்கள் மீளவே!

இத்துணை துயரங்களும்

சிலுவைப் பாடுகளும்

தூரமாய் விலகிப் போன

நன்றி மறந்தவர்களாலே!

என்னை உடைத்து

உன்னைக் கிழித்த கொடுமைகள்

யாவும் பாவத்தின் விளைவுகளாலே!

நம் சாயல்களின் மீறுதல்களாலே!

மீட்பர் உன்னில்

நம்பிக்கை கொண்டு

பாவத் தடைகளை மீண்டு வர

பாவிகள் மீண்டும் உயிர்த்து எழ

பரிகாரப் பலியாக உன்னை

நான் கையளித்தேனே!

(இப்படைப்பு தவக்காலத்தின் இசைக் காவியமாக அருள்பணி. பிலிப் அவர்களின்santhanam creations’ என்ற you tube காணொளி வழியாக கண்டு பயன்பெறலாம். தொடர்புக்கு: 82485 07089)